ஜோதிடம்
Typography

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்
எந்த காரியத்திலும் ஒரே மனதாக ஈடுபடும் மகர ராசி அன்பர்களே நீங்கள் ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். உங்களது தன்னம்பிக்கையால் வளர்ச்சி காண்பீர்கள்.

கிரகமாற்றங்கள்:
விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கிரகநிலை:
இந்த புது வருட தொடக்கத்தில் ராசியில் கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் அமைந்திருக்கின்றன.
கிரகங்களின் பார்வைகள்:
குரு பார்வை பெறும் ஸ்தானங்கள்: சுக ஸ்தானம் - தன வாக்கு குடும்ப ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம்.

பலன்கள்: இந்த ஆண்டு மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எனினும் நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

உடல் ஆரோக்கியம்:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தை செவ்வாயும், சனியும் தனது ஏழாம் பார்வையாக பார்க்கிறார்கள். இரத்தம் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சரியான வேளையில் உணவு உண்பதும், மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். உங்கள் ராசியாதிபதி சனி பார்வை இருப்பதால், மிகப் பெரிய உடல் உபாதைகளில் இருந்து அவரே காத்தருள்வார். செவ்வாய் பார்வை இருப்பதால் கவனமாக இருப்பதும் அவசியமாகிறது.

குடும்பம்/உறவுகள்:
குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பகவான் புரட்டாசி மாதத்திற்கு பிறகு பார்க்கிறார். சுப நிகழ்வுகளில் இருந்த தடைகள் அனைத்து அகலும். மேலும் வீட்டில் சந்தாண பாக்கியம் கிட்டும்.

பிள்ளைகளின் கல்வி/முன்னேற்றம்:
குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். அவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் பதக்கங்கள் பெறுவார்கள்.

தொழில்/வேலை/உத்தியோகம்/பதவி உயர்வு
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

சேமிப்பு, முதலீடு, பொருளாதாரம்:
புத்தாண்டு பிறக்கும் போதே தனஸ்தானாதிபதி சனிபகவான், லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முதலீடுகள் நல்ல லாபகரமாக இருக்கும். எனினும் செவ்வாய் பகவானும் உடனிருப்பதால் உங்கள் வாயைக்கொடுத்து எதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நடப்பது நல்லதாகவே இருக்கும். கருத்து சொல்கிறேன் என்று பிரச்சனையைத் தேடிக்கொள்ளாதீர்கள். சுகஸ்தானத்தில் இருக்கும் சுக்ரனும் உங்கள் சேமிப்பு முதலீடுகளில் லாபம் பெற்றுத் தருவார். கவலை வேண்டாம்.

வம்பு / வழக்குகள்:
ராசியில் கேது அமர்ந்திருப்பதால் எந்த ஒரு வம்பு வழக்கு வந்தாலும் அதனை சாமர்த்தியமாக எதிர் கொள்வீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்து வரும் சஞ்சல நிலை மாறும்.

நல்ல பலன் தரும் கால கட்டம் / எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம்:
புரட்டாசி மாதம் வரையிலான காலகட்டத்தில் வருமானம் மிக அதிகமாக இருக்கும். அதன் பிறகான காலகட்டத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த ஆண்டு குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். இதுவரை இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

திருவோணம்:
இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த ஆண்டு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும். சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஆஞ்சநேயாய நம என்ற மந்திரத்தை தினமும் 7 முறை சொல்லவும்.

மேடம்

 இடபம்  மிதுனம் கடகம்  சிம்மம்

 கன்னி

 துலாம்  விருச்சிகம்     தனுசு  மகரம்  கும்பம்  மீனம்

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS