முற்றம்

நீங்கள் சிறுவயதில் முதன்முறையாகச் சென்று படித்த பாடசாலை. சில வருடங்களின் பின், யாருமற்ற அந்தப் பள்ளியின் வாசலில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அப்படியே அந்தக் காட்சியை உள்வாங்கி கண்களை மூடித்திறந்து பாருங்கள். எதிரில் காணும் காட்சி நிறம் மங்கி, வேறு நிறத்துக்கு மாறுகிறது. இப்போது சலனமற்றிருக்கும் காட்சியில், பள்ளியின் கடைசி மணி அடிக்கிறது. முகத்தில் மகிழ்ச்சியும், களைப்பும் தெரிய, உற்சாகத்தோடும் கூச்சலுடனும் ஓடிவரும் சிறுவர்களில், உங்களைக் கண்டு கொண்டீர்களா? - இப்படிக் கற்பனை செய்துகொள்ள சினிமாவோ, விளம்பரங்களோ எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அது இங்கே முக்கியமல்ல, அந்த உணர்வு நன்றாயிருக்கிறது. 

பள்ளியின் கடைசி மணி சிறுவயதில் எங்களுக்கு முக்கியமானது. பாட இடைவேளை முடிந்து, இரண்டாவது பாடம் ஆரம்பிக்கும்போதே, அந்த மணியின் ஓசையில் கடைசி மணியின் சாயல் தெரிவது போலிருக்கும். அந்த வயதில் பள்ளியின் ஆகச்சிறந்த ஒலியாக, மிக உற்சாகம் கொள்ளவைக்கும் இசையாக அதுதான் இருந்தது. அந்த மணியோசை மட்டும் வித்தியாசமாக, ஒலிக்கும்போதே ஒரு துள்ளலுடன், திடீர்ப் பரவசத்தைக் கொடுப்பதாகத் தோன்றும். அது ஒரு விதமான, விட்டு விடுதலையாதலுக்கான ஒலி. நினைக்கையில், இப்போதும் அப்படித்தான் தோன்றுகிறது. இருபத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு, என் முதற்பாடசாலையின் முன், அந்தக்கடைசி மணிச்சத்தத்தை நினைவுக்குக் கொண்டுவருவதைப்போல நின்றிருந்தேன்.

மாவிட்டபுரம் முருகன் கோவிலின் கிழக்கு வாசலுக்கு எதிரே, தேர்முட்டியோடு செல்லும் வீதியில் மிக அருகில் *வீமன்காமம் மகா வித்தியாலயம். உள்ளே சென்று பார்க்கலாமா? அருகே செல்ல, நுழைவாயில் கதவு பூட்டியிருந்தது. முன்பொருமுறை வந்தபோது இருந்ததற்கு மாறாக திருத்தி புதிதாக பெயிண்ட் பூசப்பட்டிருந்தது. முன்பகுதியிலிருந்த அந்த மாடிக்கட்டடம் அப்போது நீல நிறத்தில் இருந்தது. வலப்பக்கமாகத் தனித்து நிற்கும் சிறு கட்டடம் மாணிக்கம் டீச்சரின் பாலர் வகுப்பறை. பெரியதொரு தேக்க மரம் நிழல் கொடுத்திருக்கும்.

பாடசாலை நாளின் முதல் மணியோசை ஒரு விழிப்பையும் பரபரப்பையும் கொடுக்க, வாயிற்பக்கமாக வரிசை கட்டி நின்று கொள்வோம். எதிரில் நடேசபிள்ளை மாஸ்டர் வெள்ளை உடையில் இறுக்கமாக நின்று கொண்டிருப்பார். கரகரத்த குரலில் பேசிக்கொண்டுகண்டிப்பானவராக, கடுமையானவராகத் தோன்றினாலும் நல்லவராகவே மனதில் பதிந்து போயிருந்தார். நிம்மி அக்கா "வன், டூ, த்ரீ..." சொல்ல உடற்பயிற்சி செய்து, காலை வணக்கம் தேவாரத்துடன் ஆரம்பிக்கும் அன்றைய நாள். அந்த இளவெயில் நேரத்தில் பக்கத்தில் பெரியதொரு மரம் முன்பகுதி முழுவதும் நிழல் கொடுத்து நின்றிருந்தது. இப்போது நிற்பதும் அதேமரம்தானா? காலை வெயில் சுட்டெரித்தது.

பள்ளி முடிந்து வருகையில் வாசலுக்கு எதிரில் இருந்த வீடு இப்போது அடையாளம் தெரியவில்லை. அங்கே விற்கப்படும் ஜூஸ் பைக்கற்றை அவ்வப்போது வாங்கிக் குடித்துக் கொண்டே, கோயில் வீதியில் மணலில் சப்பாத்துக்களால் அளைந்துகொண்டு கதையளந்தபடியே வீடுதிரும்புவது வழக்கம்.

பிரதான கட்டடத்திலிருந்து விலகிப் பின்பக்கமாக விளையாட்டு மைதானத்தின் அருகிலே தனித்திருந்தது, அரைச்சுவர் வைத்த சிறு கட்டடம். அதில் சங்கீத வகுப்பறை இருந்ததாக ஞாபகம். சிலநாட்கள் அதை எங்களுக்கான வகுப்பறையாக மாற்றியிருந்தார்கள். மைதானத்தின் ஓரமாக புளியமரம் இருந்ததும், கூடவே பக்கத்திலுள்ள வீடுகளிலிருந்து அவ்வப்போது கொய்யாக்காய்கள் கிடைத்ததும்(!) நினைவிருக்கிறது. அருகாமையில் ரயில் பாதை. ஒருமுறை சத்தம்கேட்டு, ரயில் பார்க்க தலைதெறிக்க கும்பலாக ஓடிப்போய், தண்டவாளம் பார்த்து சோகமாகத் திரும்பி வந்த ஞாபகம். ஒரு சிறுவனாக பள்ளியில் நுழைந்து பார்க்கும் ஆர்வத்திலிருந்தேன், இருக்கிறேன்.

ள்ளியில் என்கூடப் படித்தவர்களில் ஓரிருவர் தவிர ஏனையோரின் பெயர்கள்கூட ஞாபகம் இல்லை. தயாளனை மட்டும் யாழ்ப்பாணத்தில் ஓரிருமுறை கண்டிருக்கிறேன். பேச வாய்ப்பிருக்கவில்லை. பின்னர் கொழும்பில் வெள்ளவத்தையில் சந்தித்துப் பேசிக் கொண்டோம். அவனது அண்ணன் சிவரதன் ஃபேஸ்புக்கில் பரிச்சயம். சென்றமுறை ஊருக்குச் சென்றபோது சிவாகரனின் அப்பாவுடன் பேசினேன். சயந்தன் என்றொரு நண்பன். நாங்கள் எப்போதும் அருகருகே அமர்ந்திருந்ததாக நினைவு. அமைதியானவன். ஆனால் நக்கல் பேர்வழி. இருவரும் சேர்ந்து அப்போதே(?) ஆசிரியர்கள் உட்பட பலரைக் கிண்டல் செய்திருக்கிறோம். வீணியவரை அம்மன் கோவிலடியைச் சேர்ந்தவனாக இருக்கலாம். அவ்வப்போது அந்தக்கோவில் பற்றி அவன் பேசியதாக ஞாபகம். சபாரட்ணம் டீச்சர் 'ஓடிவிளையாடு பாப்பா' பாடக் கற்றுக் கொடுக்கும்போது அவர் போலவே 'ஓடி விளை...ஹி யாடு பாப்பா' என்று ஒரு மாதிரியாக இழுத்துப் பாடுவான். தர்சன், தர்மசீலன், ஜெயகாந்தன், சுதர்சன், பகீரதன், திலகன், மிதிலா, ஹேமலதா,ஷாலினி என ஓரிரு பெயர்கள் நினைவிருக்கிறது. மற்றபடி, கோவிலின் தேர்முட்டிக்கு அருகில் இருந்த வீட்டில், கதிரவேல் என்ற இயற்பெயர் கொண்ட, 'குதிரைவேலு' என அழைக்கப்பட்ட ஓர் உயரமான அண்ணன் இருந்தார்.

பள்ளி வாழ்க்கையில் என்முதல் ஆசிரியையான அம்பிகா டீச்சர், இரண்டாம் ஆண்டில் வகுப்பாசிரியையான புஷ்பா டீச்சர், சரோ டீச்சர், மீனா டீச்சர், ஆங்கிலம் கற்பித்த சாந்தி டீச்சர், 'இன்றைய சிறுவர்கள்... நாளைய மனிதர்கள்' என அடிக்கடி கூறி எங்களுக்கெல்லாம் நல்லபுத்தி புகட்ட கடுமையாக முயற்சித்த பராசக்தி டீச்சர், அழகாகக் கதைகள் சொல்லும் வேட்டி கட்டிய சுந்தரமூர்த்திசேர்.. இருங்கள், கூடப்படித்தவர்களைவிட ஆசிரியர்கள்தான் அதிகமாக ஞாபகம் இருக்கிறார்கள் போல. மகேஸ்வரநாதன் டீச்சரை மட்டும் பின்னாட்களில் தொடர்ந்து சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருந்தது. நான் கவனிக்கத் தவறிய ஓரிரு சந்தர்ப்பங்களிலும், என்னைப் பார்த்தவுடன் அன்பாக வந்து பேசுவார். கூடவே 'கந்தையா வாத்தியார் எப்பிடி இருக்கிறார்?' என் தாத்தாக்களில் ஒருவரையும் மறக்காமல் விசாரிப்பார்.

தமிழ்ப் புத்தகத்தில் நாடகம், உரையாடல்கள் வரும் பகுதிகளில் ஆளுக்கு ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்து நாடகம் போலவே பேசி, சமயங்களில் நடிக்க வைத்துக் கற்பிக்கும் சபாரட்ணம் டீச்சர். முக்கியமாக மங்களம் டீச்சரை எப்போதும் மறக்க முடியவில்லை. காரணம், 'காதலுக்கு மரியாதை' அம்மா காரெக்டர் உள்ளிட்ட கண்டிப்பான பிரின்சிப்பல், அம்மா, லேடீஸ் ஹொஸ்டல் வார்டன் என் எந்தக் 'கண்டிப்பான' கரெக்டர் சினிமாவில் வந்தாலும் மங்களம் டீச்சரின் ஞாபகமும் வரும். வெள்ளையாக, தடித்த கருப்பு பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியுடன் இருப்பார். பள்ளியில் எங்கள் ஒவ்வொரு சாகசங்களின் முடிவிலும் மங்களம் டீச்சர் என்னைப் பிரத்தியேகமாகக் கவனித்து, பாராட்டுரை வழங்கும்போது, 'அனூன்ர அப்பாவை ஒருக்கா சந்திக்க வேணும்' என எப்போதோ பள்ளியைவிட்டு விலகி, யூனியன் கல்லூரிக்குச் சென்றுவிட்ட அக்காவை நினைவு கூர்வார். இந்தச் 'சம்பவம்' பற்றிய செய்தி அப்படியே நான் பள்ளி முடிந்து வீடு செல்லும் முன்பாகவே அம்மாவிடம் போய்ச்சேர்ந்துவிடும். அந்தளவிற்கு நல்ல தொடர்பாடல் தொழில்நுட்பம் அப்போதே வாய்த்திருந்தது.

பிரதான கட்டடத்திற்கு இடதுபுறமாக பின்புறமாக நீண்டு செல்லும் அரைச்சுவர் வைத்த கட்டத்தொகுதியின், திறந்த பகுதிகள் இப்போது வெயில் புகாத கண்ணாடியால் அடைக்கப்பட்டிருகின்றன. மறுபக்கம் ஆள் உயரமான சுவர். எங்களுக்கு அதைக்கடந்து ஏறிக் குதித்தோடும் வழக்கமிருந்தது. அப்போது பாடசாலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் நடைமுறையிலிருந்தது. நாங்கள் அதனைப் புறக்கணித்து அப்படி வெளிநடப்புச் செய்திருக்கிறோம்.

மதிய உணவு என்று சொல்லலாமா அல்லது சிற்றுண்டியா எனத் தெரியவில்லை. ஆரம்பத்தில் சிற்றுண்டி போல கேக், வாழைப்பழம், சூடான பால் என அமர்க்களமாக ஆரம்பித்தது. அவ்வப்போது பணிஸ் என்கிற பன்னும் வழக்கப்படும். பள்ளியில் சொல்லியனுப்பியபடி, எல்லோரும் வீட்டில் சொல்லி கலர் கலராக புதிதாக ஒரு பிளாஸ்டிக் தட்டும், தேநீர்க் கோப்பையும் வாங்கி வைத்துக் கொண்டு 'எப்படா இண்டர்வெல் வரும்' என்று காத்திருந்தோம். இடைவேளை மணி இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்த காலம் அது. ஒழுங்காக நல்ல பிள்ளைகளாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சிலநாட்களில் பணிஸ் தான் நிரந்தரம் என்றானது.

மேலும் சில நாட்களில் அந்த பணிஸ் வாயில் வைக்க முடியாமலிருந்தது. ஒப்பந்தக்காரர்களின் கைங்கரியமாக இருக்க வேண்டும். பழுதாகியது என்று சொல்லமுடியாது, ஆனால் ஒட்டிக் கொண்டு ஒரு மாதிரியாக. அது குறித்து ஒரு வதந்தியும் பரவியது. மீந்துபோன பணிஸ்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அரைகுறையாகக் காயவைத்து இப்படி வருகிறதாம். அதன்பின், ஒரு பன்னுக்குப் பயந்து, இடைவேளைகளில் ஓடி ஒழித்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டோம்.

சில நாட்களில் சோதனை வேறு வடிவில் - சரியாகச் சொன்னால் சோறு வடிவில் வந்தது. மதிய உணவாகச் சோறு சமைத்துக் கொடுக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. காய்கறிகள் ஒன்றாகப் போட்டுக் குழைத்து சுடச்சுடத் தட்டில் போட்டுத்தருவார்கள். வியர்க்க விறுவிறுக்க, முழுவதையும் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்கிற விதி மேலதிக கொடுமையாக இருந்தது. அப்போதெல்லாம் இடைவேளை மணி எந்த மகிழ்ச்சியையும் கொடுக்காமல், மிகுந்த பீதியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

சமைக்கும் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் 'தாரா முட்டையின்ர அம்மா' என்று சொல்லிக் கொண்டார்கள். டைனோசர் முட்டை என்றாலுமே கூட கேள்விகேட்காமல் நம்பிப் பயந்துபோகத் தயாராயிருந்தோம். 'தாராமுட்டை' என்பவர் எங்களைவிட இரண்டுவகுப்பு மேலே படித்த பெண்மணியாம். தொடர்ந்து நாங்கள் சாப்பிடாமல் டிமிக்கி கொடுதத்ததைக் கவனித்த, பிரம்மாண்டமான அந்த அம்மா, இண்டர்வெல் மணி அடித்ததுமே எங்கள் வகுப்பை நோக்கி ஆளணியுடன் ஓடிவருவதை வழக்கமாக்கிக் கொண்டார். வேறு வழியில்லாமல் வகுப்பறையின் பக்கவாட்டு ஆளுயரச் சுவர் ஓரமாக மேசை, கதிரை செட்டப்பாக அடுக்கிவைத்து, ஏறிக்குதித்து ஓடியிருக்கிறோம். பின்னர் அந்த மதிய உணவுத்திட்டத்தை அரசு கைவிட்டதில், என்போன்ற பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

மதிய உணவுத்திட்டம் கைவிடப்பட்ட பின்னர், நாங்கள் அவ்வளவு உயிராபத்து ஏதுமில்லாத புதியதொரு விளையாட்டொன்றைக் கண்டுபிடித்தோம். அப்போது எங்கள் வகுப்பறை இடம்மாறி, விளையாட்டு மைதானத்தைப் பார்த்தபடி, இன்னும் வசதியாக இருந்தது. அந்த விளையாட்டுக்குப் பெயர் சொல்லவேண்டுமானால் ‘அப்பாத்துரை கேம்’ என்று சொல்லலாம்.

இடைவேளை மணி அடித்ததும் தர்சன் என்னும் நண்பன் 'அப்பாத்துரை' என்கிற கரெக்டராக மாறிவிடுவான். நாங்கள் "அப்பாத்துரை டேய்!" எனக் கத்திவிட்டு ஓடுவோம். அவன் கையில் இருக்கும் தடியை ஓங்கியவாறு "டேய் வாடா இங்க" என்று கத்திக்கொண்டு அடிக்கத் துரத்துவான். மிகச்சுவாரசியமான(?!) இந்த விளையாட்டின் ஒரேயொரு குறை, உணர்ச்சி வசப்பட்டு ஓரளவுக்கு மேல் சத்தமாக எல்லாம் கத்த முடியாது. ஆசிரியர்கள் எதிர்ப்பட்டால், ஒன்றுமே நடக்காததுபோல அமைதியாகிவிட வேண்டும். ஏனெனில், அப்பாத்துரை சேர் பக்கத்து வகுப்பறையில்தான் இருப்பார். ஒல்லியாக, கருப்பாக, எப்போதும் பிரம்பை அடிப்பது போல ஓங்கியவாறு.

தொண்ணூறாம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள். இடைவேளை முடிந்து, அடுத்ததாகத் தமிழ்ப் பாடவேளை. சபாரட்ணம் டீச்சர் 'அபு நவாஸின் கதை' என்கிற பாடத்தைப் படிப்பிக்க அல்லது நடிப்பிக்க ஆயத்தமானார். அபுநவாஸ் தெனாலிராமன், பீர்பால் போன்ற ஒரு ஒரு மதியூகி. டீச்சர் வழக்கம்போல ஆட்களைத் தெரிவு செய்தார். அன்று எனக்கு அரசி கதாபாத்திரம். 'இல்லை அரசே இல்லை..'கைகளை அசைத்து மறுதலித்தவாறு ஒரு வசனம் ஆரம்பிப்பதாக நினைவு.

இப்போது நினைவிலில்லாத அந்தக் கதையில், ஏதோ ஒருவிஷயத்தில் அரசரை விளையாட்டாக ஏமாற்றிவிடுவான் அபுநவாஸ். அவனைப் பிடிக்க திட்டம்போட்டு அரசர் உள்ளிட்ட எல்லோரும், இறந்துவிட்டதுபோல அல்லது மயங்கிவிட்டதுபோல அல்லது தூங்கிவிட்டதுபோல நடிப்பார்கள். அந்தக் கட்டத்துக்கு நாங்கள் வந்தாகிவிட்டது.

டீச்சர் சைகை காட்டியதும், நடிகர்கள் எல்லோரும் கீழே விழுந்து படுத்துக் கண்களை இறுக மூடிக் கொண்டோம். அபு நவாஸ் இப்போது வந்து எங்களை அழைக்க வேண்டும். எங்கள் 'அபு நவாஸின்' குரல்வித்தியாசமாக, மெதுவாக தடித்துஒலித்தது. குழம்பிப் போய்அரைக் கண்ணைத் திறந்து பார்க்கையில், அபு நவாஸ் பேசவேயில்லை. தலையைத் திருப்பி வேறு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கே அப்பாத்துரை சேர், டீச்சரிடம் பேசிக் கொண்டிருந்தார். புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். "எழும்புங்கடா!" டீச்சர் உரத்துக் கூறினார். சற்றுத்தள்ளி வேறு சிலரும், ஆசிரியர்களும் கும்பலாக நின்றிருந்தார்கள்.

"எல்லாரும் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்ட போங்கடா" என்றார். இதுபோன்ற விஷயங்களில் மட்டும் ஏன்? எதற்கு? எனக் கேள்விகேட்காமல் கீழ்ப்படியும் இராணுவ ஒழுங்கு எங்களிடமிருந்ததால் எதுவும் கேட்கவில்லை. பள்ளி வழமைக்கு மாறாக பாதியில் விட்டதில் ஒருவருக்கொருவர் புன்னகையைப் பரிமாறிக் கொண்டோம். உற்சாகமாகப் பேசிக்கொண்டு நடந்தோம்.

அன்று பள்ளியின் கடைசி மணிச்சத்தம் கேட்காமலே வீடு திரும்பினோம். அன்றுதான் பள்ளியின் கடைசி நாள் என்பது, அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

*வீமன்காமம் - வடக்கில் காங்கேசன்துறை, தெற்கில் தெல்லிப்பளை, மேற்கில் மாவிட்டபுரத்தால் சூழப்பட்ட கிராமம். மாவிட்டபுரம் கோவிலின் கிழக்கு வீதியிலிருந்து ஆரம்பிக்கும் வீமன்காமம் கிராமம், மயிலிட்டியிலிருந்து தெற்காக அண்ணளவாக நான்குகிலோமீற்றர் தொலைவிலும், தெல்லிப்பளையிலிருந்து வடக்கே அண்ணளவாக ஒரு கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.