சமயம்

முருகப்பெருமான் கோயில் கொண்டு எழுத்தருளி வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் அமைந்திருக்கும் இடம் யாழ்ப்பாணம் நல்லூர். இங்கு “நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் " என்ற பெயரில் ஓர் ஆதீனத்தை அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர் மணி ஐயர் என்று கூறினால் மிகையாகாது.

இந்தியாவிலே இருப்பது போல இலங்கையிலும் ஓர் ஆதீனம் அமைக்கப்பட வேண்டும் என்று அயராது பாடுபட்ட இவர் மதுரை ஆதீனத்திலே காசாயாம் பெற்றுத்துறவு பூண்டு, ஸ்ரீல ஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞான சம்பந்த பரமாசாரியர் என்ற நாமாகரணத்துடன் நல்லையம்பதியிலுள்ள முருகனுடைய திரு வீதியிலே 1966 ஆம் ஆண்டு இந்த ஆதீனத்தை ஸ்தாபித்தார்.

இவருடைய கதாப்பிரசங்கம் மிகவும் இனிமையானது. கேட்கக் கேட்க ஆவலைத் தூண்டுமேயொழிய அலுக்காது. தமது கணீரென்ற குரலினாலே எல்லோரையும் தம்பக்கம் ஈர்த்திழுத்து வைத்திருக்கும் திறன் படைத்தவர். நல்லூர் முருகனுடைய மஹோற்சவ காலத்தில் இவரது பிரசங்கம் 25 நாளும் தொடர்ந்து நடைபெறும். மகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம், திரு விளையாடல் புராணம், பெரிய புராணம் என்று நிகழ்கின்ற கதாப்பிரசங்கம் எல்லோருக்கும் புரியும் வகையில் இலகு நடையில் எளிய தமிழில் சொல்வதில் இவருக்கு நிகர் இவரே.

இந்தத் தொடர் பிரசங்கம் கேட்பதற்காக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் அடியார் கூட்டம் நல்லூர்க்கந்த சுவாமி கோயிலை முற்றுகையிடும். கோயிலுக்கு முன்பாக அமைந்துள்ள தண்ணீர்ப்பந்தலி லேதான் பிரசங்கம் நடைபெறும். ஸ்ரீல ஸ்ரீ சுவாமிகளின் கதாப்பிரசங்கம் இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் என்று பல இடங்களிலும் நடைபெற்றிருப்பது நமக்குப் பெருமையைத் தரும் விடயமாகும்.

நல்லை ஆதீனம் அமைக்கப்பட்டு இன்று வரை அதன் சமயப்பணி நல்ல முறையில் தொடர்ந்து கொண்டே யிருக்கின்றது. பாலர் வகுப்புகள், சங்கீத வகுப்புகள், வயலின் மிருதங்க பயிற்சி வகுப்புகள், சமய பாட சைவப்புலவர் பயிற்சி வகுப்புகள் என்று இன்னோரன்ன பலவும் சுவாமிகளின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொண் டாற்றிய சுவாமிகள் நல்லூர்க்கந்தன் திரு வீதியில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வீதி பஜனையும் செய்து அடியவரை மகிழ்வித்தார்.

நல்லை ஆதீன ஸ்தாபகர் முதலாவது குருமஹா சந்திதானம் என்ற பெருமையையுடைய மணி ஐயர் வண்ணை ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வடக்கு வீதியில் வாழ்ந்த அந்தண மரபைச் சேர்ந்தவரான செல்லையா ஐயர் - கனகாம்பாள் தம்பதியருக்கு 08.02.1918 இல் மகனாகப் பிறந்தார். இவருடைய இயற் பெயர் சிவசுப்பிரமணியர் என்பதாகும்.

யாழ். குடாநாட்டில் இவரு டைய பிரசங்கம் நடைபெறாத கோயில்களே இல்லையெனு மளவுக்கு மூலை முடுக்கெல்லாம் சென்று நிகழ்ச்சிகள் செய்து சைவம் வளர முற்று முழுதாகத் தம்மையே அர்ப்பணித்துப் பாடுபட்டவர் சுவாமிகள் என்று கூறினால் அது மிகையாகாது.சுவாமிகள் நல்லை ஆதீனத்தின் சார்பில் “அருளமுதம்” என்று ஒரு சமய சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தார்.

இந்த அருளமுதமானது பல ஆக்கபூர்வமான நல்ல தத்துவக் கருத்துக்கள் அடங்கிய சமய சஞ்சீவியாக வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க தாகும். இவ்வாறு கதாப்பிரசங்கம் செய்து அதில் வருகின்ற வருமானத்தைக் கொண்டே நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தை நிர்வகித்து வந்த சுவாமிகள் வருடந்தோறும் வரும் தைப்பொங்கல் முதலாக மார்கழித் திருவாதிரை திருவெம்பாவை வரையான பண்டிகைகளையும் விழாக்களையும் விரதங்களையும் சமய குரவர்களது குருபூசைகளையும் இயன்றவரை விமரிசையாக நடத்தி வந்துள்ளார்.

அவரது அடியையொற்றி இப்பொழுது ஆதீன குரு முதல்வராக இருக்கின்ற இரண்டாவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளும் நாட்டின் சைவ வளர்ச்சிக்கு நல்ல முறையில் பாடுபட்டு வருகின்றார். இப்பொழுது இங்கு நடைபெறுகின்ற ஆலய மஹாகும்பாபிஷேக வைபவங் களிலும் மஹோற்சவ நிகழ்வுகளிலும் மற்றும் விழாக்களிலும் இவர் அருளாசியுரையை வழங்கி அடியார்களின் அன்புள்ளங்களில் ஆன்மீகம் நிறைவுறப் பாடுபட்டு வருகின்றார்.

இலங்கையில் மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, லண்டன், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் சென்று அங்கு நடைபெறுகின்ற விசேட சைவ மாநாடுகளில் அருளாசியுரையை வழங்கி வருகிறார்.

- நல்லை ஆதீன ஸ்தாபகரின் 34வது குருபூசை நாளில்“கலாபூஷணம்” இராசையா ஸ்ரீதரன் அவர்கள் எழுதப்பெற்று, 27.03.2015 தினகரன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையினை, கட்டுரையாளர் மற்றும் வெளியீட்டாளர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்துள்ளளோம். - 4தமிழ்மீடியா குழுமம்