ஜோதிடம்
Typography

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சி பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாக எழுதுகின்றார்கள்.

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்:
நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குருவின் பலம்:
குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

நிகழும் மங்களகராமன கல்யப்தம் 5120 - சாலிவாகனம் 1941 - பசலி 1429 - கொல்லம் 1195 - ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 11ம் தேதி பின்னரவு 12ம் தேதி முன்னிரவு (ஆங்கிலம்: 29.10.2019) அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லப்க்ஷ ப்ரதமை - விசாக நக்ஷத்ரம் - ஆயுஷ்மான் நாமயோகம் - கிம்ஸ்துக்னம் கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 54.14க்கு (அதிகாலை மணி 3.49க்கு) கன்னியா லக்னத்தில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி - 15.11.2020 - ஞாயிற்றுக்கிழமையன்று மாறுகிறார்.
தனுசு ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மேஷ ராசியையும் - ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் சிம்ம ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
நன்மை பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - சிம்மம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கன்னி - விருச்சிகம் - தனுசு - கும்பம் - மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் - கடகம் - துலாம் - மகரம்

குரு பயோடேட்டா:

சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு

குரு காயத்ரீ மந்திரம்

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
---------------------------------------------------------
குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

************************************************
பொது பலன்கள்:
பொதுவாக தனுசு ராசி என்பது ப்ரம்மம் அதாவது உயிர் சம்பந்தபட்ட ராசியாகும். இதன் அதிபதி தேவ குருவாகிய குருதான். திறமை - ஒழுக்கம் - நேர்மை - தெய்வ நம்பிக்கை - பெரியோரை மதித்தல் - மங்கள காரியங்கள் - குழந்தை ஆகிய விஷயங்களுக்கு குரு அதிபதியாவார்.

பொது பலன்கள்:

நாடு மற்றும் பொருளாதாரம்:
சுய வீட்டிற்கு குரு மாறுவதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

வானிலை:
இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.

ஆன்மீகம் மற்றும் கோவில்கள்:
புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். வெள்ளிகிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.

பொது:
பல முக்கிய வழக்குகளுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். பொது மக்களிடையே வீண் கோபம் உண்டாகும். ஒருவருக்கொருவர் சுமுகமான பேச்சு இல்லாமல் வேகத்துடன் பேசிக் கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவு தாராளமாக இருக்கும். குரு இல்லறத்தின் காரக கிரகமான சுக்கிரன் வீட்டில் இருப்பதால் குழந்தை பிறப்பு அதிகமாகும்.

ஆரோக்கியம்:
நோய்கள் மருந்து உட்கொள்வதன் மூலம் சரியாகும். அதேபோன்று கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் பெரிய பாதிப்பை தராது.

குடும்பம்:
கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை சமாதானத்தில் முடியும். விவாகரத்துக்கள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சனைகளும் தலை தூக்கும்.

அரசியல்:
அரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.

ஒவ்வொரு இராசிக்குமான விரிவான பலன்களை  இராசிப் படங்களின் மேல் அழுத்திக் காணலாம்.

 - 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்