சமயம்

ஓம் எனும் பிரணவத்துக்குள் அடங்கிய நவசக்திகளும் புரட்டாதி மாத அமாவாசையின் பின் வரும் திதியாகிய வளர்பிறை பிரதமை முதல் தசமி வரையான பத்து நாட்களும் நவராத்திரி நாட்களில் கொலுவீற்றிருக்கின்றனர்.

ஆதிபரா சக்தியை வெளிக்கொணர தேவர்கள் வழிபட்டு தமக்கு தீங்கு செய்து துன்புறுத்திய மகிஸாசுரன் எனும் அரக்கனை அழிக்க அம்மனை வழிபட்டனர். அம்பாளோ மகிஸாசுரமர்த்தனியாக சிங்க வாகன மீது பத்து கைகளிலும் ஆயுத மேந்தி, பத்து தலைகளுடன் கோரத்துடன் அசுரனை வதம் செய்தாள். அதுவே பத்தாவது நாளாகிய விஜயதசமி ஆகும். அவ்வெற்றித்திருநாள் எமக்கு எல்லாம் புத்துயிர் அளிக்கும் நாளாக எதையும் தொடங்கும் நாளாக தைரியமாக துணிவுடன் செயலாற்றும் நாளாக அமைந்தது.

தேவலோகத்தில் முன்பு இறைவியைப் பூஜித்த  அவ்வழக்கமே பூவுலகில் நவராத்திரி நாளாக துர்க்கை அம்மனை வீரசக்தியாக முதல் மூன்று நாட்களும் வழிபாடாற்றுவர். அடுத்த மூன்று நாட்களும் இலக்குமி அம்மனை பொருள் சக்தியாக வழிபடுவர். அடுத்த மூன்று நாட்களும் சரஸ்வதி அம்மனை அறிவு சக்தியாக வழிபாடு செய்வர். பிரதமை, துவிதியை, திருதியை மூன்று திதிக்கும் துர்க்கை அடுத்த சதுர்த்தி, பஞ்சமி, சஸ்டி மூன்று திதிக்கும் இலக்குமியை வணங்குவர். அதுக்கு அடுத்த ஸப்தமி, அட்டமி, நவமி மூன்று திதிக்கும் சரஸ்வதியையும் அடுத்தநாள் தசமி அதை வெற்றித்திருநாளாக விழா எடுத்துக் கொண்டாடுவர்.

தேவர்களுக்கு பகல்பொழுது உத்தராயண காலமாகிய தைமுதல் ஆனிமாதம் வரை, இரவுபொழுது தெட்சணாயன காலமாகிய ஆடிமுதல் மார்கழி வரை இப்படி எமக்கு ஒருவருடம் தேவர்களுக்கு ஒருநாள் இருபத்து நான்கு மணித்தியாலங்கள் ஆகிறது. இரவு பொழுதாகிய பன்னிரெண்டு மணித்தியாலப் பொழுதிலே தெட்சணயன காலத்திலே எமக்கு மாரிகாலம் என்று சொல்லப்படும் இக்காலகட்டத்திலே ஆடி ஆவணி புரட்டாதி எனும் மூன்றாவது மாதம் அதாவது தேவர்களின் இரவு பத்து மணிமுதல் பனிரெண்டு மணி வரையான காலம் எமக்கு புரட்டாதி மாதம் பத்து நாட்கள் நாம் வழிபடுகின்றோம். தேவர்கள்  இருமணிநேரம் அதாவது நூற்றீருபது நிமிடம், அதில் நாற்பது நிமிடம் வணங்கி தவம் இயற்றி பூஜை ஆராதனை செய்து சக்தி அருள் பெற்றனர்.

உலகைகாக்கும் அன்னையை நாம் இந்த பத்து நாட்களும் ஆராதனை செய்ய கொலு வைத்து கும்பம் வைத்து கோலமிட்டு நன்மைகள் விளங்கிடவே விளக்கிட்டு அலங்காரம் செய்து வணங்கிப் பணிவது மிகுந்த நன்மைகள் பெருகும். நவராத்திரி பூஜையில் முச்சக்திகளையும் வரவைத்து அவர்களின் வேதஸ்தோத்திரங்களைப் பாடி, பஜனை பாடி, சங்கீத ஆலாபனை செய்து ஆயகலைகள் அறுபத்து நான்கையும் தரும் சகலாகலாவல்லிக்கு பாமாலை சூட்டி வழிபாடு செய்யும் போது உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்வு பெருகும். சித்தம் தெளிவுறும். ஒரு நம்பிக்கை உருவாகும்.

இப்படி நம்பிக்கை தரும் தாயை அவள் சக்தி பெற மனம் ஒரு நிலைப்பட்டு வழிபடும் போது நாளும் கோளும் நம்மை ஒன்றும் செய்யா. அத்தோடு நம்பாபங்கள் எமது முன்வினைப்பயன் அதனால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் நவசக்தியானவள் அழித்து காத்திடுகின்றாள். உருவாகும் உயிர்க்குலத்தின் உருவங்கள் மாயே ஓம்சக்தி மகமாயி உருவான தாயே, என்று பாடல்களில் தெளிவு படுத்துவது மாயை ஆன உலகில் உருவத்தோற்றமும், அழிவுத்தோற்றமும் மாயை ஆகும் பரப்பிம்மஸ்வரூபினி அழியாத்தன்மை உடைய நிலையே ஆவாள். 

இந்த திதிகள் என்று சொல்லப்படும் பதினந்து நாட்களில் வரும் பிரதமை முதல் பெர்ணமி வரையான நாட்களில் சூரியன் சந்திரனுக்கு நாளொரு கலையாக வளர்த்து வருகிறார். அப்படி பெற்ற அமிர்தகலைகளை சந்திரன் பொழிய முதலில் பிரதமைத்திதியன்று அக்கினி தேவதை அதை பருகின்றான், துவிதியை அன்று சூரியன் பருகின்றார், திருதியை அன்று விசுவ தேவர்கள் பருகின்றனர். அக்கினி, சூரியன், விசுவதேவர்கள் மூவர்க்கத்தினரும் சூடான அதிசக்தி வாய்ந்தவர்கள் அந்நாளில் வீரத்தையும் தைரியத்தையும் உத்வேகத்தையும் தரவல்ல நவநாயகிகளில், சைலபுத்ரி, பிரம்மசாரினி, சந்திரகண்டா என்று போற்றப்பட்ட துர்க்கை எழுகிறாள்.

அடுத்து சதுர்த்தியன்று சந்திரகலைகளை பிரஜாபதியும், பஞ்சமி அன்று வருணனும், சஸ்டி அன்று இந்திரனும் பருகுகின்றனர். பிரஜாபதி, வருணன், இந்திரன் மூவரும் சகல செல்வ போகங்களினதும் சக்தி பெற்றவர்கள் அந்நாளில் சகல வளங்களுடன் செளபாக்கியம், இன்பம் யாவும் தரவல்ல சக்திகள், கூஸ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி என்று போற்றப்பட்ட இலக்குமி எழுகிறாள்.

அடுத்து சத்தமி அன்று சந்திரகலைகளை தேவரிசிகளும், அட்டமியில் வசுக்களும், நவமியில் இயமனும் பருகுகின்றனர். தேவரிசிகளும், வசுக்களும், இயமனும் கல்வி நீதி தர்மம் இப்படி சக்தி பெற்றவர் அந்நாளில் காலாராத்திரி, மகாகெளரி, சித்திதாத்ரி என்று போற்றப்பட்ட சரஸ்வதி எழுகிறாள். இப்படி ஶ்ரீ நவதுர்க்கையாக எழுந்து, பத்தாம் நாள் மருத்துக்கள் சந்திரகலைகளை பருகும் அன்று இறைவி எல்லாப்பிணிகளையும் நீக்கி எம்மை சர்வ வல்லமை பெறச் செய்யும் ஆதிபராசக்தியாக மிளிர்கிறார். சிவாத்மிகா என்று தேவர்போற்றும் தாயை நாமும் சர்வமங்களமாங்கல்ய பலம் பெற்று வாழ நவராத்திரி நாளில் போற்றுவோம்.

- அருந்தா