சமயம்

நவகிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால், நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால் இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம்.

இதற்குக் காரணம் சனி பகவானைப் பற்றிய தெய்வீக உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததே ஆகும்.

வேதம் எப்படி சனீஸ்வரரைத் துதிக்கிறது ?

ஓம் பங்கு பாதாய வித்மஹே சூர்ய புத்ராய தீமஹி

தந்நோ மந்த ப்ரசோதயாத்

என்பது சனீஸ்வரரைத் துதிக்கும் காயத்ரீ துதி. ஊனமுற்ற காலுடன் சூரிய மூர்த்தியின் மைந்தனாய் இருக்கும், மெதுவாகச் செல்லக் கூடிய சனீஸ்வர பகவானைத் துதிப்பதாக இந்தத் துதி அமைந்துள்ளது. நவகிரக தேவதைகளுள் மிகவும் மெதுவாக செல்லக் கூடியவராய் இருப்பதால் அவரை இவ்வாறு அழைக்கிறோம்.

சனி பகவானின் வேகம் குறைந்த இயக்கத்தால் மக்களுக்கு விளையும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, ஒரு அலுவலக உத்தியோகத்தில் இருப்பவர் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை வங்கியில் போட்டு வைக்கிறார். அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும்போது கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைக்கிறது. இந்தத் தொகையை வைத்துத்தான் அவர் மீதமுள்ள ஆயுட்காலத்தைக் கழித்தாக வேண்டும்.

அவரிடம் உள்ள சேமிப்புப் பணம் மெதுவாக செலவழிந்தால்தான் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும். மருத்துவச் செலவு, குழந்தைகள் மேற்படிப்பு, கல்யாணம் போன்ற காரணங்களால் அவருடைய சேமிப்பு வேகமாகக் கரைந்து விட்டால் அவர் மீதமுள்ள காலத்தை எப்படிக் கழிக்க முடியும்? அப்போது வேதனைதானே மிஞ்சும். இவ்வாறு ஒருவரிடம் உள்ள செல்வம் நிரந்தரமாக தங்கி, மெதுவாக செலவழிக்க உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார்.

மற்றோர் உதாரணம். ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால் மூச்சிரைப்பும், இதயத் துடிப்பும் அதிகமாகவும் வேகமாகவும் இருக்கும். இந்நிலையில் அவர் ஆரோக்கியமாகத் திகழ வேண்டுமானால் அவருடைய இதயத் துடிப்பும், இரத்த ஓட்ட வேகமும் குறைந்தால்தானே நலம்? அதற்கு அனுகிரகம் புரியக் கூடியவரே சனி பகவான்.

அதேபோல ஒருவர் எப்போதும் உற்சாகத்துடன் படபடப்பாக நாள் முழுவதும் இருந்தாலும் இரவு நெருங்கும்போது அவருடைய உடல், மன இயக்கங்கள் குறைந்தால்தான் ஆழ்ந்த தூக்கம் கிட்டும். உடல் உறுப்புகள் அமைதி கொண்டால்தான் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைக்கும், ஆரோக்கியம் வளம் பெறும். இத்தகைய அமைதிக்கு வழிவகுப்பதே சனி பகவானின் மந்த சக்திகள் ஆகும்.

விதியை உணர்த்தும் வள்ளல்

எனவே சனீஸ்வர பகவானை முதுமை காலத்து நண்பன் என்றும், தேவையில்லாத வேகத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கும் ஔஷத மூர்த்தி எனவும், உடலுக்கும் மனதுக்கும் அமைதி அளிக்கும் புகலிடம் எனவும் கூறுவது மிகையாகாது.

சனிக்கு மற்றோர் பெயர் விதி என்பது. ஒருவர் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்பவே இப்பிறவி அமைகிறது. இப்பிறவியில் எந்த அளவுக்கு தன்னுடைய கர்ம வினைகளைக் கழிக்கிறாரோ அந்த அளவிற்கு அடுத்த பிறவிகள் நலமாய் அமையும். இல்லாவிட்டால் மேலும் மேலும் பாக்கிகள் வளர்ந்து துயரமே மேலோங்கும், பிறவிகள் வளரும். இதைத்தான் ஆதி சங்கரரும் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று வர்ணித்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறப்பதால் என்ன பயன்? பிறவித் தளையை அறுப்பதுதான் விவேகம் என்று எல்லா மகான்களும் வலியுறுத்துகிறார்கள்.

உதாரணமாக, ராமன் என்பவர் பஸ்சில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். முந்தைய பிறவியில் ராமன் கோவிந்தனுடைய காலை மிதித்து விட்டார். இந்தப் பிறவியில் கோவிந்தன் ராமனுடைய காலை மிதித்தால்தான் இந்த மிதித்தல் பாக்கி தீரும். இருவருடைய பாக்கியைத் தீர்ப்பதற்காக எத்தனை கோடி ஆண்டுகள் இடையில் கழிந்தன என்பது எவருக்கும் தெரியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். சித்தர்கள் கணக்குப்படி ஒரு மனிதப் பிறவி கிடைப்பதற்கு ஒரு கோடி ஆண்டுகள் ஆகும். அப்படியானால் ராமனும் கோவிந்தனும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நமது பூமியில் மனிதர்களாய்ப் பிறந்தார்கள் என்பது தெரியாது.

தற்போது இருவரும் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது முற்பிறவி உந்துதலால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிப்பார். இப்போது ராமன் என்ன செய்ய வேண்டும்? பொதுவாக, இந்தச் சூழ்நிலையில் இரண்டு விதமான நிகழ்ச்சிகள் ஏற்படலாம். கோவிந்தனுடைய செயலை ஏதோ தெரியாமல் செய்த தவறு என்று நினைத்து ராமன் கோவிந்தனை மன்னித்து விடலாம். அவ்வாறு செய்தால் தீர்க்கப்படாத பழைய பாக்கி இத்துடன் தீர்ந்து விடுகிறது. ராமனும் கோவிந்தனும் இந்தச் சிறிய விஷயத்திற்காக மீண்டும் பிறவி எடுக்க வேண்டாம்.

இரண்டாவது, நிகழ்ச்சியாக ராமன் கோவிந்தனின் செய்கையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோவிந்தனை வசை பாடவோ அல்லது அடிக்கவோ செய்யலாம்? அவ்வாறு தகாத வார்த்தைகளைப் பேசி, உடலால் இம்சிக்கும் செயல்களைச் செய்தால் இது இன்னும் ஒரு பிறவிக்கு வழி வகுக்கும். இது உண்மை. இதுவே இறைவனின் விதி. இதிலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டிய பாக்கியா அல்லது நாம் புதிதாக ஏற்படுத்தும் ஒரு கர்ம வினையா என்று எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டியதாக இருந்தால் வேறு வழியின்றி அதை அனுபவித்து விடலாம். இல்லாவிட்டால் அதை எதிர்ப்பதற்காக நாம் போராடலாம்.

மனித வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் பாக்கியா கர்மமா என்பதை யாராலும் உணர முடியாது என்பதே தெய்வீக உண்மை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காத்து வழிகாட்டவே சித்தர்கள் அற்புதமான அனுபவ மொழிகளை உபதேசமாக அருளியுள்ளனர்.

“வருவதை ஏற்றுக் கொள்,” இதுவே சித்தர்களின் எளிமையான ஆனால் நடைமுறைக்கு மிகவும் பயனுள்ள உபதேசமாகும்.

மேற்கண்ட கால் மிதித்தல் நிகழ்ச்சியை நினைவு கூறுங்கள். இப்போது ராமன் சித்தர்களின் அருளுரையை ஏற்று மௌனமாக கோவிந்தனின் செயலைப் பொறுத்துக் கொண்டால் அவருக்கு மீண்டும் பிறவி எடுக்காத நிலை ஏற்படும். ஒருவேளை ராமனுக்கும் கோவிந்தனுக்கும் முற்பிறவி பாக்கி இல்லை என்றால் கோவிந்தனுடைய செயலை ராமன் எதிர்ப்பதால் தவறு இல்லை அல்லவா? உண்மைதான், அது ராமனுக்கு எந்தக் கர்மாவையும் ஏற்படுத்தாது. ஆனால், ராமன் சித்தர்களின் அமுத மொழியை ஏற்று பேசாமல் இருந்து விட்டால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிக்கும்போது அவர் மௌனமாக இருந்த காரணத்தால் கோவிந்தனுடைய புதிய கர்மச் செயல் ராமனுக்கு சில புண்ணிய சக்திகளை அளிக்கும்.

அவ்வாறு கிடைக்கும் புண்ணியத்தின் பலனை மனிதக் கணக்கில் அளவு கூற இயலாது. இருப்பினும் உதாரணத்திற்காகக் கூற வேண்டுமானால் முற்பிறவி பாக்கி இல்லாமல் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடித்தால், அந்த அடியை வாங்குபவர் திருப்பி அடிக்காமல் தாங்கிக் கொண்டால் அடிக்கும் மனிதருடைய 5 வருட புண்ணிய சக்தி அடிபட்ட மனிதருக்கு போய்ச் சேரும் என்பது இறைவனின் விதி. இதுவே புண்ணியத்தால் பணம் பெறும் கலியுக சேமிப்பு விதியாகும்.

அதே போல முற்பிறவி பாக்கியில்லாமல் ஒருவர் மற்றொருவரை கடுமையான வார்த்தைகளால் தாக்கினால் அவருடைய ஒரு வருட புண்ணிய சக்தி திட்டு வாங்கியவருக்கு போய்ச் சேருகிறது என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வாறு தகாத வார்த்தைகளால், செயல்களால், புண்ணிய சக்திகள் மிகவும் குறைந்த நிலையை அடையும் போது அது வாய்ப் புற்று நோய், தொண்டையில் கட்டி, வாய்ப் பேச முடியாமல் மூச்சு முட்டுதல் போன்ற நோய்களாக இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி விடுகிறது.

இத்தகைய கர்ம பாக்கி நிகழ்ச்சிகள் ஏற்படும்போது அதை முறையாகச் செயல்படுத்தி அனுவிக்க வேண்டிய கர்ம வினைகளை அனுபவித்து மீண்டும் பிறவி எடுக்காத நிலையை ஏற்படுத்தித் தர நமக்கு உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார். அதனால்தான் பெரியோர்கள் அவரை விதி என்று அழைத்தார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

;

நன்றி: NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசசிவாச்சாரியார்

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்