முற்றம்

"என்னடா இப்பிடி வந்திருக்கிறாங்கள்?" 

கலவரமாகிப் போய்க் கேட்டான் ரதீபன்.
எல்லோரும் ஷர்ட் போட்டு இன் செய்திருந்தார்கள். பலர் சப்பாத்து வேறு அணிந்திருந்தார்கள். 

பெயின்டில் படம் வரைவது, சிடி போட்டுப் படம் பார்ப்பது போன்ற கணனி அறிவை(?!) பெற்றிருந்த நானும், ரதீபனும் இணைந்து, யாழ்ப்பாணத்தின் பிரபல கணணிக்கல்வி நிறுவனமான ஐ.ஐ.எஸ் சென்றிருந்தோம். மணிக்கூட்டு வீதியில் பெருமாள் கோவிலுக்கு அண்மையில் நல்ல கூட்டம்!

"மச்சி டை இல்லாததுதான் குறைச்சல். அதுவுமிருந்தா ஷோஷலுக்குப் போறமாதிரியே இருந்திருக்கும்". யாழ்ப்பாணத்தில் அப்போது டை கட்டிச் சப்பாத்துப் போட்டிருந்தால், பள்ளிகளில் சோஷல் என்று அழைக்கப்படும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்குச் செல்கிறான் எனக்கண்டுபிடித்துவிடலாம். பின்னாட்களில் 'டை' கட்டிய 'சேல்ஸ் ரெப்'கள் அறிமுகமாகும் வரை அதுதான் நிலைமை.

"ஒருவேளை பெரிய படிப்புப் படிக்கப் போறாங்கன்னு வீட்டில வெளிக்கிடுத்தி அனுப்பியிருப்பாங்க போல"
நான் வழக்கம்போல டி ஷர்ட். ரதீபன் ஷர்ட் அணிந்து தன்னுடைய வழக்கப்படி இரண்டு பொத்தான்களைப் பூட்டாமல் காற்றுப் பிடிக்க, கொலரையும் ஒழுங்காக மடிக்காமல் இருந்தான்.
"மச்சி நாங்க ரெண்டுபேரும்தான் பரதேசிக் கோலத்தில இருக்கிறம், எதுக்கும் நீ பட்டின பூட்டு" அன்று மட்டும் அதிசயமாகச் சொல்பேச்சுக் கேட்டான்.

"ஏண்டா இப்பிடி?"

"விடுறா... டேய் இவனுங்களுக்கு தெரியேல்ல. ஒரு கம்பியூட்டர் மச்சான் ஆகணும்னா என்ன செய்யவேணும்னு. முதல்ல தலையைக் கலைச்சு விடணும். பலநாள் பராமரிக்கப்படாத தலை - என்னோட தலையைப் பாரு இப்பிடி! தொள தொளன்னு அளவில்லாத பெரிய டி ஷர்ட் போடணும். லைட்டா ஒழுங்கில்லாம வளர்ந்த தாடி, மீசை, கண்ணாடி அது உன்னட்ட இருக்கு. அது சோடா புட்டியா இருந்தா பெட்டர். கையில சும்மா ஒரு ஃபிளாப்பி டிஸ்க் வச்சிருந்தா நல்லது. அத பாத்தெல்லாம் லைட்டா பயப்பிடுறானுங்க. அப்பப்ப பேசும்போது டொஸ், மதர்போர்ட், ட்ரபிள் ஷூட், சிஸ்ரம், பாஸ்கால், மொடெம் அப்பிடி வார்த்தைகள் வரணும். முக்கியமா பக்கத்தில நிக்கிறவனுக்கு எதுவும் புரியக் கூடாது. அப்பதான் அவன் நாலு பேருகிட்ட உன்னைப் பத்தி பில்டப் குடுப்பான்" - அப்போதைய கம்பியூட்டர் மச்சான்களின் குணவியல்புகளை எடுத்துரைத்தேன்.

"உண்மைல ஒரு கம்ப்யூட்டர் மச்சான் எப்பிடி இருப்பான்? ஒவ்வொரு ஸ்கூல்லயும் ஒரு விஞ்ஞானி கரெக்டர் இருக்கும்பாரு. காதை மூடின மாதிரித் தலைமுடியைக் காட்டுத்தனமா வளர்த்து, ஒழுங்கா குளிக்காம, வெட்டாத நகத்தில அழுக்கோட. அநேகமாவெள்ளைப் பசங்களா இருப்பாங்க. அப்பிடின்னா மஞ்சள் பல்லு முக்கியம். கண்ணாடி போட்டு அதுக்கு செயின் மாட்டியிருந்தா இன்னும் பெட்டர். இவனுங்களைக் காட்டி இவன்தான் கம்ப்யூட்டர் மச்சான்னு அடிச்சுவிட்டா வெள்ளைக்காரனே கேள்வி கேக்காம நம்புவான். அவனுங்களே அப்பிடித்தான் படத்தில காட்றாங்க"

"எப்பிடிறா இப்பிடி எல்லாம்?"

"நேற்றிரவு நித்திரை வரலையா அப்பிடியே யோசிச்சிட்டே படுத்திருந்தேன். கம்பியூட்டர நேர்ல ஒருக்கா பாத்துட்டா பிறகு திருந்தி ஒழுங்கா நம்மள மாதிரியே வருவாங்க பார்..."

ஒருவழியாக வகுப்பில் போய் அமர்ந்தோம். காந்தித்தாத்தா இளமையா ட்ரவுசர் போட்டு வந்த மாதிரி ஒரு அங்கிள் வந்து, சொற்பொழிவாற்ற ஆரம்பித்தார். இங்கே சொற்பொழிவு என்பது கிண்டலாகச் சொல்லவில்லை. எங்களுக்கு ஈடுபாடு தோன்றாத எந்தப் பேச்சும் சொற்பொழிவில் அடங்கும். நம் ஒவ்வொருவருக்கும் கணணி என்றதுமே என்னமாதிரியான சித்திரம் மனக்கண்ணில் தோன்றியிருக்கும் என்பது முக்கியமானது. இதற்கு சினிமாவின் தாக்கம் இன்றியமையாதது. எனக்கு கம்பியூட்டர் என்பது சினிமாவுக்கு கிராஃபிக்ஸ் செய்வது என்றே பதிந்திருந்தது. ஜூராசிக் பார்க், டெர்மினேட்டர், டைட்டானிக், கோட்சில்லா மற்றும் இயக்குனர் ஷங்கரின் படங்கள் மூலமாக கணனியின் உச்சபட்ச சாத்தியம் சினிமா என்பதாகவே பதிந்திருந்தது. 'இதில வேர்ட் எல்லாம் யார் போய்ப் படிக்கிறது? இது ஆவுறதில்லை' என முடிவெடுத்து எம்.எஸ்.அஃபீஸ்ஸைத் தலைமுழுகிவிட்டேன். என் பிரத்தியேக கணனியில் எம்.எஸ்.அஃபீஸ் இருக்கவில்லை. பிரதான பக்கேஜாக இருந்தது AutoCAD , 3D Studio Max இரண்டுமே!

"என்னடா இது? Ms Office இல்லாமக் கம்ப்யூட்டர் வச்சிருக்கே?" நண்பன் அதிர்ச்சியாகி கேட்டான்.
"எனக்குத் தேவைப்படுறதில்ல மச்சான்" சென்ற வருடம் வரை அப்படித்தான்.
"அப்ப எப்பிடி எழுதுவே?"
"கூகிள் ட்ரான்ஸ்லேட்டர்ல டைப் பண்ணி கொப்பி பேஸ்ட்" - இப்போதும் அப்படியே.

ஐ.ஐ.எஸ்.இல் படிக்கப்போன அதே காலகட்டத்தில் திருநெல்வேலியில் அமைந்திருந்த டிசி.எஸ் என்றொரு கம்பியூட்டர் நிறுவனத்தில் ஒரு குறூப் படிக்கப் போயிருந்தது. நாங்களும் அங்கே சும்மா வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக முதலில் கம்பியூட்டரில் ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தி விட்டுப் பின்னர் பாடங்களை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்திருந்தார்கள்.

முன்னப் பின்ன கம்பியூட்டரையே பார்க்காத நம் நண்பர்கள் எல்லாம் கும்பலாக குவிந்து நிற்க, அங்கே நின்ற பெண்மணி அறிமுகப் படலத்தை ஆரம்பித்தார். "இதுதான் பெயிண்ட். பென் டூல், பிரஷ் டூல் எல்லாம் பாவிச்சு படம் கீறலாம். கலர் அடிக்கலாம். இதுதான் உள்ளதிலேயே முக்கியமான டூல், இறேசர்.." என்கிற ரீதியில் விளக்கம் கொடுத்தார்.

"நீங்கள் ட்ரை பண்ணிப் பாருங்கோ.." என்றவுடன், கும்பலில் பின்னால் நின்ற ஒருத்தன் பெரும் குரலில் கூவினான், "டேய்! வச்சு வாட்டுங்கடா!".

ஒரு வழி பண்ணிவிடும் நோக்கில் முப்பது பேருக்குக் குறையாத கும்பல் காத்திருந்தது கண்டு கலவரமாகிப் போன அந்தப் பெண்மணி ஒவ்வொருவராக அனுமதித்தார். ஆர்வக் கோளாறு ஒருத்தன் மவுசைப் பயபக்தியுடன் கைப்பற்றினான். பள்ளிக்கூட கெமிஸ்ட்ரி பரிசோதனைச் சாலையில் நுழைந்த நுழைஞ்ச உடனேயே குழாயியைக் கையில் எடுத்து பக்கத்தில் நிற்கிறவன் ட்ரவுசர் பொக்கட்டில் தண்ணீர் விட்ட பேர்வழிகள் எல்லோரும் கைகள் பரபரக்கக் காத்திருந்தார்கள். "என்னடா ஒண்டுமே நடக்கேல்ல" என்ற அதிர்ச்சியான குரலுடன், மவுஸ் வைத்திருந்தவன் அந்தரத்தில் வைத்து மூவ் பண்ணிக் கொண்டிருந்தான்.

அடுத்த வருடம் மீண்டும் நானும் ரதீபனும் 'இன்டர்நெட் ரெக்னொலஜி' என்கிற கற்கை நெறியில் சேர்ந்திருந்தோம். வெப் டிசைன். அப்போது முன்பக்கம்(?!) Front Page பிரதானமாக இருந்தது. HTML , Flash எல்லாம் கொஞ்சமாகக் கற்பித்தார் மருத்துவர் காந்தரூபன். காலை ஆறுமணிக்கு ப்ரெக்டிக்கல் நேரம் கொடுத்திருந்தேன். காலைப் பனிக் குளிரில் முதலாவது ஆளாகப் போய் லாப்பில் அமர்ந்து கணணியை ஒன் செய்யும்போது மல்டிமீடியா அறையிலிருந்து யாரோ ஒரு அண்ணன் ‘மின்னலைப் பிடித்து’, ‘மெல்லினமே’ என்று அப்போதைய ஹிட் பாடல்களை ஒலிக்கவிடுவார். கடுமையான காதலினால் பீடிக்கப்பட்டவர் யாரோ அங்கிருக்கிறார் என்றுதோன்றும். எனக்கு ஓரளவு பரிச்சயமானவர்களாக விசாகன், கோகுலன், தியாகு அண்ணன்கள், பாமினி அக்கா ஆகியோர் இருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தின் அப்போதைய மரபோ என்னவோ தெரியவில்லை. ஒரு கம்ப்யூட்டர் லாபில் செல்லும் மாணவர்களை, அங்கே இருக்கும் டெமோக்களைக் கவனித்தால் தெரியும். ஆரம்பப் படியில் இருப்பவர்கள் என கருதப்படும் Ms Office படிப்பவர்களுக்கு கணணியை ஒன் பண்ணத் தெரியாது என இருதரப்புமே நம்புவார்கள். டெமோக்களையே அழைப்பார்கள். யாரையும் கேட்காமல் நாங்கள் பாட்டுக்கு கணணியை இயக்கினால், பக்கத்திலிருப்பவர்கள் ‘இவன் என்னமோ கனக்கப் படிச்சிருப்பான் போலயே’ என அறிவாளியைப் பார்ப்பதுபோல பிரமித்துப் பார்ப்பார்கள். ‘யாரிவர் அதிகப்பிரசங்கித்தனமா நடக்கிறார்’ என்பதுபோல ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள் அநேகமான பெண் டெமோக்கள்.

தொடர்ந்த ஒரு வருடம் ஐ.ஐ.எஸ். காலமாகவேயிருந்தது. ஆண்டு விழாக் கொண்டாடியது, சாந்தன் ஆசிரியரிடம் AutoCAD படித்தது. என ரகளையான நாட்களவை. சமீபத்தில் ஜாவாவைக் தெஹிவளையில் கண்டபோது, மீண்டும் அந்த நினைவுகள்.

ஜாவா! அவன் பெயர் நினைவில்லை. ரதீபன் வைத்த காரணப் பெயர் அது. 'ஜாவா' படித்துக் கொண்டிருந்தான். ஜாவாவிடம் ஒரு தீவிரமான தேடல் இருந்தது. புதிய முயற்சிகளை மேற்கொள்வான். அவ்வப்போது தான் முயற்சித்தவற்றை கணணி அறையில் நிற்கும் பெண்மணிகளிடம் காண்பித்துப் பரவலான பாராட்டுக்களைப் பெறுவது அவன் வழக்கம். அப்போது ஃபோட்டோஷொப் பழகியிருந்தான் போல.

ஃபோட்டோஷொப் அறிமுகமான காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத பல ஆச்சரியங்களை நம்மவர் கண்முன்னே நிகழ்த்திக் காட்டியிருந்தார்கள். தென்னை மரத்தின் உச்சியில் நடைபோடும் கோழிக்குஞ்சுகள், கடலுக்குள் ஓடும் புகையிரதம், அந்தரத்தில் மிதக்கும் மனிதர்கள் எனத் திகிலூட்டுவார்கள்.

ஜாவா வித்தியாசமாகத் தனது ஒருவயதிலிருந்து இருபது வயது வரையான புகைப்படங்களை ஒன்றிணைத்து 'காலத்தின் கோலம்' எனத் தலைப்பிட்டு ஒரே பக்கத்தில் பார்வைக்குட்படுத்தியது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்றைப் பெற்றிருந்தது. அப்படியான சமயங்களில் அந்தப்பக்கமாகச் சென்றால் அவ்வளவுதான். ஜாவா அழைத்துத் தனது புது முயற்சியைக் காண்பிப்பான். 'பார்த்தியா?' கண்களில் மின்ன, ஒரு வெற்றிப் புன்னகை அவன் முகத்திலிருக்கும். அதோடு விடமாட்டான். வாய்விட்டு, "எப்பிடி?" என்றுவேறு கேட்பான். சுற்றிலும் பெண்கள் பிரமித்துப் போய்ப் பார்ப்பார்கள்.

ஒருமுறை ஜாவா அவசரமாக என்னை அழைத்தான். பக்கத்தில் இன்னொரு நண்பனும். ஜாவா AutoCAD படித்திருந்தான் அப்போது. எனக்கு அதுபற்றி எதுவுமே தெரியாது. கணனியில் ஒரு நேர்கோடு போட்டு, பக்கத்தில் இன்னொரு வளை, நெளி கோடொன்றை வரைந்தான். ரிவோல்வ் ஒப்ஜெக்ட் என்கிற கட்டளையைக் கொடுத்தான். இப்போது பௌத்தவிகாரை போல ஒரு உருவாகியிருந்தது. சுற்றிலும் நின்ற பெண்கள்கூட்டம் வியப்புடன் கிசுகிசுத்தது. கலர் கொடுத்தான். பின்பு, 3D Orbit என்கிற கட்டளையைக் கொடுத்துவிட்டுப் சுட்டெலியால் பிடித்திழுக்க, அந்த உருவம் சுழலத் தொடங்கியது.

'விகாரைய எதுக்குடா சுழட்டுறே' எனத்தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த என்னைப்பார்த்தான். ஒரு வெற்றிச் சிரிப்புடன், "எப்பிடி... நீ செய்வியா?" என்றான்.
"நானும் AutoCADபடிச்சா செய்வன்டா"
'இதுக்கு இப்படியும் ஒரு பதில் இருக்கிறதா?' என்பதுபோலப் பார்த்தான் பக்கத்தில் நின்ற நண்பன்.

"மகள் கொம்பியூட்டர் செய்யிறா"

'கொம்பியூட்டர் செய்வது' என்கிற புரட்சிகரமான சொல்லாடல் யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரத்து ஒன்றின் இறுதிகளில் ஆங்காங்கே தோற்றம்பெற்று இரண்டாயிரத்து இரண்டு, அதற்குப் பிற்பட்ட காலங்களில் சடுதியாக பரவிப் புழக்கத்தில் இருந்தது. இந்த மாற்றம் எப்படிச் சாத்தியமானது என்பது இப்போதும் ஆச்சரியம்தான். எந்தவித பத்திரிக்கை, பொதுக்கூட்டப் பிரச்சாரங்களோ, சுவரொட்டிகளோ ஏன் இப்போது மிக எளிதாக்கப்பட்டது போன்ற ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பற்றிக் கேள்வியேபடாத காலகட்டத்தில் மக்களில் மனங்களில் இயல்பாகவே தோன்றியிருந்தது.

இங்கே மக்கள் என்பதைச் சரியாகச் சொன்னால் அம்மாக்கள். இன்னும் திருத்தமாகச் சொன்னால மகள்களைப் பெற்ற அம்மாக்கள். அவர்கள்தான் அப்படிப் பெருமையாகப் பேசத் தலைப்பட்டார்கள். 'மகள் கொம்பியூட்டர் செய்யிறா'. அதாவது மகள் உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு, இப்போது எம்எஸ் ஒஃபீஸ் படித்துக் கொண்டிருக்கிறார் எனப் புரிந்து கொள்ளலாம். அப்படியே சில பெண்களும் சொல்லிக் கொள்வார்கள்.

ஒருமுறை நண்பன் கௌரி தெரிந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான்.
"என்ன இந்தப்பக்கம்?"
"கம்பியூட்டர் செய்யிறன்"
"அப்பிடியா? இதுவரைக்கும் எத்தினை செய்துட்டீங்க? இங்க பெருசா விலை குறைஞ்ச மாதிரித் தெரியேல்லையே!"
அந்தப்பெண்மணி முறைத்துப் பார்த்தார். இப்போதும் அப்படித்தான் சொல்கிறார்களா தெரியவில்லை. பலர் கம்ப்யூட்டர் செய்துகொண்டிருக்கக் கூடும்.

இந்த இணைப்பில் ஜீ.உமாஜியின் முன்னைய பதிவுகளைக் காணலாம்

 

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'