முற்றம்
Typography

எப்படி வாழ்ந்திருந்த மக்கள், இப்போது கூடுகள் கலைந்த குருவிகளாய் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.

உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒரு வகையிலான பிரச்சனைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன,

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இன மத அரசியல் சமூக கொள்கை மாற்றங்களால் மக்கள் கட்சியாகவோ, ஒரு இனம்சார்ந்ததாகவோ, மதம் சார்ந்ததாகவோ தனிக்கொள்கை தமக்கென அமைத்துக் கொண்டு தமது சுதந்திரத்திற்காய் அல்லாடிக் கொண்டு இருக்கின்றனர்.   அதற்காக தெருவீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் போராட்டம் எனத் தொடங்கி நாளாந்த நடைமுறை வாழ்க்கையையும் தொலைத்து விட்டு நிம்மதி அற்றுத் தவிக்கின்றனர்.

எதற்கு போராடுகிறோம் என்பதும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதும் யாருக்கும் புரிவதில்லை, 'ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடும் வரைகூட்டம் கொள்கை வரை வருமா,' என்ற கண்ணதாசன் பாடல்தான் நினைவிற்கு வருகிறது.

 எம் கொள்கைகளுக்காக நமது போராட்டங்களுக்காக கடைசி வரை எம்முடன் கூடவே வருவது யார். எமது கொள்கைகளுக்கான வெற்றி கிடைக்கும் வரை எமது எண்ணங்களுக்காக போராடுவோர் எத்தனை பேர், இதில் ஒரே கருத்தை எல்லாரும் ஏற்றுக்கொண்டு எவ்வளவு காலங்கள் இதற்கு ஒத்துழைப்புத் தருவர், இவற்றை சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் போராட்டத்தில் குதித்து விடுகிறோம்.

 இதில் முக்கியமான விடயம் என்ன வென்றால் கொள்கைபிடிப்பின்மையால் பாதியில் விட்டு விடுகின்றவர்களும் இருக்கின்றனர். அதேசமயத்தில் கொள்கைகளுக்கு எதிரான இன்னொரு மாற்றுக்கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு மக்களையும் திசைதிருப்பி பலவேறு கட்சிப்பிரிவாக மாறித்திரிவாரும் உளர்.

 இது மட்டுமல்ல இதில் கவலையான விசயமும் உள்ளது.  ஒருகொள்கை என ஏற்று அதை எல்லாரும் நன்மைதரும் என்று கடைப்பிடித்து வரும் போது அநேகமானோர் அதை ஆதரிக்கின்றனர்.அவ் வேளையில் ஒருசிலர் சுயலாபம் கருதி தன்நிலை மறந்து தன் இனத்தையும் மறந்து தன்தொழிலை  மறந்து சுய லாபத்திற்காய் போராட்டத்தை திசை மாற்றி தமது நிம்மதி அடுத்தவன் நிம்மதி எல்லாவற்றையும் எவ்வித கொள்கைப் பிடிப்புமின்றி கெடுத்து விடுகின்றனர்.

   ஒரு கொள்கை ஆனது பலராலும் ஏற்றுக் கொள்ளும் போது அதற்கேற்ப வெற்றியும் அக்கொள்கை பரப்ப ஏற்ப அங்கீகாரமும் நமக்கு கிடைக்கிறது. அதுபோல் கொள்கை பரப்பல் மக்களுக்கு நன்மையை தரும்போது அது அவர்களாலேயே அதற்கு நல்லவரவேற்பு அளிக்கப்பட்டு எல்லோராலும் வரவேற்கக் கூடியதாகவும் அமைந்திருந்தது.

இன்று புலம்பெயர்ந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழும் ஈழத்து தமிழ் மக்கள் அவர்கள் கடந்தகாலவாழ்வை எண்ணிப் பார்க்கும் போது அவர்களுக்கு புரிந்திருக்கும்.  அவர்கள் முதலில் போராட்டங்களால் உள்ளூரிலேயே புலம் பெயர்ந்து அலைந்த போது,  தமது சொந்த நிலங்களில் பயிரிட்டு விளைந்த உணவினை உண்டு தம்மையும் குழந்தைகளையும் வயதானவர்களையும் பாதுகாத்தனர். அதற்கும் இந்த கொள்கைப் பரப்பலே காரணம்.  புகையிலை உற்பத்தி பண்ணிய நிலங்களில் எல்லாம் மரவள்ளி தானியங்கள் சோளம் காய்கறி என்பனவற்றை பயிரிட்டு அதை உணவாக உட்கொண்டிருந்தனர்.

 உயிர்களை அழிக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் கொள்கைகள் தீவிரமாக இருந்ததால் சுருட்டு சிகரட் உற்பத்தி செய்ய பயன்பட்ட புகையிலை உற்பத்தியை மக்கள் செய்யாது தமது நிலங்களில் உணவுதானியங்களையும் பழவகைகளையும் காய்கறிகளையும் அதிகமாக உற்பத்தி செய்தனர். பனைமரங்களில் கள்ளு இறக்குவதை விடுத்து பனம் பானி, கருப்பட்டி, பனஞ்சீனி, பனங்கட்டி,இப்படி உற்பத்தி செய்தனர்.  பனம்பழச்சாற்றை கொண்டு துணிகள் கூட துவைத்தார்கள்.

யுத்தம் கடுமையான போது, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டினால் அவதிப்பட்ட காலத்தில், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் இருள் சிறியவர்களுக்கு பாதுகாப்பில்லை என கருதியவர்கள் சிறிய போத்தல்களில் மூடியில் துளையிட்டு துணியை உருட்டி திரியிட்டு கீழே தண்ணீர் விட்டு மேலே சிறிதளவே கிடைக்கும் எண்ணெயை விட்டு விளக்கு ஏற்றி இப்படி வாழ்ந்திருந்தனர்.  

அம்மண்ணின் வாசனையா, அறிவுசார்ந்த மக்களால் பரப்பப்பட்ட கொள்கைகளா இந்த பக்குவங்களை மக்களிடம் ஏற்படுத்திக் கொடுத்தது என உறுதியாக கூற முடியாது.
ஆனால் மக்கள் அறிவு சார்ந்தே இருந்தார்கள் என்பது அவர்கள் வாழ்ந்திருந்த காலகட்டத்தில் அவர்கள் பண்பாடு பழக்கவழக்கங்களில் தெரிந்தது.

விவசாயம், தோட்டம்,செய்யும் மக்கள் அவர்கள் வயல்கள், அவர்கள் தோட்டங்களில் விளைகின்ற பொருட்களை முதலில் இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபடுவது அவர்கள் கொள்கையாக இருந்தது.

தமக்கு இப்பயிரை விளைவிக்க தக்க சக்தியை அளித்த அரும் பெரும் சக்திக்கு முதலில் பூத்த பூ , முதலில் காய்த்த காய், முதலில் கனிந்தகனி, முதலில் விளைந்த கிழங்கு, முதலில் கறந்த பால் இப்படி எல்லாவற்றையும் இறைவர்க்கு சமர்பித்தபின் தனக்கு என பிறர்க்கு என பங்கிடுவர். அதைவிட  விருந்தோம்பலில் சிறந்தவர்களாக விளங்கிய மக்கள் பசியோடு இருக்க எவரையும் விட்டு விடுவதில்லை. இல்லாதவர்க்கு இருப்பவர் கொடுத்து உதவி செய்தனர்.

களவு எங்கும் நடை பெறுவதில்லை, வீடுகள் மனை வாசல்கள் திறந்தே இருக்கும், உழைத்து வாழும் எண்ணமிகுத்திருந்த மக்கள் அடுத்தவன் பிழைப்புக்கும் வழிகாட்டி வாழ்ந்திருந்தனர், கல்லாதவனுக்கு தொழிலைக் கற்றுக் கொடுத்து தமது பிள்ளைகளுக்கும் சொந்தத்தொழில்களை கற்றுக் கொடுப்பதை வழக்கமான கொள்கைளாகக் கொண்டிருந்தனர்,  அதைவிட தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்த ஆசான்களாக வர பெருவிருப்பங்கொண்டிருந்தனர். அதற்காக காணி நிலங்களை பெரும் பணம் படைத்தவர்களிடம்  அடமானம் வைத்து பணம் பெற்றனர்.

 அதில் தமது பிள்ளைகளை உயர்கல்வி கற்கச்செய்து அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக ,பொறியியலாளர்களாக, வைத்தியாராக, விவசாய பண்ணை ஆய்வாளர்களாக, ஆசிரியர்களாக, வக்கீல்களாக இன்னும் எத்தனையோ வித கல்விமான்களாக உருவாக்குவதில் அதிக அக்கறை செலுத்தினர். பல்கலைகழகங்கள் வரை கொண்டு சென்று பட்டம் வாங்கி அவ்வரிய வாய்ப்பை நழுவவிடாது பிள்ளைகளுக்காக எவ்வளவோ தியாகங்கள் செய்தனர்.

தமது சொந்த நிலங்களில் கூலி வேலை செய்து அடகு மூலம் பெற்ற பணத்திற்காகஅயராது உழைத்தனர். குழந்தைகள் படிப்பிற்கு எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று சொந்தநிலத்திலும் சோர்விலாது உழைத்தனர்.

 உயர்கல்வி தொடங்கும் மாணவர்களும் தந்தையுடன் வயலிலும், தோட்டங்களிலும் இறங்கி தாமும் வேலை செய்தனர்.அதன்பின் இரவு பகல் பாராது கண்விழித்து  படித்தனர். அவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடைய அரும் பெரும் முயற்சி எடுத்தவண்ணம் இருந்தனர்.

பண்பாடு பேணிக்காப்பதில் ஒரு சிறந்த ஒழுக்கமான கொள்கைகளை ஆணும் பெண்ணும் கொண்டிருந்தனர்.  சமயகலைகலாச்சாரம் இவ்வுணர்வுகள் நிரம்பபெற்றவர்களாக விளங்கி வந்தனர், உயர்கல்வியை பாடசாலைகளில் கற்று சிறந்த பெறுபேறுகள் பெற்றிருந்தாலும்  நாட்டில் மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளவற்றுக்கு, ஏற்புடையதாக கல்வி பெறுபேறுகளின் தரம் நிர்ணயம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்களில் நான்காண்டுக்கல்வி கற்று முதுகலை, இளம்கலை, நுண்கலை எனச்சிறந்த பட்டங்கள் பெற்று உயர்பதவிகள் அடைவதற்கு அதிகூடிய தேர்வுப்புள்ளிகளை உயர்கல்வியில் அம்மாணாக்கர் பெற்றிருக்க வேண்டும். அதிகம் வருந்தி உழைத்தான் தந்தை, விரும்பி படித்தான் பிள்ளை என தம்மை வருத்திக் கொண்டு முன்னேறினர்.

அக்காலத்தில் அதிகம் புள்ளிகள் பெறும் மாணவர் இலங்கையின் வடக்கு கிழக்கு மாணாக்கர்களே. அவர்கள் பல்கலைக்கழகங்களில் அதிக தரமான கல்வியையும் பட்டங்களையும் பெற்றிருந்தனர்.

அவர்கள் நாட்டுக்கு நல்ல பெயரையும் அதிக தரம்வாய்ந்த கல்வியினால் நல்லபதவி, உத்தியோகம் என்று வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பெயர் எடுக்க வழிசெய்தனர் இனமத வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் முன்னேற வேண்டும். எல்லோரும் சிறப்பாக வாழவேண்டும் எனும் கொள்கையில் மாற்றமின்றி வாழ்ந்திருந்தனர்.

ஊர் சிறக்க வேண்டும் என்று மதக்கொள்கைகளில் ஒருதீவிரம் காட்டி வாழ்ந்தனர். ஊர்கூடி தேர் இழுத்து தெய்வங்களுக்கு விதம் விதமாய் அபிசேகம் அலங்காரம் இசைகச்சேரிகள், தேர் தீர்த்தம் பூங்காவனம் அன்னதானம் இப்படி ஏழைஎளியவர்களுக்கு வயிராற உணவளித்து செவிக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியாக இனிமையாக இசைகளை இரசிக்க செய்து மனதை அமைதி பெற வைத்து  ஒற்றுமை காத்து வந்தனர். இல்லாதது, என்பது இல்லாது எல்லாவற்றையும் உண்டுபண்ணியிருந்தனர்.
 
ஆனால் இப்போது எதெல்லாம் இருக்கவேண்டுமோ அது எதுவும் இல்லாது சுடுகாடாய் மண் மேடாய் உடைந்து நொறுங்கிக் கிடக்கிறது. பள்ளிக்கூடங்கள் பல பாழாய்க்கிடக்கிறது. நூல்நிலையங்கள் எரிந்து சாம்பல்மேடாய்க்கிடக்கிறது. மழையில் வெயிலில் தாக்கத்திற்கு உள்ளாகாமல் படிக்க கூடங்கள் உண்டு கூரைகள் இல்லை. இருந்து படிக்க எழுத மேசை கதிரை இல்லை. எழுத கரும்பலகை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்கள் இல்லை, கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள் பலர் இன்னமும் முகாம்களிலும் முடங்கி கிடக்கின்றனர்.

 கற்கும் குழந்தைகள் அனைவரும் படுகாயங்களாலும் நோய்களாலும் முகாங்களிலும் வைத்தியசாலைகளிலும் போதுமானமருத்துவ வசதி இன்றி மருந்துகளின்றி நோய்த்தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து போதிய சிகிச்சையும் பெற முடியாது மடிந்துகொண்டு இருக்கின்றனர்.  

வயதானவர்கள் மற்றும் கற்பிணிப் பெண்கள் இப்படியானவர்கள் நிலை மிகமோசமானது. வயதானவர்கள் வீடுகளில் அவர்களை வைத்துப் பார்ப்பதே கடினமான காரியம்,அவர்கள் உடல்நிலை ஒரேசீராக எப்போதும் இருக்காது எந்நேரம் எப்படி உடல்நிலை மாற்றம் அடையும் என்று கூறமுடியாது, அவர்கள் தேவைக்கு மருத்துவ வசதி அடிக்கடி தேவைப்படும்.

இதெல்லாம் கிடைக்கவழி இல்லாது தவித்தனர், பெரும்  பாலும் முகாங்களில் அல்லது வீடுகளில் வயதானவர்களை மனரீதியாகவோ ,உடல்ரீதியாகவோ பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பது என்பது மிகமுக்கியமான கடமைகளாகும். அவர்கள் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டியர்களே. ஏனென்றால் எமது வரலாற்றுச் சுவடுகள் அழிந்தாலும் அதாவது புத்தகங்கள், ஏடுகள் ,கல்வெட்டுசாதனங்கள், இவைகள் மறைந்து போனாலும் அந்நிகழ்வுகாலங்களில் எமது மூதாதையர்கள் பெற்றோர் பெற்றோரின் பெற்றோர் இப்படி அவர்கள் வாழ்ந்திருக்கலாம்.

அவர்கள் மூலம் முன்னைய வரலாற்றுக்கலைகள், பண்பாடு, பாரம்பரியம் இவற்றை நாம் அவர்கள் வாயிலாக தெரிந்து மீண்டும் அவற்றை அழியாது கட்டிக் காப்பாற்ற முடியும். அதற்கு கருவிலிருக்கும் குழந்தையும் தாயும் ,கிழப்பருவத்தை அடைந்த வயோதிகரும் நோய் நொடியில்லாது நீண்டநாள் வாழவேண்டி பாதுகாப்பது அவசியமாகும்.  அதனால் நாடு போராட்டங்களினால் வலுவிழந்து நின்றாலும்  அப்போராட்டங்களினால் மனித உயிர்கள் பலியாகிவிடாது பாதுகாக்கப்பட வேண்டும்.

 பண்பாட்டுவிழுமியங்கள் கருகிடாது பாதுகாக்கப்படுவது  மனித உயிர்களாலேயே. அதை குண்டுகள் இட்டு துழைத்தும், எரிகணைவீச்சுக்கள் மூலம் எரித்தும் கண்மூடித்திறப்பதற்குள் பாரிய வானூர்தி தாக்குதல்களாலும் தகர்த்தெறிந்து பிர்ச்சனைகளுக்கு முடிவுகட்டி விட முடியாது. ஆகவே ஒரு பிரச்சனை எனும் கருத்து ஒற்றுமையில்லாத வேறுபாடு தோன்றி இருபிரிவாக நாட்டு மக்கள் பிளவு பட்டு நிற்கும் வேளையில் உழைக்கும் வர்க்கமும், கல்விகற்கும் மாணவச்செல்வங்களும், கற்பிணித்தாய், பெண்கள் வயோதிபர்களும் இப்படி  எல்லாத் தரப்பினரும் பெரும் பாதிப்படைகின்றனர்.
 
இதனால் பொருளாதார வளம் மிகவும் குன்றிவிடுகிறது. ஒன்றை ஒருவாக்கி அதை திறம்பட நடாத்துவது என்பது கடினமான காரியம். ஆனால் அதை அழித்துவிட அரை நொடி போதும், பாடுபட்டு இரவு பகல் பாராது அயராது உழைத்த மக்கள் அன்று குடிசை வீட்டிலும், ஓலைப்பாயிலும், படுத்துறங்கி,அரைவயிற்றுக் கஞ்சியை குடித்து வயலிலும் தோட்டங்களிலும் பாடுபட்டு உழைத்தனர். அவர்கள் சோம்பலின்றி உழைத்ததால் வீடும் நாடும் முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனால் அவர்கள் கண்முன்னேயே அழிக்கப்பட்ட தோட்டநிலங்களும் வயல்நிலங்களும் அவர்களுக்கு இன்று சொந்தமில்லாமல் காடுகளிலிலும் மரங்களுக்கடியிலும் தெருவோரங்களிலும் நடைபாதைகளிலும் தஞ்சம் அடைந்து அல்லறுகின்றனர். ஒருசிலர் முகாங்களில் முடங்கி கிடக்கின்றனர். பொருளாதாரம் குன்றி விடுவது மட்டுமல்ல கல்வி  தொழில் பாதுகாப்பு சுற்றுச்சூழல்கள் எல்லாமே மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறது. எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.

 மக்கள் எல்லோரும் ஏக்கத்துடனும் விரக்தியிலும் வாழ்வை எதிர் கொள்ளவேண்டிய நிலை உருவாகிடாது மனிதம் புனிதமாக்கப்படவேண்டும்.

- அருந்தா

முற்றத்தில் எமது வாசகர்களின் முன்னைய பதிவுகள்

எமது முற்றம் பகுதிக்கு நீங்கள் புதியவரா? : இதை வாசிக்க

வருகைக்காகக் காத்திருக்கும் முற்றம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்