ஜோதிடம்
Typography

இறைவன் அருளாலும் சைதன்யமான கிருபையாலும் ஹேவிளம்பி வருஷம் 14 ஏப்ரல் 2017 அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவம், நல்ல மழை பொழியவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த தமிழ் புத்தாண்டு குருவின் நக்ஷத்ரமான விசாக நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 14 ஏப்ரல் 2017 அன்றைய தினம் தினசுத்தி அறிவது வியாழக்கிழமை இரவு - கிருஷ்ண திருதியையும் - விசாக நக்ஷத்ரமும் - சித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் மகர லக்னத்தில் - மகர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 47.08க்கு இரவு 12.58க்கு தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு குரு திசை 05 வருஷம் 11 மாதம் 19 நாட்கள்.

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் இறை நம்பிக்கையும் - விடா முயற்சியும் - தன்னம்பிக்கையும் கொண்டு அனைத்தையும் வழியில் அமைந்திருக்கிறது எனலாம். தமிழ் புத்தாண்டு சர லக்னமான மகர லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி சனி லாபஸ்தானத்தில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். துலா ராசி விசாக நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் பஞ்சம தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் தைரிய ஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார். குரு பகவான் உங்களுடைய ராசி - தைரிய ஸ்தானம் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருக்கிறது.

ஹேவிளம்பி வருஷ வெண்பா:
ஹேவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்
பூவல்விளை வரிதாம் போர்மிகுதி சாவதிகம்
ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ மேல்

பொது பலன்கள்:
ஹேவிளம்பி வருஷத்தில் மழை குறைவாக பெய்யும். எனினும் பொருட்கள் விலை குறைவாகவே இருக்கும். புஷ்பங்கள் குறைவாக விளையும். உலக நாடுகளில் போர்கள் ஏற்பட்டு மரணங்கள் அதிகரிக்கும். நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் நேர்மையாக இருக்கமாட்டார்கள். தீ விபத்துக்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு முருகனுக்கும் அய்யனாருக்கும் உகந்த நக்ஷத்ரமான விசாக நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் - காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் - எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் லாப ஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி சனி புதனின் நக்ஷத்ரமான கேட்டை நக்ஷத்ரத்தில் சாரம் பெற்றிருப்பதால் அதன் அதிதேவதையான ஸ்ரீமன் நாராயணனை வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். ஆண்டின் தொடக்கத்தில் லக்ன தனாதிபதி சனி நாடிப்படி புதன் சுக்கிரனுடன் நாடிப்படி சம்பந்தம் பெறுகிறார்கள். புதனும் குருவும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள். ஆண்டின் தொடக்கத்திலேயே சுபகாரகன் குரு லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் நிகழ்வானது 12 ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் அறிய நிகழ்வாகும். எனவே இவ்வாண்டு சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடப்பதைக் காட்டுகிறது. மேலும் சப்தமாதிபதி சந்திரன் லக்னத்திற்கு நட்பு கிரகமாவார். அல்லல்கள் அனைத்தும் தீரப் போகிறது. தனது பார்வையால் குரு செவ்வாயை பார்ப்பதால் குருமங்கள யோகத்தைக் காட்டுகிறது. மங்கள காரியங்கள் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையின்றி நடைபெறும். பூமியிலுள்ள மக்களுக்கெல்லாம் தைரியமும் - இறைவனின் பரம சைதன்யமும் நிறையப் போகிறது. கவலைகள் மறைந்து கை நிறைய தனலாபம் அமையப் போகிறது.

ஹேவிளம்பி வருஷ நவநாயகர்களும், பலன்களும்:


ராஜா - புதன் பலன் - அதிக காற்றால் மேகங்கள் கலையும், மிதமான மழை, பெரும்புயல், பச்சை தான்ய உற்பத்தி.
மந்திரி - சுக்ர பலன் - நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். தான்ய உற்பத்தி அதிகரிக்கும். மக்கள் சுகமாக வாழ்வர்.
அர்காதிபதி - குரு பலன் - தேவைக்கு ஏற்ற காலத்தில் மழை, விவசாய உற்பத்தியினால் விலை குறையும்.
ஸஸ்யாதிபதி - ஸூர்யன் பலன் - நாட்டின் சில பகுதிகளில் வறட்சி ஏற்படும். தீ விபத்துக்கள் அதிகரிக்கும். மக்களுக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
ஸேனாதிபதி - குரு பலன் - நாட்டின் எல்லைப் பகுதி போர்களுக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். பின்னன் நியாயமான ஆட்சி ஏற்படும்.
ரஸாதிபதி - அங்காரகன் பலன் - துவர்ப்புப் பயிர்கள் செழிக்கும். புஞ்செய் தான்யங்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
தான்யாதிபதி - சனி பலன் - கிழங்கு வகைகள், கருப்பு தான்யங்கள், கருப்பு மண்ணில் விளைச்சல் அதிகரிக்கும்.
மேகாதிபதி - குரு பலன் - நீர் நிலைகள் நிரம்பும், பயிர்கள் செழிக்கும். மக்கள் சந்தோஷமாக வாழ்வர்.
நீரஸாதிபதி - ஸூர்யன் பலன் - நவரத்ன ஆபரணங்கள் அதிகரிக்கும். தங்கம் விலை ஏறும்.

கிரக மாற்றங்கள்:
27 ஜுலை 2017 அன்று சிம்ம ராசியில் இருக்கும் ராகு கடக ராசிக்கும், கும்ப ராசியில் இருக்கும் கேது மகர ராசிக்கும் மாறுகிறார்கள்.
02 செப்டம்பர் 2017 - கன்னி ராசியில் இருக்கும் குரு துலா ராசிக்கு மாற்றம் பெறுகிறார்.
19 டிசம்பர் 2017 - விருச்சிக ராசியில் இருக்கும் சனி பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை
ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதும், ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான புத்தாண்டுப் பலன்களை அந்தந்த ராசினளுக்கான படங்கள் மீது அழுத்தி வரும் இணைப்பில் வாசித்தறியலாம்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்