சமயம்
Typography

 யோகாசனங்கள் மனிதனை நோய்களின் பிடியில் இருந்து விலக்கி வைக்கின்றன. வந்த நோய்களையும் போக்கிக் கொள்வதற்கு ஆசனங்கள் உதவுகின்றன.

இன்றைக்கு உடல் பயிற்சி என்ற பெயரில் உடலின் சதையை உப்பலாக்க ஜிம்கள் என்ற உடற்பயிற்சி நிலையங்கள் உதவுகின்றன. கட்டுமஸ்தான உடலை இந்த ஜிம்கள் என்ற பயிற்சி நிலையங்கள் உருவாக்குவதாக சொல்கின்றன. ஆனால் அனுபவம் என்னவென்றால், இந்த பயிற்சி நிலையங்களுக்கு சென்று உழைத்த ஜிம் உழைப்பாளிகள் பலரும் எளிதில் நோயின் பிடியில் சிக்கி விடுகிறார்கள். கட்டுமஸ்தான உடற்கட்டை கொண்டவர் என்று கருதப்படுபவரும், ஜிம் உழைப்பாளிகளின் கனவு நாயகன் என்ற நிலையில் இருப்பவருமான அந்த ஹாலிவுட் ஹீரோவுக்கு கடைசியில் இதயவால்வு மாற்றியாக வேண்டிய கட்டாயம் வந்தது. இது தான் ஜிம்களால் ஏற்படும் பலன். அந்த பயிற்சிகள் உடலை தடிக்க வைக்கின்றனவே ஒழிய வேறு எதையும் செய்வதில்லை. ஆனால் ஆசனங்கள் உடல் மற்றும் மனதை செம்மைப்படுத்துகின்றன. யோகாசனங்களை மேற்கொண்டு வருபவர்கள் பலரும் நீண்ட நாட்கள் நோயின்றி மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதும் கண்கூடான ஒன்று.

அந்த வகையில், உடலை நோயின் பிடியிலிருந்து விலக்கி வைக்க உதவும் நௌலி என்ற ஆசனத்தை பார்க்கலாம். பார்க்க மிகவும் எளிதான ஆசனம் போல் தோன்றினாலும் இது பழக பழக மட்டுமே இயல்புக்கு வரும். இதன் செய்முறையை பார்க்கலாம். இந்த நௌலியை மத்திம நௌலி, வாம நௌலி என்ற தட்சிண நௌலி என இரண்டு பாகங்களாக செய்யலாம்.

சாதாரண நிலையில் நிற்கவும். பின்னர் அப்படியே சிறிது முன்பக்கம் குனிந்து, கைகளை சேர்த்து தொடைப்பகுதியின் இடையில் வைக்கவும். வயிற்றை தளர்த்தி மூச்சை பூரணமாக வெளியில் விட்டு வயிற்றை உள்ளிழுக்கவும். இப்போது நாம் முன்பு சொன்ன உட்டியாணா ஆசனத்தின் நிலை கிடைக்கும். இதே நிலையில் வயிற்றின் நடுப்பகுதியை மட்டும் எக்கி உள்ளிழுக்கவும். இப்படி செய்தால் வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள சதைக்கூட்டமானது திரண்டு வயிற்றின் மையப்பகுதிக்கு வரும். அப்போது ஒரு பாம்பின் உடல் அமைப்பை போல் அது திரண்டு உருளையாக காணப்படும். வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்கள் பள்ளம் போல் உருவாகி இருக்கும். இந்த நிலையில் ஐந்து விநாடி வரை இருந்து பின் வயிற்றை தளர்த்தி, நிதானமாக மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவரால் முடிந்த அளவுக்கு மூன்று முதல் ஆறு முறை வரை செய்யலாம். ஒவ்வொரு தடவையும் இடையில் நன்றாய் நிமிர்ந்து இரண்டு மூன்று தடவை மூச்சை சாதாரணமாக இழுத்து விடவும். இதற்கு மத்திய நௌலி என்று பெயர்.

இந்த நௌலியை, காலை சிறிது அகலமாக வைத்து கைகளை தொடையின் மேல் வைத்தும் செய்வதுண்டு. தொடக்க நிலையில் இதனை பழகுபவர்கள் தொடைகளின் சந்துகளில் கைகளை வைத்து செய்வதால் இந்த நௌலி செய்வதற்கு எளிதாக வரும். அப்படி செய்யும் போது முழங்கைகளால் வயிற்றில் இரண்டு பக்கமும் சிறிது அழுத்தினாற் போல் செய்து நடுவில் சதை திரளச் செய்யலாம். இது போல் செய்வது தொடக்க நிலையில் இந்த ஆசனத்தை பழகுபவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே ஆசனம், மூச்சு பயிற்சி செய்து பழகியவர்களுக்கு இது எளிதாக வரும். சரியாக செய்ய வந்தபின் முழங்கைகளால் வயிற்றை அழுத்தி பழக வேண்டியதில்லை. நௌலியை எத்தனை முறை முயற்சித்தாலும் சிலருக்கு வயிற்று சதைகள் நடுவில் திரண்டு வராது. இதனால் அவர்கள் உடனே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயல வேண்டும். சிலருக்கு சில நாட்களிலேயே நௌலி எளிதாக செய்ய முடியும். சிலருக்கு சில மாதங்கள் பயிற்சிக்கு பிறகு தான் செய்ய முடியும். நௌலியில் பல விதங்கள் உண்டு. பொதுவாக நௌலிக்கிரியா என்பது மத்திய நௌலி தான் என்று வைத்துக் கொள்ளலாம்.இது போன்றே வாமநௌலி என்ற தட்சிண நௌலியை பார்க்கலாம். கால்களை சற்று விரித்து நிற்கவும். முன்பக்கம் சிறிது குனிந்து இடது தொடையின் மேல் கையை நன்கு அழுத்தினால் வயிற்றின் இடது பக்க சதைக்கூட்டங்கள் ஒதுங்கி இடது வலது புறமாக திரளும். இதைப் போலவே வலது பக்க தொடையின் மேல் கையை நன்கு அழுத்தினால் வலது பக்க சதைக்கூட்டங்கள் இடது பக்கமாக திரளும். இதற்கு தட்சிண நௌலி என்று பெயர். இந்த நௌலியை தொடர்ந்து இடது, வலது என்று வேகமாக செய்யும் போது அது பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த நௌலியை எத்தனை தடவை செய்ய முடியுமோ அத்தனை முறை செய்யலாம்.

தொடக்கத்தில் தட்சிண நௌலியானது சிறிது சிரமமாக தோன்றும். ஆனால் இடுப்பு பகுதியை சிறிது வளைத்து இதனை செய்வதன் மூலம் எளிதாக வந்து விடும். இது போல் நௌலிக்கிரியா என்ற ஒரு பயிற்சியும் உண்டு. அதாவது, அலைகளைப் போல் வயிற்று சதைகளை அடிவயிற்றிலிருந்து மேல் வயிற்றுக்கும், மேல் வயிற்றிலிந்து அடிவயிற்றுக்கும் படிப்படியாய் மடித்தாற் போல் செய்ய வேண்டும். இந்த பயிற்சியின் போது மூச்சை சாதாரணமாக உள் இழுக்கவும், வெளிவிடவும் செய்யலாம். மேற்சொன்ன ஆசனங்கள் அனைத்துமே நௌலி ஆசனங்கள் தான். இவற்றில் எதை செய்தாலும் பலன்கள் அதிகம்.

குறிப்பு: வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஹெர்னியா என்னும் அடிவயிறு சதை தள்ளும் கோளாறு உள்ளவர்கள், வயிற்றுப்புண் உடையவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய பலவீனம் உள்ளவர்கள் மற்ற எளிதான ஆசனங்கள், மூச்சுபயிற்சிகள், உணவு பழக்கங்கள் மூலம் தங்கள் உடல் நல குறைபாடுகளை சரி செய்து பின்னர் நௌலியை பழகலாம். இந்த ஆசனத்தை பதினான்கு வயதிற்கு உள்பட்ட சிறுவர்களும், கர்ப்பம் தரித்த பெண்களும் கட்டாயம் பழக கூடாது.

பலன்கள்: நௌலியின் பலன் அதிசயிக்கத்தக்கது. இந்த ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். இந்திரியப் பை மிகவும் ஆரோக்கியமடைவதால் ஆண்மை அதிகரிக்கும். உடலுறவின் செய்கைகள் நமது மனதின் கட்டுப்பாட்டுக்கு வரும். வியாதிகள் என்னும் பிடியிலிருந்து உடல் விலகி விடும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ நௌலி உறுதுணையாக இருக்கும்.

யோகா தொடர் :

உபவாசம் இருத்தலின் மகத்துமும் சில ஆலோசனைகளும்! யோகாசன பயிற்சி 18

- 4தமிழ்மீடியாவுக்காக ஆனந்த மயன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்