முற்றம்

நாங்கள் வசிக்கும் நாட்டில் கோடைகாலத்தில் பாகிஸ்தான் மாம்பழங்கள் விற்பனைக்கு வந்திருக்கும். முன்பெல்லாம்

குடிபுகுந்தவர்களினால் நிர்வகிக்கப்படும் விற்பனை நிலையங்களில்தான் மாம்பழங்களை வாங்கலாம், ஆனால் இப்போது அந்த நிலைமை மாறி சுதேசிகளின் விற்பனை நிலையங்களிலும் இவற்றை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.

மாம்பழங்கள் எனது சிறுபிள்ளைப் பராயத்தில் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. எங்களுடைய அம்மப்பாவுடன் நாங்கள் வசித்த காலமது. அவர் அருமையாகப் பாடுவார். தேவாரத்தைத் தவிர வேறெதையும் அவர் பாடி நான் கேட்டதில்லை. பாலும் தெளிதேனும், முத்துநெறி அறியாத, இறவாமல் பிறவாமல், துள்ளுமத வேட்கை.. என இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம், இவைகள் எல்லாம் எனக்கு அரிவரி வகுப்புக்குப் போகுமுன்பே தெரியுமென்றால் அதற்கு காரணம் அம்மப்பா தான். அவரை நாங்கள் எல்லோரும் ஐயா என்றே அழைத்து வந்தோம்.

ஐயா வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த காலமது. எங்கள் வீட்டில் ஒரு சாய்மணைக்கதிரை இருந்தது. அதுதான் ஐயாவின் இருப்பிடம். காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை அதில்தான் அவரது பொழுது கழிந்தது.நான் கோப்பி கொண்டு போய் கொடுப்பதிலிருந்து கண்ணாடி தேடிக்கொடுப்பது போன்றது வரையிலான வேலைகளைச் செய்வேன்.

வீரகேசரி வரும், வாசலில் நின்று கணபதிப்பிள்ளையண்ணை பெல் அடிப்பார், நான் ஓடிப்போய் வாங்கிக் கொண்டு வந்து ஐயாவிடம் கொடுப்பேன். ஐயா சாய்மணைக் கதிரையின் கைகளில் இருக்கும் சட்டங்களை முன்னோக்கி நீட்டி விட்டு பேப்பரை விரித்து வைத்து வாசிப்பார். பின்னேரம் போல கல்கியும் இன்னொரு புத்தகமும் வரும், நான் அதையும் ஓடிப் போய் வாங்கி வந்து கொடுப்பேன். அது கொஞ்சம் மைமல் பொழுதில் வருவதால் ஐயா சொல்லுவார், மேனே அதைக் கொண்டு போய் பிள்ளையிட்டக் குடு, இது என்னுடைய அம்மா. அதையும் நான் செய்வேன். ஆனால் அடுத்த நாள் இந்த புத்தகங்களை கிழிக்காமல் ஐயாவிடம் ஒப்படைக்க வேண்டும். இது ஒரு சிக்கலான விடயம்.

கல்கிப்புத்தகங்களில் உள்ள படப்பக்கங்கள் கிழித்தெடுக்கப்படுவது எங்கள் வீட்டில் சாதாரண நிகழ்வு. இதிலுள்ள கஸ்டம் என்னவென்றால் ஐயாவும், அம்மாவும் இந்த புத்தகத்தில் வரும் தொடர்கதைகளை வாசிப்பவர்கள். எனக்கோ எழுத்துக் கூட்டியும் வாசிக்கத் தெரியாது. என்னுடைய சகோதரத்துக்கோ வாசிப்பதற்கெல்லாம் பொறுமை கிடையாது. நாங்கள் பார்ப்பது படங்கள். குதிரைப்படங்களைக் கண்டால் பக்கம் சரார் எனக் கிழிந்து விடும். அவர் குதிரைப்படத்தைக் கிழித்தால் அதிலுள்ள பூப் படங்களையெல்லாம் நான் கிழித்து எடுத்து விடுவேன். வாசிப்பவர்களுக்கு மிஞ்சுவது படங்களல்லாத தொடர்பற்ற பக்கங்கள் தான்.

எனக்கு வழங்கப்படாத வேலை இதுவென்றால் வழங்கப்பட்ட வேலையொன்றும் இருந்தது. எங்களுடைய சாமியறையில் தான் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவது வழக்கம். இந்த அறைக்குள் யாரும் நித்திரை கொள்வதில்லை. அதற்குள் பழைய கால அலுமாரியொன்றும், சாவிக்கொத்தும், சாமிப்படங்களும், குத்துவிளக்கும் எப்போதும் இருக்கும். அந்த அறையில் சாக்கு விரித்து, மாம்பழங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, வைக்கோல் போட்டு மூடி வைக்கப்பட்டிருக்கும், மாரிகாலங்களில் மழையுடன் இந்த பழமணமும் கூடவே இருக்கும். அம்மம்மா நாங்கள் எல்லோரும் சுற்றி இருந்து கோப்பி குடிக்கும் போது மாம்பழங்களுடன் வருவார். அவை பாகம் பிரிக்கப்பட்டு அயலிலுள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு பின்னேர தேநீர் நேரத்திலும் தொடரும்.

எங்கள் வீட்டில் புட்டும் மாம்பழமும், இடியப்பமும் மாம்பழமும், சிலவேளை சோறும் மாம்பழமும் என்று  கூட நாங்கள் மாம்பழங்களை உண்டு தீர்ப்போம். ஐயாவுக்கு இந்த சந்தோசம் கிட்டுவதில்லை.அவருக்கு மார்கழி மாதத்தின் மழைக்கும், குளிருக்கும் தொய்வு வந்து விடும். அவருக்கு மாம்பழம் சாப்பிட்டாலும் தொய்வு வந்து விடும் என்பது பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு வீட்டிலிருக்கும் எனது மாமாவின் முடிந்த முடிவு. எனவே ஐயாவுக்கு மாம்பழம் சாப்பிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. ஐயாவுடான சாப்பாடு பரிமாறும் வேலைகளில் நான் பங்களிப்பை வழங்குவதால் ஐயாவுக்கு யாராவது மாம்பழங்கள் சாப்பிடக் கொடுத்தால் அதை உடனடியாக மாமாவிடம் ரிப்போட் பண்ணிவிட வேண்டும் என்பது எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு.

என்னிடம் இருக்கும் விசேட குணங்களில் ஒன்று யாராவது அன்பாக எதையாவது கேட்டால் கொடுத்து விடுவேன் அத்தோடு சொல்லக் கூடாத விடயத்தையும் சொல்லிவிடுவேன். மாம்பழங்கள் பழுத்து விட்டன. ஐயா சாமி கும்பிட்டு விட்டு வரும் போது பெரிய மஞ்சள் நிறமான மாம்பழம் ஒன்றை கொண்டு வந்தார். அம்மம்மாவிடம் குடுத்து இதை வெட்டிக் கொண்டுவா என்றார். நான் செய்தேன். அம்மம்மா ஏதோ முணுமுணுத்தார், பதிலுக்கு ஐயாவும் ஏதோ முணுமுணுத்தார். மாம்பழம் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கைமாறியது. எனக்கு மாங்கொட்டை தரப்பட்டது. நானும் சந்தோசமாக இருந்தேன். பிறகு இதை நான் மறந்து விட்டேன்.

மழையும் குளிரும் மாறி மாறி வந்து ஐயாவுக்கு தொய்வு வந்து விட்டது. திருவெம்பாவை நடந்து கொண்டிருந்தது காலம் என நினைக்கிறேன்.எங்கள் வீட்டில் ஒரே அமளிதுமளி, நானும் நித்திரைக் கலக்கத்துடன் வெளியே வருகிறேன். ஐயாவைக் காரில் ஏற்றுகிறார்கள். ஐயாவுக்கு மூச்செடுக்க கஸ்டமாகிச் போச்சாம், ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள். நானும் அம்மம்மாவும் தனித்து விடப்படுகிறோம். அம்மம்மா கடவுள்களுக்கெல்லாம் நேர்த்தி வைக்கிறார். மாமா வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார், மாம்பழத்தை சாப்பிட வேணாம் எண்டு எத்தனை தரம் சொல்லுறது. வருத்தம் எண்டா வாய கட்டப்பழக வேண்டும் என உரத்த குரலில் பேசுகிறார். நான் அம்மம்மாவின் மடிக்குள் சரணடைகிறேன்.

மாமா வெளியே போனதும் எனது சின்னச் சட்டி பானைகளை எடுத்துக் கொண்டு ஒரு மூலையில் தூரமாகப் போய் இருந்து விளையாடுகிறேன். அன்று ஆஸ்பத்திரிக்குப் போன ஐயா திரும்பி பிணமாக வீடுக்கு வந்தார்.

எங்களுடைய வாரிசுகளுக்கு எங்களைப் போல மாம்பழத்தில் சென்ரிமென்றல் வல்யூக்கள் எதுவும் இல்லை. அவர்கள் மாமரத்தையே கண்டதில்லை. அதில் ஊஞ்சல் ஆடிய அநுபவமும் அவர்களுக்கில்லை. மாம்பழத்தை துண்டு துண்டுகளாக்கி, கிரைண்டரில் போட்டு அரைத்து, தயிர் கலந்து, சீனி போட்டு, கலவையை கண்ணாடிக்கிண்ணத்தில் விட்டு ஐஸ்கட்டி போட்டு ஸ்ரோவுடன் பரிமாறுகிறார்கள். அதற்கு தனக்குரிய பாஷையில் ஒரு பெயரையும் கூறி. என்னால் அதை சுவைக்க முடியவில்லை.

ஐயாவும், அம்மம்மாவும், எங்கள் வளவுக்குள் நின்ற மாமரமும் மனதில் நிழலாடுகிறது. கண்களை கண்ணீர் நிரப்புகிறது.

நினைவிற் தோய்ந்தவர் : மாதுமையாள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.