முற்றம்
Typography

சில வருடங்களுக்கு முன்னர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் பெண்மணி. வீதியில் கண்டதும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஏற்கனவே பாசமானவர்தான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பாசம் அதிகரித்ததுபோல இருந்தது. வியந்துபோய் யோசித்தேன். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டதாகச் சொன்னார். 

அது ஓர் அருமையான உரையாடலாக இருந்தது. முன்பு ஆங்கிலத்தில்தான் பேசுவார். என் மொழியறிவு குறித்த நம்பிக்கையிலோ என்னவோ இன்று சிங்களத்தில் பேசியதில் மிக அருமையான உரையாடலாக அமைந்தது!

அவர் சரமாரியான கேள்விகளை கேட்டார். நானும் ஏதோ பதில் சொல்லப் போகிறவன் மாதிரியே, அ.., த.., ப.. என ஏதோ ஓர் எழுத்தில் இழுப்பேன். உடனே அவரே தனது கேள்விக்கான பதில்களையும் சொல்வார். பதிலுக்கு நான் புன்னகையிலே ஒரு ஆமோதிப்பு. அவ்வை சண்முகி படத்தில் ஊமையாக பொய்சொல்லி நடிக்கும் நாசரும், டெல்லி கணேஷும் மந்திரம் சொல்லும் காட்சி நினைவுக்கு வந்தது. சொல்லமுடியாது நான் நன்றாகச் சிங்களம் பேசுகிறேன் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கலாம்.

உரையாடுவதுகூட ஒரு கலையாக இருக்குமோ என்னவோ! யாரிடமும் புதிதாக சரளமாக பேசுவது என்னியல்பல்ல. பார்ப்பதற்கு அவ்வளவு சிநேக பூர்வமான பிராணியாக இல்லை என்பதால் யாரும் அவ்வளவு ஆர்வமாக வந்து பேசுவதில்லை. அதுபோலவே எனக்கும் அவ்வளவு இலகுவாக உரையாடலைத் தொடங்க முடியாது. சிலசமயங்களில் இயல்புக்கு மாறாக உற்சாகமாக புதியவர்களுண்டு பேச ஆரம்பித்துவிடுவது ஆச்சரியமளிக்கும். அதுவாகவே நிகழ்ந்துவிடுவது அது. உரையாடலுக்கான ஒரு ஏதுவான சூழ்நிலையை அடைதல் என்பது இயல்பான செயற்கைத்தனமற்ற உண்மையான உரையாடலுக்கு அவசியம் எனபது எனது நம்பிக்கை. அது சிலருக்கு சில நிமிடங்கள், சிலருக்கு மணிகள், நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.

திருகோணமலையில் வேலைசெய்த நாட்கள் அவை. ஒவ்வொருவாரமும் இரவுப் பேரூந்துப்பயணம். பயணம் செய்யும்போது அமைதியாக இருக்கவே விரும்புவேன். பெரும்பாலும் அப்படியேதான். மிகமிக அரிதாக சக பயணியுடனான உரையாடல் வாய்த்துவிடும். அது வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ இருக்கும். ஒருமுறை பேரூந்தில் பாக்கத்து சீட்டில் இருந்த அங்கிளைப் பார்த்தபோது தமிழ் சினிமாவின் உயர்வர்க்க கதாநாயகியின் சற்று வயதான தந்தையைப் போல ஒரு தோற்றம். மிக நாகரீகமாக உரையாடினார். இளைஞர்கள் ஏன் யாருக்காகவோ உழைத்துக் கொடுக்கிறீர்கள்? சுயமாக தொழில் தொடங்கி முன்னேற ஏன் தயங்குகிறார்கள்? என்கிற கேள்விகள் அவருக்கிருந்தன. நானும் நிறையப் பேசவேண்டும் என எதிர்பார்த்தார். நானும்தான்! ஆனால் கொடுமையைப் பாருங்கள். அன்றிரவு ஒரு சிறிய பார்ட்டி. உள்ளே போயிருந்த பீர்பால் தன்னைக்காட்டிக்கொடுத்து அவருக்கு அசௌகரியத்தைக் கொடுத்துவிடக் கூடாதே என்கிற உணர்வில் இளைய தளபதி ஸ்டைலில் பேசினேன். அவ்வப்போது சில வார்த்தைகள் மட்டும்.

இன்னொருமுறை பக்கத்திலமர்ந்திருந்த நண்பர் ஏதோ கேட்டார். எப்படி ஆரம்பித்ததென்றே தெரியாமல் சரளமாக பேச ஆரம்பித்தோம். பொன்னியின் செல்வன், சுஜாதா, மணிரத்னம், ஷங்கர், உலக சினிமா, சாரு எனப்பேச்சு தொடர்ந்துகொண்டேயிருந்தது. தூங்கமறந்து சிறிதுநேரம் மட்டும் தூங்கியிருந்தோம். பேச்சினிடையே அவர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் என்பது தெரிந்தது. விடிகாலையில் பேரூந்திலிருந்து இறங்கிச் செல்லும்போது கைகொடுத்துப் பிரிந்துசென்றோம். இதில் ஒரு முக்கியமான விஷயம். நாங்கள் இருவரும் எங்கள் பெயர்களைத் தெரிவித்துக்கொள்ளவில்லை. என்வரையில் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நல்லதோர் உரையாடலுக்கு நாம் யார் என்பதோ, சம்பிரதாயபூர்வமான அறிமுகப்படுத்தல்களோ தேவையேயில்லை என நம்புகிறேன். அதற்கான ஒரு ஏற்புடைய சூழ்நிலை அமையவேண்டும்.

உரையாடலை எப்படி ஆரம்பிப்பது என்பது சமயங்களில் பிரச்சினைதான். தானாக ஆரம்பிக்கும் எனக்காத்திருக்க காலம் அனுமதிப்பதில்லை என்பதால் நம்மிடையே பல வேடிக்கையான் உரையாடல் முறை நிலவி வருவதை பார்க்கமுடியும். எழுத்தாளனிடம் சென்று எப்படி எழுதுகிறீர்கள்? ஓவியனிடம் எப்படி வரைகிறீர்கள்? என்பவை நம் மத்தியில் புழங்கும் உரையாடல்களை ஆரம்பிக்கும் பொதுவான வழிமுறைகளாக உள்ளன. இது நம் தொலைகாட்சி பேட்டிகளின் 'நீங்கள் எப்படி இந்தத் துறைக்குள் வந்தீர்கள்?' என்பதன் எளிமையான வடிவமாக இருக்கலாம். அதனை 'நீங்களாக வந்தீர்களா? அல்லது யாராலோ துரத்தப்பட்டு வந்தீர்களா?' என்பதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் ஒருதுறையில் பிரபலமான, சாதித்த ஒருவரை நேர்காணலுக்கு அழைத்துவிட்டு, 'உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்' என்று கேட்பது வறட்சியின் உச்சம். முதலில் அவரைப்பற்றிக் குறைந்தபட்சம் தெரிந்துவிட்டு,உரையாடலினூடே கொண்டுவருவதுதான் முறை என்பதைவிட அடிப்படை நாகரிகமாக இருக்கமுடியும்.

ஓர் ஓவியனிடம், 'நீங்கள் என்ன தூரிகை, என்னமாதிரியான வர்ணங்களை பாவிக்கிறீர்கள்?' என்று கேட்பதும், ஓர் புகைப்படக் கலைஞனிடம், என்ன காமெரா உபயோகப்படுத்துகிறீர்கள்? என்று கேட்பதெல்லாம் ஒருவித ஆர்வத்தினால்தான். 'நானும் அவற்றையே பயன்படுத்தினால் ஓர் ஓவியனாகவோ, புகைப்படக் கலைஞனாகவோ ஆகிவிடுவேன்' என்று எதிராளி சொல்வதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் சிலர் கேட்கும் தோரணை அப்படிதானிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், 'இதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? என்று ஆச்சரியமாகக் கேட்பார்கள் பாருங்கள். இது கடைந்தெடுக்கப்பட்ட, அசட்டுத்தனமான மொள்ளமாரித்தனம்! அதாவது ‘எனக்கும் நேரம் மட்டும் கிடைத்தால் இதையெல்லாம் செய்துவிடுவேன் எனும் தடித்த தோல் வாய்க்கப் பெற்றவர்கள்’ எனலாம்.

'நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?', 'நீங்கள் ஏன் புகைப்படம் எடுக்கிறீர்கள்?' என்று கேட்பது கொடுமையானது. அதாவது ' உங்களுக்கு வேறு வேலை கிடையாதா? 'உருப்படியா வேறு ஏதாவது செய்யலாமே?' என்பதுபோலவே அவர்களுக்குத் தோன்றலாம். அதுவும் நம் சமுகத்தில் எழுத்தாளனைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேள்வியைக் கேட்பதென்பது, வைத்தியசாலைக்கு வந்திருக்கும் ஒரு நோயாளியைப் பார்த்து, 'நீங்கள் ஏன் வைத்தியம் பார்க்க வந்தீர்கள்? பேசாமல் செத்துப் போகலாமே?' எனக் கேட்கும் பேரன்புக்குச் சற்றும் குறைவில்லாதது. அதிலும் நம்மை ஓர் தேர்ந்த வாசகராகவோ, இலக்கிய ஆர்வலராகவோ காட்டிக்கொண்டு, ஓர் எழுத்தாளனின் ஒரு வரியைக் கூடப் படிக்காமல், ‘நீ'ங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?' எனக் கேட்பதற்கு எந்தவித சுரணையுணர்வு, கூச்சம், வெட்கம் புகுந்துவிடாத மிகக்கனமான தடித்தோல் அவசியம். அது நம்மில் பலருக்கும் இயல்பாகவே வாய்த்திருப்பதாகத் தோன்றுகிறது.

நம் சூழலில் 'கலந்துரையாடல்' ஒன்றினை நிகழ்த்தலாம் எனும்போதே ஒரு சித்திரம் தோன்றுகிறது. ஆரம்பத்தில் ஒருவர் பேச ஆரம்பிக்கும்போது அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒருவர் பேச ஆரம்பிக்கும் அதேசமயத்தில் இன்னொருவரும் பேச ஆரம்பிப்பார். ஒருவிதமாக குழப்பமாகி, ஒரு உடன்பாட்டுக்கு வருவார்கள் யார் பேசுவதென. சமயங்களில் மூன்று பேர் ஒரே நேரத்தில் சளைக்காமல் தீவிரமாக உரையாற்றும் காட்சியையும் கண்டு களிக்கலாம். ஓரளவுக்கு புரிந்துணர்வு கொண்ட குழுவினரின் கலந்துரையாடலின் ஆரம்ப கட்டக்குழப்பங்கள் ஓய்ந்து நடுப்பகுதிக்கு வரும்போது, ஒருவர் நிதானமாகப் பேச்சை ஆரம்பிப்பார். ஒருகட்டத்தில் அவர், எதைப்பற்றிப் பேச வந்து என்ன பேசுகிறார் யாருக்கும் புரியாது. அவரும் அது பற்றி புரிந்தோ புரியாமலோ அலட்டிக் கொள்வதில்லை. இந்தமாதிரியான தருணங்களில் பேச்சு சுவாரசியமாக இருந்தால் எதுபற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலும் மகா கொடுரமாகவே இருக்கும். வெளிப்படையாகவோ, அல்லது வெளியில் முறைத்துக்கொண்டு உள்படையாகவோ சிலர் ஆழ்நிலைத் தூக்கத்திற்குச் சென்றுவிடுவார்கள். அது ஒரு தியான நிலை. இருபது பேர் கொண்ட குழுவில் பன்னிரண்டுபேர் இந்தத் தியான நிலையை அடைந்துவிட்டார்கள் எனில் அது ஓர் வெற்றிகரமான உரையாடல் என நம்பலாம்!

இன்னொரு வகையில் ஆரம்பத்திலிருந்தே யாரோ ஒருவர் சம்பந்தமேயில்லாமல் தனக்குத் தெரிந்ததை வத வதவெனப் பொழிய, ஏனையோர் கொட்டாவி விடுவது. இதைதான் ஆரோக்கியமான உரையாடல் என்று நம் சூழலில் சொல்கிறார்கள் என நம்புகிறேன். ஏனெனில் நமக்கு ஒரு தேசியகுணம். யாரும் பேசுவதைக் கேட்க நாம் தயாராயில்லை. நாம் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும்.

தவிர, இடைவெளி விடாமல் பேசுபவன் அறிவாளி எனவும் பலர் நம்புவதாகத் தெரிகிறது. நாம் தெரிந்துகொண்டதை மற்றவர்களுக்கு அவசரமாகத் தெரிவித்தேயாகவேண்டும் என்றொரு மனநிலை இப்போது பலருக்கும். இது ஃபேஸ்புக் கற்றுக்கொடுத்த அவசர, பிரபல அணுகுமுறையோ என்கிற ஐயம் நீண்டநாட்களாக உள்ளது. எவன் மாட்டிக் கொண்டாலும், வந்திருப்பவன் யார் அவன் அறிவு, தெளிவு பற்றிக் கவலையில்லை. நாம் படித்ததை அல்லது மனனஞ் செய்ததை ஒப்புவிப்பது.

புதிதாக அறிமுகமான எழுத்தாளரோ அல்லது யாரோ ஒரு முக்கியமான ஒருவருக்கு நம்மை அவசரமாக நிரூபிக்கவேண்டும். ஆசிரியரிடம் மனனஞ் செய்ததை ஒப்பித்துச் சரிபார்த்துக் கொள்வதைப்போல, பாராட்டுப் பெறுவதைப்போல. அவரிடமிருந்து நாம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள இருக்கும் வாய்ப்பு நமக்குத் தேவையில்லை எனினும், மற்றவர்களுக்கு அது முக்கியமானதாக இருக்கலாம். ஒரு படைப்பாளியைப் பேச அனுமதிக்காமல் நாம் கேள்வி கேட்பதும், நாமே பேசுவதும், சரியாகச் சொன்னால் அவர் முன்னால் நின்றுகொண்டு வாந்தியெடுப்பது போல அருவருப்பான செயலாகவே தோன்றுகிறது.

சுவாரசியாமான உரையாடல் ஒன்றுக்கு பேசுபவர்களின் அறிமுகம் தேவையில்லை எனினும் சமயங்களில் அந்தக் கொள்கை பற்றி ஆராயவேண்டியுள்ளது.

ஒருவருடத்துக்கு முன்பு. முன்னிரவு வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு. எடுத்துக் பேசும்போது குரலில் அது நண்பன் பார்த்தி என்பது புரிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் நிறையப் பேசினோம். பார்த்தி ஃபேஸ்புக்கில் அதிகமாக இருப்பதில்லை என்பதால் அதுபற்றியும். திடீரென ஒரு குறும்பட இயக்குனரைச் சந்தித்தது பற்றிச் சொன்னான் . ஆச்சரியமாக இருந்தது. 'உனக்கெப்பிடிடா தெரியும்?' என்றேன். பொறுமையாகச் சொன்னான். இருந்தாலும் அப்படியா? என்றேன் ஆச்சரியமாக. பின்பு பேச்சிடையே ஒரு புதிய எழுத்தாளரின் புத்தக வெளியீடு பற்றி பேசினான். இது மிக ஆச்சரியமாக இருந்தது. 'உனக்கெப்பிடிடா தெரியும்?' என்றேன் மீண்டும். பார்த்தி பொறுமையாக விலாவாரியாக விளக்கினான். ஆனாலும் ஆச்சரியம் தாங்கவில்லை.

வாழ்க்கை எப்படி எப்படியெல்லாம் மனிதர்களை சந்திக்க வைக்கிறது என்கிற உண்மை மிகுந்த ஆச்சரியத்தையளித்தது. உண்மை பலசமயங்களில் ஆச்சரியமளிப்பதைவிட அதிர்ச்சியைத்தான் கொடுக்கிறது. அந்த நீண்ட நேர உரையாடலின் முக்கால் பகுதியில் நான் தெரிந்துகொண்ட உண்மை அதிர்ச்சியாக இருந்தது. ஒருவாறு அப்படியே சமாளித்தேன். அவன் அதைத் தெரிந்துகொண்டானா என்பது இப்போதும் தெரியவில்லை. அந்த உண்மை, என்னுடன் பேசிக்கொண்டிருந்தது பார்த்தி அல்ல கிஷோகர்!

BLOG COMMENTS POWERED BY DISQUS