முற்றம்

"நீங்கள் எந்த ஊர்?"

எளிமையான கேள்வி. ஆனால் அவ்வளவு சுலபமாகப் பதில் சொல்ல முடிவதில்லை. எனது ஊர் என்று எதைச்சொல்வது? இப்போது இருக்கும் ஊரையா? அல்லது பிறந்த ஊரையா? அதிகம் அறிந்து வளர்ந்த ஊரையா? வெளிநாடொன்றில் வாழ்பவருக்கு பெரும்பாலும் இத்தகைய சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் சமயத்தில் குழப்பமாகிவிடுகிறது. 

முதல் மழைத்துளி கிளர்த்தும் மண் வாசனையை நுகரும்போதும், பண்டிகை நாளொன்றின் விடியலின்போதும் ஊரின் நினைவுகள் எங்கு சென்றாலும் தொடர்கின்றன. எப்படியோ காற்சட்டைப் பையினுள் ஒட்டிக் கொண்டு வீடுவரும் கடற்கரை மணல் துகள்களைப் போல, எவ்வளவு முயன்றாலும் உதறமுடிவதில்லை. ஒருவகையில் ஊர் என்பது துண்டு துண்டான நினைவுகளாகவே இருக்கிறது. அது ஒரு கோவிலின் நினைவாகவோ, வீட்டின் நினைவாகவோ அல்லது ஒரு மரத்தின் நினைவாகவோகூட இருக்கலாம்.

எங்கள் வீட்டு முற்றத்தில் ஓர் 'விலாட்' மாமரம் நின்றிருந்தது. வளரிளம் பருவத்தில் நன்கு சடைத்திருந்தது. நான் பிறந்த அதே வருஷத்தில் நாட்டப்பட்ட மரம். மிக இனிப்பான பழங்கள். அந்த மண்ணுக்கேயுரிய பிரத்தியேக குணம். ஊரை விட்டு, எங்கெங்கெல்லாமோ சென்றபோதும் மாம்பழம் சாப்பிடும்போது அப்பாவுக்கு வீட்டு மாமரம் பற்றிய பேச்சு வந்துவிடும். சாப்பிடும் மாம்பழங்களிலெல்லாம் வீட்டு மரத்தின் சுவையைத் தேடிக் கொண்டிருப்பார் போலும். இப்போது பெரிய மரமாக வளர்ந்திருக்கும் என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.

அப்பாவுக்கு வீடு என்பது மரங்கள் சார்ந்தது. இருபது வருடங்கள் கடந்த நிலையில், அப்பா வீடு சென்று பார்த்துவிட்டு வந்திருந்தார். மாமரம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. நான் சென்று பார்த்தபோது வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்தைக் காணவில்லை. அப்படியொரு மரம் இருந்ததற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை.

மாவிட்டபுரம்! எதை விதைத்தாலும் விளையும் வளமான விவசாய பூமி. சோலையாக இருந்த ஊர். இன்னும் சிதிலமான கட்டடங்களின் எச்சங்களும், பற்றைக் காடுகளுமாக இருக்கிறது. களையிழந்து, வறண்டுபோய் புழுதிக் காற்றும், அனலாக அடிக்கும் வெயிலும், தகிக்கும் மண்ணுமாகக் கிடக்கிறது. இராணுவக் கட்டுப்பாட்டில் இருபது ஆண்டுகளிருந்த ஊர்.

சின்னஞ்சிறு வயதில் ஊரில் இருக்கும்போது அவ்வப்போது முன்னிரவில் பலாலி இராணுவத் தளத்திலிருந்து சும்மா ‘பொழுது போகாமல்’ ஷெல் அடிப்பார்கள். மூன்று ஷெல் எனில் பிரச்சினையில்லை. அதிகமானால் பதில் நடவடிக்கை எடுக்கவேண்டுமல்லவா? “ராசமணியக்கா வீட்ட போவம்” என்பார் அம்மா. அப்போது அப்பா கொழும்பிலிருந்தார். ஏரியா மக்களின் முதற்கட்ட பின்வாங்கல் நடவடிக்கை அது.

ராசமணியக்கா வீடு பலாலி ஆமிக்காரனின் ஷெல் ரேஞ்சுக்குள் வராது என்றில்லை. எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து காணி தள்ளியிருந்தது. ராசமணியக்கா வீடு பாதுகாப்பு வலயமென்றோ, அங்கே ஷெல் அடிக்க மாட்டோம் என்று இராணுவம் தெரிவித்ததாகவோ தகவலில்லை. ஒருவேளை கீரிமலை வீதியால் ஆமி சுட்டுக்கொண்டு போகலாம் என்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு. அதையும் தாண்டிப் பிரச்சினை பெரிதாகுமென்றால் அடுத்தகட்ட பின்வாங்கல் தளம், கொல்லங்கலட்டிப் பிள்ளையார் கோவில். ஆனால் இது எதையும் பற்றி கவலையேயில்லாமல் ஒரு குறூப் செல் அடிக்க அடிக்க இருட்டுக்குள் டோச் லைட் அடித்து செல் துண்டுகள், ரவுண்ட்ஸ் பொறுக்கிக்கொண்டிருக்கும்.

அது ஓர் சிவராத்திரிக்கு முதல்நாள் பின்நேரம். எண்பத்தேழாமாண்டு. வைரவர் கோவிலடிக்கு முன்னாலுள்ள பற்றைக் காட்டுக்குள் புகை வந்துகொண்டிருந்தது. யாரோ அங்கே கூடி நின்று கொண்டிருந்தார்கள். அப்போது ஹெலிக்கொப்டர் தாழ்வாகப் பறந்து வந்தது. “ஹெலி வாறான். இவங்கள் வேற நிக்கிறாங்கள் என்ன நடக்கப்போகுதோ” என்று பதட்டமாகப் பேசிக்கொண்டார்கள். ஹெலி இன்னும் தாழ்வாக வட்டமடித்தது. மெதுவாக நின்று, ஹெலியின் மூக்கு குனிந்து பார்த்த மாதிரியிருந்தது. பிறகு பறந்து போய்விட்டது. மறுநாள் அதிகாலையில் நாங்கள் முதன்முறையாக ஊரைப்பிரிந்து ஓடினோம். மூன்று மாதங்களில் திரும்பிவிட்டோம். பின்பு தொண்ணூறாமான்டிலும் பிரிந்து சென்றோம். இம்முறை நிரந்தரமாகவே பிரிந்துவிட்டோம்.

வைரவர் கோயிலிலுள்ள பெரிய ஆலமரம் அமைதியாக அசைவற்று நின்றுகொண்டிருக்கிறது. சிறுவயதில் தொற்றி ஊஞ்சலாடி மகிழ்ந்த விழுதுகள் மண்தொட்டு வேர்பற்றிப் பருத்து இறுகிப் போயிருந்தன.

கோயிலுக்கு முன்னால் பரந்து விரிந்த பெரும் திடல். தைப்பொங்கலுக்குப் பட்டம் விடுவதற்கான பரந்த வெளி. அதற்கப்பால் சிறுபற்றைக் காடு. பின்னணியில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை. கோயிலின் பக்கத்தில் சுடுகாடு. நடுவில் ஆலமரம். எங்கள் வீட்டு ஒழுங்கை முகப்பில் நின்று பார்க்க, தூரத்தில் பிரமாண்டமாக சடைத்த ஆலமரமும் கோவிலும் இருளடைந்து தெரியும். சமயங்களில் கோயிலில் பொங்கல் நெருப்புப் புகையும், சுடலையின் சுவாலையும் தெரியும்.

இன்றும் கிராமங்களில் இரவில் வைரவர் திரிவது பற்றிக் கதைகள் உண்டல்லவா? ‘சுடலைவைரவர்’ பற்றியும் அப்போது சொல்வார்கள். நடுச்சாமத்தில் சைக்கிளில் தனித்து வரும்போது மனம் பயங்கொள்ளும் நேரத்தில் சற்று முன்னால் ஒரு நாய் ஓடிவந்ததாம் என்று பேசிக் கேட்டதுண்டு. ‘தச்சன்காட்டுச் சந்தியில் இருந்து கீரிமலை, அந்தப்பக்கம் கொல்லங்கலட்டி என இடைப்பட்ட ஒரு ரேஞ்சில ஒராள் கூட வந்தாரெண்டா, அவர் எங்கடையாள் அனுப்பிவிட்ட ஆள்தான்’ என்கிற ரீதியில் பேசிக் கொள்வார்கள்.

அவ்வப்போது ஊருக்குச்செல்லும்போது, புதிதுபுதிதாக அனுபவங்கள், ஊர்ப்புதினங்கள். ஊர் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. திரும்புமா என்றும் தெரியவில்லை. அருகாக காங்கேசன்துறை, தையிட்டி, மயிலிட்டி, வசாவிளான் உட்பட இன்னும் தம் சொந்த மண்ணை ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அரசபடைகள் வசம் இருக்கின்றன.அவ்வப்போது சிறுபகுதியாக விடுவிக்கிறார்கள். அதைவிடப் படையினர், 'நாங்கள் இதுவரை அனுமதித்த இடங்களிலேயே மக்கள் முழுமையாகக் குடியிருக்கவோ, பராமரிக்கவோ செய்யவில்லையே?' என்று நியாயமாக(?!) கேள்வி கேட்கிறார்களாம். எல்லாமே வளமான மண் கொண்ட விவசாய நிலங்கள். அங்கு செல்ல வேண்டுமென்று இருபத்தேழு வருடங்களாகக் காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கீரிமலை வீதியில் வாளித்தொழிற்சாலை ஒன்றிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தபோது 'யாரோ' இரும்பு கழற்றிக்கொண்டிருந்தார்கள். முன்பு உரிமையாளர் அதற்காக வந்தபோது படையினர் அனுமதிக்கவில்லையாம் என்றார்கள். காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை ஒவ்வொருமுறையும் அளவில் சிறியதாகிக் கொண்டே வருவது போலொரு பிரமை. ‘யாரோ’ இரும்பு கழற்றி விற்கிறார்களாம் என்றார்கள். தவிர, சீமெந்துத் தொழிற்சாலை விரைவில் இயங்கப் போவதாகத் தீவிர நம்பிக்கை தெரிவித்தார்கள் சிலர். இப்படியாக ‘யாரோ’ என்னென்னமோ செய்கிறார்களாம்.

உரிமையாளர்கள் வந்து திருத்தப்படாத வீடுகள், காணிகள் பற்றி அவ்வப்போது இராணுவம் வந்து அக்கறையாக விசாரித்துச் செல்வார்களாம். ‘பார்த்தீனியம்’ போன்ற களைகளை அகற்றுவது தொடர்பாகப் பேசியபோது போலீஸ் தெரிவித்த ஒரு 'யோசனை' முக்கியமானது. 'இதுவரை ஆட்கள் வராத, புலம்பெயர்ந்தவர்களின் காணிகளைத் நாம் பொறுப்பேற்றுத் திருத்தி வைத்திருக்கிறோம். உரிமையாளர்கள் வந்ததும், மீளப் பெறலாம்' என்பதே அது.

அரசபடைகள் இன்றுவரை 'பொறுப்பேற்று' வைத்திருக்கும் காணிகள் பற்றிய அனுபவமே நம் மக்களுக்குப் போதுமானதல்லவா? ஆனால், இராணுவத்தினர் கவலை வேறுமாதிரியானதாம். வெளிநாட்டுக்காரர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் வீதியால் செல்லும்போது இந்தமாதிரி இருப்பது நன்றாக இல்லை என அபிப்பிராயப்பட்டார்களாம். ஒருமுறை திடீரென வீதியை அண்டியிருந்த கட்டடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களைச் செப்பனிட்டிருக்கிறார்கள். யாரோ வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வந்திருந்தார்களாம். இப்படியாகத் துப்பாக்கிச் சன்னத்துளைகளுக்கு செப்பனிட்டுவிட்டால், இங்கே போரினால் எந்தப்பாதிப்பும் இடம்பெறவில்லை என நம்பும் யாரோ இருக்கிறார்கள் எனத்தெரிகிறது.

ஒருவகையில், இங்கே பெரிதாக எந்தச்சண்டைகளும் இடம்பெறவில்லை என்பது உண்மைதான். தொண்ணூறாம் ஆண்டில் பலாலியிலிருந்து முன்னேறிய இராணுவம், சில நாட்களில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. பிறகென்ன செய்வது? வீட்டுக் கூரைகளை, மரங்கள் ஒன்றுவிடாமல் அகற்றியது. கதவுகள், யன்னல்கள், நிலைகளோடு உடைத்தெடுத்தது. நீர்வளத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நோக்கத்திலோ என்னவோ இருந்த கிணறுகளை எல்லாம் புல்டோசர் கொண்டு மூடியது. எந்தக் காணிக்கும் மதிற்சுவர், எல்லை கிடையாது. அடையாளமே காணமுடியாதவாறு பல வீடுகளை இடித்துத் தள்ளியது. எல்லாமே பின்னர் இராணுவம் பொழுது போகாமல் செய்த 'மக்கள் சேவை'. எங்கள் வீட்டில் சுவாமியறை யன்னலைப் பத்திரமாகப் பெயர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, சுவரில் புதிதாக ஒரு பெரிய கதவு உருவாகியிருந்தது. ஒரு எலக்ரிக்கல் ஸ்விட்ச்சையோ, சிறு வயர்த்துண்டையோ கூட விட்டுவைக்காமல் மிகக் கவனமாகப் பெயர்த்தெடுத்ததில், ஓர் 'இராணுவ ஒழுங்கு' தெரிந்தது.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்! யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கோயில் அடையாளமாகவிருக்கும். கோவில்கள் தொடர்பில் சொல்லப்படுகிற கதைகள் சுவாரசியமானவை. ‘மா’ என்றால் குதிரை. மாருதப்புரவீகவல்லி என்கிற சோழ இளவரசிக்குக் குதிரை முகம் நீங்கப் பெற்றதால் ‘மாவிட்டபுரம்’ எனும் பெயர் வந்ததாம்.

திசையுக்கிர சோழன் என்பவனின் மகளான மாருதப்புரவீகவல்லி தனக்கிருந்த வியாதியைப் போக்க தீர்த்த யாத்திரைகள் மேற்கொண்டிருக்கிறாள். அதன்பிரகாரம் கீரிமலைக்குச் சென்றபோது, அங்கே நகுல முனிவரைத் சந்தித்திருக்கிறாள். நகுல முனிவருக்கு கீரிமுகம் இருந்து குணமாகியிருந்தது. அவரது வழிகாட்டுதலில் தொடர்ந்து சிலகாலம் தீர்த்தமாடி வழிபட, குதிரை முகம் நீங்கி அழகியாகிவிட்டாள். அவள் தங்கியிருந்த கோயிற்கடவை என்கிற குறிச்சிக்கு மாவிட்டபுரம் எனப் பெயரிட்டு, அங்கே இருந்த முருகன் கோவிலை பெரிதாகக் கட்ட ஆரம்பிக்கிறாள். அவள் தந்தை, முருகன் விக்கிரகம் உள்ளிட்ட தேவையான பொருட்களுடன் தில்லை மூவாயிரவருள் ஒருவரைத் தீட்சிதராகவும் அனுப்பிவைத்ததாகச் சொல்லப்படுகிறது. காங்கேயன் என்கிற முருகன் விக்கிரகம் வந்திறங்கிய அந்தத் துறைமுகத்திற்குக் காங்கேசன்துறை எனப்பெயர். இது எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

போர்த்துக்கேயர் காலத்தில் கோவில் இடிக்கப்பட்டது. விக்கிரகங்களை கிணற்றுக்குள் போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இப்போதுள்ள கோவில் ஒல்லாந்தர் காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒரு கோட்டைபோல கருங்கல் சுற்றுமதில்களுடன் இருந்த கோவிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டுபோய்க் கடற்கோட்டை கட்டியதாகவும் சொல்வோருண்டு. செங்கை ஆழியானின் கதையொன்றிலும் இப்படி எழுதியிருந்தார்.

சிறுவயதில் நான் பார்த்ததிலிருந்து கோவில் நிறைய மாறிவிட்டது. தொண்ணூறாம் ஆண்டில் விமானக் குண்டுவீச்சுக்களால் சிதைவடைந்த கோவில் மண்டபங்கள் சில திருத்தப்பட்டிருக்கின்றன. கோவிலோடு சேர்ந்திருந்த யாத்திரீகர் தங்கும் மடங்கள் இருந்த அடையாளம் இல்லாமல் முற்றாக அகற்றப்பட்டிருக்கின்றன. மீளத் திருத்தும் பணிகளில் பழமையான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் மண்டபத்தின் வெடிப்படைந்த பகுதிகள் அகற்றப்பட்டு, சீமெந்து கட்டடமாக, புதிய கோவில் போல மாறிவிட்டது. முருகனின் தங்க விக்கிரகம், வெள்ளிக் கொடித்தம்பம் உட்பட பல காணாமல் போய்விட்டதாம். மிகப்பெரிய சப்பரம், தேர்கள் இப்போதில்லை.

கீழ்ப்பீடம் தவிர, மேலே தேர்ச்சீலை போர்த்தப்பட்ட ஐந்து தேர்கள். அதில் பெரியதேர் மட்டும் அரைகுறையாக எஞ்சியிருந்தது - சில வருடங்களுக்கு முன்னர். ஆறுமுகசுவாமி தேரைப் பெரிய தேர் என்பார்கள். மிக நுண்ணிய, அபூர்வமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இருந்த தேர் என்று நம் ஊருக்கு சம்பந்தமில்லாதவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. அதற்கு மஹோத்ரரதம் என்று பெயராம். அந்தத்தேர் இப்போது உருக்குலைந்து இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது. கோவிலுக்கு வரும் சிங்களவர்கள் ‘ஞாபகார்த்தமாக’தேர்ச் சிற்பங்களை ஆளுக்கொன்றாகப் பிடுங்கிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட விளைவு என்கிறார்கள்.

தேர்முட்டியோடு சேர்ந்து அருகில் வாசகசாலை. பள்ளிக்குப் போகையில் பார்த்துச் செல்வதோடு சரி. அப்பாவின் இளம்பிராயத்தில் அந்தத் தேரடி வாசகசாலையில்தான் நண்பர்கள் சந்தித்துக்கொள்வது வழக்கமாம். முதன்முறை ஊருக்கு 'வால்வ்' ரேடியோ அங்கேதான் வந்திருந்ததாம். நம் வளரிளம் பருவத்தில் ஊரின் வாசக சாலைகளுக்கும், கோவில்த் தேர்முட்டிகளிலும் தனியான ஓர் இடமுண்டு. அது எனக்கு சொந்த ஊரில் கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல, அரண்மனை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. 'பொன்னியின் செல்வன்' வாசித்தபோது நம்மூர் அரண்மனையும் ஞாபகம் வந்தது.

கீரிமலை வீதியிலிருந்து சக்திவேல் தாத்தா வீட்டுக்குப் பக்கத்தால் செல்லும் ஒழுங்கை, வண்டில்ப்பாதை போலிருக்கும். இருமருங்கும் சிறு பற்றைகளும் மரங்களும் அடர்ந்திருக்கும். அதனூடாகச் செல்கையில் அங்கேசற்றுப் பள்ளமான பகுதி. அங்கேதான் அரசியின் அரண்மனை அமைந்திருந்ததாம். வடவளக்குளம் என்று சொல்வார்கள். அப்பா இளைஞனாக இருந்த காலத்தில் அரண்மனை அத்திவாரத்தின் எச்சங்கள் இருந்ததைப் பார்த்திருக்கிறார். ஒழுங்கைக்கு அருகில் மற்றையபக்கம் ஒரு வேட்டை மண்டபமும் அமைந்திருந்ததாம். முருகன் கீரிமலைக்குத் தீர்த்தமாடச் செல்லும்போது, வந்து தங்கியிருக்கும் இளைப்பாறும் மண்டபமாம் அது. அப்பாவின் சின்னவயதில் அந்த நடைமுறை இருந்து, பின்பு வழக்கொழிந்திருக்கிறது.

நாங்கள் பார்த்தபோது போது மண்டபமில்லை. அரண்மனை இருந்த பகுதிக்குச் சென்றதில்லை. ஆனால் எங்கள் மத்தியிலும் கதைகள் இருந்தன. கீரிமலையில் ஒரு கிருஷ்ணன் கோவிலுண்டு. கீரிமலை, காங்கேசன்துறைக் கடற்கரை வீதியில் கடலோடு ஒட்டி சற்று உயரமான பாறைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்திருந்தது. கோவிலுக்குச் சற்றுத்தள்ளி ஒரு குகை இருக்கிறது என்பார்கள். அந்தக் குகையிலிருந்து ஒரு சுரங்கப்பாதை அரசியின் அரண்மனைவரை போகுமாம். போய்ப்பார்த்த மாதிரியே சொல்வார்கள். அம்புலிமாமாவில் அப்போது ‘கொள்ளைக்கார இளவரசன்’ என்றொரு கதை வந்தது. மந்திரியின் சதியிலிருந்து மன்னன் தீவட்டியைப் பிடித்துக்கொண்டு சுரங்கப்பாதை வழியே தப்பியோடுவான். அதைப்பார்த்து புனைந்த கதையாக இருக்கக்கூடும்.

சிறுவயதில் நான் பார்த்த கோவிலுக்கும், என் அப்பா தன் இளமைக்காலத்தில் பார்த்த கோவிலுக்கும் வித்தியாசங்களிருந்தது. முன்புறம் தேர்முட்டிக்கு எதிராக ஒரு தீர்த்தக் கேணி அமைந்திருந்தது. கோபுர வாசல் அருகாக ஒரு தீர்த்தக் கேணி இருந்தது. பின்பு அதையெல்லாம் மூடிவிட்டார்களாம். வீதியோரம் ஒரு மலையாளத் தேநீர்க் கடையும் இருந்ததாம். கோபுரவாசலின் மற்றைய பக்கம் நந்தவனத்திற்குள் ஒரு டீசல் இயந்திரம் வைத்து கோவில் வளாகம் இரவில் மின்விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இது யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் வருவதற்கு முன்பே அப்பாவின் நினைவு தெரிந்த காலம் முதலே வழக்கத்திலிருந்ததாம்.

கோவிலில் திருத்தவேலைகள் பலவருடங்களாகத் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. வாழ்ந்துகெட்ட மனிதர் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். வாழ்ந்துகெட்ட ஊர்கள் பல இருக்கின்றன எமது தேசத்தில். கோவில்களும்!

நாம் எப்போதோ பிரிந்து சென்ற, நம் நினைவில் தங்கிவிட்ட ஊரைப் பின்பு ஒருபோதும் காணக்கிடைப்பதில்லை. நம் நினைவில் உறைந்துபோய்க் கிடைக்கும் ஊர் என்பதுநாம் கடைசியாகப் பார்த்த காட்சியின் சட்டகமாகப் பதிந்து போயிருக்கிறது. அதை அப்படியே வைத்துக்கொண்டு அலைகிறோம். நான் இறுதியாக எங்கள் வீட்டைப் பார்த்ததுதான் எங்கள் வீடு.

அப்போதுதான் நிலம்தெளிய ஆரம்பித்திருந்தது. வீட்டு கேற்றடியிலிருந்து உள்ளே பார்த்தபோது நடைபாதையோரமாக ஏராளமாக உதிர்ந்த ரோஜாப்பூக்கள் கொட்டிக்கிடந்தது. ஆங்காங்கே வாழைப்பழத் தோலும்! முற்றத்திலிருந்த விலாட் மாமரம் தலைகொள்ளாமல் பூத்திருந்தது. நாங்கள் வீட்டை விட்டு வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. எங்கள் பகுதியில் இயக்க அக்காக்கள் நிலைகொண்டிருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். திரும்பிப் போகும்போது, உள்ளே போய்ப் பார்க்கலாம் என்றார் அப்பா. இப்போது நாங்கள் வந்தது கோவில் தேர்த்திருவிழாவுக்காகத்தான். எனக்கு அதுதான் முக்கியமாகப்பட்டது. எங்கள் வீட்டை ‘யாரோ’ போல பார்த்துக்கொண்டிருந்தோம். கடைசியாக எங்கள் வீடு அப்போதுதான் வீடாக இருந்தது.

அன்றைய தேர்த்திருவிழா வழமையானது போலில்லை. கீரிமலை வீதி நெடுகவும் ஏராளமான விசேட பேரூந்துகள் நிறுத்தப்பட்டிருக்கவில்லை. வீதியை நிறைத்திருக்கும் சனக்கூட்டம் இல்லை. களையிழந்த வீடுகள். முன்னெப்போதும் இந்த நேரத்தில் திருவிழாவுக்கு வந்ததில்லை. காலை ஏழு மணிக்கு பெரிய தேர் தெற்கு வீதிக்கு வந்துவிட்டிருக்கும்.கோபுரவாசல் கடந்து வடக்கு வீதிக்குப் போய் தேர் இருப்புக்கு வர, பன்னிரண்டு மணியாகிவிடும். நான்காவதாக இழுக்கப்படும் பெரிய தேரில் ஆறுமுகசுவாமி, மனைவிகள் தவிர, நிறைய அர்ச்சகர்கள், நாதஸ்வரம், தவில் வாசிப்பவர்கள், அர்ச்சகர்ளுக்கு உதவியாக இளைஞர்கள், சிறுவர்கள் என்று ஒரு பெரிய கும்பலே வீற்றிருப்பார்கள். பெரியதேரில் ஏறித் தொங்கிக்கொண்டு போகவேண்டும் என்றொரு திழுவிழாக்கால இலட்சியம் ஒன்று அப்போது வந்துபோகும். விதவிதமான, ஏராளமான காவடிகள் வரும். தேரைப் போலவே கார்த்திகைத் திருவிழா காவடிகளின் திருவிழாவாக இருக்கும்.

ஆறுமுகசுவாமி வாசலூடாக கோவிலுக்குள் நுழைந்தபோது, யாக பூசை நடைபெற்றுக்கொண்டிருந்தது. உள்வீதியில் பிள்ளையாரைக் கும்பிட்டுக்கொண்டு வெளியே வந்து தேர்முட்டியின் படிக்கட்டுகளில் ஏறி நின்றுகொண்டேன். அன்றுதான் குறைவான கூட்டமாக இருந்திருக்க வேண்டும். சுவாமி தேரிலேறுவதை அதற்குமுன்பு ஒரு முறையேனும் பார்க்க முடிந்ததில்லை. பிள்ளையார் முதலில் வந்து தேரிலேறும்போது, தூக்குக்காவடியொன்று வந்ததிருந்தது. ஆறுமுகசுவாமி தேரிலேறுவதை மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும் ஆரவாரத்துக்கிடையில் பெரிய தேர் அசைந்து நகர்ந்தது. கோவிலில் ஐந்து தேர்கள் ஓடிய இறுதி நாளாக அன்றையநாள் இருந்தது.

பாலர் பள்ளியிலிருந்து நாங்கள் உருண்டு புரண்டு விளையாடிய முருகன் கோயிலின் வெண்மணல் வீதியால் வந்து, சந்தி கடந்து கீரிமலை வீதிக்கு இறங்கினேன். முதன்முதல் வீட்டில் நடைபயின்று வெளியுலகத்திற்கான என் சொந்தப் பயணம் ஆரம்பித்தது இந்த வீதியில்தான். அநேகமாக அது ஒரு மாலை வேளையாக இருக்கக்கூடும். முதன்முதல் சைக்கிள் ஓட்டிப் பழகியது, விழுந்து எழுந்தது, புறங்கையில் சிராய்த்துக் கொண்டது இதே வீதியில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தமாலைப் பொழுதில்தான். பள்ளி முடிந்து விளையாடிக் கொண்டே வரும்போது ஒரு சிறு இலந்தைக்காடு. பக்கத்திலேயே புளியமரங்கள். புளியம்பழம் ஆய்ந்து தின்றது, வாத்தியார் வீட்டுக் கொய்யாப்பழம் சாப்பிட்டது, அப்பன் மாமா கடையில் ஐஸ்பழம் குடித்தது, கண்ணாடித் தாத்தாவுடன் கதை பேசியது எல்லாமே இதே வீதியில்தான்.

எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு அங்கமாக திகழ்ந்த, ஒரு சாட்சியாகவே கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்த, பயணிக்கும் ஒவ்வொருவராலும் பதியப்பட்ட வாழ்வியல் அனுபவங்களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்ற வீதி. தன் ஜீவனை இழந்து, மீண்டும் உயிர் துளிர்க்குமா எனச் சந்தேகம் கொள்ளவைக்கும் அமைதியுடன், மழை பொய்த்துப்போன பூமியின் வற்றிப் போன ஆறுபோல காய்ந்து கிடந்தது.

இந்தவீதியை இயல்பாக, இறுதியாகப் பார்த்த மாலைப்பொழுது அழகானதாயிருந்தது. குளிர்மையான காற்று வீசிக் கொண்டிருந்தது.

அன்றைய நாள் ஒரு அசௌகரியமான அமைதியையும், அமைதியின்மையையும் ஒருங்கே கொண்டிருந்தது. நாளை சண்டை தொடங்கிவிடும் என்று பேசிக்கொண்டார்கள். யாரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல் என்று தெரியவில்லை. சிலர் நம்பினார்கள். சிலர் முழுதாக நம்பவில்லை. அன்று எமக்குப் பாடசாலை அரை நேரத்தோடு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். மதியநேரம், வீதியில் வீட்டு வாயில்களில் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பா வீட்டுச் சாமான்களை ஏற்றுவதற்கு லான்ட் மாஸ்டருக்குச் சொல்லியிருந்தார். கடந்தமுறை எதையும் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே ஓடிச்சென்ற அனுபவத்திலிருந்து இந்த முன்னேற்பாடு.

பின்னேரம். அப்பன் மாமா கடையில் ஐஸ்சொக் குடிக்க, என்னுடைய சிறிய சொப்பர் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீதிக்கு இறங்கினேன். வாசலில் லான்ட் மாஸ்டர் வந்து நின்றது. கீரிமலை வீதி. நாலே முக்காலுக்கு சீமெந்து ஆலையின் சங்கு ஒலித்தவுடன் வீடு செல்லும் ஊழியர்களால் மிகப்பரபரப்பாக ஆகிவிடக்கூடிய அந்தச்சாலை அமைதியாக இருந்தது.

திரும்பும்போது மாவிட்டபுரம் சந்தி நோக்கி சென்றேன். வாளி ஃபக்டரி தாண்டியதும், கோபுரம் தோன்றி நெருங்கியது. நெருக்கடியான காங்கேசன்துறை வீதியில் என் சைக்கிள் பயணத்திற்கு அனுமதியிருக்கவில்லை. அத்திக்கந்தையா கடையடியில் சைக்கிளைத் திருப்பினேன்.

கடைக்கு அருகில் ஒரு இராணுவ ட்ரக் வண்டி நின்றிருந்தது. ட்ரக்கின் பின்பகுதியில் மூடிய அரைக்கதவில் அமர்ந்திருந்த டி ஷர்ட் அணிந்த ஆமிக்காரன் கீழே எட்டிப் பார்த்துக் கதைத்துக்கொண்டிருந்தான். கீழே சைக்கிளில் அமர்ந்தபடி, ஒற்றைக்கையால் ட்ரக்கில் கையை ஊன்றியபடி ஒருவர், முன்னால சைக்கிள் பாரில் அமர்ந்தபடி ஒருவர் என இரண்டு இயக்க அண்ணன்மார். மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நாளை ஆரம்பிக்கப்போகும் சண்டை குறித்து அவர்களுக்கும் தெரிந்திருக்கக்கூடும். அது பற்றிய சாயல் ஏதுமில்லாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதமான காற்று வீசிக்கொண்டிருந்தது. ஊரின் அன்றைய மாலைப்பொழுது மிக அழகானதாயிருந்தது!

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.