முற்றம்

ரோஜருக்கு ஹெல்மெட் அணிவது பிடிக்காது!

ரோஜரை யாரும் ஹெல்மெட் அணியச் சொன்னதாகவும் தெரியவில்லை. எந்த நாட்டிலாவது நாய்களுக்கு ஹெல்மெட் அணிவிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன! சரியாகச் சொன்னால் யாராவது ஹெல்மெட் அணிந்து வந்தால் ரோஜருக்குப் பிடிக்காது. விரோதமாகக் குரைத்துக் கொண்டிருந்தது. 

"ஹெல்மெட் போடாம வந்தா அண்ணாவ போலீஸ் பிடிச்சிடுவாங்களே" ஒரே வார்த்தையில் என்னை அண்ணாவாக்கி, தாத்தா சமாதானப்படுத்த 'தம்பி' ஒரு மாதிரி அடங்கிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"காலைல இருந்து சாப்பிடேல்ல" - சொல்லிக்கொண்டே தாத்தா தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார். முற்றத்தில், நிழலில் படுத்திருந்த ரோஜர் நிமிர்ந்து பார்த்துவிட்டு 'எனக்குச் சம்பந்தமில்லை' என்பதுபோல் பேசாமல் இருந்தான்.

பாட்டி வந்து, "ரோஜர் சாப்பிடுங்கோ!"
"அம்மா சொல்லிட்டாதானே சாப்பிடுங்கோ... அச்சாப்பிள்ள" - தாத்தா.
ரோஜர் சாப்பிடத் தொடங்கினான்.

நாய்களும் பலநேரங்களில் குழந்தைகள் போலவே இருக்கின்றன. கொஞ்சல், பிடிவாதம், செல்லக்கோபம், ஈகோ எல்லாம் அவற்றுக்கும். தன்னைக் கவனிக்க வேண்டும், தனக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றும்கூட நினைப்பதாகச் சமயங்களில் உணரமுடிகிறது.

மதியம் சாப்பிடும்போது என்னைக் கொஞ்சம் முறைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், சின்ன வயதில் ஒவ்வொருநாள் காலையிலும் ரேடியோவில் கேட்கும் தென்கச்சி சுவாமிநாதன் கூறிய நகைச்சுவை அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்தது.

'ஏங்க உங்க நாய் என்னை முறைச்சுப் பாத்துட்டே இருக்கு?'
'அதை விடுங்க...அதுக்கொரு கெட்ட பழக்கம். அதோட தட்டில யார் சாப்பிட்டாலும் அதுக்குப் பிடிக்காது'

வழக்கமாக முதலில ரோஜருக்கு சாப்பாடு வைத்துவிட்டுத்தான் தாத்தா சாப்பிடுவாராம். 'இன்றைக்குப் புதுசா வந்த ஒருத்தனுக்கு முதல்மரியாதை செய்துட்டாங்களே' என்ற ரோஜரின் கோபம் நியாயமாகவேபட்டது. சாப்பிட்டுக்கொண்டிருந்த ரோஜருக்கு சிக்கன் துண்டுகளை எடுத்துப் போய் போட்டேன். நிமிர்ந்து பார்த்தான்.

"பாத்தியா அண்ணா சிக்கன் எல்லாம் தர்றான்... நீதான் அவனோட கோவிக்கிற" - பாட்டி சொன்னது ரோஜருக்குப் புரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் சிநேகமாகிவிட்டான்.

சாப்பிட்டு முடித்ததும், பக்கத்தில வந்து பார்த்துக் கொண்டிருந்தான். 'தொட்டுப் பார்க்கலாமா?' உள்ளூர பயமாயிருந்தது. முதன்முதல் பழகும்போது, நாய்களைத் தொடும்போது தலையில் தொடக்கூடாதாம். தோள்களைத் தொடுவதே நல்லது என்று எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது. தோள்களைத் தொடும்போது நாமும் அவற்றுக்கு சமமாக, ஒரு நண்பன் போல எண்ணத்தைத் தோற்றுவிக்கும். மாறாக தலையைத் தொடும்போது, புதிதாகப் பழகும் நாம் அவற்றை அடிமைப்படுத்துவதைப்போல தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் என்கிறார்கள். மெதுவாகத் தோளைத் தொட, தலையைத் திருப்பி கையை நக்கி, ஏதோ சொல்ல வருவது போல மெல்ல அவனுடைய பாஷையில் முனகினான்.

ரோஜர் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். பாட்டி சொன்னார், வழக்கமாக சாப்பிட்டதும் பாட்டி ஒரு குட்டித்தூக்கம் போடுவாராம். அந்த நேரத்தில் பாட்டியின் கட்டிலுக்கு அருகில் ரோஜரும் தரையில் தூங்குவானாம். இன்று பாட்டி தூக்கத்தைத் தவிர்த்ததால் ரோஜர் டென்ஷனாகிட்டான். அவனுக்கு ஒன்றும் கதை சொல்லவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், மின்விசிறி கட்டாயம் வேண்டுமாம். பாட்டி விசிறியைச் சுழலவிட, தூங்கப் போனான் ரோஜர்.

அலார்ம் வைக்காமலே நாலு மணிக்கு சரியாக எழும்பி வந்தான். அது தேநீருக்கான நேரம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. ரோஜர் டீ குடிப்பதில்லை. தாத்தா நான்கைந்து பிஸ்கட்டுகளை (மனுஷ பிஸ்கட்தான்) உடைத்து ஒவ்வொன்றாக ஊட்டிவிட்டார். கையிலிருந்த பிஸ்கட்டுகள் தீர்ந்ததும் ' முடிஞ்சு போச்சு.. ஆ' கைகளை விரித்து குழந்தைகளுக்குச் சொல்வது போல சொல்ல, யோசனையுடன் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மௌனமாக வெளிநடப்புச் செய்தான்.

ரோஜரை அவர்கள் ஒரு பிள்ளையாகவே பார்க்கிறார்கள். ரோஜருக்காக விசேஷமாக உணவு தயாரிக்கிறார்கள். அவனுக்காக வெளியூர்ப் பயனங்களை முடிந்தவரை தவிர்க்கிறார்கள். அவனுடன் பேசும்போது தங்களை அம்மா, அப்பா என்றே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுவதையெல்லாம் அவனும் புரிந்துகொள்கிறான். திரும்பி வரும்போது ரோஜர் ஒரு நண்பனை வழியனுப்புவதுபோல கேற்றடியில் வந்து நின்றான். அவனுக்கு முன்னால் ஹெல்மெட் அணியாமல் டாட்டா காட்ட ரோஜர் வாலாட்டி, சிநேகமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ள்ளிக் காலத்தில் ஒருநாள் நண்பன் திலீபன் வீட்டுக்குப் போயிருந்தபோது, அவன் குளித்துக் கொண்டிருந்தான். வரவேற்பறையில் காத்திருந்தேன். சற்றுத்தள்ளி ஆசிரியையான அவன் அம்மா ஏதோ பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தியபடியிருந்தார். மிகுந்த பவ்வியமாக அமர்ந்திருந்தேன். எதுவும் கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற ஒரு கலக்கமும் சற்றே இருந்ததாக ஞாபகம். திலீபனின் அப்பா கல்வித்துறை அதிகாரியாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். நல்ல வேளையாக அவர் இருக்கவில்லை. இருந்திருந்தால் உள்ளே போயிருக்கவே மாட்டேன். அதென்னவோ தெரியவில்லை பள்ளி நாட்களில் டீச்சர், கல்வித்துறை சார்ந்தவர்களிடம் சற்று ஒதுங்கியே இருப்போம். நாங்களும் பள்ளியை விட்டு விலகி வந்து வளர்ந்து, அவர்களும் ஓய்வுபெற்று டீச்சர் ஆன்டியாக, அங்கிளாக மாறி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்த பிறகே இயல்பாகப் பேசிக்கொள்ள முடிகிறது. ஒய்வு பெறும்வரை அவர்கள் சற்றுக் கடுமையாக இருப்பது போலவே தோன்றுகிறது.

திலீபனின் அம்மாவின் காலடியில் படுத்திருந்த நாய் எழுந்து மெதுவாக என்னை நோக்கி வந்தது. வாட்டசாட்டமாக, அழகாக இருந்தது. கொஞ்சம் பயந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தேன். 'கடிச்சுக் கிடிச்சு வச்சிடுமோ?' எதிரே வந்து நின்று முகத்தை நிமிர்ந்து பார்த்தது. கண்களில் ஏதோ சொல்ல வருவதுபோல பாவனையிருந்தது. எதையோ எதிர்பார்த்தது போலவுமிருந்தது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அமைதியாக மீண்டும் அம்மா அருகே போய் அவரைப் பார்த்தது.

அம்மா கேட்டார் "என்னடா அண்ணா பிள்ளையோட ஒண்டும் கதைக்கிறான் இல்லையோ?"

பாவம் நான் எதுவுமே பேசாததில் ஏமாற்றமடைந்துவிட்டது. வீட்டுக்கு வரும் எல்லோரும் அந்த வீட்டில் ஒருவனான தன்னுடனும் ஓரிரு வார்த்தை பேசவேண்டும் என்று அது எதிர்பார்த்ததில் தவறொன்றும் இல்லையே!

ரொபின் - சாம்பல் நிறத்தில் அடர்த்தியான பிடரி மயிருடன் அழகாக இருப்பான். பெரும்பாலும் வீட்டிற்கு வெளியிலேயே வளர்வதால், யாரும் விருந்தினர்கள் வரும்போது, யார் கண்ணிலும் படாமல் அந்தப் பெரிய வீட்டின் உள்ளே நுழைந்து விடுவான். திடீரென ஏதோ ஓர் அறைக்குள்ளிருந்து வெளிவந்து மிக இயல்பாக யாரையும் கண்டுகொள்ளாமல் நடமாடிக் கொண்டிருப்பான். “இவன் எப்ப வந்தான்?” ஆச்சரியமும் புன்னகையுமாகக் கேட்டுக் கொள்வார்கள். வீட்டுக்கு வந்தவர்கள் புறப்படும்போது ரொபினைக் காணக்கிடைக்காது. தன்னை வெளியே அனுப்பிவிடுவார்கள் என்பது தெரிந்து, எங்கேயாவது கதவுக்குப் பின்னால் அமைதியாக ஒளிந்து நிற்பான்.

அன்று அந்த வீட்டின் அக்கா ஒருவருக்குத் திருமணம். எல்லோரும் காலையிலேயே புறப்பட்டுப்போய், மதியம் மீண்டும் திரும்ப வந்துகொண்டிருந்தோம். வரும் வழியில் அம்மாவுக்கு ரொபின் ஞாபகம் வர, “அய்யய்யோ ரொபின் என்ன செய்யிறானோ" என்று பதறினார். அம்மா உள்ளே நுழைந்ததும், திருவிழாக்கூட்டத்தில் தொலைந்த குழந்தை அம்மாவைக் கண்டதும் அடையும் மகிழ்ச்சியுடன் ரொபின் ஓடி வந்தான். அம்மா கையை நீட்ட, ரொபின் இரண்டு கால்களில் எழுந்து நின்று, முன்னங்கால்களை அம்மாவின் உள்ளங்கையில் தூக்கி வைத்திக் கொண்டு அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் செயலில் ஒரு முறையிடல் தெரிந்தது. கண்களில் ஒரு ஏக்கம், மகிழ்ச்சி. அவன் மொழியில் ஏதோ முனகினான். அம்மாவுக்கும், பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

ரொபின் சின்னஞ்சிறு குட்டியாக அந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து அவனை யாரும் தனியாக விட்டுச் சென்றதில்லை. அம்மா அல்லது அக்காக்களில் யாராவது ஒருவராவது வீட்டில் இருப்பார்கள். அன்று எல்லோருமே சென்றுவிட்டிருந்தனர். அங்கே நின்ற ஓரிருவரும் அவனுக்குப் பெரிதாகப் பரிச்சயம் இல்லாதவர்கள். பாவம், திடீரென எல்லோரும் தனியாக விட்டுச் சென்றதில் தவித்துப் போயிருந்தான். எதுவும் புரியாமல் சாப்பிடவேறு மறுத்துவிட்டு இருந்திருக்கிறான். அவனால் மட்டும் பேச முடிந்திருந்தால் அன்று நிறையப் பேசியிருப்பான்.

ன்றொரு விடுமுறை நாள். கொழும்பில் ராஜனின் அறையிலிருந்து இருவரும் வெளியே சென்றுகொண்டிருந்தோம். ஓர் நாய் ஒரு கடதாசிப் பெட்டியை உருட்டிக் கொண்டிருந்தது. ராஜனைப் பார்த்ததும் அவசரமாகத்தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு, ஓடி வந்தது. எங்களுடன் கூடவே நடந்து, பிரதான வீதிவரை வந்து வழியனுப்புவிட்டுத் திரும்பிச் சென்றது.

"பயபுள்ள யாரு?"
"எங்க ஒழுங்கைக்குள்ளதான் சுத்தீட்டிருப்பான். ஒருநாள் வரேக்க வடிவாப் பாத்துட்டிருந்தான். சும்மா என்னடா?ன்னு கேட்டேன். அவ்வளவுதான் டெய்லி வந்து வழியனுப்பிறான். பாசக்காரப் பயபுள்ள" - அதன்பின் அவ்வப்போது பிஸ்கட், சாப்பாடு என்று கவனித்துக் கொள்வது ராஜனின் வழக்கமாம்.

‘என்னடா?’ என்ற ஒரே வார்த்தை அதற்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. ஒரேயொரு அன்பான விசாரிப்பு அதற்குப் அவ்வளவு மகிழ்சியைக் கொடுத்திருக்கிறது. பாசத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்திருக்குமோ? ஒரு வார்த்தைக்கு எவ்வளவு வலிமை? இருவரின் மௌனத்தையுடைத்துப் பேசிக்கொள்ளும் அந்த முதல் வார்த்தையில் ஒரு ஆயுட்கால நட்பு உருவாகலாம். அன்பான ஒரு விசாரிப்பு என்மீதும் அக்கறை செலுத்த ஓருயிர் இருகிறதே என்ற உணர்வு அளவற்ற ஆறுதலைக் கொடுத்துவிடுகிறது. மனிதர்களுக்கு மட்டும்தான் அன்பு, அரவணைப்பு தேவையா என்ன!

கல்கிசை கடற்கரையில் ஏராளமான நாய்களும் தங்கள் எஜமானர்களுடன் வந்து யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், குழந்தைகளைப் போல குதூகலமாக நீரில் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஒரு பெரிய நாய், மிக அமைதியாக அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பது போலவே அதன் பார்வை. சுற்றிலும் உள்ளவர்களின் ஆரவாரம், கொண்டாட்டங்களை ஒரு வாழ்ந்து முடித்த உணர்வுடன் சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தது. "என்ன மனிதர்கள் இவர்கள்? எதற்கு இந்த அர்த்தமில்லாத கூச்சல்?" என்பதுபோல் விநோதமாகப் பார்ப்பது போலிருந்தது.

நாய்களுக்கும் மனிதர்களைப் போல மன உளைச்சல், விரக்தி ஏற்படுகின்றனவாம் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள். பாவம் மனிதர்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்ததில், அவர்களின் உபாதைகளும் பீடித்துக் கொண்டுவிட்டன போலும். ஆயினும் அவற்றின் இயல்பான குணங்களான நன்றி, விசுவாசம், அன்பு போன்றவற்றில் மனிதர்களின் பிரத்தியேக இயல்புகள் தொற்றிக் கொள்ளாதது மிகப் பெரிய ஆறுதல்.

ஒரு ஸ்டைலான தாத்தா தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். இல்லை, பிடிக்க முயன்று கொண்டிருந்தார். பக்கத்தில் அவரது நாய் அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மீன் பிடித்துத் தருகிறேன் என்று சொல்லி அழைத்து வந்திருப்பார் போல. ஏற்கனவே பலமுறை அழைத்து வந்து மணிக்கணக்கில் காத்திருந்து கடைசியில் ஒரு தவளையைக்கூட பிடிக்காமல் திரும்பியிருப்பார்கள் போலும். ஏற இறங்க அது அவரைப் பார்த்த பார்வை அவ்வளவு மரியாதையாகத் தெரியவில்லை. ‘எதுக்கு இந்த வேண்டாத வேலை?’ என்று கேட்பதைப் போலிருந்தது.

டித்துப் போட்டதுபோலத் தூங்கிக்கொண்டிருந்த காலைநேரம். என் கணத்தில் ஏதோ ஈரலிப்பாக வருடியதுபோல இருந்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்டபோது என் முகத்தருகே இரு நீர்மையான குண்டுக் கண்கள் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. பதறியடித்து எழுந்துகொண்டேன். ராஜனின் கட்டிலில் நான் தூங்கியிருந்தேன். அதுதான் குழப்பமாகிவிட்டது.

அங்கே வீட்டில் ரொனி, மினி என்ற இரு போம்மரேனியன் நாய்கள். காலை ஐந்தரைக்கு ராஜனின் அறைக்குள் வரும் இருவரும் கட்டிலுக்கு அருகில் பொறுமையுடன் காத்திருப்பார்கள். ஆறுமணி வரை காலக்கெடு. அதற்குமேல் தூங்க முடியாது. சரியாக ஆறுமணிக்கு மேலே தாவிப் பாய்ந்து, துயிலெழுப்புவது அவர்களின் அன்றாடக் கடமை. இதில் யார் ராஜனுடன் அதிகம் நெருக்கம் என்பதில் இருவருக்கும் போட்டி வேறு. மினி பெண். சற்றே பருமன் அதிகம், அதைவிட பொசசிவ்னெஸ் அதிகம்.

நீங்கள் வீட்டுக்குப் புதியவராக இருந்தால் முதலில் மினி ஒரு ‘டெஸ்ட்’ வைப்பாள். ஒரு சிறிய கல்லைக் கவ்விக் கொண்டுவந்து உங்கள் காலடியில் வைத்துவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பாள். நீங்கள் அந்தக் கல்லைத் தூக்கி எறிந்தால் மினி மகிழ்ச்சியுடன் மீண்டும் எடுத்துக் கொண்டுவருவாள். அத்துடன் தொலைந்தீர்கள். அதன்பின் நீங்கள் அவளின் விளையாட்டுத் தோழன் என்று முடிவுசெய்து எப்போது வெளியில் வந்தாலும், யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும் ஒரு கல்லுடன் தேடி வருவாள். கால்களுக்கு அருகில் வைத்துவிட்டு சற்று நேரம் தலையைச் சாய்த்தவாறு பார்த்துக்கொண்டிருப்பாள். கவனிக்காத மாதிரி இருந்தால், உங்கள் கால்களைத் தட்டி கூப்பிடுவாள். ஒரு குழந்தை போலவே அதன் செயல்கள் இருக்கும். எப்போதும் தன்னைக் கவனிக்க வேண்டும், வேறு யாருடனும் பேசும்போது குழந்தைகள் குறுக்கே பேசி தன்பால் கவனத்தை ஈர்க்க முயல்வதுபோல!

பெரும்பாலான வீட்டில் நாய்கள் குழந்தைகள் போலவேதான் வளர்க்கப்படுகின்றன. வெளிநாடுகளில் பிள்ளைகள் இருக்க, இங்கே தனிமையில் இருக்கும் வயதான தம்பதிகள் வீட்டில் வளரும் நாய்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவை அவர்களுக்குக் குழந்தைகள்தான். அவை அவர்களுக்குப் பிரிந்து போன பிள்ளைகளை நினைவூட்டுகின்றன. அவற்றின் குணநலன்கள், குறும்புகள் பற்றிச் சொல்லும்போது, தன் சின்னக் குழந்தையைப் பற்றிப் பேசும் தாய்,தந்தையைப் போலவே ஒரு பெருமிதம் கலந்திருக்கும். அவையும் தங்களை அப்படியே நினைக்கின்றன போலும். சற்றே அறிமுகமிருந்தாலும் பெரியவர்களிடம் தள்ளியே நிற்கும் நாய்கள் குழந்தைகளிடம் மட்டும் பார்த்தவுடனேயே ஒட்டிக் கொள்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் குழந்தைகளைத் தமக்கு நெருக்கமாக உணர்கின்றன.

ரு வகையில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் எல்லாமே குழந்தைகள் போலவேதான் இருகின்றன எனத் தோன்றுகிறது. சின்னவயதில் எங்கள் வீட்டில் ஆடு இரண்டு கிடாய்க்குட்டிகளை ஈன்றிருந்தது. ஒன்று பிரவுன் நிறம். இன்னொன்று வெள்ளை. கொஞ்சம் வளர்ந்து அவ்வப்போது வீட்டுக்குள்ளும் எட்டிப்பார்க்கும் அளவுக்கு விவரமாகிச் சுற்றித்திரிந்தன.

வெள்ளைக்குட்டி அமைதியான சுபாவம். அது என்னுடன் சேராது. அருகில் சென்றாலே ஓடிவிடும். அப்பாவின் செல்லம் அது. காலில் முள் குத்தினாலும் காலை நொண்டிக்கொண்டு அப்பாவைத்தான் தேடிப்போகும். அமைதியாக மேய்ந்துகொண்டிருக்கும். வெளியில்போன அப்பா கேற்றைத் திறந்து வந்தும்போது ஒரு "மே". 'நான் இங்க நிக்கிறன்' என்பது அதன் அர்த்தம். "ஆ...கண்டுட்டன்டா!" என அப்பா சொன்னதும், அமைதியாகத் தன்வேலையைப் பார்க்கும்.

எனக்கு எட்டு வயது. பிரவுன் நிறக்குட்டி மட்டும் என்னுடன் சேர்ந்து விளையாடும். நானும் புதுவகையானதோர் வீரவிளையாட்டை அதற்கு அறிமுகம் செய்ய நினைத்தேன். ஆட்டுக்குட்டியைத்தூக்கி வாங்கு மீது நிற்கவைப்பேன். இப்போது என உயரத்திற்கு ஏறத்தாழ சமமாக நிற்கும். அப்படியே குழந்தைகளுடன் 'முட்டு முட்டு' விளையாடுவதுபோல என் நெற்றியை அதன் நெற்றியோடு சேர்த்து மெதுவாகத் தள்ளுவேன். அது, இரண்டு மூன்று அடி பின்னோக்கி எடுத்து வைத்துவிட்டு, பிறகு என்னைத்தள்ளும். "வா இடி பழகுவம்" அழைத்தால், புரிந்ததுபோல பின்னாலயே வரும். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

கொம்பு முளைக்க ஆரம்பிக்கும் பருவம். குழந்தைகள் பல் முளைக்கும்போது கடிப்பதுபோல, ஆட்டுக்குட்டிக்கும் கொம்பு முளைக்கும்போது இடிக்கவேண்டும்போல இருக்குமோ என்னவோ. அதுவாகவே முட்டு விளையாட்டுக்கு வரும்.

சிறிதாகக் கொம்பு முளைத்தது. அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அது பெரும் குருபக்தி வைத்திருந்ததுதான் பிரச்சினை. என்ன இருந்தாலும் நான் அதன் குரு. ஆகவே, எங்கே என்னைப் பார்த்தாலும் ஓடி வந்து முட்டவேண்டும். அதுதான் ஒரு குருவுக்குச் செய்யும் மரியாதை என்று அது தீவிரமாக நம்பியிருக்க வேண்டும். நாளாக, அது மிதமிஞ்சிய குருபக்தியுடன் என்னைத் தேடிவர நான் தலைமறைவாகத் திரிய வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் ஆட்டுக்குட்டி நிற்கிறதா, என்று பார்த்துத்தான் நான் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வரமுடிந்தது.

தேவிகா அக்கா வீட்டிலிருந்த ஒரு அம்மாப்பூனையும், இரண்டு குட்டிகளும் வரிசையாக மூன்று இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்சியை இப்போதும் மறக்க முடியவில்லை. பூனைகள் பொதுவாகச் சொல்பேச்சுக் கேட்காது. அவை என்ன செய்யுமென உத்தேசித்து, அதற்கேற்றாற்போல சொல்லிக் கொள்ளலாம்.

மனிதர்களைப் புரிந்து கொள்வதில், நல்ல நண்பனாக நடந்துகொள்வதில் நாய்களுக்கு எப்போதும் சம்மதமே. ஏனெனில் வேட்டையாடிய காலம்தொட்டே அவை மனிதனோடு நெருங்கிய உறவைப் பேணி வருபவை. பூனைகள் அப்படியல்ல. இயல்பாகவே அவற்றுக்கு இருக்கும் தாம் புலிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமை, பந்தா இதற்குக் காரணமாயிருக்கலாம். நாம் ஒரு நாயைக் கூட்டிக்கொண்டு 'வோக்கிங்' சென்றால் நாய் புரிந்து கொள்ளும் தன்னை நாங்கள் கூட்டிச் செல்கிறோம் என்று. இதுவே ஒரு பூனையைக் கூட்டிச் சென்றால் அது நினைத்துக் கொள்ளுமாம் 'நான்தான் இவனைக் கூட்டிச் செல்கிறேன்' என. பூனை நம்மீது வந்து உரசுவதுகூட பாசத்தினால் அல்ல. ‘இவன் நம்மாளு’ என்று காட்டுவதற்குத்தான் என்கிறார்கள்.

சின்ன வயதில் ஒருமுறை திருகோணமலையில் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன். சுருக்கமாகச் சொன்னால், ரோஜரின் வீடு! அவர்களுக்கு ஒரு மகன் இளம்வயதில் ஒரு போராட்டக்குழுவில் இணைந்திருந்து, சுடப்பட்டு இறந்துபோயிருந்தார். அந்த மகனைப் பற்றி அவர்கள் பேசியதை நான் ஒரு போதும் பார்த்ததில்லை.

அப்போதைய புகழ்பெற்ற நடிகைகளின் பெயர்களுடன் அங்கே பசுமாடுகள் இருந்தன. சுவலட்சுமி மங்களகரமாக குங்குமப் பொட்டிட்டு சாந்தமாக இருந்தாள். எதிலும் ஒரு நிதானம் இருந்தது. கஞ்சியோ, புண்ணாக்கோ எதற்கும் அவள் அவசரப்படுவதில்லை. தீவனங்கள், அரிசி மூடைகள் வைத்திருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் பண்ணியவள் பெயர் ரம்பா! அவள் எப்போதுமே அப்படித்தானாம். தம்பி போய் சத்தம்போட்டுத் துரத்தினான்.

அங்கேயிருந்த அழகான நாய் பற்றி தாத்தாவும், பாட்டியும் ஏராளமான கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் அதன் பெருமைதான். அதற்கு அவர்கள் வைத்திருந்த பெயர் சற்றே வித்தியாசமாக, கவனிக்க வைத்தது.

தம்பி!

*****

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'