முற்றம்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவிடம் வி.டி.வி கணேஷ் அடிக்கடி கேட்பார் "உள்ள என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?», சிம்புவும் அசடு வழிவார். உள்ளுணர்வை மதியுங்கள் என்பதற்கு இந்த வசனம் தமிழ் சினிமாவில் படுபிரபலம்.  ஆனால் என் கதை முழுக்க வேறோன்றை பற்றியது.

கணனி வடிவமைப்புத்துறையில் பயிலுபவர்களுக்கு கூறப்படும் அறிவுறைகளில் ஒன்று "உங்கள் உள்ளுணர்வுகளை மதியுங்கள்». முதலில் இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அனுபவம் உணர்த்தியபோது ஆச்சரியப்பட்டேன்.

மாதிரி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அதன் அடையாளச் சின்னம் (Logo) உட்பட அனைத்து கிராபிக் அம்சங்களையும் வடிவமைப்தற்கான ஒப்படை அது. சேனல் பிரான்டிங் என்பார்கள். பொதுவாக நாம் ஒரு தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதலில் அத் தொலைக்காட்சியின் லோகோ சுற்றி சூழன்று குனிந்து வலைந்து நிமிர்ந்து இறுதியாக கம்பீரமாக வந்து நிற்பதை பார்த்திருப்போம்.

அடுத்து ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது, நிகழ்ச்சியின் நடுவே இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் பெயர், அடுத்து வரப் போகும் நிகழ்சி குறித்த விபரங்கள் தோன்றும். சாதாரணமான வடிவமைப்பாக இவை தெரிந்தாலும் மிக நுட்பமாக செய்யவேண்டிய வடிவமைப்புத்துறையாளர்களின் கடின வேலை இது.

இதுவே எமக்கு தரப்பட்ட ஒப்படைகளில் ஒன்று, இதில் ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் ஆராய்ந்து முறையாக தயார்படுத்துதல் மற்றும் நேரக்கட்டுப்பாடு அவசியமாகிறது. இல்லையேல் நடுவிலோ அல்லது முடிவிலோ குழப்பமாகிவிடும்.


முதலில் என்ன வகையான தொலைக்காட்சி சேனல் என்பதையும் அதற்குரிய குணம், ஸ்தானம், இலக்கு வைக்கப்படும் பார்வையாளர்கள் ஆகியவற்றையும் தெரிவு செய்யவேண்டும்.

அறிவியல் சேனல், இயற்கை சேனல், விளையாட்டு சேனல் எனும் மூன்று பிரதான வகைகளுடன் இசை, அனிமேஷன் ஆகியவற்றுக்கான சேனல்களும் எமது தெரிவுக்கு கொடுக்கப்பட்டன. இயற்கை குறித்த சேனலை தேர்ந்தெடுக்குமாறு என் உள்ளுணர்வு உணர்த்திகொண்டிருந்தது. ஆனால் அறிவியல் சேனலை தெரிவு செய்தேன் நான். ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் அறிவியலுடன் கலந்துவிட்டேன். காலம் கடந்துவிட்டதால் இடையில் வகையை மாற்றயிலாது என்றுவிட்டார்கள்.

இருப்பினும் தளர்ந்து விடாமல் அறிவியல் வகையிலே என் அறிவிற்கு எட்டியவரை ஒப்படையை சுமாராக செய்துமுடித்தேன். சரி இதில் அப்படி என்ன சுவாரஸ்யம் நடந்துவிட்டது என்கிறீர்களா? அறிவியல் சேனலுக்கான லோகோவை எப்படி வடிவமைக்கலாம் என அனைத்து ஆரம்பத் தேடல்களுடன் இயற்கை சேனலுக்கான தேடல்களையும் சேர்த்துவைத்திருந்தேன்.

இயற்கை சேனலுக்கான  தொலைக்காட்சிக்கான குணம், ஸ்தானம் மற்றும் இலக்கு வைக்கப்படும் பார்வையாளர்கள் ஆகியவற்றை குறித்துவைத்திருந்தேன். அதோடு லோகோவுக்கான ஆரம்ப மாதிரிச்சித்திரங்களையும் மனதில் எண்ணிவைத்திருந்தேன். ஆனால் காலம் கடந்த நிலையில் அவற்றை ஓரங்கட்டிவிட்டு அறிவியல் சேனலுக்கு இறங்கவேண்டியதாயிற்று.

சில நாட்களுக்குப்பின் ஒப்படையின் இறுதிக்கட்ட குழு விமர்சனம் நடத்தப்பட்டது. வகுப்பில் சற்று பொறாமைப்படக்கூடிய ஒரு போட்டியாளர் இருப்பார் அல்லவா, அவருடன் குழுவாக்கப்பட்டேன் நான். எவ்வாறு நான் இயற்கை தொலைக்காட்சிக்கு லோகோ செய்ய நினைத்திருந்தேனோ, அதே போன்ற லோகோவை அவர் வடிவமைத்திருந்தார். அதை பார்த்த என் முகம் எவ்வளவு கடுப்பாகியிருக்கும் என்பதனை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.


- 4தமிழ்மீடியாவுக்காக ஹரிணி