முற்றம்

‘Demons in Paradise’ என்கிற ஆவணப்படத்தின் இறுதிக் காட்சிகளில் ஓங்கி வளர்ந்த அரச மரமொன்றை வெட்டிக் கொண்டிருப்பார்கள்.

அந்த மரத்தின் இறுதிக் கிளையும் வெட்டி வீழ்த்தப்படும் போது, “தமிழ் மக்களின் ‘தனி ஈழத்துக்கான’ கனவு ஒட்டுமொத்தமாக வெட்டி வீழ்த்தப்பட்டது“ மாதிரியான உணர்வினை பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் இயக்குனர் ஜூட் ரட்ணம் குறியாக இருந்திருக்கின்றார். அதில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றார். 

ஆனால், ‘தனி ஈழத்துக்கான’ கனவு ஏன் உருவானது, அது ஒரு சில தனிநபர்களின் கனவு மட்டுந்தானா?, என்கிற கேள்விகளை எல்லாம் சில மேலோட்டமான உரையாடல்களின் மூலம் கடந்து நின்று, ஆயுதப் போராட்ட காலத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகளைப் பற்றி அவர் பேச விளைந்திருக்கின்றார். அதன்மூலம், ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட வேண்டியதே என்று முடிவுரை எழுதவும் நினைத்திருக்கின்றார். அங்குதான் சிக்கல் ஏற்படுகின்றது.

1983ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் குடும்பமொன்றின் ஐந்து வயது மகனாக, ‘Demons in paradise’ படத்தை ஆரம்பிக்கும் ஜூட் ரட்ணம், அந்தக் கலவரமும், அதன் பின்னரான நாட்களும் தனி ஈழத்துக்கான தேவையை தன்னையும் உணர வைத்திருந்தாக கூறுகின்றார்.

தனி ஈழத்துக்கான கனவும், அதனை நோக்கிய பயணமும், 1983 கலவரத்தினால் எழுந்த ஒன்றல்ல. சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த அரசியல் போராட்டங்களின் போக்கிலேயே தனி ஈழத்துக்கான போராட்டம் தோற்றம் பெற்றது. அஹிம்சைப் போராட்டங்களின் தோல்வி, ஆயுதப் போராட்டங்களைத் தோற்றுவித்தது. அந்தப் போராட்டத்தின் தேவை, 1983 யூலைக் கலவரத்தின் மூலம் தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் உணரப்பட்டது. அவற்றையெல்லாம், பேசுவதிலிருந்து தள்ளி நிற்கின்ற இயக்குனர், இறுதி மோதல்களுக்குப் பின்னரான சிதைவுகளில் ஏறி நின்று, ஆயுதப் போராட்டத்தின் மீதான விமர்சனங்களை அடுக்குகின்றார். அது, ஒரு பக்கத்தின் மீதான ஒட்டுமொத்த விமர்சனமாக இருக்கும் போது, படைப்பின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்குகின்றது?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான எந்தப் போராட்டமும் விமர்சனங்களுக்கும் அப்பாலானது அல்ல. நீண்ட காலமாக ஆயுத வழியில் போராடி வந்திருக்கின்ற இனத்தின் மகனாக, மோதல்களுக்குள் வாழ்ந்த ஒருவனாக, அதன் விளைவுகள் பற்றி தீர்க்கமாக உரையாடப்பட வேண்டியதை இந்தக் கட்டுரையாளர் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றார். ஆனால், ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்பது எந்தவித விமர்சனங்களுக்கும் அப்பாலான சுதந்திரத்தைக் கொண்டது அல்ல என்பதையும் இந்தக் கட்டுரையாளர் சுட்டிக்காட்ட விரும்புகின்றார்.

ஏனெனில், ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்ற காட்சிகளும், அங்கு கதை மாந்தர்களாக உலவும் முன்னாள் போராளிகளும் பேசும் விடயங்கள் அதிகமாக சகோதரப் படுகொலைகளைப் பற்றியதாகவே இருக்கின்றது. அவர்கள் பேசும் விடயங்களில் பூரணத்தன்மையைக் காண முடியவில்லை. சில பகுதிகள் இடைநடுவில் வெட்டப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதிகள் பேசும் விடயங்கள் எவை? ஏன் அவை இடை நடுவில் நீக்கப்பட்டிருக்கின்றன?.

அத்தோடு, இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் உள்ளிட்ட தரப்புக்களினால் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புக்கள், பெரும் அழிப்புக்கள் தொடர்பில் பேசுவதிலிருந்து படம் ஏன் விலகி நிற்கின்றது? எந்தவித தார்மீகமும் இன்றி முள்ளிவாய்க்காலுக்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாட்களை கணக்கில் எடுக்காது, ‘Demons in paradise’ பேசுகின்ற விடயங்கள் பூரணத் தன்மை அற்றதாகவும், அது ஏதோவொரு தேவைப்பாட்டின் அடிப்படைகளோடு எடுக்கப்பட்டிருக்கின்றதா என்கிற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது.

படத்தின் இறுதியில் ஜூட் ரட்ணம் கூறுகிறார், “தமிழ் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். மக்கள் கொல்லப்பட்டாலும் யுத்தம் முடிய வேண்டும் என்று விரும்பினேன்.” என்று.

கொழும்பிலிருந்து யுத்தத்தை பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒருவராக அவர் தன்னுடைய எண்ணத்தினை அப்படி வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆனால், அந்த எண்ணம் உண்மையில் தார்மீகத்தின் அடிப்படையிலானதா? யுத்தங்கள் நீண்டு சென்று பேரழிவு நிகழ வேண்டும் என்று இந்தக் கட்டுரையாளர் விரும்பவில்லை. அதுவும், யுத்தத்திற்குள்ளேயே பிறந்து, 2000 ஆண்டு வரை யுத்தத்தினை நேரடியாக எதிர்கொண்ட ஒரு தமிழ் மகனாக யுத்தங்களை அடியோடு வெறுக்கின்றார்.

ஆனால், யுத்தங்களை முடித்துக் கொள்வது என்பது, எவ்வளவு மக்களைக் கொன்றாவது முடித்துக் கொள்ளுதல் என்கிற எண்ணத்தின் சார்பிலானது என்கிற போதுதான் படம் பார்த்துக் கொண்டிருந்த கட்டுரையாளர் தடுமாறிவிட்டார். உலுக்கப்பட்டுவிட்டார்.

படம் திரையிடல் முடிவுற்றதும், “மக்கள் கொல்லப்பட்டாலும் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று நீங்கள் படத்தில் கூறியிருக்கின்ற கூற்றோடு இன்னமும் இணங்கியிருக்கிறீர்களா” என்று இயக்குனரை நோக்கி கேட்கப்பட்டது. அவர், எந்தவித தடுமாற்றமும் இன்றி ‘ஆம்’ என்றார்.

ஆயுதப் போராட்டத்தின் வழி 1980, 1990களில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள் தொடர்பில் தார்மீகக் கேள்விகளை எழுப்பி, தனி ஈழத்துக்கான கனவு வெட்டி வீழ்த்தப்பட்டது என்று நிறுவ முயலும் இயக்குனர், இறுதி மோதல்கள் தொடர்பில் எந்தவித தார்மீகங்களையும் பேசுவதிலிருந்து விலகி நிற்கின்றார். அந்தக் கேள்விக்கு அவர் மழுப்பலான பதிலைச் சொல்லி தப்பிக்கவும் முயல்கின்றார். அது, அவரின் மீதான சந்தேகத்தை இன்னமும் அதிகரிக்கச் செய்கின்றது.

இந்தக் கட்டுரையில் எழுப்பப்பட்டிருக்கின்ற சந்தேகங்கள், ஜூட் ரண்டனத்தின் கருத்துச் சுதந்திரத்தையோ, படைத்தலுக்கான உரிமையையோ மறுப்பது தொடர்பிலானது அல்ல. மாறாக, பாதிக்கப்பட்ட தரப்பின் ஒரு மகனால் முன்வைக்கப்படுவதாக கொள்ளப்பட வேண்டியவை.

கடந்த காலங்களைப் பேசுவதும், தவறுகளைத் திருத்தில் கொள்வதும் முன்னோக்கிய பயணத்தின் முக்கிய கட்டங்கள். ஆனால், ஒரு பகுதி உண்மையை மட்டும் சில தேவைகளுக்காக பேசி, இன்னொரு பகுதி உண்மைகளை பேசாது கடத்தல் என்பது வரலாறுகளை பிழையாக எழுதி விடும். அந்த வகையில், Demons in paradise சில உண்மைகளைத் தரவுகளாகக் கொண்டு, பெரும் உண்மைகளை பேசுவதிலிருந்து நழுவிச் சென்றிருக்கின்றது. அது, குறைப் பிரசவமாக மட்டுமல்ல. எவ்வளவு மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின்னரும் பிழைக்க வைக்க முடியாத வலுக்குறைவோடு இருக்கின்றது.

அப்படித்தான், கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) ‘Demons in Paradise’ என்கிற ஆவணப் படத்தினை பார்த்துவிட்டு எழுந்து வரும் போது, இந்தக் கட்டுரையாளர் உணர்ந்தார்.

-புருஜோத்தமன் தங்கமயில்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.