சமயம்
Typography

எம்மையெல்லாம் காக்கும் கடவுளாம் ஶ்ரீமந்நாரயணரின் பத்து அவதாரத்தில் கிருஸ்ண அவதாரம் மிகவும் உண்ணதமானது. மகாபாரதம் பாரதப்போர் நிகழ இருந்த சமயத்தில் நிலை குலைந்து நின்ற அருச்சுனனுக்கு கீத உபதேசம் செய்து நிலை தெளிய வைத்தார்.

அதன் வழி எமக்கும் அரும் பெரும் பொக்கிசம் பகவத்கீதைகிடைத்தது. திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழிப்பாடலில் திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமன் திருப்பதி ஏழுமலை வேங்கடவன் அஸ்டபுஜத்தான் இப்படி பல நாமங்கள் கொண்டு வீற்றிருக்கும் மகாவிஸ்ணுவை பலவிதமாய்ப் பாடுகிறார்.

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறக்கும் நீர்மையினாலருள் செய்து நீண்ட
மலைகளும் மாமணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலை கடல் போன்றிவரார் கொலென்ன அட்ட புஜகரத்தேனென்றாரே

இப்படி அஸ்டபுஜகரம் தலத்திலே அஸ்டபுஜ கரங்களுடன் வீற்றிருக்கும் பெருமாளைப் சேவிக்கிறார். அவர் ஶ்ரீநிவாசனாக பெருமாளாக வேங்கடேசராக சங்கு சக்ரதாரியாக மகா விஸ்ணுவாக கண்ணனாக கோவிந்தனாக இராமராக பலராமராக கேசிகனாக ஜனார்த்தனனாக, கூர்மமாக, வாமனனாக, நரசிம்மனாக, பரசுராமராக, மச்சவமாக, கல்கியாக இப்படி பல அவதாரங்களை எடுத்தும் எம்மை காத்தும் இரட்சித்தவர் ஶ்ரீ கிருஸ்ணராவார். ஆலிலைமேல் துயில் கொள்ளும் நீலமணி வண்ணனாக புல்லாங்குழலை கையில் வைத்துக் கொண்டு தத்தித்தளர் நடை புரிந்த வண்ணம் ஆயர் குலச்சிறுவர்களுடன் விளையாடி மகிழ்வான் உறியில் இருந்த வெண்ணெயை சிறுவர்களுடன் சேர்ந்து களவாடி உண்பான்.

வாயைத் திற என்றால் இம் மண்ணையே காட்டுவான். கண்ணனை வளர்த்த யசோதை கண்ணனின் குறும்பு தாளாமல் உரலில் கட்டிப்போட்டாள். கண்ணனோ உரலை இழுத்துக் கொண்டே சென்றான். உரல் பெருமருதமரங்கள் இரண்டின் நடுவே மாட்டிக்கொள்ள இழுத்த இழுப்பில் அவை வேரோடு சாய்ந்தது. அவன் சிறுவயதில் செய்த அற்புத லீலைகள் ஏராளம் பூதனை எனும் அரக்கி பாலூட்டி கிருஸ்ணனை அழிக்க நினைத்தாள். அவள் பாலைக் குடித்ததோடு உயிரையும் குடித்து அழித்தார். சக்கரம் ஒன்றுக்குள் புகுந்து அழிக்கவந்த அரக்கனை சக்கரத்தாலேயே அழித்தார்.

யமுனை ஆற்றில் காளிங்கன் எனும் பாம்பு விசத்தை கக்கி ஆற்று நீரை அருந்த முடியாது செய்துதிருந்தது. மரஞ்செடி கொடிகளும் விசத்தால் கருகிப்போய் இருந்தன. இதைக்கண்ட பாலகிருஸ்ணன் அந்த ஆற்றில் குதித்து காளிங்கனுடன் போராடி அதன் மேல் நர்த்தனமாடி அதனை அழித்து ஆயர் குல மக்களைக்காத்தார். குதிரை வடிவில் கேசி எனும் அசுரன் கிருஸ்ணனை கொல்லவந்தான் அவனையும் கொன்றொழித்து கேசவன் எனும் பெயர் பெற்றார்

ஹம்சனின் சகோதரி தேவகியையும் மைத்துனரான வாசுதேவரையும் அவர்களுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என அசரீரியைக்கேட்ட ஹம்சன், அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்து துன்புறுத்தினான். இதனால் வருந்திய அவர்கள் குழந்தைகள் பிறந்ததும் ஹம்சன் ஒவ்வொருவராக அறுவரையும் கொன்றொழித்தான். ஏழாவதாக கிஸ்ணனின் மாயை சக்தி யசோதை வயிற்றிலும் தேவகி வயிற்றில் எட்டாவதாக கண்ணனும் உருவாகினர். நாரதர் மூலம் ஹம்சனுக்கு தன்னை அழிக்க குழந்தை உருவானதை கேள்வி யுற்று சிறையில் பூட்டி அடைத்து வெளியே செல்லாதவாறு காவலர்களை நிறுத்தி வைத்தான்.

தேவகி இருந்தது பெருஞ்சிறை. கண்ணன் இருந்தது தேவகியின் கருவறை ஆவணி மாத கிருஸ்ண பட்ச அஸ்டமி திதியில் ஶ்ரீ ஹரி பெருமான் சிறையினை விடுத்து தேவகி கருவறையில் இருந்து அவதரித்தார். அதே சமயம் நவமியில் மாயை ஆரியை எனும் பெண்ணாக யசோதையிடம் பிறந்தாள். எல்லோரையும் மயக்கி வசுதேவர் குழந்தையை தூக்கிச் சென்று ஆயர்பாடியிலும் ஆரியை எனும் பெண்குழந்தையை சிறைக்கும் எடுத்து வந்து மாற்றி வைத்து விட்டார். ஹம்சன் குழந்தை பிறந்த செய்திகேட்டு வாளை ஓங்கிக்கொண்டு வந்தான்.

பெண் குழந்தை தானே விட்டு விடு என்ற தங்கையின் கதறலையும் பொருட் படுத்தாது கொல்ல முயன்ற வேளை அக்குழந்தை வானில் மேலேழுந்து எட்டுக்கைகளுடன் ஆரியாக காட்சிகொடுத்து என்னைக் கொல்வதால் பயனில்லை.ஏற்கனவே உன்னை அழிக்க ஒருவன் பிறந்துவிட்டான் என்று கூறி மறைந்து விட்டாள்.

ஹரி பிறந்தது தெரியாமல் ஊரில் உள்ள குழந்தைகளில் பலசாலியாகிய குழந்தைகளை அழிக்க உத்தரவிட்டான். இப்படி அசுரனாகிய ஹம்சனின் அட்டூழியம் தொடர் கதையாக இருந்தது. அவனது துன்பத்தை தாங்க முடியாது தேவர்கள் வருந்தினர். கோகுலத்தில் வளரும் கண்ணனும் மேலே கூறிய லீலைகள் பல புரிந்து யாதவர்களுடன் வளர்ந்து மலைகளையும் பசுவினங்களையும் காத்து இருந்தான். மழை பொழிய மேகங்களுக்கு அதிபதியாக இருக்கும் இந்திரனுக்கு விழா எடுப்பது அரசர்கள் வழக்கமாக இருந்தது. அதை ஆயர்களும் செய்து பூஜிக்க முடிவு எடுக்க அதை தடுத்து கோவினங்களையும், மலைகளையும் பூஜிப்போம் என கண்ணன் கூறினான். அதன்படி ஆயர்களும் பசுக்களையும் கிரியையும் வணங்கலாயினர்.

அதனால் இந்திரன் கோபமுற்று யாகம செய்து தமக்குரிய அவிபாகத்தையும் தராததால் அவர்களை அழிக்க நினைத்தான். மழைமேகங்களை ஏவிவிட்டான் மேகங்களும் விடாது மழையைப் பொழிந்தன. அதனால் பசு இனங்களும் ஆயர்களும் வெள்ளத்தினால் பாதிப்படைந்தனர் ஶ்ரீ கிருஸ்ணர் கோவர்த்தனமலையைத் தூக்கி குடையாகப் பிடித்தார். எவ்வித பாதிப்பும் இன்றி ஆவினங்களையும் யாதவர்களையும் காத்து ரட்சித்தார். ஏழுமலையான் மழைக்கு நல்ல குடையாக மலைபிடித்து நின்றார். மழையும் நின்றது. இந்திரன் இறங்கி வந்து பசுக்களை அழியாது காத்தநீ கோவிந்தன் என்று பெயர் பெறுவாய் அனைவரையும் காத்து இரட்சித்ததால் உபேந்திரன் என்றும் பெயர்பெற்றிடுவாய் எனபட்டம் சூட்டிவாழ்த்தினான்.

இப்படி காருண்யம் நிறைந்த கிருஸ்ணகிரியானார். அது மட்டுமா ஹம்சனால் ஏவப்பட்ட அசுரர்களை அழித்து மக்களைக்காத்தார். மாமனான ஹம்சனை அழிக்கும் நோக்கில் கிருஸ்ணர் சகோதரரான பலராமருடன் சேர்ந்து புறப்பட்டார். பல தடைகளைத் தாண்டி முடிவில் அசுரனை அழித்து வெற்றி ஈட்டி அனைவரையும் காத்தார்.

அதன் பின்னர் பலராம கிருஸ்ணர்களுக்கு உபநயணம் செய்து வைக்கப்பட்டது. அவர்கள் சாந்தீபினி எனும் முனிவரிடம் கல்வி கற்றிடச் சென்றனர். எல்லாக் கல்விகளிலும் தேர்ச்சி பெற்றனர். முடிவில் கல்வி கற்பித்த குருவுக்கு குருதட்சணையாக என்ன கொடுக்கலாம் என எண்ணி குருவிடமே கேட்டனர். குருவும் பிரபாச தீர்த்தக்கட்டத்தில் மூழ்கி இறந்து போன தனது மகனை மீட்டு உயிரோடு தரும்படி கேட்டார்.

பலராமகிருஸ்ணர் இருவரும் சமுத்திரக்கரை சென்று அங்கு கடல் அரசனை வணங்கி விபரம் கேட்க அவரும் சங்குரூபத்தில் நடமாடித்திரியும் பாஞ்சஜனனே முனிவரின் மகனை கொண்டு சென்றான் என்றார். கிருஸ்ணனும் அரக்கனைத் தேடிப்பிடித்துக் கொன்று முனிவரின் மகனை உயிர்ப்பித்து அவரிடமே குருதட்சணையாக வழங்கினார்.

அந்த சங்கை கிருஸ்ணர் தமதாக்கினார். அதுவே "பாஞ்சஜன்யம்" எனும் பெயரைப் பெற்றது. பகவான் ஶ்ரீ ஹரி கோவிந்தராக சங்கு சக்கர தாரியாக இப்பூவுலகில் அவதாரம் செய்தார். சந்தான கோபாலராக சியாமள ரூபமாக ஆயர்குலத்தில் மாயக்கண்ணனாக கால் தடம் பதித்தார். தத்தித்தாவி நடைபயின்றதை நினைவு கூரவே காலடித்தடம்பதித்து வெண்ணெய்யீல் இனிப்புடன் செய்த பலகாரங்கள் படைத்து காக்கும் கடவுளாம் ஶ்ரீமந்நாராயணனை வரவேற்று வழிபடுவோமாக. வருகின்ற கிருஸ்ண ஜெயந்தியில் பிரார்த்திப்போம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS