இலங்கை
Typography

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையை பெற்று உள்ளூராட்சி அதிகாரத்தை கைப்பற்றும். அதன் பின்னர் தாமரை மொட்டில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எஸ்.பி.திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கூட்டு எதிரணியில் (மஹிந்த அணி) உள்ளவர்கள் எமது நண்பர்களே. அவர்களை சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொள்ள அனைத்து பகைகளையும் மறந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் பேச்சுகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால், அவை தோல்வியிலேயே முடிந்தன. என்றாலும், தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சம்சமாஜ கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் எம்முடன் இணைந்துக்கொண்டனர்.

தேர்தலுக்கு முன்னர் இன்னும் பலர் இணைந்துக்கொள்வார்கள். சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரும் பொதுஜன பெரமுனையில் இல்லை. அனைத்து சிரேஷ்ட உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியிலேயே உள்ளனர். அவர்களை சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ள எதிர்காலத்திலும் பேச்சுகளை முன்னெடுப்போம்.

அதேபோல், உள்ளூராட்சித் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்கள் அனைவரும் சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொள்வார்கள். தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் ஒருந்து ஓய்வுபெறுவார்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்