சமயம்

வேலுண்டு வினைதீர்க்க மயிலுண்டு எனைக்காக்க, என்று கந்தப்பெருமான் அழகிய தேர் ஏறி வீதி வலம் வரும் காட்சி காண ஆயிரம் கண் போதாது.

அப்படி அசைந்து ஆடி சண்முகன் ஆறுமுகமும், பதினெட்டு கண்ணும், பன்னிரு கையும் கொண்டு விளங்கி எமக்கு பேரருளை வாரி வாரி வழங்க  தேரில் வீதி வலம் வரும் காட்சி ஆனந்தம், பாடிப்பணிந்து பரவசத்தில் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று உருகி அழைத்து தேர்வடம் பற்றி இழுப்பர். இக்காட்சி மிக அற்புதம் நிறைந்தது. எப்போதும் தமிழ் மணம்,பக்தி மணம் பரப்ப நல்லூர் தேர்திருவிழா இருபத்தைந்து நாட்களும் ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் அழகிய மண்டபங்களிலும், வீதியிலும், தேவார பண்ணிசையும், பஐனைகளும் நடந்த வண்ணமே இருக்கும். கந்தனின் புகழ்பாடி சிந்தை தெளிந்து மெய் உருகி வழிபாடாற்ற காலையும், மாலையும் இந்துப்பண்பாட்டுடன் தமிழ் மக்கள் அலை அலையாக கோவிலை வலம் வந்து அக் குமரன் தரிசனம் காணக் கூடி நிற்பர்.

இப்படி சிறப்புகள் பலபெற்ற அக்குமரன் தரிசனம் காண்பது மிகமிகச் சக்தியானது. ஞானாகாரனாகிய முருகனை அடைய இச்சாசக்தியாகிய வள்ளியும், கிரியாசக்தியாகிய தெய்வானையும், இருவரும் பலகாலம் தவமியற்றி காமமே இல்லாத கடவுளையடைய காத்திருந்தனர். அவர்களுக்கு முருகன் அருள் புரிந்தார். பற்று விட்டவர்களைத் தான் செல்வங்கள் பலவும் வந்தடைகின்றன. காமத்தை வென்றவன் அதை விட்டொழித்து பற்றின்றி வாழ்வை வாழும்போது அவர்கள் கட்டளையை நிறைவேற்ற இச்சாசக்தி கிரியாசக்தி துணையாகின்றன. ஆகவே பற்றின்றி ஆசாபாசங்களை நீக்கி ஒன்றைப் பேசும் போதும் எண்ணும் போதும் 'ஓம்' எனும் பிரணவ தாரக மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அது எப்போதும் காத்து அருள் புரியும்.

கந்தபுராணத்தில் கச்சியப்பமுனிவர் அழகாக குறிப்பிடுகிறார்..

"ஈசன் மேவரு பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாசமாய் எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்
காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும்
மாசில் தாரகப்பிரமமாம் அதன் பயன் ஆய்ந்தான்"

சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பீடமாயும், எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் மூலமாயும், மற்றைத் தேவர்களுக்கெல்லாம் பிறப்பிடமாயும்,காசியில் இறப்பவர்க்கு எம்பெருமான் உபதேசிக்கும் தாரகப்பிரம்மாயும் விளங்கும் பிரணவப் பொருள் அறியாது பிரம்மதேவர் ஆராய்கிறாராம். அதனால் சுப்பிரமண்யரிடம் தலையில்  குட்டு வாங்கி சிறையிலும் அடைக்கப்பட்டார். ஒன்றினைச் செய்யு முன் அதன் பொருளை உணர்ந்திருக்க வேண்டும். அது கல்வியாகட்டும், தொழிலாகட்டும், நிர்வகித்தலாகட்டும் அதை சரிவர கற்றுணர்ந்து தெளியாது காரியத்தில் இறங்கினால் விளைவுகள் விபரீதமாகிவிடும். யாரும் தங்களது அறிவால் விளங்கி கொள்ளக் கூடிய தத்துவமன்று. சரவணனை சரனடைந்தால் அவனின் அருளால் பிரணவப் பொருளை உணரலாம்.

இப்படி தாரக மந்திரம் பிறவிக்கடலை கடக்க உதவுதால் ஓம் என்பது தாரக மந்திரம் எனப் பெற்றது.

 'ஈசாநஸ் ஸர்வவித்யாநாம் ஈச்வரஸ் ஸர்வபூதாநாம்,
 ப்ரஹ்மாதிபதிர் ப்ரஹ்மணோதிபதிர்
 ப்ரஹ்மா சிவோமே அஸ்து ஸதாசிவோம்'

என்று வேதம் சிவனை ஒருமுறையே பிரணவசப்தத்தால் அழைக்கிறது. நம் குமரக் கடவுளையோ "சுப்ரஹ்மண்யோம், சுப்ரஹ்மண்யோம், சுப்ரஹ்மண்யோம்" என்று மூன்று முறை 'ஓம் ஓம் ஓம்' எனப் பிரணவத்தில் இணைத்து வேதியர் வேதம் சொல்வர். அத்தகைய வேதங்களுக்கு எல்லாம் வேதமுடிவாயும், பேரொளிப்பிழம்பாயும், உயிருக்கு உயிராயும் ஞானமே வடிவாக சக்திவேல் துணக்கொண்டு விளங்கும் கந்தன் ஐந்தொழிலையும் ஆற்றி அருள் பாலிக்கின்றான். திருவிழாக்கள் ஐதொழிலையும் குறிப்பிடுவனவாகவே நிகழ்த்தப்படுகின்றன. படைத்தல் கொடியேற்று நிகழ்வையும் ஏனைய திருவிழாக்கள் காத்தலையும், தேர்த்திருவிழா அழித்தலையும் குறிப்பதாய் அமைகின்றன. தீயதை அழித்து நன்மையைத்தரவே ஆண்டவன் தேர் ஏறி வருகிறான்.
 
முன்னைய காலத்தில் தெய்வங்கள் பின்பு தேவர்கள், அரசர்கள் தேர்பவனி செய்து வருவர் போர்க்காலங்களில் அநீதியை அழிக்கவென போர்க்களம் செல்வதற்கு தேர்களை உபயோகித்தனர். தீயவர்களையும் அரக்கர்களையும் அழிக்க வென தேரில் வலம் வந்தனர். அது பின்பு சம்பிரதாயமாக ஆலயங்களில் உற்சவகாலத்தில் சுவாமியை தேரில் எழுந்தருளப்பண்ணினர். ஊர்கூடி தேர் வடம்பிடித்து.  ஆலய வெளி விதிவலம் வந்தும், நகர் வலம் வந்தும் தேரிழுத்து இறை தரிசனம் பெற்றனர். மூப்பு பிணி இவற்றால் உடல் நலிவடைந்த நிலையில் உள்ளோர் ஆலயம் வர இயலாதவர் இப்படிப்பட்டவருக்கு இறைவன் இறைவி தேரில் வலம் வந்து அருள் செய்கின்றனர். மக்கள் ஒன்றுகூடி தேரினை வடம் பற்றி இழுக்கும் போது ஒற்றுமை பேணப்படுகிறது. தெரிந்து தெரியாமல் செய்யும் பாவங்கள் தொலைகின்றன.

அத்தகைய சிறப்புக்கள் பொருந்திய தேரின் இலட்சணங்களை சிற்ப சாஸ்திர நூல்களில் நாம்  நன்கு அறியலாம். இரதத்தின் உறுப்புகள் ஆறுவகையாகும்.. குசி, அசம்,சிகை,தந்தம்,சித்ரம், கீலம் என  வகைப்படுத்தி அழைக்கப்படுகின்றன. தேரின் அடித்தளமாக அடிப்படையாக விளங்கும் பகுதி ஆதாரம், உபாதாரம் என்று பெயர் பெறும். இங்கே தேரின் அச்சு பொருத்தப்படும். இரதத்தின் முக்கிய உறுப்பு சில்லுகள் அவை வட்டவடிவினதாய் விளங்கும். அதை இரும்பு வளையங்கள் சுற்றிமிகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படியமைக்கப்பட்ட அச்சுகள் மேல் ஒன்பது தளங்கள் அமைக்கப்படும்,அவை ஒவ்வொன்றும் மற்றதைக்காட்டிலும் குறைந்த உயரம் கொண்டவையாக தோற்றம் பெறும்.. தேரின் முன்புறம் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். தேரமைப்பு ஏழுவகை இதில் அறுகோணம், சதுரம் எனற வகயில் அமைக்கப்படும். அறுகோணத்தை பிரபாஞ்சன பத்ரகம் என்றும், சதுர வடிவத்தை தபஸ்வன் பத்ரகம் என்றும் அழைப்பர். இவற்றைவிட விதானபத்ரகம்,பவன பத்ரகம், பிருஸத பத்ரகம்,சந்திர பத்ரகம், அநிலபத்ரகம் இப்படி அமைப்பைக்கொண்ட தேர்களும் உண்டு. 

சுவாமியை எழுந்தருளச் செய்ய தேரின் மத்தியபாகம் விரிந்த நிலையில் பீடம் அமைக்கப்பட்டு காணப்படும்.தேரின் கீழே படிப்படியாக ஐந்து தளங்கள் சில்லுகள் வரை  ஒடுங்கி காணப்பெறும்..மேலே நான்கு தளங்கள் மேலே படிப்படியாக ஒடுங்கிக் காணப் பெறும். அதன்மேல் முடிகலசம் அழகாக வீற்றிருக்கும்.இப்படியாக செதுக்கப்படும் தேர்  மிக முக்கியமாக கருங்காலி, நாவல்,புளி,வன்னி, மகிழ் இதுபோன்ற நல்லமரங்களில் சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டும் வர்ணம் பூசப்பட்டும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டு காட்சிதரும்.

மாலைகளும், மணிகளும், தேரின்முடியில் சிறுகுடையும், பக்கவாட்டில் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட தூண்களும்,தொம்ப மாலைகள், தோரணங்கள், சாமரங்கள், என்றும், கீழ்பகுதியில் சிற்பசாஸ்திரத்தின்கலைப், பெருமையை, தத்துவங்களை உணர்த்தும் உருவச்சிலைகள் செதுக்கப்பட்டும்,கீழே அதிஸ்டானத்தில் சிங்கங்கள், யாளிகள், யானைகள்,மகரங்கள் இப்படியானதோடு, நடனமங்கையர்,யச்சர்கள், பூதங்கள் எனவும் சிலைகளாகசெதுக்கி மிக நுனுகிய மடிப்பு வேலைப்பாடுகளும் வெகு அழகாக சித்தரிக்கப் பட்டு இருக்கும். இப்படியாக அழகிய பாரம்பரிய சிற்பக்கலைகளை ஆன்மிகத்துடன் இணைத்து செதுக்கி அழகியசித்திரத்தேராகட்டும் வெள்ளித்தேராகட்டும் தங்கத்தேராகட்டும் வர்ண மயமாக அழகு ஜொலிக்க அழகன் எம்முருகப்பன்  வீற்றிருந்து பவனி வந்து அருளை வாரிவழங்கும் அழகே அழகு. அற்புதக்காட்சியினைக் கான வாரீர். தேர்த்திருவிழாவில் இறைகாட்சியை தெரியவைத்து, எம்மை தெளிய வைத்து ஒரு புத்துணர்சியுடன் எம்மை வாழ வைக்கும் நல்லூர்க்கந்தனின் தாழ் பணிவோம்.

- அருந்தா