முற்றம்

நோர்வேயில் பாரளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்து விட்டன. தற்போது ஆட்சியிலிருக்கும்

கூட்டரசாங்கம் அடுத்த தடவை ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

யூலை 22 ம் திகதி சம்பவத்திற்குப் பின் பக்கசார்பற்ற கொமிற்றியின் அறிக்கையை அடுத்து சில பொறுப்பான அதிகாரிகள் பதவி விலகினர். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடமே இருக்கும் நிலையில் இப்போதுதொழிலாளர் கட்சியை சார்ந்தவரான பிரதமரே தனது மந்திரி அவையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். இது ஒன்றும் அரசியலில் புதியதல்லவே

நோர்வேயின் கலாச்சார மந்திரியாக ஹதியா தஜிக் (Hadia Tajik) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மந்திரி அவையின் மிக இளையவர், இவருக்கு வயது 29. கலாச்சார மந்திரியின் கட்டுப்பாட்டின் கீழ் ஊடகத்துறை, விளையாட்டுத்துறை என்பனவும் அடங்குகின்றன.

இவர் ரூகலாந்துப் பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவர் இவரது பெற்றோர் பாகிஸ்தானில் பிறந்தவர்கள். இப்பிராந்திய மொழி வழக்கை மிகச் சரளமாகப் பேசும் இவர் தனது அரசியல் வாழ்க்கையை 90 களில் ஆரம்பிக்கிறார். 1999 ல் ஸாராண்டு (Strand AUF) இன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2009 ம் ஆண்டு தொழிலாளர்கட்சியில் ஒஸ்லோ பிரிவின் சார்பில் பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். இவை தவிர வெவ்வேறு திணைக்களங்களுக்கான பிரத்தியேக ஆலோசராகவும், பிரதமந்தரியின் அலுவலக ஆலோசகராவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் ஸ்தவாங்கர் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் இளமானி பட்டப்படிப்பையும் கிங்ஸ்ரன் ( இங்கிலாந்து ) பல்கலைக்கழகத்தில் மனித உரிமை துறையில் முதுமானிப்பட்டத்தையும் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் நீதித்துறையில் முதுமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் ஆங்கிலம், உருது, மற்றும் பரீசிய மொழிகளில் நன்கு பரீட்சியம் உடையவராவர்.

நோர்வேயின் தேசிய தொலைக்காட்சி இவரது தெரிவை அறிமுகப்படுத்தும் போது இவரது பெயர் விபரங்களை கூறியதுடன் இறுதியில் அவரது மதத்தைக் குறிப்பிட்டு தனது அறிமுகத்தை முடித்துக் கொண்டது. இந்த அறிவிப்பின் மூலம் இந்த தேசிய தொலைக்காட்சி இவர் வெள்ளைத் தோலும் நீலக்கண்ணும் உடையவரல்ல என்ற தனது ஆதங்கத்தை தெரிவித்ததா என்று தெரியவில்லை, நோர்வே தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் ஓர் நாடு எனக் கூறிக் கொள்வதுண்டு. நோர்வேயின் ஏனைய மந்திரிகள் என்ன மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பது பற்றி ஊடகங்கள் அலட்டிக் கொண்டதாக எனக்கு ஞாபகமில்லை.

நோர்வேயின் கலாச்சார மந்திரியாக வைக்கிங் இரத்த தொடர்பற்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கவில்லை என்பது எங்களுக்குப் புரிகிறது, இதை இவர்களால் உரத்த குரலில் கூறமுடியாமல் இருக்கிறது என்பதையும் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வாக்குகளைப் பெறுவதற்கு இவ்வாறான சின்னச்சின்ன சமரசங்களை செய்தாக வேண்டுமல்லவா.

இவர் தனது இணையத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் 'வாழ்க்கையில் எல்லைகளாக இருப்பவை இரண்டு விடயங்கள் மட்டுமே ஒன்று எமது இலக்குகள் எவ்வளவு உயர்ந்தவை என்பதும், மற்றது இந்த இலக்குகளை அடைவதற்காக நாம் எவ்வளவு தூரம் உழைக்கிறோம் என்பதுமே.' இந்த வாசகங்கள் எமது இளம் சந்ததியினருக்கு உத்வேகத்தை வழங்கலாம் என்று நம்புவோம்.

கலாச்சார மந்திரிக்கு எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

- சகி

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.