சமயம்

கேட்ட வரம் அருளும் வரலக்க்ஷ்மி தேவியின் விரத்தை வெள்ளிக்கிழமையில் அனுஸ்டிப்பது வழக்கம்.

பெண்கள் நற்கதிப்பயனை அடைய இவ்விரதமதை ஆண்டுக்கு ஒருமுறை கைக்கொள்வர். இவ்விரதத்தை முறையாகக் கைக்கொண்டு பெண்கள் கையில் நூல் அணிவர். இல்லறம் நல்லறமாகவும் செளபாக்யம் நிலைத்து நிற்கவும் அன்பு கருணை உறுதி பெற்று சிறந்து விளங்கவும் வரலக்ஸ்மியை பாடிப்பரவுவர். நற்கல்வியும் செல்வமும் துணிவும் பெற்று கணவனுடன் நீண்ட ஆயுள் பெற்றவராய் சகல சுகங்களையும் அனுபவித்திட அருள் தருபவள் வரலக்ஸ்மியாவாள். வரலக்ஸ்மி விரத நாளன்று பெண்கள் நீராடி தூய ஆடை அணிந்து பலகையில் அமர்ந்து கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ஒரு தலைவாழையில் அல்லது தட்டில் அரிசி பரப்பி அதன்மேல் பித்தளைக் குத்து விளக்கை வைத்தல் நலமாகும். பின்னர் விளக்கிற்கு மஞ்சல்பூசி விளக்குத்தண்டில் பட்டுத்துணிகட்டி சந்தனம் குங்குமம் பொட்டு இடல் சிறப்பு. பூமாலை, சரம் அணிந்து அலங்காரம் செய்தல் நலமாகும்.

அரிசிபரப்பிய தட்டில் விளக்கை வைக்குமுன் ஓம் என்று வரைந்த பின்னர் ஓம் எழுதிய எழுத்திற்குள் எட்டு இதழ் தாமரைப்பூ வரைந்து பூவின் நடுவட்டத்திற்குள் சுமங்கலிகள் பூஜைசெய்யின் <ஶ்ரீம்> என்றும், கன்னிகள் பூஜைசெய்யின் <ஹிரிம்> என்றும், பள்ளியில் படிக்கும் சிறுமிகள் <ஐம்> என்றும் எழுதியபின் வணங்கி விளக்கை அதன்மேல் வைக்கவேண்டும். பின்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அறுகம் புல் சாத்தி விளக்கிற்கு அருகில் வெற்றிலையின் மீது வைக்கவும். வெற்றிலை பழங்கள் பாக்கு மஞ்சள் தேங்காய் இவற்றை அருச்சனை செய்ய அருகில் தட்டில் வைத்திருக்கவேண்டும். அடுத்து சிறிய செம்பில் நீர்வார்த்து கரண்டியுடன் தட்டில் பூக்கள் முதலியனவும் வைத்திருத்தல் சிறப்பாகும். அத்தோடு மணி கற்பூரம் பத்தி சிறிய தட்டில் சூடம் ஏற்றி காண்பிக்க என எல்லாம் அருகே எடுத்து வைத்துக் கொளல் நலம். வீட்டில் பூஜையை ஆரம்பித்து செய்ய பூஜை அறையில் கிழக்கு முகமாக..இருந்து விநாயகரை முதலில் நினைந்து பூஜையைத்தொடங்கி செய்தல் நன்மை பயக்கும். அதன்பின் மலர்களாலும் குங்குமத்தாலும் மகாலஸ்மியை நினைந்து அஸ்டோத்ரம் சொல்லி அர்ச்சித்தல் முறையாகும். விரும்பிய இனிப்பான பிரசாதம் நைவேத்யம் படைத்தல் நலம். கற்பூர ஆரத்தி செய்து வழிபட்டு விழுந்து வணங்குதல் முறையாகும் வரலஸ்மி பாடல்கள் பாடித் துதிப்பது மங்களமாகும்.

ஆலயங்களில் சென்று இப்பூஜை வழிபாட்டைச் செய்வதும் இந்துக்கள் மரமாகும். தெய்வதரிசனம் கிடைக்கப்பெற்று மனதில் மகிழ்வும் பெருநிறைவும் அமையப் பெறும். எல்லோரும் சேர்ந்து அம்பிகைக்கு திருவிளக்கு பூஜை செய்து பாடிப்பணிந்தேத்துவர். பின்பு அம்பிகையை வலம் வந்து வேண்டிய வரத்தைதந்தருள வேண்டி வழிபடுவர். அதன்பின் சிவாச்சாரியார் மூலம் கையில் நோன்புச்சரடு (நூல்) அணிந்து அர்ச்சித்து வீடு செல்வர். உலகின் உயிர்களுக்கெல்லாம் அன்னையாக சக்தியாக விளங்கும் மாதா திரிபுரசுந்தரி உலகை உண்மையாக காத்து துரிய வாழ்வை தருபவள், மகாலக்ஸ்மி, சரஸ்வதி ,துர்க்காதேவி எனப் பலரூபங்களில் காட்சிதந்து அறிவை பொருளை தெளிவைத் தருகின்றவள். இச்சை,கிரியை ஞானம் எனும் மூன்றுமாக, எண்ணம், செயல்,விளைவு என்பதின் காரணியாக சக்தி அவள் துணையாகிறாள். சிவனின் இணையானாள், சீவன்களுக்கு துணையானாள். இலக்ஸ்மியாக பொருளைத்தரும் சக்தியவள், வரமருளும் வரலக்ஸ்மியாக இந்நாளில் 24.8.18 அன்று வெள்ளிக்கிழமை அருள்மழை பெய்கிறாள். உலகின் பல்வேறு நாடுகளில் இந்துக்கள் இவ் நோன்பை கடைப்பிடித்து வரலக்ஸ்மியின் இலட்சுமி கடாட்சத்தை பெற்றுய்வர் என்பது திண்ணம். 

Photo : ©Wikipedia

- 4தமிழ்மீடியாவுக்காக அருந்தா