முற்றம்

யாழ் சர்வதேச திரைப்பட விழா 2015, இலங்கை- இந்தியா- புலம்பெயர் சினிமா பங்காளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பங்களிப்போடு நடைபெற்று வருகின்றது. பலதரப்பட்ட பார்வையாளர்களையும், கண்காணிப்பாளர்களையும், அரசியலாளர்களையும், ஊடகவியலாளர்களையும், மாணவர்களையும் திரைப்பட விழா ஏதேதோ காரணங்களுக்காக உள்வாங்க அல்லது கண்காணிக்க வைத்திருக்கின்றது. 

யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் நானும் ஒரு பார்வையாளனாக பங்கேற்கும் படியான வாய்ப்பு நேற்று வெள்ளிக்கிழமை (செப் 18) கிடைத்தது. நான் அதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தேன். இலங்கையின் தமிழ் சினிமாவுக்கான ஆர்வத்தினை வெளியிடும் இளம் கலைஞர்களை அதன் மூலம் சந்திக்கவும்- கருத்தாடவும் முடிந்தது. அத்தோடு, செயற்பாட்டாளர் ஷெரின் சேவியரின் ‘முற்றுப்புள்ளியா…?’ எனும் முழு நீளத் திரைப்படத்தை காணும் வாய்ப்பும் கிட்டியது.

இறுதி மோதல்களையும், அதன் பின்னரான விடயங்களையும் புதிய இயக்குனராக ஷெரின் சேவியர் காட்சிப்படுத்த முயன்றிருக்கின்றார். ஆனால், அந்தப் படம் இறுதி மோதல்களையோ, அதில் பாதிக்கப்பட்ட மக்களையோ, அதன் பின்னரான வாழ்வையோ, சமூக மாற்றத்தையோ, முறையான அரசியலையோ பேசியிருக்கின்றதா என்றால் ‘இல்லை…. நிச்சயமாக இல்லை’ என்கிற பதிலையே சாதாரண பார்வையாளனாக என்னால் சொல்ல முடிகின்றது.

சினிமா என்பது காட்சிகளை முன்னிறுத்திய பெரும் பாய்ச்சலுள்ள ஊடகம். அது, உணர்வுகள் சார்ந்து பெரும் மாற்றங்களைச் செய்ய வல்லது. முறையாக- தீர்க்கமான படங்கள் எடுக்கப்பட்டால் அது சாத்தியமாகும். நான் அப்படித்தான் நம்புகின்றேன். ஆனால், அதனை தமது சுய தேவைகளுக்கான முன்முனைப்புக்களாக முறையான தேடல்- புரிதல்- அரசியல் தெரியாமல் கையாளும் போது, சம்பந்தப்பட்டவரை மாத்திரமின்றி, அவரது சமூகத்தையே குத்திவிடுகின்ற கத்தியா மாறிவிடும் வாய்ப்புக்கள் நிறைய உண்டு. அதையும் நாம் கடந்து வந்திருக்கின்றோம்.

இறுதி மோதல்களின் கோரத்தையும், அதன் பின்னராக நீளும் மோசமான வாழ்வையும் சினிமாவாக கையாளுதல் என்பது பெரும் பொறுப்போடும் செய்யப்பட வேண்டியது. அதை, முற்றுப்புள்ளியா…? நிச்சயமாக செய்யவில்லை. இயக்குனரான ஷெரின் சேவியர், இறுதி மோதல்களின் இறுதி நாட்கள் மற்றும் அதன் பின்னரான வாழ்க்கை பற்றி பலரிடம் கேட்ட கதைகளை பகுதி பகுதியாக பகுதி செய்தால், முழுமையான சினிமாவொன்று கிடைத்துவிடும் என்று நம்பியிருக்கின்றார். ஆனால், அது, கேட்ட கதைகளை மீண்டும் ஞாபகப்படுத்துவதைத் தவிர ஒன்றையும் நிகழ்த்தவில்லை. அத்தோடு, மனித உரிமைகள் சார் செயற்பாட்டாளராக தன்னை முன்னிறுத்தும் இயக்குனர், தன்னுடைய பார்வையின் தனக்கு சமூகம் சார்ந்த பார்வை எப்படிப்பட்டது என்று மேல் மட்டத்திலிருந்து பார்ப்பது போல தோன்றுகின்றது. அவரின் சமூகம் தொடர்பிலான பார்வை போலியானதா?, என்கிற சந்தேகத்தையும், சுயதேவைகள்- பிரபலமாகும் முனைப்புக்களின் நோக்கில் இருக்கின்றதா?, எனும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இறுதி மோதல்களின் கதைகள் இலட்சக்கணக்கில் உண்டு. நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்படாதவர்கள், வெளிநாட்டிலிருந்தோர், வெளியுலகம் தெரியாமல் உள்ளிருந்தோர் என்று விரிந்து செல்கின்றது. ஒவ்வொரு கதையும்- அது சார்ந்த சம்பவமும் ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் உணர்வு சார்ந்த கொதிப்பை, வலியை, ஏம்பலிப்பை- இயலாமை உள்ளிட்ட உணர்வுகளைக் கொள்ள வைக்கும். ஆனால், அதனைத் தாண்டிய நிகழ்த்த வேண்டிய அரசியல் எழுச்சி அல்லது வாழ்வுக்கான உண்மையான அர்ப்பணிப்பு என்பது முக்கியமானது. அது, தொடர்பில் நாம் சிந்திப்பதில்லை. அதையேதான், இயக்குனர் ஷெரின் சேவியரும் செய்திருக்கின்றார்.

சுமார் ஒன்றேமுக்கால் மணிநேரம் கொண்ட படத்தில் ஒன்ற முடியவில்லை. நீண்ட நெடிய எரிச்சலை மாத்திரம் வழங்கிக் கொண்டிருந்தது. இரண்டு இடங்கள் மாத்திரம் உணர்வு ரீதியில் ஒரு பதற்றத்தை கொடுத்தது. ஒன்று, பிரதான பெண் பாத்திரத்தின் மகள்- தந்தைக்கிடையிலான இறுதிக் காட்சி. மற்றையது, இறுதி மோதல்களின் பாதிக்கப்பட்ட அம்மா ஒருவரின் சாட்சியம் பற்றிய நேர்காணல் பகுதி. மற்றப்படி, உணர்வு ரீதியாக மக்களை ஆட்கொள்கின்றோம் என்கிற பெயரில் பாடல்களைப் போட்டு எரிச்சல் படுத்திவிட்டார்கள்.

முற்றுப்புள்ளியா…? சுயவிளம்பரத்துக்கான ஆர்வத்தோடு, மேல் தளத்திலிருந்து பார்க்கப்பட்டு, சரியான தேடல்- புரிதல்- அரசியல் இன்றி எடுக்கப்பட்ட காட்சிகளின் கோர்வை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், அந்தக் காட்சிகளிலும் கூட நேர்த்தியான தொடர்புகளில்லை.

முற்றுப்புள்ளியாவுக்கு படத்தொகுப்பை தென்னிந்தியச் சினிமாவின் சிரேஷ்ட படத்தொகுப்பாளர்- இயக்குனர் பி.லெனின் செய்திருக்கின்றார். தான் வாழ்நாளில் மிக முக்கியமான படமாக இதைக் கொள்வதாகவும் சொன்னார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டும் காணப்பட்டார். அவரின் உணர்ச்சி மேலிடுகை என்பது இறுதி மோதல்களின் நிகழ்ந்த கொடுமைகள் பற்றி கதைகள் கேட்கும் வெளியாள் ஒருவர் கொள்ளும் மனநிலை சார்ந்தது. அதை மதிக்கலாம். ஆனால், அவருக்கும் எமது அரசியலும்- அது சார்ந்த நகர்தலும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால், இந்தப்படம் குறைப்பிரசவம் என்று நினைத்து பங்களித்திருக்க மாட்டார்.

நான் இப்போதும் இலங்கை தொடர்பிலான சினிமாக்களில் முக்கியமானது என்று லெனின் என் சிவத்தின் A Gun & a Ring-கைக் கொள்கிறேன். ஏனெனில், அது, இனப்பிரச்சினைகளின் விளைவின் விளைவுகள் தோற்றுவித்த கதைகளை உண்மையாக பேசியிருக்கின்றது. அதில், விளம்பர யுத்தி ஏதும் இருக்கவில்லை. அது, சினிமாவுக்கான நேர்த்தியை கொண்டிருக்கின்றது. அதனால், மக்களிடம் சரியான புரிதலையும் ஏற்படுத்தியிருக்கின்றது. (இங்கு ‘விளைவின் விளைவுகள்’ எனும் பகுதியூடு இனப்பிரச்சினையின் போக்கிலான புலம்பெயர்வு மற்றும் ஆயுதப் போராட்டங்கள் ஏற்படுத்திய சில விளைவுகளின் நகர்வுகள் பற்றி குறிப்பிடுகின்றேன்.)

முற்றுப்புள்ளியா…?வை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் நேற்று பார்வையிட்டார். படம் பற்றிய அவரின் எண்ணப்பாடுகள் என்ன என்று, எப்போதாவது அவரைச் சந்திக்கும் போது கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் சந்தர்ப்பம் வாய்க்கிறதா என்று!

-புருஜோத்தமன் தங்கமயில்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.