ஜோதிடம்
Typography

இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் விளம்பி வருஷம் 14 ஏப்ரல் 2018 அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் - நல்ல மழை பொழியவும் - அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் - விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம்.

இந்த தமிழ் புத்தாண்டு சனியின் நக்ஷத்ரமான உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் உத்தராயணம் வஸந்தரிது சித்திரை மாதம் 01ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 14 ஏப்ரல் 2018 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை கிருஷ்ண திரயோதசியும் - உத்திரட்டாதி நக்ஷத்ரமும் - மாஹேந்திர நாமயோகமும் - வணிஜை கரணமும் - மீன ராசியில் - சிம்ம நவாம்ச சந்திர அம்சத்தில் - மேஷ லக்னத்தில் - சிம்ம நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ( இந்திய நேரப்படி) உதயாதி நாழிகை 2.18க்கு - காலை 7.02க்கு தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு சனி திசை 16 வருஷம் 6 மாதம் 8 நாட்கள்.

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டு சர நெருப்பு லக்னமான மேஷ லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நட்பு வீடான குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மீன ராசி உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் லக்னாதிபதி பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்திலேயே உச்சமாக இருப்பதும் - பாக்கியாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.

விளம்பி வருஷ வெண்பா:

விளம்பி வருடம் விளைவு கொஞ்ச மாரி
அளந்து பொழியும் அரசர் களங்கமுடன்
நோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை
ஆவா புகலவரி தாம்.

விளம்பி வருஷ நவநாயகர்களும், பலன்களும்:

1. ராஜா - சூரியன் பலன் - குதிரைகளுக்கதிபதி
2. மந்திரி - சனி பலன் - யானைகளுக்கதிபதி
3. அர்காதிபதி - சுக்கிரன் பலன் - பக்ஷிக்களுக்கதிபதி
4. ஸஸ்யாதிபதி - செவ்வாய் பலன் - பிரஜைகளுக்கதிபதி
5. ஸேனாதிபதி - சுக்கிரன் பலன் - பசுக்களுக்கதிபதி
6. ரஸாதிபதி - குரு பலன் - ஸர்ப்பங்களுக்கதிபதி
7. தான்யாதிபதி - சூரியன் பலன் - ஒட்டங்களுக்கதிபதி
8. மேகாதிபதி - சுக்கிரன் பலன் - விருக்ஷங்களுக்கதிபதி
9. நீரஸாதிபதி - சந்திரன் பலன் - கிரஹங்களுக்கதிபதி

வருடம் பிறக்கும் போது கிரகங்களுடைய பாதசாரங்கள்

லக்னம் - பரணி 1ல் - சுக்கிரன் சாரம்
சூரியன் - அஸ்வினி 1ல் - கேது சாரம்
சந்திரன் - உத்திரட்டாதி 1ல் - சனி சாரம்
செவ்வாய் - பூராடம் 3ல் - சுக்கிர சாரம்
புதன் - உத்திரட்டாதி 1ல் - சனி சாரம்
குரு - விசாகம் 3ல் - சுய சாரம்
சுக்கிரன் - பரணி 3ல் - சுய சாரம்
சனி - மூலம் 3ல் - கேது சாரம்
ராகு - பூசம் 4ல் - சனி சாரம்
கேது - திருவோணம் - 2ல் - சந்திரன் சாரம்

பொது பலன்கள்:

உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் பிறப்பதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். தனியார் உடைமைகளுக்கு சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும்.

புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.

லக்னாதிபதியுடன் சனி சேர்ந்திருப்பதால் பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள்.

சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். புத்திரகாரகன் குரு நட்பு வீட்டில் இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

அரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.

வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

வெளிநாட்டின் வருவாய் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சி பெறும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் நாடு முன்னேற்றமடைய பாடுபடுவார்கள். உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும். புதிய நவீன ஏவுகனைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். புதிய வகை விமானங்கள், போர்க் கருவிகள் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும். பலம் வாய்ந்த நாடுகளில் நமது நாட்டிற்கும் தனித்தன்மை ஏற்படும்.
மழையின் அளவு ஓரளவு இருக்கும். ஆறு, குளம், கண்மாய், அணைகள் நிரம்பும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளில் விலை ஏறும். உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் ஏற்றுமதி வளம் பெறும்.
கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். கல்வியின் தரம் மேம்படும். மாணவ மணிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விளையாட்டில் நமது நாட்டினை சார்ந்தவர்கள் சாதனைகள் பெறுவார்கள்.
அமேரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி அதிரும்.

கிரக மாற்றங்கள்:

விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

பயன்பெறும் ராசிகள்:
மேஷம் - மிதுனம் - கடகம் - கும்பம்

மத்திம பலன் பெறும் ராசிகள்:

சிம்மம் - துலாம் - விருச்சிகம் - மகரம் - மீனம்

எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள்:
ரிஷபம் - தனுசு - கன்னி

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதும், ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான சித்திரைத் தமிழ் புத்தாண்டுப் பலன்களை இனி வரும் நாட்களில் இப்பகுதியில் வாசித்தறியலாம். குறித்த ராசிக்கான படங்களின் மேல் அழுத்தி உங்கள் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS