சமயம்
Typography

நுரையீரலின் நுண்ணிய ரத்தக்குழாய்களை நன்றாக திறக்க வைக்க உதவும் வயிற்று சுவாச பயிற்சியை பற்றி கடந்த தொடரில் பார்த்தோம். அது போல் நுரையீரலும்,

 

இதயமும் பலம் பெற மார்பு சுவாசப்பயிற்சி நன்றாக உதவுகிறது. நுரையீரல்களின் கண்ணறைக்குள் நன்றாக பிராணவாயு சென்று வரும் பட்சத்தில் உடலின் நுண்ணிய பாகங்களுக்கு வேண்டிய பிராணவாயு நன்றாக சென்று சேருகிறது.

தூய்மை பெறும் இரத்தத்தில் கலக்கும் பிராணவாயு இதயத்தால் நன்றாக அழுத்தி வெளித்தள்ளப்படும் போது அது உடல் முழுவதும் நன்றாக சுற்றி வந்து உறுப்புகளுக்கு போதிய உணவை தருகிறது. எனவே மார்பு சுவாசத்தின் மூலம் நுரையீரல் மற்றும் இதயம் ஆகிய இரண்டு முக்கிய உறுப்புகளும் சிறப்பாக பணியை செய்ய உதவுகின்றது.

செய்முறை

இரண்டு கைகளையும் மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் கடைசி விலா எலும்புகளை ஒட்டியபடி வைக்க வேண்டும். இப்போது கட்டை விரல் மார்பு நுனியை தொட்டவாறு இருக்க வேண்டும். அதாவது, மார்புக்கூட்டெழும்பு ஒன்று சேரும் இடத்தை தொட்டவாறு இருக்க வேண்டும். இப்போது மனதை மார்பு பகுதியில் செலுத்தியவாறு மூச்சை நன்றாக இழுக்கவும். அப்பொழுது மார்பு நன்றாக விரிவடையும். பின் மூச்சை நிறுத்தாமல் மூச்சை நிதானமாக வெளிவிடவும். நுரையீரலுக்குள் ஏற்கனவே இழுக்ப்பட்ட காற்று முழுவதும் நன்கு வெளியேறும் படி மூச்சை வெளிவிடும் போது மார்பு சுருங்கும். இந்த நிலையில் நமது கவனம் விரிந்து சுருங்கும் மார்பின் மீது மட்டும் பதியும் படி கண்களை இறுக்கமில்லாமல் மூடி மூச்சை கவனிக்கவும். உடல் களைப்படையாமல் ஒரு சுற்றுக்கு 10 என்ற அளவில் 10 சுற்றுக்கள் வரை செய்யலாம்.

இந்த பயிற்சியை சாதாரணமாக நின்று கொண்டோ அல்லது சாதாரணமான உட்காரும் நிலை ஆசனமான சுகாசனத்தில் இருந்தும் செய்யலாம். இந்த பயிற்சியால், இரத்தம் சுத்தமடைகிறது. நுரையீரல் மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடாமல் செல்கிறது. சிலருக்கு எளிய வேலைகள் செய்தால் கூட மார்பு படபடப்பு காணப்படும். மார்பு சுவாசத்தை தொடர்ந்து செய்து வரும் போது இந்த படபடப்பு குறைந்து இதய தளர்ச்சி நீங்கிவிடும். நுரையீரலின் நடு மற்றும் கீழ் அறைகளின் காற்றறைகள் மற்றும் அங்கு இருக்கும் நுண்ணிய இரத்த குழாய்கள் நன்கு விரிவடைகின்றன. இதனால் பிராணவாயு முழுவதுமான உட்கிரகிப்பட்டு உடலுக்கு சக்தி ஏற்படுகிறது.

இந்த எளிய மூச்சு பயிற்சியானது, எந்த வித சிரமும் இல்லாமல் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு மூச்சுபயிற்சியாகும். இதே விதத்தில் அமைந்தது தான் மேல்மார்பு சுவாசப்பயிற்சியும். இதில் இரண்டு உள்ளங்கைகளையும் தோள்பட்டைகளுக்கும் கீழே மார்பின் மேற்பகுதியில் வைத்துக் கொண்டு, மணிக்கட்டு பகுதிகள் மார்பின் மேல் பகுதியை தொட்டவாறு இருக்க வேண்டும். இப்போது மனதை மார்பின் மேல் பகுதியில் நிலை நிறுத்த வேண்டும். பின் வயிற்றை லேசாக உள்ளிழுக்கவும். இதன் பின் மூச்சை மெதுவாக உள்ளிழுத்தவாறே, சுவாசத்தின் மூலம் மார்பை மேல் நோக்கி தூக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளிவிட்டு மார்பை கீழிறக்க வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது முழுக்கவனமும் ஏறி இறங்கும் மார்பிலும் சென்று வரும் மூச்சிலும் தான் லயித்திருக்க வேண்டும். இந்த பயிற்சியால் மார்பு நன்றாக சுருங்கி விரிகிறது. இந்த பயிற்சியை நின்று கொண்டோ, வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம் போன்ற நிலைகளில் செய்யலாம்.

இந்த பயிற்சியால், மூச்சுபாதை மற்றும் தொண்டையில் உள்ள கசடுகள் நீங்கும். பாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் சங்கீத பிரியர்களுக்கு இந்த பயிற்சியால் நல்ல குரல்வளம் பெற முடியும். இந்த பயிற்சியால் நுரையீரலின் மேற்பகுதியில் உள்ள இடது மற்றும் வலது இதழ்களின் காற்றறைகள் மற்றும் நுண்ணிய இரத்தக்குழாய்கள் பலம் பெறுகின்றன.

இது போன்ற மூச்சு பயிற்சிகளை சில ஆசனங்களில் அமர்ந்த நிலையில் செய்யலாம் என்று யோகாசிரியர்கள் சொல்லி வைத்துள்ளனர். இதில் வஜ்ராசனம் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகிறது. உடலை வஜ்ரம் போல் ஆக்கும் அந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பிறந்து நடக்க தொடங்கியது முதல் மனித உடலை தாங்கி நின்று எல்லா செயல்களுக்கும் மனிதனை அழைத்து செல்லும் அடித்தளமாக விளங்கும் கால்களுக்கும், மூட்டுக்களுக்கும் அபாரமான வலிமையை வஜ்ராசனம் தருகிறது. இந்திரனின் மிகப்பலமான ஆயுதமாக விளங்கிய வஜ்ர ஆயுதம் போன்ற உறுதியை இந்த ஆசனம் மனிதர்களுக்கு தருகிறது என்றே சொல்லலாம்.

கடினப்பட்டு பிரயாசையுடன் செய்யும் சில ஆசனங்களை விட எளிய முறையில் செய்ய முடிகின்ற வஜ்ரசானத்தால் கிடைக்கும் பலன்கள் அதிகம். பொதுவாக, யோகாசனங்கள் அனைத்திலும் முதுகெலும்பை ஏதாவது ஒரு கோணத்தில் வளைக்கும் படியாக யோகிகள் வகுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், மனித உடல் முழுவதையும் கட்டுப்படுத்தும் முக்கியமான நரம்புகள் அனைத்தும் முதுகுதண்டு வழியாகவே செல்கிறது. மூளையில் இருந்து கிளம்பி வரும் இந்த நரம்புகள் அனைத்தையும் பாதுகாத்து அவை எங்கு பிரிந்து செல்ல வேண்டுமோ அந்த இடங்களில் முதுகு தண்டவடத்தில் இருந்து தான் பிரிகின்றன. அதனால் தான் மனித உடலில் முதுகெலும்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த முதுகெலும்புகள் சிறுசிறு துண்டுகளால் ஆன 31 எலும்பு வளையங்கள் போன்ற ஒரு அமைப்பாக இயற்கை உருவாக்கி இருக்கிறது.

முதுகெலும்பின் வழி செல்லும் குறிப்பிட்ட நரம்புகளின் இயக்கத்தை வலுப்படுத்த அதற்கேற்ற ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட உறுப்புக்கு செல்லும் நரம்பு ஊக்குவிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் தக்கபடி இவ்வாறு நரம்புகளின் இயக்கம் மாறுபட்டு உடல் வலுப்படுத்தப்படுகிறது.

செய்முறை

விரிப்பின் மீது முழங்காலிட்டு அமர்ந்து கொள்ளுங்கள். கால்விரல்களை வெளிநோக்கி நீட்டி உள்ளங்கால் மற்றும் குதிகால்கள் மேல்நோக்கி இருக்கும்படி குதிகால் மற்றும் பாதங்களை தளர்த்தி குதிகால்களின் மீது அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு முழங்கால்களின் மீது வைத்து முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் மூச்சை சாதாரணமாக உள்ளிழுத்து வெளிவிடுங்கள். எவ்வளவு நேரம் இந்த நிலையில் அமர முடிகிறதோ, அதற்கேற்ப பலனும் அதிகம். குறைந்தது 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தில் அமரலாம்.

இந்த ஆசனத்தை ஆண்களும் பெண்களும் செய்து வந்தால் இடுப்பு, மூட்டுக்களில் ஏற்படும் இறுக்கம் தளர்ந்து இடுப்பு, கால்கள்,மூட்டுகள், பாதங்கள் ஆகியவை பலம் பெறும். குதிகால்களும் வலுவடையும். சிலருக்கு அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழும் போது குதிகால்வலி காணப்படும். அவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வலி நாளடைவில் மறைந்து விடும். சிலருக்கு தொடர்ந்து செரிமானக் கோளாறு இருந்து வரும். அவர்கள் சாப்பிட்டவுடன் இந்த ஆசனத்தில் 5 நிமிடங்கள் அமர்ந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமடைந்து விடும். இதை கண்கூடாக காணலாம். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு திடமான மனநிலை உருவாகும். உடலில் தங்கும் துர்நீரை தேங்கவிடாமல் வெளியேற்றும் ஆசனம் இது. கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதங்கள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். அதற்கு பிறகு செய்வது கூடாது.

நலம் தரும் முத்திரைகள்

கடந்த தொடரில் முத்திரைகள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். பொதுவாக, இந்து கடவுள்கள், ரிஷிகள், முனிவர்கள் தவத்தின் நிலையில் விரல்களை ஒரு குறிப்பிட்ட அமைப்பில் வைத்திருப்பதை கவனிக்க முடியும். இந்த அமைப்பு என்பதை முத்திரை என்ற அடிப்படையில் பிரித்திருக்கிறார்கள் முன்னோர்கள். மனிதன் நோயின்றி வாழ கண்டுபிடிக்கப்பட்ட யோகாசனங்கள், பிராணயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றின் ஒரு அங்கம் தான் இந்த முத்திரைகளும். இதனை தந்திரக்கலையின் ஒரு பகுதி என்கிறார்கள்.

அக்குபிரஷர் என்று இன்றைய வைத்திய முறை இதனை வகுக்கிறது. அதாவது கைகளிலும், விரல்களிலும் பல சக்கரங்கள் உள்ளன. நமது கைவிரல்களை வெவ்வேறு வகையாக சேர்த்து வைப்பதன் மூலம் இந்த முத்திரைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த முத்திரைகள் உருவாக்கப்படும் போது கை, விரல்களில் இருக்கும் பல்வேறு சக்கரங்கள் இயங்கி சக்தியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உடலிலேயே அதிக நரம்புகள் உள்ள பகுதியாக இருக்கும் அதாவது இன்றைய விஞ்ஞான ரீதியில் பார்த்தால், குறிப்பிட்ட அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன எனலாம். இது பற்றி வரும் தொடர்களில் பார்க்கலாம்.

தொடரும்....

-4தமிழ்மீடியாவிற்றகாக: ஆனந்தமயன்

 

இத்தொடரின் முன்னைய பகுதிகளைக் காண இங்கு அழுத்துங்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்