ஜோதிடம்

துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.  இவ்வாண்டிற்கான  குருப் பெயர்ச்சியினால், துலாம் ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.

எந்த நிலையிலும் நேர்மை நெறி தவறாத தன்மை கொண்ட துலா ராசி அன்பர்களே நீங்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். இயல்பாக செயலாற்றலும் அறிவுத் திறனும் கொண்டவர்களாக இருப்பீர்கள். தனிப்பட்ட திறமைகள் கொண்ட நீங்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்து இருப்பீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நபர்களிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தால் உங்களுக்கு வெற்றி தேடி வரும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது. தெய்வ பலமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு நிறைந்திருக்கும். இதன் மூலம் எல்லாவித பிரச்சனைகளிலிருந்து எளிதாக விடுபடுவீர்கள்.


கிரகநிலை:
ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது சுக ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய தொழில் கர்ம ஜீவன ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய அயன சயன போக விரையஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:
சனி பகவான் தைரிய வீர்ய ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்களுடைய சுக ஸ்தானத்திற்கு மாற்றம் பெற்று இருக்கிறார். அவருடைய மாற்றம் என்பது உங்களுக்கு பலவிதமான நல்ல பலன்களை அள்ளித்தரும் வகையில் அமைந்திருக்கிறது. குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். முதலீடுகள் சம்பந்தமான விஷயங்களில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுப்பது நன்மையை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிடுதல் மிகவும் அவசியம். ஒருவருக்கு வாக்கு கொடுக்கும் போது உங்களால் முடிந்தால் மட்டும் வாக்கு கொடுப்பது நன்மையை கொடுக்கும். தாயார் தாய்வழி உறவினருடன் இருந்து வந்த உறவுச் சிக்கல்கள் நீங்கப் பெறுவீர்கள்.

வீடு மனை வாகனம் சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். பல வகையிலும் முயன்று வருமானத்தை ஈட்டுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள். உங்கள் பொறுப்புகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர்கள். பயணங்கள் மேற்கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களைத் தேடி நல்லச் செய்திகள் வந்துக் கொண்டிருக்கும். அரசாங்கத்திலிருந்து வந்து கொண்டிருந்த கெடுபிடிகளும் குறையும்.

சமுதாயத்தில் உயர்ந்தோரை நாடிச் சென்று அவர்களின் ஆலோசனைகளால் பயனடைவீர்கள். கடினமான செயல்களைச் செய்து முடிக்க உங்கள் உடலாரோக்கியம் ஒத்துழைக்கும். முற்காலத்தில் வாங்கியச் சொத்துக்களை விற்று முறையாகத் தொடர் வருமானம் ஈட்டும் முதலீடுகளைச் செய்வீர்கள். புதியவர்கள் உங்களுடன் நட்புக் கொள்ள அழைப்பார்கள். அதேநேரம், உங்கள் செயல்களைப் பெரிய ஆரவாரம் இல்லாமல் செய்யுங்கள். மேலும் உங்கள் ரகசியங்கள் வெளியில் தெரியாமல் கவனமாக இருக்கவும். முரண்டுப் பிடிக்கும் நண்பர்களிடமிருந்து விலகிவிடவும். இதனால் புதுப்பிரச்னை எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு பிள்ளைகளிடம் அனாவசிய கெடுபிடிகளைத் தவிர்த்து தட்டிக் கொடுத்துச் சென்று அவர்களால் எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் விரும்பும் இடமாற்றம் கிடைக்கும். ஆனால் மேலிடத்துடன் சிறிது இணக்கமாக செல்வது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது மற்றவர்கள் வீண் குற்றச்சாட்டு சுமத்த நேரலாம். கவனம் தேவை. குடும்பத்தை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணிகளின் நிமித்தமாக அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் பணிகளின் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்களிடம் இருக்கும் ஆவணங்களை சரியான முறையில் பாதுகாத்துக் கொள்வது அவசியம். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பது நன்மை தரும்.

தொழில் துறையினருக்கு சக போட்டியாளர்கள் மூலம் தேவையற்ற வீண் மன உளைச்சல் ஏற்படலாம். உங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் கனிவான உறவை கடைபிடிப்பது நல்லது. அதிக வருமானம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உப தொழிலை ஆரம்பிக்க தருணங்கள் ஏற்படும். எந்த யோசனையையும் சரியான ஆலோசகர்களிடம் கலந்துரையாடி முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும் முன் ஆவணங்களை சரியாக பார்த்து முடிவெடுப்பது சிறந்தது. முடிந்த வரை பொறுமையைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன்களை பைசல் செய்வீர்கள். பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கையானவர்களை நியமிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு உங்களுக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவது நல்லது. உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு சிறந்த காலகட்டம் இதுவாகும். பாராட்டு புகழ் விருது உங்களைத் தேடி வரும். பாடலாசிரியர் - பின்னணி இசைக்கலைஞர்கள் - நடன வல்லுனர்கள் ஆகியோருக்கும் காலகட்டமாக இருக்கும். சக கலைஞர்களிடம் சுமூகமாக நடந்து கொள்வது சிறந்தது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளை சிறிது அக்கறை எடுத்து கவனமாக பார்த்துக் கொள்ளவும்.

மாணவமணிகளுக்கு கல்வியில் சிறிது ஆர்வகுறைவு ஏற்படலாம். மனதை நிலையாக்கிக் கொள்ளவும். உடல் உபாதைகள் மூலம் சில தடைகள் ஏற்படலாம். உடல்நலத்தைப் பேணுவதில் அதிக சிரத்தை அவசியம். விளையாட்டில் சாதனைகளை படைப்பீர்கள். அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு அதிகமான முயற்சி தேவை. சோம்பல் கூடவே கூடாது. நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற குற்றச்சாட்டு அகல தீய பழக்கவழக்கம் இருக்கும் நண்பர்களிடமிருந்து சற்றே விலகியிருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு உங்கள் மீது தலைமை அதிகமான நம்பிக்கை கொள்ளும். உங்கள் நண்பர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். ஆனாலும் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை தரும். உங்களுடைய விசுவாசத்திற்கு மேலிடம் உங்களுக்கு சரியான பதவிகளை அளிப்பார்கள். சிலருக்கு சுழல் விளக்கில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அதே வேளையில் மன உறுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வது சிறந்தது. நெருக்கடியான நேரத்தில் பக்குவத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது சிறந்தது. குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படும் சிக்கலான வாக்குவாதங்களில் விட்டுக் கொடுத்து போவது நன்மை அளிக்கும். தேவையற்ற கோபத்தை விட்டுத் தள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவோடு நட்பு வைத்துக் கொள்வது நல்லது. கருவுற்றிருக்கும் பெண்கள் நிதானமாக இருப்பது அவசியம்.

15.11.2020 - 04.01.2021 வரை:
குரு பகவான் இந்த காலகட்டத்தில் உங்களுடைய லாபாதிபதி சூரியனுடைய சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். தொழிலில் லாபம் கிடைக்கும். முதலீடுகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்த்திருந்த சுப காரியங்கள் மிக விரைவில் நடந்து முடியும். பூமி சம்பந்தமான காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். வருமானம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கும்.

05.01.2021 - 01.03.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய தொழில் ஸ்தான அதிபதி சந்திரனுடைய சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். தொழிலில் இதுவரை இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் மாறி ஒரு நிரந்தரமான நிலை உருவாகும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பல இடங்களில் இருந்தும் உங்களுக்கு வர வேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பொருளாதார விஷயங்கள் முன்னும் பின்னும் இழுத்தாலும், உங்களுக்குத் தேவையான நேரத்தில் கை கொடுக்கும் படி குரு பகவான் அருளுவார். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சில சொல்லத்தகுந்த மாற்றங்கள் நடக்கும்.

02.03.2021 - 15.06.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குருபகவான் உங்களுடைய தனாதிபதி களத்திராதிபதி செவ்வாயின் சாரம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் குடும்பம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி நன்மை பெறுவீர்கள். நீண்டநாள் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மனதில் நினைத்து வெளியில் சொல்ல முடியாததை பகிர்ந்து உறவினர்களுடன் கொள்வீர்கள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரித்து மகிழ்ச்சி பெருகும்.

16.05.2021 - 13.10.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குருபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்கிறார். அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது வேண்டியவர்களிடம் கலந்தாலோசிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் சிறு சஞ்சலங்கள் ஏற்படலாம். நீங்கள் திடமுடன் இருந்தால் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிப்பீர்கள்.

நட்சதிரப்பலன்கள்

சித்திரை 3, 4ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் எந்த விதத்தில் வந்தாலும் சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையைக் கையாள்வது நன்மை பயக்கும். பெற்றோர் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏமாற்றத்தைத் தரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

ஸ்வாதி:
இந்த குருப் பெயர்ச்சியில் நிதானமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரும் ஆதாயம் பெறுவீர்கள். உடல் நலனில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ளலாம். புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. கடிதப் போக்குவரத்து நன்மை தரும். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:
இந்த குருப் பெயர்ச்சியில் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். கவனம் தேவை. உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். எல்லாம் நல்லதே நடக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும். வீட்டில் தினமும் 9 ஒரு முக மண் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடவும். 2, 6, 7, 9 ஆகிய எண்கள் நன்மைகளைக் கொடுக்கும். சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு ஆகிய ஹோரைகள் அதிர்ஷ்டத்தை வழங்கும், மேற்கு, வடக்கு ஆகிய திசைகள் சிறப்பானவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி;

+ முதலீடு அதிகரிக்கும் : - சகோதர சகோதரிகளிடம் மனகிலேசம்

 - 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.