முற்றம்
Typography

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தனக்கான புதிய தலைவனையோ தலைவியையோ இன்று செவ்வாய்க் கிழமை (நவ.08)ம் திகதி தேர்ந்தெடுக்கப் போகிறது. உலக நாடுகள் அனைத்திலும் இத்தெரிவு செல்வாக்கு செலுத்தும் என்பதையும் மறுக்க இயலாது.  இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தலின் போட்டிக் களத்தில் இறங்கிய டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரினது எதிர்காலம் எப்படி முடியப் போகிறது என்பது இன்றிரவு தெரிந்துவிடும்.

அமெரிக்கா தனது அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது, தனது நாட்டின் தலைமையை தேர்ந்தெடுப்பது என்பது மாத்திரமல்ல. தன்னகத்தே கொண்டிருக்கும் அனைத்து மாநிலங்களுக்குமான தலைமை,  அரசின் தலைமை என்பவற்றுடன், உலகின் மிகப்பெரிய இராணுக் கட்டமைப்பான அமெரிக்க இராணுவத்திற்கு ஆணையிடும் உரிமையையும் வெற்றி பெற்றவருக்கு கிடைத்துவிடும்.

அமெரிக்காவில் யார் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம்? அமெரிக்காவில் பிறந்தவராக இருக்கவேண்டும். குறைந்தது 35 வயதை கடந்திருக்க வேண்டும். குறைந்தது 14 வருடங்களுக்கு அமெரிக்காவில் இருந்திருக்க வேண்டும்.

1933ம் ஆண்டிலிருந்து இதுவரை அமெரிக்காவின் அதிபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும், அப்பவிதவிக்கு வரும் முன்னர் ஆளுனராகவோ, செனட்டராகவோ, ஐந்து நட்சத்திர இராணுவ ஜெனரலாகவோ இருந்தவர்கள் தான்.

இம்முறை தேர்தலில், ஹிலாரி கிளிண்டன் அல்லது டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் 10 ஆளுனர்கள் அல்லது முன்னாள் ஆளுனர்கள் மற்றும் 10 செனட்டர்கள் போட்டியிலிருந்தனர்.

எப்படி இறுதியான இரு வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்?

தேர்தல் வருடத்தின் பெப்ரவரி மாதம் தொடக்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சித் தேர்தல் நடைபெறும்.  அதிபர் பதவிக்கு வேட்பாளராக பலர் தமது கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி களத்தில் நிற்பார்கள். அதில் அதிக மாநிலங்களில் வெற்றி பெறுபவர் அக்கட்சியின் இறுதி அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார். அவ்வாறு ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும் கடந்த ஜூலை மாதம் தமது கட்சிகளின் இறுதி அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டனர்.

ஆனால் நவீன அமெரிக்க வரலாற்றில், பிரபலம் இல்லாத இருவர் அமெரிக்க தேர்தல் களத்தில் நிற்பது இதுவே முதன் முறையாகும். தனது துணை அதிபர் வேட்பாளராக வேர்ஜினியா ஆளுனரான டிம் கேன் ஐ ஹிலாரி ஹிளிண்டன் தெரிவு செய்தார். குடியரசுக் கட்சியின் சார்பில் இந்தியானா ஆளுனர் மைக் பென்ஸ் தெரிவானார்.

இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள்

டொனால்டு டிரம்ப் தனது ஆரம்ப கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது,  மெக்ஸிகன் குடிவரவாளர்களை, குற்றவாளிகள் என்றும் பாலியல் வன்புணர்வு செய்பவர்கள் என்றும் விழித்திருந்தார். சூடுபிடித்த இவ்விவகாரம் அடங்கிப் போவதற்குள், ஒரு நீபதியுடன் வாக்குவாதப்பட்டமை, முன்னாள் உலக அழகி மற்றும் ஃபாக்ஸ் ஊடக அறிவிப்பு பெண்மணி ஆகியோரை தரக்குறைவாக பேசியமை,

அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் இஸ்லாமிய குடும்பத்தை அவமரியாதை செய்தது என  பல விடயங்கள் ஊடக கவனம் பெற்றன.
அதோடு இதுவரை தேர்தலுக்கு முன்னர் தனது வருமான வரிப்பண விபரத்தை வெளியிட மறுத்த ஒரே ஒரு தேர்தல் வேட்பாளரும் டொனால்டு டிரம்ப் தான்.

கடந்த ஆக்டோபர் மாதம், ஊடகங்களால் வெளியிடப்பட்ட இரகசிய வீடியோ ஆதாரம் ஒன்று டொனால்டு டிரம்புக்கு மிக நெருக்கடி கொடுத்தது.  கடந்த 2005ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பெண்களை பற்றி மிக அவதூறாக பாலியல் இச்சைகளுடன் தொடர்பு படுத்தி டிரம்ப் கருத்து வெளியிட்டிருந்தது காண்பிக்கபப்ட்டது.

«நான் நிஜத்தில் யார் என்பதை இவ்வீடியோ பிரதிபலிக்காது» என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்த போதும், அவரது கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் டிரம்ப் மீதான தமது ஆதரவை விலக்கிக் கொண்டதற்கு இவ்வீடியோ ஒரு மிக முக்கிய ஆதாரம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்