சமயம்

தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பில் , சோழ மன்னன் ராஜராஜனோடு கருத்து வேறுபாடு கொண்டு, ஸ்ரீ கருவூர் தேவர் என்ற கருவூரார் சாபம் கொடுத்தார் எனும் செய்தியொன்று பரவலாகப் பேசப்படுகிறது. இது தொடர்பில் தமிழாதாரங்கள் பலவுடன் உண்மை நிலை உணர்த்தும் கட்டுரையொன்றினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றார், ஆகம அறிஞர் தில்லை கார்த்திகேயசிவம். அவருக்கான நன்றிகளுடன் இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4தமிழ்மீடியா குழுமம்.

ஸ்ரீ கருவூர் தேவர் என்ற கருவூரார் தஞ்சை கோயிலுக்கு சாபம் கொடுத்தார், ராஜராஜ சோழனோடு கருத்து வேறுபாடு கொண்டார் என்பது உண்மையா என்றால் அது முழுக்க முழுக்க கட்டுக்கதை .எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லாத செய்தியாகும்.

1) #கருவூரார் யார்.?

கருவூர் தேவர், கரூவூர் சித்தர் என்று அழைக்கப்படுபவர் கரூரில் அவதரித்தவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் 10 பதிகம் பாடியுள்ளார். தம்மை கருவூரன், கருவூரனேன் என்று தம் பாடலில் குறிப்பிடுகின்றார்.

2)கருவூரார் #வடமொழி,
#வேதஆகமங்களுக்கு எதிரானவரா?

இல்லை. ஏனெனில் கரூவூராரே வேதம் ஓதும் பிராம்மணர் ஆவர். பிராமண மரபில் பிறந்தவர். இதனை அவரே தமது இரண்டாவது பதிகத்தில்,

//நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளாய் சுரந்த
அமுதம் ஊறிய தமிழ் மாலை//

எனப்பாடுகின்றார். அதாவது வேதம் ஒதிய கருவூரன் பாடிய தமிழ் மாலை என்கிறார்.

அதேபோல் தனது 5 வது பதிகத்தில்,

//ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவருங்,
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை //

என்ற பாடலிலும் ஆரணம் என்ற வேதம் ஓதிய கருவூரன் பாடிய தமிழ்மாலை என்கிறார். எனவே கருவூரர் வடமொழிக்கோ, வேதங்களுக்கு எதிரானவர் அல்ல. அவரே வேதம் கற்றவர். அந்தணர் குலத்தை சார்ந்தவர்.

3) சோழன் காலத்தில் கருவூரார் வடமொழியில் யாகம் #கும்பாபிஷேகம் செய்வதை தஞ்சையில் கண்டித்தாரா?

இது தவறான கற்பனை செய்தி. ஏற்கனவே கூறியவாறு கருவூராரே வேதம் படித்தவர். என அவரிடம் வடமொழி வெறுப்பு என்பதே கிடையாது. அதோடு வடமொழி யாக பூஜைகளை புகழ்ந்தும் பாடியுள்ளார்.

தமது முதல் பதிகமான சிதம்பரம் பதிகத்தில்,7வது பாடலில்,

//நாத்திரள் மறையோர்ந்து ஓமகுண்டத்து
நறுநெய்யால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே //

என்று பாடுகின்றார். இதில் மறையவர்கள் ஹோமகுண்டம் அமைத்து நெய் ஊற்றி செய்யும் யாகத்தை புகழ்ந்து பாடுகின்றார்.

தமது 2வது பதிகம் முதல் பாடலில்,

//மருங்கெலாம் மறையவர் முறை ஓத்து
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை,
அணி திகழ் ஆதித்தேச்சரமே. //

என்று பாடலில் மறையவர்களின் வேத ஒலியை போற்றி புகழ்கின்றார்.

அதே 2வது பதிகம், 2வது பாடலில்,

//அந்தணர் அழலோம்பு அலைபுனற் களந்தை,
அணிதிகழ் ஆதித்தேச்சரமே //

என்ற பாடலில் அந்தணர்களின் யாக வழிபாடை போற்றுகின்றார். எனவே கருவூரார் வடமொழி வேத ஆகமங்களுக்கு எதிரானவர் அல்ல.

4) .கருவூரார் #ராஜராஜசோழனுக்கு குலகுருவா?

இல்லை. ராஜராஜசோழனுக்கு குலகுருவாராக இருந்தவர் ஈஸ்வர சிவாச்சாரியார் என்பதே கல்வெட்டு செய்தி. கருவூரார் உன்னத சிவனடியார். வேத கலைகள் கற்றவர். பற்றற்று ஒரு சித்தராக விளங்கியவர் என்ற உன்னத முறையில் ராஜராஜசோழன் அவரை போற்றினான்.

5) தஞ்சை ராஜராஜசோழனுக்கு திருமுறை பற்று ஏற்பட காரணமாக இருந்தவர் யார்?

நம்பியாண்டார் நம்பிகள் என்ற ஆதிசைவர் மரபில் வந்தவர். இவரே திருமுறைகளை கண்டெடுத்து சோழனிடம் தந்தவர். அதோடு திருமுறைகளுக்கு பண்ணிசைக்க வழிகாட்டியாகவும் இருந்தவர்.இச் செய்திகள் திருமுறைகண்ட புராணம் நூலில் உள்ளது.

6) ராஜராஜசோழன் மொழி பாகுபாடு கொண்டாரா? ஆகமவிரோதியா?

இல்லை. சோழன் வேத ஆகமங்களை போற்றியவர். அதோடு திருமுறைகளையும் புகழ்ந்தவர். தஞ்சை கோயிலில் வேதம் பாடுவதற்க்கு என்றே பலரை நியமித்தான். அதோபோல் குலகுரு சிவாச்சாரியார்கள் வழிகாட்டுதல்படி தஞ்சை பெரிய கோயிலை மகுடாகமப்படி நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்தவன்.

அர்ச்சனை செய்யும் குருக்களுக்கு அர்ச்சனாபோகம் என்றும், குலகுரு சிவாச்சாரியர்களுக்கு ஆச்சார்யபோகம் என்றும் நிபந்தம் அளித்தவர். ஆகமங்களில் அளவு கடந்த பக்தி கொண்டவர் ராஜராஜசோழன். அதற்க்கு எடுத்துக்காட்டு தஞ்சைகோயிலில் பதிகம் பாட 48 நபர்களை நியமிக்கும் முன் அவர்களுக்கு ஆகமவிதிப்படி சிவதீஷை செய்தே நியமித்துள்ளான், இதனை அந்த 48 பெயர்கள் கல்வெட்டு மூலம் காணலாம்.அதில், ஒவ்வொருவர் பெயர் பின்னேயும், ஞானசிவன், தர்மசிவன், சிகாசிவன், சத்யசிவன் என்று உள்ளது மூலம் அறியலாம். காரணம் சிவாகமங்கள் சிவதீஷை பெற்றே சிவாலயங்கில் தொண்டு செய்யவேண்டும் என கூறுகின்றது. இதன் மூலம் ராஜராஜ சோழனின் ஆகமப்பற்றை உணரலாம்.

7)கருவூரார் தஞ்சையில் அஷ்டபந்தன மருந்து படியாமல் இருந்த நிலையில் தம் தாம்பூலம் கொப்பளித்து இருகச் செய்தார் என்பது ?

இது முழுக்க முழுக்க செவி வழிச் செய்தி. இதற்கு எவ்வித வரலாற்று ஆவணங்களோ, படல்களோ கிடையாது.

8) கரூவூரார் தஞ்சை கோயிலை ஆகமப்படி ராஜராஜன் நடத்தியதால் சாபம்கொடுத்தார்என்பது?

இது முழுக்க முழுக்க பொய் செய்தி. இதற்க்கான எவ்வித வரலாற்று ஆதாரங்களோ, இலக்கிய பாடல்களோ கிடையாது.கருவூரார் ராஜராஜனோடு எந்தவிதத்திலும் மனவேறுபாடோ, கருத்து பூசலோ கொள்ளவில்லை. தஞ்சை கோயிலை ஆகமவிதிப்படி கும்பாபிஷேகம் செய்த பின், அங்கு எழுந்தருளியுள்ள இறைவனை கருவூரார் போற்றி பதிகம் பாடியுள்ளார். கருவூராருக்கு கும்பாபிஷேகத்தில் மனஸ்தாபம் என்றால் அங்குள்ள இறைவனை எப்படி போற்றி புகழ்வார். எனவே இது கட்டுக்கதை.

அடுத்து சோழனுக்கு சாபம் கொடுத்தார் என்பதும் பொய்செய்தி. காரணம் தஞ்சை கோயிலை பதிகமாக பாடிய கருவூரார் அதில் உள்ள மூன்றாவது பாடலில்,

//குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து,
உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்கு,
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை,
இராசராசேச்சரத்திவர்க்கே //

என்று ராஜராஜ சோழனை ஆகம கும்பாபிஷேகம் முடிந்தபின் பாடிய பாடலில் புகழ்ந்து பாடுகின்றார். மேலும் அதே தஞ்சை திருவிசைப்பா ஐந்தாவது பாடலில்,

// உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்,
உறுகளிற்று அரசினது ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத் திவர்க்கே //

என்று கருவூரார் சோழனை போற்றிபாடுகின்றார். மேலும் இஞ்சிசூழ்தஞ்சை என புகழ்கின்றார். அடுத்து தஞ்சை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது 1010 ம் ஆண்டு. அதன் பின் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திரசோழன் 1044 ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். இவர் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம் .கோயிலிலும் சென்று கருவூரார் பதிகம் பாடியுள்ளார். இவ்வாறு வரலாறு இருக்க ராஜராஜனோடு கருத்து வேறுபாடு கொண்டார், சாபம் கொடுத்தார் என்பதெல்லாம் எவ்வித ஆதாரமும் இல்லாத செய்தி. சாபம் கொடுத்த மன்னை எவராவது புகழ்வாரா. அவர் மகன் கட்டிய கோயிலையும்தான் புகழ்வாரா.

எனவே இது புனைவு செய்து. தஞ்சை கோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழவேண்டிய ஒன்று. அவ்வாறான ஒரு பெரும் புகழ் தஞ்சைக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்க்காகவும், ஆட்சியாளர்கள் தஞ்சை கோயிலுக்கு செய்யும் நன்மையை தடுக்கவேண்டும் என்ற நோக்கிலேயே சாபம் போன்ற பொய் செய்திகள் கடந்த 70 ஆண்டுகளில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இதில் பின்புலம் சதி உள்ளதாகவே தோன்றுகின்றது.

9) கருவூரார் பற்றிய இப்பொழுது உலவும் தகவல்?

கருவூரார் மிகப்பெரிய உன்னத சிவஞானி. யோகியாகவும், சித்தராகவும் விளங்கியவர். சைவசமய அருளாளர். அவரை வழிபடுவோருக்கும் வேதமும் சிவஞானமும் கைக்கூடுவது உறுதி. கருவூரர் பற்றிய இப்பொழுது உலவும் தகவல் அவர் வாக்குக்கே முரனானது. விரோதமானது ஆகும். கருவூரர் திருவடிகள் சரணம் சரணம். சிவார்ப்பணம்.


நன்றி :  தில்லை கார்த்திகேயசிவம்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக 'அமைதிப்படை' தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் 'துக்ளக் தர்பார்'.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.