முற்றம்

காதில் ஹெட்ஃபோன்கள், கைகளில் ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லது புத்தகங்கள். 10 நிமிடங்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க போவதென்றாலும் இவையில்லாமல் வெள்ளைக்காரர்கள் இயங்கமாட்டார்கள்.

 பெரும்பாலான நேரங்களில் ரயில்கள் அமைதியாக செல்வதற்கு உதவுபவை இவை.  இதில் மூழ்கிப்போனால் ஒரு பேச்சு மூச்சு இருக்காது. இந்த ஐடியாக்கள் இங்கு வந்திறங்கிய ஆரம்ப காலங்களில் எனக்கு புரிந்ததில்லை. என் 30 நிமிட ரயில் பயணமும் மூன்று மணித்தியாலங்களாக உணரப்பட்டதற்கு காரணம் இது தான். வெற்று கைகளுடன் ரயிலில் ஏறும் இப்பழக்கத்தை மாற்றவேண்டும் என்பதற்காக பெரும்பாலான நூலகங்களில் அங்கத்துவன் ஆகிக்கொண்டேன்.

அப்படி ஒரு நாள் கண்ணில் தென்பட்டு எடுத்த புத்தகம் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம். சாகித்திய அகடமி விருது பெற்ற புத்தகம் என்பது மட்டுமே  இப்புத்தகம் பற்றி நான் கடந்த 9 வருடங்களாக அறிந்திருந்த ஒரே ஒரு விடயம். ஒரு நாளும் படித்துப்பார்க்க தோன்றவில்லை. தற்செயலாக அதுவும் சுவிற்சர்லாந்து நாட்டின் பிரெஞ்சு ஆதிக்கம் நிறைந்த மாநில நூலகம் ஒன்றில் கண்டெடுத்த போது, ஏதோ விஷயமிருக்கிறது என படிக்க தொடங்கினேன்.

பேயத்தேவர், மொக்கராசு, செல்லத்தாயி, மின்னலு, முருகாயி, வண்டி நாயக்கர், நாச்சியார் புரம், கள்ளிப்பட்டி .. என ஒவ்வொன்றாக வைரமுத்து அறிமுகப்படுத்த, நான்  புத்தகத்துடன் பயணித்துக்கொண்டிருக்கும் நகரத்து பஸ், ரயில் எல்லாவற்றிலும் உள்ளூர்க்கிராமப்புற வாசனை பரவத்தொடங்கியது. ரயிலின் ஜன்னல் வெளி முழுவதும் அழகிய பனி மலைகளாலும், நீரோடைகளாலும், பசுமை புள்வெளிகளாலும் நிறைத்து கொண்டிருக்க, என் மன வெளி முழுவதும், கரும்பாறையிலும், சரளையிலும் சுக்கான் கல்லிலும் முள்மண்டிய பாலை நிலங்களிலும் தொலைந்து போன மக்களின் வாழ்க்கையால் நிறைத்து கொண்டிருந்தது.

30 நிமிட ரயில் பிரயாணமும் 3 நிமிடத்திற்குள் குறுகியது. ஒரு ரயிலை விட்டு இறங்கி பஸ்ஸுக்காக காத்திருக்கும் 4 நிமிட இடைவெளிக்குள்ளும் இரண்டு பக்கம் தெளிவாக படித்து முடித்தேன். வெளியில் கிளம்பும் போது மட்டுமே கொண்டு செல்வதால்,  இப்புத்தகத்தை படித்து முடிக்க 3 வாரம் ஆனது. ஆனால் அந்த மூன்று வாரத்திற்குள் நான் வெளியில் பிரயாணிக்க தொடங்கிய எந்தவொரு போக்குவரத்து பயணமும் என்னை கள்ளிக்காட்டை விட்டு வெளியே கொண்டு செல்லவில்லை. ஒரு எழுத்து நடை எந்தளவு ஒருவனை கட்டிப்போட வைக்க முடியும் என்பதை அது உணர்த்திக்கொண்டே இருந்தது.

ஈத்துவலியெடுத்து படுத்து கிடக்கும் பசுவிடமிருந்து  கன்றை பிரித்தெடுக்கும் கிராமத்து முறை, உள்ளூர் கள்ளச்சாராயம் காய்ச்சும் முறை, பருவமடைந்த பையன்களுக்கு செய்யும் சடங்கு முறை என வைரமுத்து, அலசி ஆராய்ந்து கொடுத்திருக்கும் கிராமத்து தகவல்கள் ஒவ்வொன்றும் இந்த புத்தகம் இல்லாவிடின் நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

'கள்ளிக்காட்டு இதிகாசத்தின் கடைசி அத்தியாத்தை காலையில் வராகநதி கரையோரம் தொடங்கி, மாலையில் வைகை அணையில் முடித்தேன்' என வைரமுத்து சொல்லியிருப்பார். நான் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் கடைசி அத்தியாத்தை இவர்டோனில் தொடங்கி லௌசானில் முடித்தேன்.


லௌசான் ரயில் நிலையம்

ஒரு மாதத்திற்கு முன்னர், ஒருநாள் நள்ளிரவு பிரான்ஸ் எல்லையை நோக்கிய கடைசி ரயிலில் ஏறி பயணித்து கொண்டிருந்த போது இதிகாசத்தின் கடைசி பக்கங்கள் படித்துக் கொண்டிருந்தேன். புத்தகம் முடிய போகிறதே எனும் கவலைக்கு  அப்பால், நான் இறங்கும் கடைசி ரயில் நிலையத்திற்குள் படித்து முடித்துவிடுவேனா என்ற கவலை மேலோங்கி இருந்தது.

'நீங்க குடுக்கிற பச்ச நோட்ட வாங்கி ... கோயில் கட்டலாம்.. கொளம் வெட்டலாம். எங்க அப்பன் ஆத்தா செருப்பில்லாத காலோட அலஞ்சு திரிஞ்ச தடம் இருக்கே அந்த மண்ணுல.. அதுக்கு நஷ்ட ஈடு கொடுப்பீங்களா? எத்தனையோ தலை முறையா பொதச்சுவச்ச இடுகாடு இருக்கே! அதுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுப்பீங்களா? நாங்க உக்காந்த பூமிக்கு, நின்ன பூமிக்கு, வெளையாண்ட பூமிக்கு, வெளிக்கிருந்த பூமிக்கு என்னையா நஷ்ட ஈடு குடுப்பீங்க..?' என்ற வரிகளை வாசித்து கொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த நான் பிறந்து வளர்ந்த பூமியின் மண் புளுதி என் மூச்சை நிரப்பிக்கொண்டிருந்தது.

அடுத்த 15 நிமிடத்தில் இறங்க வேண்டிய இடம் என்பதால், வேகமாக படிக்க  தொடங்கினேன்.  வைகையாற்றால் வரும் தேக்கடி குமுளித்தண்னீரை மதுரை ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்வதற்காக கள்ளிக்காட்டை ஒட்டியபடி அணை கட்டப்போறாங்களாம் என்ற அபத்த  செய்தி வரத்தொடங்கிய  அத்தியாலத்திலிருந்து, அளாவக வந்து கொண்டிருந்த ஆற்றுத்தண்ணீர், அணை கட்ட தொடங்கியதும் பொங்கிவந்து பேயத்தேவரைன் வீட்டை  துவம்சம் செய்யும் இறுதி கிளைமேக்ஸ் காட்சி வரை நான் கள்ளிக்காட்டிற்குள் முழுவதுமாய் கட்டுன்றிருந்த தருணங்கள் அவை.

அடிமேல் அடிபட்ட பேயத்தேவர் கடைசி அத்தியாத்திலிருந்தாவது  நம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுவார் என எவ்வளவோ எதிர்பார்த்தேன்.  'ஒரு மகாமனுசன கொண்டு புட்டம்மேன்னு ஒரு நிமிசம் கூட மவுனம் காக்காம அது பாட்டுக்கு பேசிக்கிட்டேயிருந்துச்சு அல' என முடித்திருப்பார் வைரமுத்து.

'உண்மையில் அவரை கொன்றது அலையா, கவிபேரரசா?' எனும் கேள்விக்கு எனக்கு இன்னமும் விடை தெரியவில்லை. லௌசானில் இறங்கி காலடி எடுத்து வைத்த போது,  கள்ளிக்காட்டை அழித்துக்கொண்டிருந்த வெள்ளத்திலிருந்து தப்பித்து வேறு தேசம் வந்தவர்களில் ஒருவராக உணர்ந்தேன்.

மறுநாள் நிலாமுற்றம் கவிதைதளத்தில் 'தாக்கம்' எனும் பெயரில் குறுங்கவியொன்று பதிவிட்டேன்.

கள்ளிக்காட்டு இதிகாசம்
கடைசிப்பக்கம்
படித்து முடித்து
இறங்கிய
நள்ளிரவு
ரயில் நிலையத்தின்
நாற்காலி
ஒன்றிலிருந்து
கண்வெட்டாமல்
என்னை
பார்த்துக்கொண்டிருந்தார்
பேயத்தேவர்

அது தாக்கமல்ல. நிஜமாகவே நான் பேயத்தேவரை கண்டேன்.  அவருடைய வெள்ளைத்தாடியும், நவநாகரீக ஆடையும், அவர் நாற்காலியின் கீழ் அமர்ந்திருந்த நாயும் இல்லாவிடின் நிஜமாகவே பேயத்தேவருக்கு சல்யூட் அடித்திருப்பேன்.

(நீங்கள் மிகச்சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளில் கரைகண்டவராக இருக்கலாம். அல்லது இவ்வாறான உள்ளூர்க்கிராமங்களில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நகரத்து நாகரீகங்களில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு அல்லது இக்கிராமத்து வாசனை அறியாவதர்களுக்கு கள்ளிக்காட்டு இதிகாசம் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதுவும் சுவிற்சர்லாந்திலிருந்து வாசித்த போது எனக்கு கூடுதல் ஸ்பெஷலாக இருந்தது)

- சரண்.ஜிவேஷ்

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.