ஜோதிடம்
Typography

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

பெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் - ஆவணி மாதம் 17ம் தேதி - இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை - கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.

 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய,  விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.

 துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

 எண்ணியதை செயல்படுத்த எதையும் செய்யத் தயங்காத துலா ராசி அன்பர்களே உங்களுக்காக உங்கள் குடும்பமும் தியாகங்களை செய்யும். மனதில் கலக்கம் ஏற்பட்டாலும் அதை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டீர்கள். தன்மானத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் ராசிப்படி எப்போதும் ஏதாவது சிந்தனையிலேயே இருப்பீர்கள்.

உங்களின் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன மோட்ச ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால்  செய்தொழிலில் சிறிது பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மன உறுதியுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் குறிக்கோளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்.

பொருளாதாரம் சீராக இருந்தாலும் பெரிய முதலீடுகளைச் செய்ய வழி ஏற்படாது. குடும்பத்தினர் ஓரளவுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள். அதோடு கூட்டாளிகளும் பக்கபலமாக இருக்க மாட்டார்கள். எந்த முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும்.

மற்றபடி பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.  அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றபடி தேவையான மாறுதல்களைச் செய்வீர்கள். அதனால் அனாவசிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் மனதிலிருந்து அகற்றவும். பழைய தாக்கங்களை மறக்க முயற்சி செய்யுங்கள்.

மனோ பலத்தை அதிகரிக்க அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இறைவனின் திருநாமங்களை ஜபித்து வாருங்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

முன் கூட்டியே யோசித்து உங்கள் செயல்களை சிறப்பாக முடித்துவிடுவீர்கள்.
உங்கள் மனதில் உள்ளதை சுருங்கச் சொல்லி சரியாக விளக்கும் ஆற்றல் உண்டாகும். கிணற்றுத் தவளையாக இருந்தவர்கள் வெளியூர், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார்கள்.

சமுதாயத்திற்கு ஏதாவதொரு வகையில் சேவை செய்து பெயரும், புகழும் பெறும் யோகம் உண்டாகும். குறைவான உடல் உழைப்புக்குக்கூட நிறைவான வருமானம் கிடைக்கும். இல்லத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகம், தத்துவம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.

குடும்பத்திலும் வெளியிலும் உங்களின் செல்வாக்கு உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளுடனான உங்கள் தொடர்பு அனுகூலமான திருப்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும். அதேநேரம் மனதில் கற்பனை பயங்களும் உண்டாகலாம். அவ்வப்போது எதையோ இழந்துவிட்டது போன்ற மனக் கவலைகளுக்கு ஆளாவீர்கள். இதனால் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும்.

மேலும் ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். கடினமான உழைப்புக்கு இடையே சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் நடந்துகொள்வார்கள். மேலும் அலுவலக வேலைகளில் பளு இருக்காது. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு இது லாபகரமான பெயர்ச்சியாக அமைகிறது. பொருட்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளுவீர்கள். என்றாலும் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம்.

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். சிலர் புதிய பதவிகளில் அமர்வீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய சுற்றுலா சென்று வருவீர்கள்.

மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

சித்திரை:
இந்த குருப் பெயர்ச்சியால் குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம்   ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து  செல்வது நல்லது.

ஸ்வாதி:
இந்த குருப் பெயர்ச்சியால் தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.

விசாகம்:
இந்த குருப் பெயர்ச்சியால் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். தினமும் முன்னோர்களை வணங்கவும். வெள்ளிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS