ஜோதிடம்

தனுசு : (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.  இவ்வாண்டிற்கான  குருப் பெயர்ச்சியினால், தனுசு ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.

தன்னுடைய சொந்த காலில் நின்று சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் பிறரிடம் கை கட்டி சேவை செய்ய விரும்பாதவர்கள். மனதிற்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். நேர்மையை கடைபிடித்து நடப்பதால் கம்பீரமாக பீடு நடை போடுவீர்கள். பிறர் உங்களுக்கு தீமை செய்தாலும் அவர்களுக்கு நீங்கள் எப்போதும் நன்மையே செய்வீர்கள். அவசரத்தில் உணர்ச்சிகளை மட்டும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். செய்யும் காரியங்களில் சிறிது அக்கறை மட்டும் எடுத்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்.


கிரகநிலை:
ஒரு வருட காலமாக உங்கள் ராசியான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது தனவாக்கு குடும்ப ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய ரண ருண ரோக ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:
சனி பகவான் ராசியான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் - கேது பகவான் அயன சயன போக விரைய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த குருபெயர்ச்சியில் உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்களுடைய தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். நீங்கள் வாக்கு வன்மையால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சொல்வாக்கு செல்வாக்கு இரண்டுமே உயரும். குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் இருந்துவந்த மனவருத்தங்கள் மறையும். கருத்து மோதல்கள் நீங்கப் பெறுவீர்கள். முக்கிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தாய் வழி ஆதரவு பெருகும். இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வம்பு வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகத் தொடங்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்க்கக்கூடிய பணம் வந்து சேரும். சுணங்கிக் கடந்த காரியங்கள் அனைத்தும் மீண்டும் உயிர் பெறும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டினால் குதூகலங்கள் அதிகம் சந்திப்பீர்கள். பாசம் காட்டாத உற்றார் உறவினர்கள் பாசம் காட்டத் துவங்குவார்கள். உடலில் இருந்த உபாதைகளும், மனக்குழப்பங்களும் விலகும். புதியவர்கள் நட்பு கிடைத்து அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களின் நம்பிக்கைகள் வீண் போகாது. சொத்துப் பிரச்னைகளும் சுமுகமாக முடியும். புதிய கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் தேடிவரும். அதே நேரம் திரும்பத் திரும்பச் செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி விடவும். மறைமுகப் பகையை பாராட்டும் பழைய நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம்.எந்த விஷயத்திலும் தடை தாமதம் நீங்கப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் சிறக்கும். நீண்ட நாட்களாக உடல் உபாதைகளால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல விடிவு காலம் பிறந்திருக்கிறது. கடன்கள் அடைவதற்கான நல்ல சூழல் உண்டாகியிருக்கிறது. வீடு மனை நிச்சயமான முறையில் உங்களுக்கு வாய்க்கும். நின்று போயிருந்த கல்வி மீண்டும் துளிர் பெரும். தொழில் உத்தியோகத்தில் நல்ல ஏற்றங்கள் மாற்றங்கள் முன்னேற்றங்கள் உறுதி. புதிய தொழில் ஆரம்பிப்பதற்கும் ஏற்கனவே இருந்த தொழிலில் சிக்கல்களும் நீங்கும். எதிர்பார்க்கக்கூடிய நல்ல உத்தியோக மாற்றம் வந்திருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்க கூடிய பணியிட மாற்றம் பதவி உயர்வு உறுதிப்படுத்தப்படுகிறது. திடீரென்று வெளிநாடுகளுக்குப் பயணப்பட விசா கிடைக்கும். இதன் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கூடும். புதிய முதலீடுகளை செய்யும்போது மட்டும் சிறிது கவனம் அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான பலன்களைப் பெற போகிறீர்கள். உங்கள் பணிகளில் அதிக சிரத்தையும் முயற்சியும் தேவை. யாரும் உங்களை குறை கூறாத அளவிற்கு நேரத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் உங்களிடம் கனிவான உறவினை கொள்ளும். அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை நிமித்தமாக வெளியூர் பிரயாணங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் லாபம் உறுதியாகக் கிடைக்கும். போட்டிகள் அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் ஆதரவால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். உங்கள் பணியாளர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது நன்மை தரும். யாரிடமும் அனுசரணையான உறவைக் கையாள்வது நல்லது. கூட்டு வியாபாரங்களில் கணக்கினை சரியாக வைத்துக் கொள்வது நன்மை தரும். அரசு வகையில் சில பிரச்சனைகள் வரலாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கொட்டும். அதன் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சக கலைஞ்சர்களிடம் சுமூகமாக பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரியாக படித்து பார்ப்பது நல்லது. வெளியூர் பயணம் செல்லும் சரியான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு ஏழரை ஜென்ம சனி ஆரம்பிக்க இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறையலாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. விளையாட்டில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நன்மை தரும். உயர்கல்விக்காக குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.

அரசியல்துறையினருக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளும் உங்களைத் தேடி வரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். தொண்டர்களும் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர்.

பெண்மணிகளுக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது. கடினமாக உழைத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோரின் உதவிகளால் முன்னேறுவீர்கள்.

15.11.2020 - 04.01.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய பாக்கியாதிபதி சூரியனின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.

05.01.2021 - 01.03.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய அஷ்டமாதிபதி சந்திரனின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

02.03.2021 - 15.06.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்களுடைய பஞ்சமாதிபதி விரையாதிபதி செவ்வாயின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.

16.05.2021 - 13.10.2021 வரை:
இந்த காலகட்டத்தில் குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். திறமை அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் உண்டாகும். பெற்றோர் ஆதரவு கிடைக்கும்.

நட்சதிரப்பலன்கள்:
மூலம்:
இந்த குருப் பெயர்ச்சியில் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.

பூராடம்:
இந்த குருப் பெயர்ச்சியில் கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.

உத்திராடம்:
இந்த குருப் பெயர்ச்சியில் பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.

பரிகாரம்: சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதால் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும். “ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும். வீட்டில் தினமும் 5 ஒரு முக மண் அகல் விளக்கு நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை கலந்து ஏற்றவும். 1, 3, 9 ஆகிய எண்கள் அனுகூலத்தைத் தரும். சூரியன், செவ்வாய், குரு ஆகிய ஹோரைகள் நன்மை தரும். கிழக்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்

+ அதிகமாக உழைத்தல் : - பரபரப்பு மற்றும் உடல்நலம் பாதித்தல்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 - 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.