முற்றம்

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட ஒரு நாட்டினை,  ஐ.நாவின் 193 நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னால் உரையாற்ற வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

The Universal Periodic Review - UPR என்பது இது தான்.   ஐ.நாவினால் 2005ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சிறப்பு பொறிமுறை இது.  ஒவ்வொரு இரு  வார அமர்வுகளிலும் 16  நாடுகள் படி, ஒரு வருடத்திற்கு 48 நாடுகள் தமது மனித உரிமை நிலவரங்களை இவ்வாறு ஆய்வறிக்கையாக சமர்ப்பித்து ஐ.நாவில் உரை நிகழ்த்த வேண்டும்.

ஒரு நாடு தனது அரசு சார்பில் 20 பக்க அறிக்கையை சமர்ப்பிக்கும்.  ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையகம், அந்நாட்டை பற்றிய தனது அபிப்பிராயங்களுடன் 10 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கும். இவை இரண்டையும் விட இங்கு முக்கியமாக கவனிக்கப்படும் மற்றுமொரு பிரிவு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் அறிக்கை.  NHRI, NGO போன்ற தொண்டு நிறுவனங்களும் அந்நாட்டின் உண்மை நிலரவரங்களை தமது 10 பக்க அறிக்கையாக சமர்ப்பிக்கும்.

இதன் போது அவை நடத்திய இணையத்தள கருத்துக்கணிப்புக்கள், கையெழுத்து பிரச்சாரங்கள், கோரிக்கை மனுக்களை  கூட தமது வலுவான ஆதாரங்களாக சமர்ப்பிக்க முடியும். இந்த மூன்று பிரிவிலிருந்தும் பெறப்பட்ட அறிக்கைகளை ஒன்றாக வைத்து கொண்டிருக்கும், நடுவர் குழுவின் முன்னால் தான் அந்த நாட்டு அரசு தனது  உரையை நிகழ்த்த வேண்டும்.

பின்னர் ஐ.நா மனித உரிமை சபையின் 47 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இம்மூன்று பிரிவு அறிக்கைகளையும் ஒப்பிட்டு பார்த்து மீளாய்வு செய்கிறார்கள். இறுதியில்  அந்நாட்டு அரசு முன்வைத்த  அறிக்கை, உரை என்பவற்றில் எந்தளவு உண்மையுள்ளது என அறிந்து கொள்கிறார்கள்.

சரி, அடுத்து என்ன செய்யக்கூடும்? தவறுகளுக்கு தமது வலுவான கண்டனத்தை தெரிவிக்கிறார்கள். அந்நாட்டில் எதிர்கால மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு  கட்டாய புதிய பரிந்துரைகளை வழங்கி அவற்றுக்கான உதவிகள், ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்க முனைகிறார்கள்.  

ஆனால் இங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விளைவு அதுவல்ல.  ஒரு நாடு தனது சமகால மனித உரிமை நிலவரம் பற்றி கூறியவற்றில் எந்தளவு உண்மை இருந்தது என்பதை ஐ.நாவின் ஒவ்வொரு நாடும் இச்சந்தர்ப்பத்தில் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக ஒரு சாதாரண அரசசார்பற்ற தொண்டு நிறுவனம் கூட அந்த தளத்தில் நின்று எதிர்வாதம் செய்ய, தனது அறிக்கை மூலம் முற்றிலும் வேறுபட்ட எதிர் தகவல்களை வழங்க சந்தர்ப்பம் கிடைக்கிறது.

ஆக ஒரு நாடு தனது மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் கட்டாயமாக உண்மையை மட்டுமே கூறவேண்டிய  சூழ்நிலைக்கு தள்ளப்பட,  ஐ.நாவினால் இப்போதைக்கு நடைமுறையில் உள்ள ஒரே ஒரு வலுவான பொறிமுறை இந்த The Universal Periodic Review (UPR) தான்.
 
சரி அடுத்த விடயத்துக்கு வருவோம்.

UPR info என்றால் என்ன?

UPR info ஜெனிவாவில் உள்ள ஒரு அரசசார்பற்ற தகவல் நிறுவனம் ஆகும்.  UPR இன் புதிய  அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல்கள்  எவ்வாறானது?,  எந்த நாடு எப்போது உரை நிகழ்த்தபோகிறது? அந் நாட்டின் அரச அறிக்கையில் என்ன  விடயம் உள்ளது?  அதன் மீதான அரசசார்பற்ற நிறுவனங்களின் குற்றச்சாட்டுக்கள் என்ன?,   ஊடக அறிக்கைகள் என்ன சொல்கின்றன? வீடியோக்கள்,  கருத்துக்கணிப்புக்கண் என்ன சொல்கின்றன  என பல தகவல்களை தொகுத்து வழங்குவது தான் UPR info தளத்தின் நோக்கம்.

சரி. இங்கு UPR பற்றி இவ்வளவு தகவல்கள் பகிரப்படுவதன் நோக்கம் என்ன?

அக்.22 ம் திகதி இவ்வருடத்திற்கான UPR இன் இறுதி அமர்வு தொடங்குகிறது. அதில் உரையாற்றும் 16 நாடுகளில், நவம்பர் 1 ம் திகதி இலங்கையின் உரை நிகழ்கிறது. 14.30 - 18.00 வரை நேரம் வழங்கப்பட்டுள்ளது.  

இறுதியாக 2008 மே 13ம் திகதி, இலங்கை ஏற்கனவே ஒரு முறை உரையாற்றியிருந்தது. அப்படி என்றால் 2009ம்  ஆண்டு இறுதி போர்  நடவடிக்கையின் பின்னர், முதன்முறையாக இலங்கை, அனைத்து நாடுகளின் முன்னிலையில் இப்போது தான் பேசப்போகிறது.

இதன் போது இலங்கை அரசு மீது தமது விமர்சனத்தை முன்வைத்து அறிக்கை சமர்ப்பித்திருந்த அரசசார்பற்ற நிறுவனங்கள், நேரடியாக கூட்டத்தொடர் நடைபெறும் இடத்திற்கு சமூகமளிக்க முடியும். அரசு தரப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது அத்தளத்தில் இருக்க முடியாது என்ற போதும், குறித்த அமர்வு நடைபெறும் நாட்கள் முழுவதும், அவ்வளாகத்தில் தனியப்பட்ட வகையில் கூட்டங்கள் ஏற்பாடு செய்து பிறநாட்டு பிரதிநிதிகளுக்கு தமது நிலைப்பாட்டை  விளக்க முடியும்.

ஒரு நாடு தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போது அது நேரடியாக வீடியோ பதிவு செய்யப்பட்டு ஐ.நா இணையத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்படும். : http://www.unmultimedia.org/tv/webcast/c/un-human-rights-council.html

நீங்கள் ஒரு அரசசார்பற்ற தொண்டு நிறுவனமெனில், ஒரு தொகுதி சமூக மக்களுக்கோ, ஊடகத்திற்கோ, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது எவருக்கு வேண்டுமானாலும் நீங்க இந்த  நேரலை வீடியோக்களை சிறப்பு சினி திரையரங்குகளை பயன்படுத்தி நேரடியாக காட்சிப்படுத்த முடியும். ஆய்வறிக்கை உரை முடிந்ததும் உடனடியாக நிருபர் சந்திப்பை கூட்டி, அந்த உங்களது புதிய எதிர்ப்புக்களையும் பதிவு செய்ய முடியும்.

பின்னர் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் முழு நீள கூட்டத்தொடர் நடைபெறும் போது NGO அமைப்புக்களுக்கு என 20 நிமிடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு NGO வுக்கும் இரு நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதில் குறித்த அரசின் ஆய்வறிக்கைக்கான எதிர்ப்பை சுருக்கமாகவும், பின்னர் எழுத்து மூல அறிக்கையில் விரிவாகவும் சமர்ப்பிக்க முடியும். பின்னர் உடனடியாக இது மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

பின்னர் அந்நாடுகளுக்கு கட்டாய பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அடுத்த UPR அமர்வில் அந்நாடு உரையாற்றுவதற்குள் இக்காட்டாய பரிந்துரைகளை அவர்கள்  பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இப்போது இலங்கை சிக்கியிருக்கும்  சூழ்நிலையும் இது தான். Follow-up எனப்படும் இரண்டாவது UPR ஆய்வறிக்கை உரையை இலங்கை அரசு நிகழ்தப்போகிறது. அதனல, இதற்கு முன்னர் 2008 இல் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தான் முதலில் அவதானிக்கப்படவுள்ளது.  சுவிற்சர்லாந்தின் ஜெனிவாவில், Palais des Nations இந்த UPR அமர்வு நடைபெறுகிறது.  

கடந்த 2008 உடன் ஒப்பிடுகையில், இம்முறை இலங்கையின் மனித  உரிமை நிலைமைகள் குறித்து இம்முறை அறிக்கை சமர்ப்பித்த தொண்டு நிறுவனங்கள் மிக குறைவானதே. அவற்றில் ஒன்று தான் பிரான்ஸின் பட்டினுக்கு  எதிரான நடவடிக்கை (Action Contre Faim) அமைப்பின் அறிக்கை ஆகும். மூதூரில் 17 மனித நேயபணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த  விசாரணையை வலியுறுத்தி தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இப்படுகொலைகளுக்கான நீதி கிடைக்க கடைசி சந்தர்ப்பம் மட்டுமல்ல. இலங்கையின் இலங்கை போர்க்குற்றங்களை நாம் இன்னமும் மறக்கவில்லை என உலகுக்கு தெரியப்படுத்துவதற்கான கடைசி சந்தர்ப்பம் இதுவே என கூறியிருந்த ACF அமைப்பு, இதை வலியுறுத்தும் தமது மனுவில் கையெழுத்திடுமாறு  கோரியிருந்தது.

ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் எனும் இலக்கில், இதுவரை 12,419 கையெழுத்துக்கள் மாத்திரமே கிடைக்கப்பட்டுள்ளன.  எவ்வளவு சேர்ந்தாலும், அவை அனைத்தும்  எதிர்வரும் அக்.22ம்  திகதி நேரடியாக ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தலைவரிடம் நேரடியாக கையளிக்கப்படவிருக்கிறது. அன்று தான் UPR அமர்வு தொடங்குகிறது.
 
வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் யதார்த்த பூர்வமான பதில்களை கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தயாராக இருப்பார்கள் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம முழு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஆம். ஏற்றுக்கொள்வோம். அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். காரணம் The Universal Periodic Review பற்றி 2008ம் ஆண்டே அவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது.

 கடந்த வாரம் சர்வதேச மன்னிப்பு சபையின் அங்கத்துவர் ஒருவர், 'உங்களுக்கு 'UPR' என்றால் என்ன எனத்தெரியுமா?' எதேர்ச்சையாக கேள்வி எழுப்பியிருக்காவிடின் எனக்கும் இன்று வரை தெரிந்திருக்காது. இலங்கை போர்க்குற்றம் குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் மட்டும் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றில்லை.AFC அமைப்பு செயற்படும் பிரான்ஸ் அரசு கூட கேள்வி கேட்க உரிமை உண்டு. UPR என்பது அது தான்! ஆனால் அது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது என்பதை பொருத்தது' எனக்கூறி அவர் விடைபெற்றார்.  

ஆம், அவர் சொல்வது சரிதான்.  'அது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது?'.

இப்போது சொல்லுங்கள். 'கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை புறக்கணியுங்கள் என நான் பிரச்சாரம் செய்வது அவசியமா? அல்லது ACF இன் இக்கையெழுத்து மனுவை பற்றி சொல்வது அவசியமா?

- 4தமிழ்மீடியாவுக்காக சரண்.ஜிவேஷ்

தொடர்பு செய்தி :

இலங்கையின் போர்க்குற்றங்களை இன்னமும் முழுமையாக மறக்கவில்லை என்பதை உணர்த்துங்கள் : ACF

முற்றத்தில் எமது வாசகர்களின் முன்னைய பதிவுகள்

 எமது முற்றம் பகுதிக்கு நீங்கள் புதியவரா? : இதை வாசிக்க

வருகைக்காகக் காத்திருக்கும் முற்றம்!

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.