ஜோதிடம்
Typography

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

பெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் - ஆவணி மாதம் 17ம் தேதி - இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை - கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.

 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய,  விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.

 கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

உணர்ச்சி மிகுதியால் அனைத்து காரியங்களிலும் முடிவெடுக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். உங்களை சார்ந்தவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். வட்ட முக வடிவு கொண்ட உங்களுக்கு எந்த சூழ்நிலையிலும் யாராவது ஒருவர் உதவுவார்கள்.

உங்களின் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு குரு பகவான் சஞ்சரிக்கிறார். உங்கள் வேலைகளை தன்னடக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் நிலையை உயர்த்திக்கொள்வதற்கு ஏதுவான நல்ல காரியங்களைச் செய்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியால் வருமானம் சீராக இருக்கும்.

வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல்முறைகளை மாற்றிக்கொள்வீர்கள். இல்லத்தில் தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும்.

தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் சகோதர,சகோதரி வழியில் சிறிது மனத்தாங்கல் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். அதோடு அனாவசிய வம்பு, வழக்குகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் தாமாகவே தேடி வந்து நட்புகொள்வார்கள். உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள்கூட உங்களுக்கு உதவி செய்யும் காலகட்டமாக இது அமைகிறது.

புத்துணர்ச்சியுடன் செயல்பவீர்கள். கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலைமை சீரடையும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள்.

புதிய சொத்துக்களை வாங்கும்போது வில்லங்கம் ஏற்படாத வகையில் கவனமாக வாங்கவும். தொழில் ரீதியாக தேவையான பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு அரசு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீட்டுக்கு பெயர்ச்சியாகும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் வகையில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பழைய சொத்துக்களும் விற்பனையாகும். இதனால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.

உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தார் உங்களுடன் விட்டுக்கொடுத்துப் பழகுவார்கள். உங்கள் தோற்றத்தில் வசீகரம் உண்டாகும்.

நீண்ட காலமாக தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். மற்றபடி உங்கள் கௌரவத்திர்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. சிலருக்கு விரும்பிய ஊர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிக்கல்களை சந்திப்பீர்கள். அதனால் சிலருக்கு நஷ்டங்கள் உண்டாகலாம். அதேநேரம் கூட்டாளிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடந்துகொள்வார்கள். இதனால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். மற்றபடி புதிய முதலீடுகளை நன்கு யோசித்த பிறகே செய்யவும்.

அரசியல்வாதிகளுக்கு தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம். ரசிகர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள்.

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த குருப் பெயர்ச்சி. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். அவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சரளமாகவே இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். சீரிய முயற்சி செய்தால் மேலும் மதிப்பெண்களை அள்ளலாம். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

புனர்பூசம்:
இந்த குருப் பெயர்ச்சியால் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது  கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம்  அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள்.  

பூசம்:
இந்த குருப் பெயர்ச்சியால் வியாபாரம்  தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை    கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு   அதிகப்படியான வருமானமும் கிடைக்கும்.

ஆயில்யம்:
இந்த குருப் பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே   சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர்களுடனான சூழல் சுமூகமாக இருக்கும். யாரிடம் பேசும்  போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும்.

பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். “அல்லி மலரை”  அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS