முற்றம்
Typography

நகைச்சுவையோடு நல்ல பல கருத்துக்களைச் சொன்ன நடிகர்

கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணனின் நினைவு தினம் இன்று. அவரைப் போலவே சிரித்துச் சிரித்துக் கதைபேசிய எனக்குத் தெரிந்த ஒரு கலைவாணனின் நினைவு தினமும் இன்றுதான் என்றே சொல்ல வேண்டும்.

அது என்ன இன்றுதான்..?

ஆம் அப்படித்தான் சொல்ல முடியும்.

நினைவு தினங்கள் எவ்வாறு குறிக்கப்படுகின்றன?. குறித்த நபரின் இறந்த நாளை, மறைவுத் திகதியைச் சுட்டி. அப்படித்தானே..? ஆனால் எனக்குத் தெரிந்த கலைவாணன் இறந்ததாகச் சொல்ல முடியாது.

அப்போ அவர் இறக்கவில்லையா..? தெரியாது.

இன்னமும் உயிரோடிக்கிறாரா..? தெரியாது.

அப்படியானால் எப்படி நினைவு தினம்..?

அப்படித்தான் கண்ணகி அக்கா சொன்னா. 23 வருடங்களின் பின் எதிர்பாரா விதமாகப் புலம் பெயர் தேசமொன்றில் சந்தித்த போது கண்ணீருடன் சொன்னா.

இன்று வருவார், நாளை வரலாம் எனும் தன் பதினெட்டு வருடகால எதிர்பார்ப்பை நிறுத்திக் கொண்டது இன்றைய நாளில். பொய்யான நம்பிக்கையில், ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை எனச் சொல்லித் தன் பொட்டழித்துக் கொண்டது இந்நாளில் எனக் கண்ணீருடன் சொன்னார்.

அவர் கணவன் கலைவாணன் இறந்தாரா? இருக்கிறாரா? என்பது இன்று வரை எவருக்கும் தெரியாது. ஏனெனில் அவர் காணமற் போனார். இராணுவத்தால் கைது செய்யப்பட்டுக் காணமற் போனார்.

அவருக்கு என்ன நடந்தது..? எவரும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியவில்லை. கைது செய்த இராணுவம், கலைவாணனை முகாமுக்குள் கொண்டு சென்றதைக் கண்ட கண்ணகி அக்கா, விசாரணையின் பின் வீடு வருவார் என எதிர்பாரத்துக் காத்திருந்த காலம் ஒன்றல்ல இரண்டல்ல பதினெட்டு வருடங்கள்.

இந்தப் பதினெட்டு வருடங்களில் மாறி மாறி வந்த இராணுவத் தலைமைகள், அரசியற்தலைமைகள், எல்லோரிடமும், ஏதோ ஒரு நம்பிக்கையில் கேட்டுபாத்திருக்கிறார். விடுதலையை அல்ல.. அவர் இருக்கிறாரா..? இல்லையா என..?. ஆனால் யாரிடமும் பதில் இல்லை.

பாடசாலை நாட்களில் கையில் ஒரு சிலம்போடு கண்ணகியக்கா மேடைநாடகங்களில் தோன்றும் போது, உயிர் கொண்ட கண்ணகியாக பாண்டிய மன்னனிடம் நீதி கேட்பார். நீதி தவறிய மன்னன் அவர் காலடி விழுந்து உயிர் துறக்க,. கடுங்கோபம் அடங்காத கண்ணகி பாண்டிய தேசம் எரியச் சாபமிடுவார்.

 தன் கணவனுக்கான நீதியை எங்கும் கோர முடியாத கண்ணகியக்கா, நிஜத்தில்  தன்னுள் எரிந்து கொண்டார் பிள்ளைகளுக்காக.

கதைகளில் மட்டுமே நீதி நிலைக்கிறது. நிஜத்தில் அது செத்துப் போகிறது. பலர் காணமற் போகின்றார்கள். இன்று சர்வதேச காணமற் போனோர் தினம்.

கண்ணகியக்கா வீட்டில் சிரிக்கும் கலைவாணன் போட்டோவில் தோற்றம் திகதியிடப்பட்டிருக்கிறது. மறைவு...?

மறைத்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த திகதியது. அவர்களும் மறந்து போயிருப்பார்களோ. எத்தனை திகதிகளை ஞாபகம் வைத்திருக்க முடியும்...?

- மலைநாடான்

 

உலக காணாமல் போனோர் தினத்தையொட்டிய சிறப்பு பதிவுகள்

கண்ணகி எரிக்கவில்லை - எரிந்துபோனாள் !
ஏன் இவர்கள் இல்லாது போனார்கள்..?
இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS