முற்றம்

ஒவ்வொரு மரணமும் சிலரை உடைக்கிறது. சிலரை அநாதை ஆக்குகிறது. சிலரை வெறுமைக்குள் தள்ளுகிறது. ஆனால் ஞாநியின் மரணம், அவரது உறவுகள், நட்பு வட்டம் மட்டுமல்லாது நமது சமூக கலாச்சார ஊடக வெளியிலும் ஒரு பெரும் சூனியத்தை உருவாக்கிவிட்டுப் போய்விட்டதாக உணர்கிறேன். 

எழுபதுகளில் இளைஞனாக பத்திரிகை உலகில் நுழைந்த ஞாநி பத்திரிகையாளராக, நாடகக் கலைஞராக, ஆவணப்பட இயக்குநராக, சமூக விமர்சகராகப் பல்வேறு துறைகளில் தன் பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் இயங்கிய அனைத்துத் தளங்களிலும் தன் கூர்மையான அவதானிப்பாலும் நேர்மையான விமர்சனங்களாலும் தனித்து நின்றவர் ஞாநி. சமூகத்தில் நிகழும் எந்த ஒரு விஷயத்திலும் சமூகத்தில் இயல்பாக எழும் பொதுக் கருத்துக்கு அப்பாற்பட்டு, அந்த விஷயத்தின் நுட்பமான அடுக்குகளைக் கவனித்து, எளிய மொழியில் கச்சிதமாக வெளிப்படுத்தியது ஞாநியின் பேனா. ‘தினமணி’, ‘ஜூனியர் விகடன்’, ‘ஜூனியர் போஸ்ட்’, ‘அலைகள்’, ‘தீம்தரிகிட’, ‘டி.வி. உலகம்’, ‘சுட்டி விகடன்’, ‘விண் நாயகன்’ என்று எத்தனை இதழ்கள்! எத்தனை கட்டுரைகள்! எத்தனை விவாதங்கள்! கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக ஞாநியின் மனமெங்கும் தமிழகத்தின் நிகழ்வுகள் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்க... அவர் ஓயாது எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்.

ஞாநி தனியாக இருக்கும் நேரம் மிகவும் குறைவு. எப்போதும் நாலு பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோருடன் உரையாடிக்கொண்டே இருந்த மனிதர். “என்னால அரட்டை அடிக்காம இருக்க முடியாது பாஸ்” என்பார். அரட்டை என்றால் வெற்று அரட்டை அல்ல. சமூக விஷயங்களே அதில் பிரதானமாக இருக்கும். சமூகம் குறித்தும் அதன் பிரச்சினைகள் குறித்தும் பெரும் கவலை அவருக்கு இருந்தது. அவ்விதத்தில் தன்னை சமூகத்துக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒரு மனிதராக ஞாநி இருந்தார்.

நான் பழகத் துவங்கிய காலம் தொட்டு அவருக்கு உடல் உபாதைகள் இருந்துகொண்டே இருந்தன. ஆனால், தன் காலத்துடன் இந்த உலகுடனும் சமூகத்துடனுமான உறவு முடிந்துவிடும் என்று அவர் எண்ணியதே இல்லை. இந்தச் சமூகம் எனக்குப் பிறகும் அல்லது எனக்குப் பிறகாவது நன்றாக இருக்க வேண்டும். அதற்கு என்னாலான வேலையை நான் செய்தே ஆக வேண்டும் என்று எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தார்.

ஞாநியைக் கருத்துரீதியாக விமர்சிப்பவர்களும், எதிர் நிலையில் இருப்பவர்களும்கூட ஞாநியின் நேர்மையையும் அவரது சமரசமற்ற போக்கையும் வியப்பார்கள். இந்த சமரசமற்ற போக்கு உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்டபோது, அவர் மூன்று பேரைக் குறிப்பிட்டார். ஒருவர் அவரது தந்தை, இரண்டாமவர் பாரதியார், மூன்றாமவர் பெரியார். அடிப்படை நேர்மையைத் தன் தந்தையிடமும், வாழ்வின் பல கேள்விகளுக்கான விடையை பாரதியிடமும், பொது வாழ்வில் ஒருவர் எப்படி அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும் என்பதை பெரியாரிடமும் எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்.

அபூர்வமாக அவரிடம் தென்படும் மன நெகிழ்ச்சியுடன் அவர் சொன்னது இது, “தொண்ணூறு வயசைக் கடந்த பிறகும் மூத்திரச் சட்டியைத் தூக்கிட்டு மேடையில பேசினாரே பெரியார்! அவரோட ஒப்பிடும்போது நாம செய்யற வேலையெல்லாம் ஒண்ணுமேயில்லை பாஸ்” என்பார்.

தனது சமரசமற்ற போக்கினால் ஞாநி நிறைய இழந்திருக்கிறார். தமிழுக்கு இணையாக ஆங்கிலத்தில் எழுதவும், உரையாடவும் புலமை பெற்றவர் ஞாநி. ஆங்கிலப் பத்திரிகைகளில் பெரும் பொறுப்பும், பணமும் ஈட்டியிருக்க முடியும் என்றாலும், வாழ்வில் தான் ஏற்றுக்கொண்ட விழுமியங்களைச் சமரசம் செய்வதை ஒருபோதும் தன் மனம் ஏற்காதென்றும் சொல்லி அதன்படி வாழ்ந்து முடித்துவிட்டார். ஒருபோதும் அவர் பணத்தைப் பெரிதாக எண்ணியதில்லை.

அப்போது ‘தினமணி’யில் மனிதன் பதில்கள் எழுதிக்கொண்டிருந்தார் ஞாநி. சில காரணங்களால் அது நின்றுபோனது. எழுதியே ஆக வேண்டும்; ஆனால் அவர் எழுதுபவை அப்படியே வெளிவர எந்தப் பத்திரிகையிலும் இடமில்லை என்ற சூழலில், ஏற்கெனவே நடத்தி நின்றுபோயிருந்த ‘தீம்தரிகிட’ இதழை மறுபடி கொண்டுவருவதென்று முடிவெடுத்தார். ‘இதழின் பொறுப்பாசிரியராக நீங்கள் இருங்கள்’ என்று சொன்னார். ‘தீம்தரிகிட’ இதழை நேரடியாக சந்தா வசூலித்து, அந்தப் பணத்தில் பத்திரிகையை நடத்தினோம். கைக் காசு செலவு ஆனதே தவிர, லாபமில்லை; நட்டம்தான். ஆனால் ஞாநி வெகு மகிழ்ச்சியுடன் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு இதழையும் கொண்டுவந்தார்.

ஞாநியுடன் இதழ் தயாரிப்பில் ஈடுபட்ட அந்த நாட்களில்தான் ஞாநியின் பன்முகத் திறமையை உடனிருந்து பார்க்க வாய்த்தது. விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது. அதனை விவாதித்து இறுதிசெய்வது, லே அவுட் செய்வது எல்லாம் அவரே செய்வார். ஞாநியின் எழுத்துரு தனித்துவமானது. ‘பரீக்ஷா’ நாடகங்களுக்கு போஸ்டர் டிஸைன் செய்த காலங்களில் அந்த எழுத்துருவை உருவாக்கியதாகச் சொன்னார். அந்த எழுத்துருக்கள் போன்றதே ஞாநி வரைந்த பாரதியின் உருவமும். கறுப்பு வெள்ளையில் புருவம், கண்கள் மீசை இவற்றை வைத்தே பாரதியை நம் கண் முன்னே நிறுத்தும் அந்த பாரதி ஓவியம், ஞாநியின் முக்கியமான பங்களிப்பு. அது இப்போது பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

சில ஆண்டுகள் வெளிவந்த ‘தீம்தரிகிட’ இதழை மீண்டும் நிறுத்தும் சூழல் உருவானது. அதன் பின் அவருடைய ‘ஓ பக்கங்கள்’ பத்தி ‘இந்தியா டுடே’, பின் ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘கல்கி’ என்று மாறிமாறி தொடர்ந்தது.

எப்போதும் கடுமையாக உழைத்தார். அவர் வேகத்துக்கு அவரது உடலால் ஈடுகொடுக்க முடியவில்லை. என்னிடம் ஒருமுறை அவர் சொன்னார். “பைபிள்ல ஒரு ஸேயிங்க் இருக்கு பாஸ், ‘தி ஸ்பிரிட் இஸ் வில்லிங்; பட் தி ஃப்ளெஷ் இஸ் வீக்’ (the spirit is willing but the flesh is weak). சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த ஞாநி, சமீப காலமாக எழுதுவதற்குச் சிரமப்பட்டார். ஆனாலும், குரல்கொடுக்க வேண்டிய விஷயங்களுக்குக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்று நினைத்தார். விளைவாக, ‘ஓ பக்கங்கள்’ யூடியூப் சேனலைக் கடந்த வாரம் தொடங்கியவர் ரஜினியின் அரசியல், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் என்று நடப்பு விஷயங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர ஆரம்பித்தார்.

பொங்கல் தினம். அன்றும் தனது உடல் நலத்தைப் பொருட்படுத்தாமல் சென்னை வந்த மேதா பட்கரை ஒரு பேட்டி எடுத்தார். அன்றைய இரவு தன் யூட்யூப் சேனலுக்காக வைரமுத்து ஆண்டாள் சர்ச்சை குறித்த தன் கருத்தை ஒளிப்பதிவுசெய்தார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவரது உடல் தனது ஓயாத இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. தன் மனதுக்குச் சரி என்று பட்டதை எவர் வரினும் நில்லேன்.. அஞ்சேன் என்று ஓங்கி ஒலித்த ஒரு தலைமுறை மனசாட்சியின் குரல் காற்றில் கலந்துவிட்டது!

- பாஸ்கர் சக்தி, எழுத்தாளர்,

('தி ஹிந்து' பத்திரிகையில் வெளியான இந்தப் பதிவை, நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகிறோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.