ஜோதிடம்
Typography

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

பெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் - ஆவணி மாதம் 17ம் தேதி - இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை - கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய,  விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசி அனபர்களே உங்களுக்கு திடீரென்று கோபம் வரும். கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் தனமை உங்களிடம் நிறைந்து இருக்கும். உங்கள் பொறுப்புகளை  நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.

உங்களின் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும்.

உடல் உபாதைகள் நீங்கும்.  எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். முக்கியமான விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்து காரியமாற்றுவீர்கள். விருப்பு, வெறுப்பின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் சாதனை புரிவீர்கள்.

புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதி மன்றத்திற்கு வெளியில் சமாதானமாக முடியும். உங்கள் மீது அபாண்டபழி சுமத்தியவர்கள் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உடல் ஆரோக்யம் சிறப்பாக இருப்பதால் வெளியூறுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும்.

புதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லத்தில் களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்துசக்தியாக அமையும்.

உங்கள் செயல்கள் இடையூறுகளின்றி சுலபமாக நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உறுதியின்றி செய்த செயல்களில் ஒரு நிரந்தரப் பிடிப்பு ஏற்பட்டு மளமளவென்று நடக்கத் தொடங்கும். சில அனாவசியச் செயல்களுக்கு கைப்பொருள்களை இழந்த நிலை மாறும். மற்றபடி சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். என்றாலும் அந்தப் பிரச்னைகள் தானாகவே விலகிவிடும். உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும்.

வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் வெற்றி பெறும். ஆனால் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதேசமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். போகப் போக உங்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் மாறிவிடும்.

பெண்மணிகளுக்கு புத்தாடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

மாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும். அதேசமயம் உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும்.

பூரட்டாதி: இந்த குருப் பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.  

உத்திரட்டாதி: இந்த குருப் பெயர்ச்சியால் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும்.  பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

ரேவதி: இந்த குருப் பெயர்ச்சியால் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை  வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும். வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6
 

 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்