முற்றம்
Typography

இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் யாவும் கற்பனையே, யாரையும் புண்படுத்த அல்ல என்று சப்பைக்கட்டு கட்டாமல், படத்தின் முதற் காட்சியிலேயே சமூக அவலங்களையும், தீண்டாமைகளையும், காட்சிகளாக்கி, அந்த காட்சிகளின் வாயிலாக இச்சமூகத்தை காறித்துப்பி, ஆண்டாண்டாய் புண்பட்ட மக்களுக்காகவும், அநீதிகளுக்கெதிராகவும் குரல்கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

1980 களில் ஆயக்குடி உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சாதீய ஒடுக்குமுறை சம்பவங்கள், அதிகாரவர்க்கத்தின் கோரமுகங்கள், விளிம்புநிலை மக்களின் உரிமைதேடல்கள் என்று, யாருக்கும் ஜால்ரா அடிக்காமல், எந்தவித சமரசமுமின்றி ஒரு படைப்பாளியாக தனது பங்களிப்பினை, சாதீய வக்கிரர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். 1980 களில் நடந்த யாவும் இன்றும் பொருந்துகிறதே என்று நம்மையறியாமலே நம்மை உணர வைத்ததில் ஒரு கலைஞனாகவும், மனிதனாகவும், சுசீந்திரன் வென்று நிற்கிறார். சுசீந்திரனுடைய எண்ணங்களும், எழுத்துகளும் இரண்டறக் கலந்து உயிர்ப்பித்த மாவீரன் கிட்டு,  காண்போரின் மனசாட்சியை ஒரு நொடியேனும் உலுக்கும். நிச்சயமாய் அது அவர்களுக்குள்ளே விவாதம் செய்ய ஆரம்பிக்கும். இப்படத்தை பார்ப்பதும் அதுபற்றி ஆரோக்கியமாய் விவாதிப்பதும்கூட சமூகப்பணி தான். மாவீரன் கிட்டு அத்தியவாசியமான படம். உங்கள் பாதங்கள் தொட்டுக் கேட்கிறேன் தயவுசெய்து அவசியம் பார்த்துவிடுங்கள்.

இது படம் பற்றிய பார்வை அல்ல. படைப்பாளி பற்றிய பார்வை. இயக்குநர் சுசீந்திரன் தனது ஆயுதமான சினிமா மூலம், சாதீய, அதிகார அடாவடிகளை ஆங்காங்கே  பேசிவந்திருந்தாலும், அதன்மூலம் ஒரு படைப்பாளியாக அவரால் திருப்தியடைய முடியாததின் ஆதங்கம் இப்போது வெடித்தெழுந்திருக்கிறது. அந்த வெடித்தெழலின் பெரு நெருப்புத்தான் இந்த மாவீரன் கிட்டு. உருவமற்ற சாதி என்ற ஒற்றை ஆயுதத்தின் துணையோடு குரூரமாய் வஞ்சித்து, ஒடுக்கப்பட்டு, சமூகத்தின் விளிம்பில் தத்தளிக்கும் மக்களின் வலியை, அவர்களின் வேதனையை சுசி என்ற படைப்பாளி நன்றாகவே சுவாசித்திருக்கிறார். சாதிய கட்டமைப்பால்,கல்வியால்,பொருளாதாரத்தால்,அதிகாரங்களின் கோரப்பிடியால் என்று இன்னும் இன்னும் எல்லாவற்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களை, அக்கறையோடும், அன்பின் முகம்கொண்டும் நேசித்திருக்கிறார். அந்த அன்பும், அக்கறையும், கோபமும்தான் இந்த மாவீரன் கிட்டு.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரேயொரு மாணவன் மாநிலளவில் முதல் மதிப்பெண் எடுப்பதையே தாங்கிக்கொள்ள முடியாத, ஒரு மனிதர் இறந்தப் பின்னும் கூட தங்கள் தெரு வழியே அனுமதிக்காத, கொடூர மக்கள்கள் சூழ் சமூகமிது, என்பதை கண்முன்னே காணும்போது, அதை காணும் தலைகள் தானாகவே குனிந்துகொள்கிறது. சுசீந்திரனின் சமூக அன்பும் அக்கறையும் காட்சிகளாய் கண்முன் வந்துசெல்லும்போது, பொதுபுத்தியில் வலம்வரும் " இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறா ? "என்ற வரிகளை பொளேரென அறைந்து கொல்கிறது. அப்படியே பார்போரையும் அறைந்து செல்கிறது.  1980களில் நடந்தாலும் மாவீரன் கிட்டுவின் வடிவம், இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் அப்போதுமட்டுமல்ல, இப்போதுமட்டுமல்ல, ஏன்? எப்போதுமே கூடப்பொருந்தும். பல்லாண்டுகாலாமாய் புரையோடிப் போய் கிடக்கும் இந்த நோய்கள்,  எப்போதுமே பொருந்திவிடகூடாது என்ற அச்சத்தாலும்,அக்கறையாலும்  தான், இயக்குனர் சுசி மாவீரன் கிட்டுவை பிரசவித்திருக்கிறார்.

சுசீந்திரனின் மாவீரர்கள் (கிட்டு, சின்ராசு) தம்மக்களின்  அடிப்படை உரிமைகளுக்காக அலைந்து திரிகிறார்கள். அதிகாரம் தேவை என போராடுகிறார்கள். அதற்காக அம்பது பேரை அடித்து சட்டத்தையும், உரிமையும் கையிலெடுத்துக் கொள்ளவில்லை. வாள் வீசி வன்மம் செய்யவில்லை. கதாநாயக பிம்பத்திற்காக வக்கிரம் பாய்ச்சவில்லை. ஆனால் அதை எல்லாம் கல்வி மூலம் அடையனும், அடைய முடியுமென தீர்க்கமாக நம்புகிறார்கள். உயர்சாதீ வக்கிரர்களின் வன்மத்தால், அந்த கல்வியும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. அப்போது தம்மக்களுக்காய் தன்னையே தந்து உயர்ந்து நிற்கிறான் மாவீரன் கிட்டு. கல்வி ஒன்றே அவசியத்தேவை என்பதை, சிறு இடத்தில் கூட மறுக்காமல், மறைக்காமல் தனது மாவீரர்களை வைத்து இறுதிவரை இயக்குனர் போராடியிருக்கிறார். இயக்குனருக்கு பக்கபலமாய் யுகபாரதி தனது வார்த்தைகளை வாளாக்கி வீசியிருக்கிறார். அதன் வீச்சு மனசாட்சி உள்ளோரை நிச்சயம் கொல்லும்.

பல பல எதிர்ப்புகளையும், சாதீய சதிகளையும் மீறி, இந்திய சினிமாவில் அதுவும் குறிப்பாக தமிழ்சினிமாக்களில், விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளை சினிமாத்தனமின்றி காட்சிப்படுத்தும் சூழல் இப்போதுதான் கனிந்துவருகிறது. சினிமா என்றால் சாதிக்காகவும், சதைக்காகவும் தான் என்றெண்னும் வரையறுக்கப்பட்ட வக்கிர இயக்குனர்களின் கைகளில் சினிமா என்ற கலையை  தாரைவார்த்து கொடுத்துவிட்டு, அவர்கள் இச்சமூகத்தின் மீது தூவும்  எச்சங்களையும், வக்கிரங்களையும் கண்டுகளித்து, கைதட்டி களைத்துப்போன சமூகமிது. உயர்சாதிக்காரர்களின் அடாவடிகளால், நமக்கருகிலே நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்படும் பலபல மறைக்கப்பட்ட கொடூரங்களை, உண்மைகளை சுமந்து வரும் இதுபோன்ற எதார்த்த படங்களை மக்கள் ஏற்றுகொள்ளும் சூழல் இன்னும் பெரிதாக வளரனும். ஒரு படைப்பு என்பது சமூகத்தையோ அல்லது தனிநபரையோ மாற்றனும், நல்வழிப்படுத்தணும். அந்தவகையில் மாவீரன் கிட்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவான் என்று நம்புகிறேன்.

சுசீந்திரனது எண்ணங்களுக்கு திரைவடிவம் தந்திருக்கும் மதிப்பிற்குரிய ஐஸ்வேர் சந்திரசாமியின் பங்களிப்பு மிக முக்கியமானது. மிகப்பெரிதும் கூட. பின்னலாடை தொழிலிருந்து ஒருவர் திரைப்படம் தயாரிக்க வருவதென்பது அரிது. சுசீந்திரனின் மீதுள்ள நம்பிக்கை மட்டுமின்றி, அவருக்குள் இருந்த, இந்த சமூகத்தின் மீதான காதலும், அக்கறையும் ஒரு பெருங்காரணம். அப்படிப்பட்ட ஒருவரால் தான் இப்படியொரு ஒத்துழைப்பை தந்திருக்கமுடியும். ஒட்டுமொத்த படக்குழுவினரும் சுசீந்திரனுக்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்த்தாலே தெரியும்,புரியும். இந்த படத்திற்கான விளம்பர பணிகள் பற்றி என்னிடம் விவாதித்தார்கள். அப்போது நானிருந்த சூழலில் என்னால் பங்களிக்கமுடியவில்லை. அதற்காக இப்போது பெரிதும் வருந்துகிறேன். மக்களுக்காய் உழைத்த மாமனிதர்களுக்கு முத்தங்களும்,வாழ்த்துகளும்.

இந்த அரங்கைவிட்டு வெளியேறும் போது கோபத்துடன் நீங்கள் வெளியேறினால் அதுதான் எங்கள் வெற்றி. மிர்ச்பூர் எனும் ஆவணப்படம் பார்த்து முடித்ததும் இயக்குனர் பா.இரஞ்சித் உதிர்த்த வார்த்தைகள் இது. இதுதான் மாவீரன் கிட்டுவிற்கும் வேணும். அதே பா.இரஞ்சித் மற்றுமொரு மேடையில் மாவீரன் கிட்டு வணிக ரீதியாக வென்றேயாக வேண்டும் என்று ஆதங்கமுடன் கோரிக்கைவைத்தார். தனது அனுபவத்திலிருந்து பா.இரஞ்சித் சொன்னதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மாவீரன் கிட்டு எல்லா வகையிலும் வென்றேயாக வேண்டும். சுசீந்திரன் கலைத்தாயோடும், களைந்து கிடக்கும் இந்த சமூகத்தோடும் நின்றேயாக வேண்டும். பக்கத்துக்கு மாநில படங்களை கொண்டாடித்தீர்க்கும் மக்களால், அவர்களுக்கருகிலே தாவு தீர போராடித்தரும் நல்லபடங்களை கொண்டாட மனம் விரும்புவதில்லை. அது ஒருவகை ரசனை பிரிவு போல.

மலையளவு மனிதமற்ற சமூகத்தில் தன்னால் இயன்றதை பேசிய சங்ககிரி ராஜ்குமார், உறியடி விஜயகுமார், மதுபானக்கடை கமலக்கண்ணன்  போன்ற பல இளம் இயக்குனர்களை தட்டிக்கொடுக்காமல், எட்டி உதைத்தே வைத்திருக்கிறோம் என்பதையும் நினைவில்கொள்வோம். மக்களின் ரசனையை மேம்படுத்துவதுதான் ஒரு படைப்பாளியின் பணி. அதை எந்த சமரசமுமின்றி சுசீந்திரன் செய்துள்ளார். முழு மனதோடும் பாதி பணத்தோடும். இவர்களை நீங்கள் கொண்டாடினால்தான், திண்டாடிக்கொண்டிருக்கும் சமூகத்திற்கு உண்மைபேசும் படைப்பாளிகள் வருவோம், வருவார்கள்.

4தமிழ்மீடியாவிற்காக : ஜெபி.தென்பாதியான்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்