சமயம்
Typography

அன்பே சிவமாகும். இந்த அகிலமெங்கும் பரந்து செறிந்து நிறைந்து வாழும் ஜீவன்கள் அனைத்திலும் அன்பு நிறைந்து இருக்கிறது. அந்த அன்புக்குள் சிவம் ஒளிந்திருந்து. எம்மை ஆட்கொள்கின்றான்.

சிவம் எனும் சக்தி உயிர்களுக்கு எல்லாம் ஜீவனாக நிறைந்திருக்கிறான். அவன் இவ்வுலகெங்கும் வியாபித்திருக்கிறான். ஒவ்வொரு உயிரினமும் சுவாசிக்கும் மூச்சுக்காற்றாக எம்முள் கலந்திருக்கிறான். அப்படித் தெரியாமல் ஐம்புலன்களாகிய மெய் வாய் கண் மூக்கு செவி இந்த ஐந்தினுள்ளும் இருந்த படி இருந்து காட்டி ஆட்டிவைக்கிறான். ஐம் புலன்களில் கண்ணின் ஒளியாக, வாயின் சுவையாக, செவியின் ஒலியாக, மூக்கின் சுவாசமாக, மெய் (உடல்) இன் உணர்வாக இப்படி எல்லாமாக மெய்யாக எம்முள் ஐக்கியமாய் உள்ளான். நாம் பொய்யாக வாழ்ந்து கொண்டு உள்ளே இருக்கும் சிவத்தை வெளியே தேடி அலைகின்றோம்.

"நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி வித்தையும்
நமச்சிவாயவே ஞானமென்றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே."

ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சரம் ஐந்தெழுத்து மந்திரம் எவ்வுயிர்க்கும் அபாயம் தீர்க்கும் ஒரு மந்திரவாசகம். இதை ஜெயிப்பவர்களுக்கு எந்நாளும் துன்பமில்லை. இது ஆன்றோர் வாக்கு ஐம்புலன்களை இரண்டாக படைத்து வாக்கு சொல்ல வாய் அதை மட்டும் ஒன்றாக படைத்தான். அதை சிவன் ஏன் அப்படி படைத்தான் என்று நினைத்துப் பாருங்கள். அளவோடு பேச வேண்டும், அறிவோடு பேசவேண்டும், இனிமையாக பேச வேண்டும், நிதானமாகப்பேச வேண்டும், நிறைவோடு பேசவேண்டும்.

அழகோடு பேசவேண்டும், ஆறுதலாக பேசவேண்டும், அமைதியாக பேசவேண்டும், அடக்கமாகப் பேசவேண்டும். இப்படியாக வாய்வார்த்த்தைகளை பகிரவேண்டும். ஆனால் உணவு உண்டு சுவைக்கும் போது அளவாக உண்டு உடல் ஆரோக்கியமாக இருக்கவே கவனம் வேண்டும், அது மட்டுமல்ல சிவசிந்தனை ஜபம் பஞ்சாட்சரம் மந்திரம் சிவநாமம் இப்படி இவற்றை நாம் ஜபிப்பதற்கு எமக்கு ஒருவாய் இருப்பதால் தான் நாம் நமது எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மனம் இறைவனிடம் இறைஞ்ச ஏதுவாக எம்மைகட்டுப்படுத்தி வைக்கிறது.

இப்பஞ்சாட்சரத்தின் மகிமை என்ன வெனின் பலவித துக்கங்களை துரத்தி மனம் அமைதியாகிட வழிசெய்து விடுகிறது. காலத்தின் கட்டாயத்தினால் நாமும் பலவித ஆசைகளில் அலைக்கழிக்கப்படுகின்றோம். இன்பமாக வாழவேண்டும், வாழ்வில் மேலான நிலையை அடைய வேண்டும், அதிலும் வேகமாக மிக அதிக பொருள் ஈட்டி நாமே பலவிதத்திலும் எல்லாவகையிலும் சீர் சிறப்பு அடைய வேண்டும். பெருவாழ்வு அடைந்து முதன்மை மிக்கவராய் இவ்வுலகில் அனைத்து தரப்பினரும் மதிக்கும் ஒரு பெரும் புள்ளியாய் வாழவேண்டும், இப்படி நாம் ஒரு கணக்கு பண்ணி வைப்போம். ஆனால் இறைவன் ஒரு கணக்குப் போட்டு வைத்து புள்ளி இட்டிருப்பார்.

அதுதான் வேடிக்கை, நாடகமே உலகம், இதில் நாம் நடிக்கும் கதாபாத்திரங்கள் சிவம் என்ன செய்கிறார், சீலமாக நாம் வாழவேண்டும் என அவர் நினைத்து எம்மை ஆட்கொள்கிறார். ஆசாபாசங்களால் எமது கட்டுப்பாடுகளை மீறி நாம் உழல்கின்றோம், குறுக்குவழி சென்று பல இன்னல்களை அடைந்து தடுமாற்றம் அடைகிறோம். ஆட்டுவிப்பதுவும், ஆட்கொள்வதும் அம்பலக்கூத்தனின் வேலையல்லவா, ஜீவனுக்குள் உள் நின்று ஒளிர்பவனல்லவா அச்சிவம் மாற்றம் வராதா என்று ஏங்குவோர்க்கு நல்மார்க்கம் தந்து அருளில் ஒளிர்வார்.

அருவமாக,உருவமாக,அருவுருவமாக விளங்கும் ஈசன் எங்கும் உள்ளான் இல்லாமலும் மறைந்தும் மறையாமலும் இருந்து ஜோதியாக நீராக காற்றாக,மண்ணாக, விண்ணாக எங்கும் வியாபித்து இருக்கிறான். அப்படி இருந்து கொண்டு சீரற்ற மனிதர்க்கு சீர் பெற வாழ்வதற்கு தியாக சீலனாக காக்கிறான். உயிர்கள் இம்மண்ணில் தோன்றும் போது நன்றாகத்தான் தோன்றுகின்றது. ஆக்குவதும் , காப்பதும், அழிப்பதும் என்று முத்தொழில்களையும் நடத்திவைக்கின்ற மும்மூர்த்திகளிலும் விளங்கும் ஈசன் ஆட்டிவைத்தால் ஆடாதாரும் உண்டோ. ஏன் ஆட்டி வைக்கிறான். ஐந்தறிவோடு ஆறாவது அறிவை அதாவது பகுத்தறிவை மனிதர்க்கு படைத்து விடுகிறான். அந்த அறிவும், அதனால் இச்சையும் கொண்டு செயல் புரிகின்றான். மனிதன் அறிவை சரியாக புரிந்து கொண்டு இச்சையில் உழலாது செயல் திறனில் பணிவோடு வாழ்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். சிவமும் துணை செய்கிறார். ஆனால் இச்சைக்கு ஆட்படும் மனிதர் அறிவிழந்து செயல்திறனில் வலுவிழந்து் வழி தெரியாது துன்பம் அதில் துவளுகின்றனர்.

அறிவு கூர்மையாக அகலமாக ஆழமாக வேல் போன்று இருக்கும். அந்த அறிவு கூர்மையாக இல்லாது விரிவாகவும் இல்லாது ஆழமாகவும் இல்லாது இருந்தால் அவன்பாடு திண்டாட்டம் வாழ்க்கையும் பலசிக்கல் நிறைந்தாகி விடும். அதற்காகவே இறைவன் தந்த அறிவை பெருக்கனும்.. இளமையில் கல்வி சிலையில் எழுத்து எனும் முதுமொழிக்கு ஏற்ப சிறுபராயத்தில் இருந்து கல்வி கற்று அதன்வழி நடக்கப் பழகவேண்டும். சமயக்கொள்கைகளில் சீரிய நாட்டம் கொள்ளவேண்டும். எமக்கும் மேலான சக்தி உள்ளது எனும் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்வு சீலம் நிறைந்த வாழ்வாக மலரும். சிவனும் எமக்கு என்றும் அருளைத் தந்து ஆட்கொள்வான்.

BLOG COMMENTS POWERED BY DISQUS