சமயம்

தியானத்தை பற்றிய கடந்த தொடரில், நடைப்பயிற்சியின் போது கூட சிலருக்கு தியானத்தின் உச்ச உணர்வு அவர்கள் எதிர்பாராமலே எழக்கூடும் என்பது பற்றி ஓஷோ சொல்லியிருந்தது குறித்து பார்த்தோம்.

ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியே தியானம் என்று இந்தியாவில் தோன்றிய ஆன்மீக ஞானிகள் பலரும் கூறினார்கள் ஆனால் முதன் முதலாக ஓஷோ அதிலிருந்து மாறுபட்டு ஆடல், பாடல் ஏன்....சிகரெட் பிடிப்பதை கூட தியானமாக செய்ய முடியும் என்று வித்தியாசமான அணுகுமுறையை அவரது பாதையை தொடரும் சீடர்களுக்கு சொல்லியிருந்தார். ஆனால் பொதுவாக, இந்தியாவை போன்ற ஆன்மீக தேசத்தில் மக்கள் தியானம், யோகம் போன்ற ஆழமான நிலைகளுக்கு செல்ல விரும்பும் போது அதை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு செயலாகவே தொடர எண்ணுகிறார்கள்.

உடல் ஓய்வான நிலையில் சுவாசம் சீராக சென்று வருகிறது. இதனால் உடலின் உயிர்சக்தி பலப்படுகிறது. உடலை நோய்கள் அண்டுவதில்லை. தியானத்தின் பலனை எளிதாக இப்படி சொல்லாம். உடலின் உயிர்சக்தி என்ற பிராணசக்தி தவறான வாழ்வியல் முறை இயல்புகளால் பாதிக்கப்படுவது இயற்கை. அதிக உணவு, நரம்புகளை தூண்டிவிடும் உணர்வுகள், பழக்கங்கள், அதிக காமஉணர்வு, கடுமையான உழைப்பு, உழைப்பே இன்றி இருத்தல் போன்றவை எல்லாம் நோய்கள் தொற்ற மூலகாரணமாக அமைகிறது.

மனிதனுக்கு உணவு, நீர், காற்று ஆகிய ஊட்டப்பொருள்களில் இருந்து சக்தி கிடைக்கின்றது. இந்த இவை அனைத்தும் கெட்ட நிலையில் இருக்கும் போது உடலின் நிணநீர் கெடுகின்றது. உடலுக்கு வேண்டாத அன்னிய நச்சுக்கள் உடலில் தேக்கமடைகின்றன. இந்த கழிவுகள் யாவும் மலம், மூத்திரம், சுவாசம் மற்றும் வியர்வை என்ற கழிவுப் பொருளாக வெளியேற வேண்டும். ஆனால் அவை சரியாக வெளியேறாத நிலையில் உடலுக்குள் தேங்கி உறுப்புகளை கெடுத்து நோய் உற்பத்தியாக காரணமாகின்றன. இதையே "சர்வரோகாமலா வாசாகா" என்றார்கள். உடலில் சேரும் மலம் என்னும் அன்னியப்பொருளே அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பது தான் இதன் பொருள். அறியாமை, புலனடக்கம் இல்லாமை, அசட்டை, இச்சை, உணவில் நாவடக்கம் இல்லாமை, இயற்கை விதிகளை மீறல் ஆகியவற்றால் உடலில் அழுக்குகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மனிதன் தனக்கு தானே உற்பத்தி செய்து கொள்கிறான்.

இதையெல்லாம் தவிர்த்து மனதை கட்டுப்படுத்தியும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் தியானமும், யோகாசனக்கலைகளும் மிகவும் உதவுகின்றன என்றால் மிகையாகாது. மிகப்பெரிய யோகிகள் தியானத்தில் திளைத்து ஒருகட்டத்தில் காற்றையே உணவாக உண்டு வாழ்ந்ததாக ஆதாரங்கள் உள்ளன. ஒரு கட்டத்தில் இந்த மூச்சு போக்குவரத்து கூட இன்றி சாகா நிலையை அவர்கள் எட்டியிருக்கிறார்கள். ரஜனியின் மானசீக குருவான பாபாஜி இந்த நிலையை எட்டியவர். அவருக்குள் சரீரத்திற்குள் சதைகளோ, எலும்புகளோ இரத்த ஓட்டமோ கிடையாது. பார்வைக்கு தோற்றம் தான் இருக்கும். இதுவும் கூட வரைபட தோற்றம் தான் என்கிறார்கள். ஆனால் தற்கால உலகத்தில் நோய் இன்றியும், நல்ல மனஉணர்வுகளுடன் வாழ தியான மற்றும் எளிதாக கற்றுக் கொள்ளக்கூடிய யோகாசன பயிற்சிகள் உதவுகின்றன எனலாம்.

இந்த தொடரின் முதல் பகுதியில் எளிதான தியான முறை பற்றி விளக்கினோம். அதையே இங்கே சற்று விரிவாக பார்க்கலாம். ராமகிருஷ்ணா மிஷன் போன்ற ஆன்மீக இயக்கங்களின் பங்களிப்பு தியானம், யோகம் மற்றும் பொது வாழ்வியல் தொடர்பாக அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளது. அவர்களது இயக்கத்தின் வழிவந்த சுவாமி யதீஸ்வரானந்தர் அளித்த தியான வாழ்விற்குரிய குறிப்புகள் தியானத்தை சிறப்பாக விவரிக்கின்றன.

தியானம் செய்வதற்குரிய நேரம்

ஒரு நாளில் நான்கு முறை தியானம் செய்ய முயலுக. பிரம்ம முகூர்த்தம், நண்பகல், மாலை சந்தியா வேளை மற்றும் நடுஇரவு ஆகிய நான்கு நேரங்களில் தியானம் செய்ய வேண்டம் என்று சுவாமி பிரம்மானந்தர் எங்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த நேரங்களில் இயற்கை அமைதியாய் இருக்கிறது. நமக்கு உள்ளும் புறமும் ஆன்மீக அலைகளில் ஓட்டத்தில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது. இந்த நான்கு நேரங்களிலும் தியானம் செய்ய இயலாதவர்கள் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலாவது தியானம் செய்ய வேண்டும்.

காலை வேளை தியானத்திற்கு சிறந்த நேரம். இரவு முழுவதும் உறங்கிய உறக்கம் நம் மனத்தின் நினைவுகள் பலவற்றை அழித்திருக்கும் அல்லது அமைதி பெறச்செய்திருக்கும். எனவே, அப்போது மனதை ஒருமுகப்படுத்துவது எளிது. தூங்கி எழுந்தவுடனே உணர்வறு மனது எண்ணங்களை ஏற்க தயாரான நிலையில் இருக்கும். எனவே அந்த நேரத்தில் மனதிற்கு கொடுக்கப்படும் உணர்வுகளே ஆழ்மனதில் நன்கு பதியும். சூரியோதத்திற்கு சில மணிகள் முன்னுள்ள வைகைறைப்பொழுது தியானம் செய்யும் சாதகர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாகும்.

தியானம் முடிந்த பிறகு சிறிது நேரம் ஆசனத்திலேயே அமர்ந்திருப்பது நல்லது. தியானித்த விஷயத்தை அமைதியாக சிந்தித்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது மனம் ஆன்மீகச் சிந்தனைகளால் நிரப்பப்படும். அப்போது மனம் ஆனந்தமாக இருக்கும். இந்த ஆனந்தம் மனத்தின் அடித்தளத்திலிருந்து வருகிறது. இதற்கு பெயர் தான் பஜானானந்தம். இந்த அக ஆனந்தத்தையும், அமைதியையும் ஆழப்படுத்தவும்; உறுதிப்படுத்தவும்.

தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். தேவைக்கு அதிகமான உணவை ஒரு போதும் வயிற்றில் திணிக்க கூடாது. உடல் தேவைக்கேற்ற உணவு வகைகளையும், அளவுகளையும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உண்ணாநோன்பு இருப்பது நல்லது. ஆனால் எப்போதும் மிதமாக உண்பது அதைவிட நல்லது. சிலருடைய உடல் உண்ணாவிரதம் இருக்க ஒத்துக்கொள்ளாது. அப்படிப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்ற ஆசையை விடவேண்டும்.

விரதம் இருக்க முயன்று தோற்றுப்போனவர்கள் ஏராளம். அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கடவுளை நினைத்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இது போன்ற தேவையில்லாத போராட்டங்களை நடத்தக்கூடாது. ஆனால் தினமும் மதியம் அரை மணிநேரமாவது சிறிய ஓய்வு மனதிற்கு புதிய புத்துணர்வை தரும்.

உறக்கம்

தியானம் பயில தொடங்கி விட்ட ஆத்ம சாதகர்களுக்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேர உறக்கம் போதுமானது. ஓய்வுக்காக எவ்வளவு நேரம் உறங்குகிறோம் என்பது முக்கியமல்ல. நாள் முழுவதும் விழிப்புணர்வுடனும், அமைதியுடனும் இருந்து நரம்பு தளர்ச்சியையும் பதட்டத்தையும் குறைப்பதில் எவ்வளவு தூரம் வெற்றி அடைகிறோம் என்பது தான் முக்கியமானது. தியானம் சாத்தியமாவதற்கு முதல்படியாக நமக்கு மன, உடல் இறுக்கங்களை தளர்த்த தெரிய வேண்டும். நரம்புகளில் படிந்திருக்கும் அழுத்தங்களை குறைக்க தெரிய வேண்டும். எப்போதும் படபடப்பாக இருப்பவர்கள் தியானம் செய்ய முடியாது.

அடுத்ததாக நமது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் அவை நல்லவையாகவும் உயர்ந்தவையாகவும் இருக்கும் போது கூட, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். பரம்பொருளிடத்து சரணாகதி செய்ய வேண்டும். அப்போது தான் மனத்தையும், நரம்புகளையும் பலவீனப்படுத்தும் கவலைகளையும், இறுக்கங்களையும் பெரிதும் குறைத்து மனத்தை அமைதிப்படுத்த இயலும். உறங்கச் செல்லும் முன்பு உணர்வுகளை தூண்டும் நிகழ்ச்சிகளை சிந்திப்பதோ, படிப்பதோ, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்றவற்றில் செலவழிப்பதோ கூடாது. மாலையிலிருந்தே மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல வேண்டும். தியானத்திற்கு முன் கடந்த காலங்களில் அடி ஆழத்தின் மனதில் புதைந்திருக்கும் கேடு விளைவிக்கும் எண்ணங்களை சிறிது சிறிதாக மாற்றி தூய்மைப்படுத்த வேண்டும். இரவில் படுத்து உறங்கும் நிலையில் திடீரென்று விழிப்பு வந்து விட்டாலும் அப்போது ஜெபம் செய்ய தொடங்கலாம். அநாவசியாக அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக படுத்தவாறே மனதில் அமைதியான ஜெபம் செய்யலாம். இரவில் படுக்க செல்லும் முன் தியானத்திற்கு எடுத்துக் கொண்ட மந்திரத்தை நூறு முறை ஆயிரம் முறை என்று முடிந்த வரை மனதில் தியானித்து விட்டு படுக்கலாம்.

குறிப்பிட்ட ஆதாரத்தில்

தியானத்திற்கென்று ஒரு குறிப்பிட்ட ஆதாரம் அல்லது உணர்வு மையத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு உகந்த ஆதாரத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று திகைக்க வேண்டாம். நமது அகங்காரம் எங்கிருந்து தொடங்குகிறது? அதன் ஆரம்பம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அல்லது உடலின் எந்த பகுதியில் மனதை ஒருமுகப்படுத்தினால் இறைவனோடு இணக்கம் கொள்ள முடிகிறது என்று பார்க்க வேண்டும். அது தான் தியானத்திற்கேற்ற ஆதாரம். இதயத்திற்கு கீழுள்ள எந்த உடல் ஆதாரங்களிலும் தியானம் செய்ய வேண்டாம். சில தந்திர சாஸ்திரங்கள் கீழ் ஆதாரங்களில் தியானம் செய்யும்படி சொல்லுகின்றன. ஆனால் ஒரு போதும் அப்படி தியானம் செய்ய வேண்டாம். தியானத்தில் புதிதாக ஈடுபடுபவர்களுக்கு மனத்தை கீழ் ஆதாரங்களில் நிலை நிறுத்துவது காமம் முதலான உணர்ச்சிகளை கிளப்பி விடுவதாக அமையும். இதயத்திலும் அதற்கு மேலுள்ள ஆதாரங்களிலும் மனத்தை வைத்திருப்பது (உ.ம்: புருவமத்தி) எப்போதும் நல்லது.

உணவுக்கட்டுப்பாடு

ஆசனத்தை விட்டு எழுந்தவுடன் பிறருடன் சிறிது நேரம் பேசக்கூடாது. மனதின் அமைதியையும் அடக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். தியானத்திற்கு பிறகு இப்படி அமர்வது என்பது சுருக்கமாக இருக்க வேண்டும். பதிணைந்து நிமிடம் தியானம் செய்து விட்டு நாற்பத்தைந்து நிமிடம் உட்கார்ந்திருக்க கூடாது. ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் தியானம் செய்தால், அந்த தியான மனநிலையை உலக விவகாரங்களிலிருந்து பாதுகாக்க ஒரு பதினைந்து நிமிடம் உட்காரலாம்.

ஆசனம்

தியானத்திற்கு வசதியான இரண்டு ஆசனங்களை அல்லது அமரும் நிலைகளை பழகி வைத்திருக்க வேண்டும். நெடுநேரம் அமர்ந்திருப்பது சிரமமாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். தற்போது இந்தியாவில் பல்வேறு யோகாசன பயிற்சி மையங்கள் வந்து கொண்டிருக்கின்றன. யோகாசனங்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. ஆனால் தியானம் மட்டுமே முக்கிய நோக்கமாக இருக்க விரும்புபவர்கள் யோகாசனத்தின் இரண்டு இருக்கை ஆசனங்களை கற்றுக் கொண்டால் நலம். நெடுநேரம் தியானத்தில் அமர்ந்திருந்தாலும் சிரமம் தெரியாமலும், இறுக்கமின்றி வசதியாக; அதே சமயம் சொகுசாக இல்லாமல் உடலும் தலையும் நேரே இருக்கும்படி அமர்ந்திருப்பது தான் யோக ஆசனத்தின் நோக்கம். நெடுநாள் பயிற்சிக்கு பின்னர் இப்படி அமர்வது இயல்பாக வரும்.

சீரான சுவாசம்

ஒழுங்கும் கட்டுப்பாடும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலாதவர்களும், தகுந்த குரு ஒருவரின் வழிகாட்டுதல் இல்லாதவர்களும் மூச்சை அடக்கி வைத்து பயிலும் பிராணயாமம் பயிலக்கூடாது. அத்தகையோருக்கு பிராணயாம பயிற்சிகள் ஆபத்தை விளைவிக்கும். ஆனால் மூச்சை அடக்காமல் சீராக சுவாசிக்க பழகிக் கொள்வதில் எந்த அபாயமும் கிடையாது. முதலில் தியானத்திற்கு அமரும் குறிப்பிட்ட நேரங்களில் சீரான சுவாசத்தையும் பழகி வரவேண்டும். பிறகு மற்ற நேரங்களில் சுவாசத்தை சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ளலாம். எல்லா நேரங்களிலும் சுவாசம் சீராகவும், ஆழ்ந்ததாகவும் இருக்கும் வரையில் சீரான சுவாசபயிற்சியை செய்து வர வேண்டும். சீராக சுவாசிப்பது இயல்பான பழக்கம் ஆகி விடவேண்டும். தாறுமாறான சுவாசம் உடலின் சக்தியை வீணாக்குவதுடன் மனதையும் அமைதியற்றதாக்கும்.

சீரான சுவாசத்தால் மனம் சீராக இயங்க வேண்டும். பிராணன் சீராக இயங்க வேண்டும். சரீரமென்னும் இயந்திரத்தின் சக்கரங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும். அப்போது மனதும், உடலும் ஆனந்த உணர்வுகளால் நிரப்பப்படும்.

எப்போதும் விழிப்புணர்வுடன்

வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் மனதை ஒருங்கிணைத்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எல்லா சமயங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். நமது பிறவியில் இருக்கும் குற்றங்களை அறிந்து கொள்ளும் முயற்சி இருக்க வேண்டும். அதாவது தன்னை ஆராய்தல் என்று இதை சொல்லலாம். இது தியானம் செய்பவர் மேலும் மேலும் தன்னை தூய்மைப்படுத்தி முன்னேற உதவும். ஆனால் "நான் ஒரு பாவி " என்ற எதிர்மறை எண்ணத்தை மனதில் நிலை நிறுத்தக்கூடாது. அது தியானிப்பவரை மேலுல் பாவியாக்கி விடும். தியானத்தை சீர்குலைக்கும். எண்ணங்களை அலசி தவறுகளை திருத்துவதன் மேலும் மேலும் உடலும், மனதும் சுத்தப்படுத்தப்பட்டு தூயநிலைக்கு முன்னேற முடியும். உறுதியான பயிற்சிகள் மூலம் நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் எத்தகைய மோசமான பழக்கங்களையும் மாற்றி விடலாம் " என்கிறார் சுவாமி யதீஸ்வரானந்தர். தியானத்தில் பலனில் இது ஒரு சிறிய நிலை மட்டுமே.

பிராணயாமப்பயிற்சிகள் மூலம் உடல் மற்றும் மனதை உறுதிப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இன்றைக்கு பிராணயாமம் என்ற பெயரில் மூச்சை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் பல்வேறு இடங்களில் கற்றுத்தரப்படுகின்றன. மனதை குழப்பம் அற்றதாகவும், உடலை ஆரோக்கியமானதாகவும் யோகாசனங்கள் மூலம் சீர்படுத்திக் கொண்டு ஒரு குருவின் வழிகாட்டுதலுடன் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. கட்டுப்பாடற்ற மூச்சடக்கல் பயிற்சிகள் உடலையும், மனதையும் கெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதே யோகிகளின் கருத்து.

இவ்வாறான பிராணயாம பயிற்சிகளுக்கு பதிலாக தொடக்கத்தில் நாடிசுத்தி என்ற பயிற்சி மூலம் உடலில் தேங்கி கிடக்கும் நச்சுகளை வெளியேற்ற முடியும். நாடிசுத்தியால் முகம் பொலிவு பெறும். உடலில் பிராணவாயு தேக்கமில்லாமல் சென்று வரும். செல்களால் ஆக்கப்பட்டிருக்கும் உடலின் அத்தனை செல்களுக்கும் நிறைவான பிராணவாயு இதன் மூலம் கிடைக்கும்.

நாம் கடந்த தொடரில் சொன்னஉள்நாசி மூலம் சுவாசிக்கும் முறை பற்றி பார்க்கலாம். சாதாரணமாக மூக்கினால் காற்றை இழுக்கிறோம். ஆனால் அதை விடுத்து தொண்டையிலிருந்து புருவ மத்திக்கு செல்லும் புரையோடும் துவாரம் மூலமாக சுவாசிப்பது ஒரு முறை. இந்த பயிற்சியில் நாம் சுவாசிக்கும் உள் நோக்கி மூக்கின் வழியாக செல்வது போல் தோன்றினாலும், அது உணரப்படாது. பயிற்சி முறை: நின்று கொண்டு சுவாசக்காற்றினை வாயின் உதடுகளை ஓ வடிவில் குவித்து சப்தமில்லாமல் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து, அந்தக்காற்று உள்ளங்கால் முதல் உச்சிவரை உடம்பின் ஒவ்வொரு பாகமும், பிராணவாயுவால் நிரம்பிய உணர்ச்சி வர வேண்டும். மூச்சை இழுக்கும் போது ஓம் என்ற மந்திரத்தை உரிய அதிர்வுடன் உணர வேண்டும். ஓ என்று ஓங்காரத்தை மூச்சை உள்ளிழுக்கும் போது உணர்ந்து, ம் என்ற மெதுவான அழுத்தத்துடன் இந்த மூச்சை மெதுவாக வெளியேற்றவும்.

இந்த சுவாசத்தால் மூளைப்பகுதிக்குள் கீழேயிருந்து உயிர்க்காற்று மேலே ஏறி கண், காது முதலிய நுண்ணிய நரம்புகள் செல்லும் பகுதிகள் புத்துணர்வு பெறும். நரம்புவலி, தசைவலி நீங்கும். கல்லீரல், மண்ணீரல், நீரழிவு, செரியாமை, வாயுக் கோளாறுகள், மலச்சிக்கல் நீங்கும். உடலை இயக்குவிக்கும் கோளச்சுரப்பிகள் அதிகப்படியான பிராணவாயுவை பெற்று புத்துயிர் பெறும் என்று ஞானிகளால் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் விட எளிமையானது நாடிசுத்தி. தினமும் எளிதாக இதனை செய்து ரத்தம் மற்றும் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற முடியும். இந்த சுவாசப்பயிற்சியை எவரும் செய்யலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை. இதுபற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்.

 

-4தமிழ்மீடியாவிற்றகாக: ஆனந்தமயன்

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.