முற்றம்

திருமதி. பீரிஸ் அவர்களை முதன்முதலாகப் பார்த்தபோது சற்றுப் பயமாக இருந்ததாக ஞாபகம். என் முதல்வேலை, முதல் நிறுவனத்தின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் காரியதரிசியாக இருந்தார் திருமதி பீரிஸ். வேலை பார்ப்பவர்கள், பார்த்தவர்கள் தொடர்பில் அன்பும், அக்கறையும் கொண்டவர். ஒரு அம்மா போலவே சமயங்களில் பேசுவார். 

கூடவே அபாரமான ஞாபகசக்தியும் அவருக்குண்டு. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, தொலைபேசி அழைப்பெடுத்து, “உமா, ஜஃப்னா ப்ரொஜெக்ட்” என்பதே என்னை நினைவூட்டப் போதுமாயிருந்தது. வேலைக்கான வெற்றிடம் பற்றிக் கேட்டேன். உடனே சுயவிபரக் கோவையை அனுப்பு என்றார், அனுப்பினேன். இரண்டு நாட்களில் நியமனக் கடிதம் பெற்றுக்கொள்ள அழைத்தார்.

கையொப்பமிட்டு, நன்றிசொல்லிக் கிளம்பும்போது, அழைத்தார்.

"உனக்கு ஏதும் பிரச்சினையா?" என்றார்.
"இல்லை" என்றேன்.
"அப்படியானால் சுயவிபரக் கோவையை அனுப்பி விடு. இணைத்திருப்பதாகச் சொல்லி, வெறும் மெயிலை மட்டுமே அனுப்பியிருக்கிறாய்"
உறுதியளித்து அசட்டுத்தனமான நன்றி சொல்லி, வெளியேறினேன்.

யோசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவரைப்பார்க்க ஏன் எனக்கு ஒவ்வாமையாக இருந்தது? சற்றே உள்மடிந்த, பிடிவாதமிக்க உதடுகள், மூக்குக்கண்ணாடி, கம்பீரமான குரல் போன்றவை ஒரு பீதியை ஏற்படுத்தியிருக்கலாம். இப்படி யாரையோ பார்த்திருக்கிறோமா? தீவிரமாக யோசித்ததில் கண்டு பிடித்துவிட்டேன். பதின்பருவத்தின் தொடக்கத்தில் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியையின் சாயல் அவரிடமிருந்தது.

யாழ்ப்பாணத்தின் போராட்டகால வாழ்க்கையில் அநேகமான ஆங்கில ஆசிரியர்கள், மாணவர்களின் பொது எதிரிகளாக இருந்த காலமொன்று இருந்தது. உங்களுக்கும் கூட சிலசமயங்களில் அப்படித்தோன்றியிருக்கலாம். நீங்கள் சந்திக்கும் யாரோ ஒருவரின் தோற்றம், ஏதோ ஒருவிதத்தில் உங்கள் பள்ளி ஆங்கில ஆசிரியைத்தனமாக இருந்திருக்கலாம். அதுமட்டுமில்லாமல், எந்தக்கணத்திலும் அவர் 'த போஸ்ட்மன்' சொல்லுங்க பாப்பம் கேட்டுவிடுவாரோ என நீங்களும் நினைத்திருக்கக்கூடும்.

ங்கில ஆசிரியைகளுக்கென்றே சில பிரத்தியேக அடையாளங்கள் இருந்திருக்கின்றன. அவை இயல்பாகவே வந்துவிடுகின்றனவா? அல்லது தம்மை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞை மற்றைய ஆசிரியைகளை விட அவர்களுக்கு அதிகமாகிவிடுகிறதா? தெரியவில்லை. முப்பது ஆசிரியைகளில் இலகுவாக ஒரு ஆங்கில ஆசிரியையைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

உதட்டுச் சாயம், தூக்கிச் சொருகிய கொண்டை, உடை, பாவனை என அவர்கள் தனியாகத் தெரிவார்கள். சாதாரணமாக வீதியில் செல்லும் வித்தியாசமான ஒருவரை இங்க்லீஷ் டீச்சரா இருப்பாரோ? என எண்ணவைக்கும் அளவுக்கு. அதிகமாகவோ, இயல்பாகவோ தனித்துத் தெரிவார்கள். மற்றைய ஆசிரியர்களிடம் அவ்வளவு அதிகமாகப் பேசுவதில்லை. வீண் அரட்டையடிப்பதில்லை. முகத்தைக் கம்பீரமாக, சற்றுக் கடுமையாக வைத்துக் கொள்வார்கள். தங்களைத் தனித்துக் காட்டிக் கொள்ளும் பிரயத்தனம் எப்போதும் அவர்களிடம் இருக்கிறதோ எனத் தோன்றும்.

பெரும்பாலும் பள்ளிகளின் அதிபரிலிருந்து சக ஆசிரியர்கள் வரை அவர்கள் விஷயத்தில் அதிகம் தலையிடுவதில்லை. அல்லது ஒருவித சலுகை இருந்ததை அவதானிக்க முடிந்தது. பெரும்பான்மையான உடற்பயிற்சி ஆசிரியர்களை பள்ளிகளில் அனைவரும் கண்டுகொள்ளாமல் கைகழுவி விட்டிருந்தது போலவே ஆங்கில ஆசிரியர்களிடம் அதிகம் வைத்துக் கொள்ளாமல் ஒருவித மரியாதையை கொடுப்பதையும் காணமுடிந்தது. ஒருவேளை எல்லோருக்குமே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது தொடர்பான தயக்கம் இருந்திருக்கலாம். திடீரென அவர்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிட்டால்? என்கிற ஒரு பயம் எங்களைப் போலவே அவர்களுக்குள்ளும் இருக்கும் என்றுதான் அப்போது நம்பினேன்.

ஒருமுறை பள்ளியில் எனக்குப் பாராட்டு(?!) நடாத்தியே ஆகவேண்டும் என்றார்கள். அதுவும் அப்பாவை அழைத்துவா என அடம்பிடித்தார்கள். என்னிடம் தவறேதும் இல்லாததால் உடனேயே அப்பாவிடம் சென்று நிலைமையைச் சொன்னேன். அப்பா வந்தார். பிரின்சி அறையில் நாங்கள் மூவரும். அப்பா தமிழில் சாதாரணமாக பேச, பிரின்சி சற்று எகிறுவது போல பேசினார்.

அப்பாவுக்கு ஆங்கிலம் தொடர்பான அரசியல் தெரியாது. அப்பாவின் தமிழ் அவ்வளவு சொல்லும்படியிருக்காது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு தமிழில் பொருத்தமான அழகான சொற்கள் பரிச்சயமில்லை. ஆனால் அவருக்குச் சுத்தத் தமிழில் பேசவேண்டுமென்ற விபரீதமான ஆர்வமிருந்ததை அவதானித்திருக்கிறேன். சின்னவயதில் தாழப்பறக்கும் விமானத்தைக்காட்டி, ‘ஆகாயக் கப்பல் பாத்தியா’ என்று கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அப்படியொரு கொடூரமான மொழிபெயர்ப்பை வேறெங்கும் கண்டதில்லை.

ஆக, திடீரென்று தமிழார்வத்தில் பேசி நமக்கெதிராகத் திரும்பிவிடுமோ என்று நான் பயந்த கணத்தில் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், பாடசாலைக் கல்விமுறையில் பிரச்சினைகள், போதாமைகள் பற்றி அப்பா பேச, பிரின்சி பவ்வியமாக கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே சற்றுப் பரிதாபமாக இருந்தது. யார், யாரிடம் முறைப்பாடு செய்ய விழைந்தார்கள் எனக் குழப்பமாக இருந்தது.

ங்கிலம் என்பது மொழிமட்டுமல்ல. அறிவு, ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி என்கிற உயரிய கருத்து பள்ளிகளில்தான் தோற்றம் பெறத் தொடங்குகிறது. ஆங்கில ஆசிரியர்களுக்குக் கிடைத்தது போலவே ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் ஒரு மரியாதை கிடைத்தது. அவர்களில் மிகப்பெரும்பான்மை பெண்கள்தான்.

தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. அந்நிய மொழி தேவையில்லை, தாய்மொழியே உயிர்மூச்சு என்கிற கொள்கையில் நாங்கள் அவ்வளவு உறுதியாக இருந்ததே காரணம், நம்புங்கள். 'அதான் வெள்ளைக்காரன் சுதந்திரம் குடுத்துட்டான் இல்ல? பிறகென்ன? நாம் அடிமைகளாக இருந்ததை நினைவூட்டும் ஆங்கிலமொழி எதற்கு?" என்று அப்போதே விவரமாகக் இருந்த நண்பர்கள் கூட இருந்தார்கள்.

ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளியின் பிரதி அதிபர் மிகக் கண்டிப்பானவர். ஒழுக்கவியலுக்கும் அவரே பொறுப்பு. அதனால் கையில் பெரிய பிரம்புடன், ஒரு முடிவோடு சுற்றிக் கொண்டிருப்பார். ஆங்கிலத்தில் நல்ல புலமை. ஆங்கிலம் படிக்கக்கூடிய மாணவர்களிடம் தனி அன்பு என வளைய வந்து கொண்டிருப்பார்.

அந்த முறை அவர்தான் எங்கள் வகுப்பு மாணவர்களின் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தார். என் போதாத காலம். தெரிந்தோ தெரியாமலோ நான் அந்த ஆண்டின் அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்றுத் தொலைத்துவிட்டேன். அன்றிலிருந்து எனக்கு ஏழரை ஆரம்பமாகி விட்டிருந்தது. தொடர்ந்த மூன்றுவருடங்கள் அந்தப்பள்ளியை விட்டு நான் நீங்கும்வரை என் பெயரை அவர் மறக்கவில்லை.

அதன்பின் என் ஆங்கில அறிவு காரணமாக ஒவ்வொரு பரீட்சையின் பின்னரும் அவர் பார்வையில் படாமல் ஒளிந்து திரியவேண்டியிருந்தது. அவரது கண்காணிப்புக்குரிய, விருப்பத்துக்குரிய ஒரு மாணவனாகிவிட்டேன். ஒரு ஆசிரியரின் விருப்பத்துக்குரிய மாணவனாயிருப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. அவர்களின் அல்லக்கை அல்லது ஆட்காட்டியாக செயற்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். சக நண்பர்களை காட்டிக்கொடுக்க வேண்டும். நான் அதற்கெல்லாம் சரிப்பட மாட்டேன் என்பதால் பிடித்த ஆசிரியர்களிடமே ஒரு வித விரோதத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.

என் ராசியின்படி நான் படித்த பள்ளிகள் எல்லாவற்றிலுமே எங்கள் வகுப்புத்தான் குழப்படிக்குப் பெயர்போனதாக இருக்கும். சந்தேகத்தினடிப்படையில் விசாரணைக்கு வரும் வைஸ்பிரின்சி முதலில் என்னை, "யூ டூ புரூட்டஸ்?" என்பதுபோல் ஒரு பார்வை பார்ப்பார். சமயத்தில் ‘நீயுமாடா?’ என வாய்விட்டுக்கேட்டு சப்பென்று ஒரு அறையும் வைத்துவிட்டுத்தான் விசாரணையையே ஆரம்பிப்பது வழக்கம்.

ள்ளிகளில் ஆங்கிலதினப் போட்டிகளுக்கான ஒத்திகை நடைபெறும் காலப்பகுதி ஒரே அமர்க்களமாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் எந்த நேரத்திலும் வகுப்பில் இருக்கலாம், போகலாம், யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டால் 'இங்க்லீஷ் டே ரிகர்சல்' அவ்வளவுதான். எதிர்ப்பேச்சே இருக்காது. மேடையில் தனியாகவோ அல்லது கும்பலோடு கோவிந்தா போட்டுவிட்டு வந்தாலோ அவர்களுக்கு ஒரு தனி அந்தஸ்து கொடுத்து நம் ஏனைய பாட ஆசிரியர்கள் பழகியிருந்தார்கள்.

நகப்பூச்சு, உதட்டுச்சாயம் எதுவும் அனுமதிக்கப்படாத பள்ளியில், ஆங்கிலதினப் போட்டிகள் அதற்கான ஒத்திகைகள் போன்ற விசேட நிகழ்ச்சிகளில் அவைகளுக்கு விலக்களிக்கப்படும். இங்க்லீஷ் பேசுபவர் எல்லோருமே வெள்ளைக்காரன்தான். வெள்ளைக்காரன் போலவே இருக்க வேண்டும், என்கிற ஆழ்ந்த நம்பிக்கை நம் ஆசிரியர்களிடம் இருந்தது. கடுமையான பவுடர் பூச்சும், உதடுச் சாயமும் ஒரு ஆங்கிலேயத் தோற்றத்தைக் கொண்டு வந்துவிடுமென்பதில் யாருக்கும் எந்தவித ஐயமுமிருக்கவில்லை.

ஆங்கில தின விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் பிள்ளைகள் எல்லாம் கலர் கலராக கவுண், கோர்ட் போட்டு, கடும் சிவப்பில் உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகத்தில் ஏராளமான பவுடர் என ' ஒரு மாதிரியான' தோற்றத்தில் புதுமையாக இருப்பார்கள். ஆங்கிலதினப் போட்டியின்போது மட்டுமே சில பையன்களுக்கு சில பெண்கள் மேல் ஒரு அவசரகாலக்காதல் வந்துவிடுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஒத்திகை நடைபெறும் இடம் ஒரு சினிமா படப்பிடிப்புத்தளம் போல பரபரப்பாக இயங்கும். பொறுப்பான மூத்த ஆங்கில ஆசிரியர் ஒரு பெரிய சினிமா இயக்குனர் போலவே ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார். ஏனைய ஆங்கில ஆசிரியர்கள் உதவி இயக்குனர்கள் போல தீயாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஷூட்டிங் வேடிக்கை பார்க்கும் பாமர மக்கள் கூட்டத்தில் அவ்வப்போது அதிபரும் தென்படுவார்.

நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் படு நகைச்சுவையானவை. முகத்தில் உணர்ச்சிகளைக் காட்ட வேண்டும். பெரிதாக ஒன்றுமில்லை மகிழ்ச்சி, ஆச்சரியம், பரவசம் இவைதான். பெரும்பாலும் பரவசம்தான். ஆங்கில ஆசிரியைகள் படிப்பிக்கும்போதேல்லாம் முகத்தில் பரவசம் கொப்பளிக்குமில்லையா?

வேஷம் போட்டுக் கொண்டு வந்து, சிலவேளைகளில் பாதி புரிந்தும், பலவேளைகளில் பெரும்பாலும் புரியாமலும் மனனம் செய்த வசனங்களுக்கு உணர்ச்சி கொடுக்க வேண்டும். மேடையில் நின்று எதிரே இருக்கும் பார்வையாளர்களை நோக்கி ஒரு ‘மேற்பார்வை’ பார்த்து அரைவட்டமாக தலையை மெதுவாக இருபுறமும் திருப்பிப் பார்த்துக் கொண்டு வரவேண்டும். அதே நேரத்தில் மேலும் கீழுமாக சிறிய அசைவொன்றையும் கொடுக்க வேண்டும். அத்தோடு மிகமுக்கியமாக உணர்ச்சிகளை அவ்வப்போது கலந்து கொடுக்க வேண்டும்.

முடிகிற காரியமா? தலையைத் திருப்பினால் சிரிப்பு வராது. சிரிப்பு வந்தால் சத்தம் ஒழுங்காக வராது. எல்லாமே ஒழுங்காக வந்தால் மனனம் செய்த பாடலே மறந்துவிடும். மாணவிகளுக்கு மட்டுமல்ல டீச்சருக்குமே போட்ட மேக்கப் எல்லாம் வியர்வையில் கரைந்து போகுமளவுக்கு கடுமையான பயிற்சி! ஒரு பொயட்ரிக்கே இவ்வளவு உழைப்பெனில் நாடகம் நடிப்பது? மொத்தத்தில் ஆங்கிலத்தினம் நடாத்திமுடிப்பது, நிஜ டைனோசரை நடிக்க வைத்தே ஜூராசிக் பார்க் படமெடுப்பது போன்றது!

இதெல்லாம் முடிந்த பின்னர், தப்பித்தவறி அந்தப்போட்டியொன்றில் பங்குபற்றிய மாணவி ஒருத்தியின் வீட்டிற்கு அம்மாவுடன் சென்றீர்களானால் நீங்கள் தொலைந்தீர்கள்.

தாய் சொல்வார், "மகள் நல்லா இங்லீஸ் கதைப்பா.. பிள்ளை அந்த இங்லீஸ் டேயில சொன்ன பொயத்த அன்ரிக்குச் சொல்லிக் காட்டு!"

அங்கே கொடுத்த தின்பண்டத்தை மிக மும்முரமாக கபளீகரம் செய்யும் முனைப்பிலிருக்கும் உங்களை அன்ரியாகப்பட்ட அம்மா, 'நீயெல்லாம் இருக்கிற பார்' பார்வை பார்த்ததைக் கண்டுகொள்ளாமல் கண்டினியூ செய்த அனுபவம் உங்களுக்கும் இருக்கக்கூடும்.

இப்போதும்கூட எங்கோ இந்தக் காட்சி அரங்கேறிக் கொண்டிருக்கலாம். அம்மாவின் அழைப்பில் உறவினர்கள் முன்னிலையில் மகள் வந்து, கைகளை பக்கவாட்டில் உடலோடு இறுக்கி அட்டேன்ஷனில் நின்று கொண்டு...

இல்லாத கூட்டத்தை இருப்பதாகப் பாவனை பண்ணி மேற்பார்வையுடன், தலையைச் சீராகத்திருப்பி சுவரில் மாட்டியிருக்கும் படம், ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லி, மோட்டு வளையில் ஒளிந்திருக்கும் எலி எல்லாவற்றையும் நோக்கி ஒரு இனிமையான புன்னகையுடன்...

"ஐ மெட் எ ட்ராவெல்லர் ஃப்ரம் அன் அன்டீக் லான்ட்....!"

ஆங்கிலம் மிக அவசியமானதுதான், தொடர்பாடலுக்கான மொழி என்கிற அளவில். தவிர, அது ஒரு அறிவோ, பெருமையோ அல்ல என்பதைச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும்கூடப் பரவாயில்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் உயர்ந்தவர்கள், நாம் தாழ்ந்தவர்கள் என்கிற எண்ணத்தை முற்றாகக் களைந்துவிட வேண்டியது அவசியமானது. பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படும்போதே அப்படியொரு எண்ணம் உருவாக்கப்பட்டுவிடுகிறது. ஆங்கிலம் பேசுவோம் மொழியாக மட்டும்!

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.