சமயம்

அழகு மணிகள் கோர்த்ததும் இணைவது மணிமாலை ஆகும். அன்பு மதங்களின் கருத்துக்கள் இணைய சேர்வது சமய சமரச மாலையாகும்.

இப்படி அமைந்ததுதான் சர்வமத சபையாகும். அப்படி உலகில் தோன்றிய மதங்களை இணைத்து நற்கருத்துக்களை சுவைத்தேனாக சராம்சங்களை பிழிந்து சமய ஆன்மீக ஆய்வாளர் தந்தனர். அதை அமெரிக்காவின் சிக்காக்கோ மக்கள் பருகினர். அப்படி எல்லா மதத்தினருக்கும் அந்த அந்த ஆன்மீகத்தலைவர்கள் உரையாற்றினர்.

உலக அரங்கமாகிய அவ்விழா மேடையே அதிரும் வண்ணம் கணீர் என்ற குரலில் இளம் துறவியாக சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை அனைத்து மதத்தையும் கெளரவிக்கும் ஒரு உரையாக அனைத்து தரப்பினரையும் மதிக்கும் ஒரு ஆற்றல் பெற்ற சக்தியாக இந்து மதத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நூற்றி ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் 1863ம் ஆண்டு தைமாதம் 12ம் திகதி பாரதமண்ணில் பிறந்து ஶ்ரீ இராமகிருஸ்ணரை குருவாக ஏற்றார். அவரின் அரிய சீடராக நரேந்திரர் எனும் இயற்பெயரில் குருவின் உபதேசங்களைக் கேட்டு பக்தியில் திளைத்தவர். பின்னாளில் தனது இறையுணர்வைப் பெற குருவிடம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவடைந்தார்.

அப்படி இந்து சமய பெருமைகளையும், வாழ்க்கை நெறிகளுக்கு ஏற்புடையதாக விளங்கும் கீதையின் சாராம்சங்களையும் தெளிவுறக் கற்றதனாலேயே எவருக்கும் தைரியமாகப் பதில் கூறும் ஆற்றல் பெற்றிருந்தார். அதனாலேயே 1893ம் ஆண்டில் சர்வ மதத்துறவியாகி 30 ஆவது வயதில் சிக்காக்கோவில் அவராற்றிய சொற்பொழிவுகள் சர்வ மதத்தினரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது, மட்டுமல்ல பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்து சமயக்கோட்பாடுகள் எம்மதத்தினரையும் இழிவு படுத்தாது பெருமதிப்பு அளித்தே வந்துள்ளது என்பதை எடுத்து இயம்பினார்.

சர்வசமய சமரச நெறியை ஆதாரசுருதியாகக் கொண்டு 'சிவமகிம்ந' எனும் சமிஸ்கிருத ஸ்தோத்திரப் பாடலை தமிழில் சங்கீதக்குரலால் இப்படி இசைக்கிறார்.

"எண்ணுமிரு நிலத்தெழுந்த பலநதியு மிறுதியில்வந்தெறிநீர் வேலை
நண்ணுகின்ற இயல்பது போற் பலவேறுதகையராய் ஞானநாடும்
மண்ணகத்தோர் செல்லு நெறி செம்மையதாய்க் கோடைணையாய் மருவுமேனும்
புண்ணியனே நினையடையு மார்க்கமவையனைத்துமெனப் புகல்வன் யானே;
 
 இப்பாடலால் எந்த நன்னெறியின் வழி சென்றாலும் மக்கள் சேர்வது நதிகள் எத்தனை வழி சென்றாலும் முடிவில் கடலில் வந்து சங்கமிப்பது போல். பலவகைச்சமயங்களும் கூறும் நன்மார்க்கம் ஒன்றையே சார்ந்து நிற்கின்றனர். அது போல் கீதையும் எந்த எந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ அவனுடைய அசையா நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன், என்று பரமெய்ஞானக் கருத்தை கீதை நாயகன் கிருஸ்ணர் உபதேசித்தார். அதை ஆங்கிலத்தில் இவர் எடுத்துரைத்தார். மேடைப் பேச்சுக் கலையின் சிகரத்தில் நின்று தமது முதல் நாள் சொற்பிழிவுகளிலேயே அதாவது பேச்சை ஆரம்பிக்கும் போதே "சுவாமிஜி சகோதரிகளே சகோதரர்களே" என்று அன்போடு அழைத்ததும் அதில் பாய்ந்து பரவிய ஆன்ம நேயம் அவையோரை அன்புப்பிடியில் கட்டுப்பட வைத்தது மட்டுமல்ல, சம்பிரதாயமான அந்நிய பாவம் விலகி உடன்பிறப்புகள் போன்ற உறவு முறை மேலோங்கி நின்றது. அவரது மந்திரச் சொற்களுக்கு கட்டுப்பட்ட மக்கள் கரவொலி எழுப்பி அவரது சொற்பொழிவுகளுக்கு ஜெயஒலி ஒழுப்பினர்.

"இன்று காலையில் இந்த மகாசபை கூடும் போது அடித்த மங்கல மணியானது மூடக்கொள்கைகளின் சாவுமணியாகுக. வாளினாலோ எழுது கோலினாலோ ஒருவரை ஒருவர் பகைக்கின்ற கொடுஞ்செயலானது அகன்று விடுக. ஒரே நோக்கத்தினைக்கொண்டு அன்பினை நாடும் மக்கள் ஒன்றினைந்து வாழும் ஒன்று பட்டுச் செல்லும் எண்ணங்கள் நிறைவு பெறுக" இப்படி இலட்சிய ஆவேசம் ததும்பும் உரைவளம் மிக்க ஆற்றல் பொருந்திய ஆங்கில மொழி வீச்சு அவையோரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. வேதங்கள் ஆகமங்கள் அவைக்கூறும் கருத்துக்கள் தெளிவு பெற எடுத்தியம்பினார்.

ஆத்மாவைப்பற்றியும் ஆத்ம சிந்தனைகள் பற்றிய அதன் மரபை வெகு அழகாக எடுத்துரைத்தார். ஆத்ம தத்துவத்தை அவர் சபையில் எடுத்துக்கூறிய விதமே தனித்தன்மை வாய்ந்ததாகும். எப்படியெனில் "அமிர்தத்துவமாகிய ஆனந்தத்தினது மக்களே" - நால்வேதத்தில் ஒன்றான இருக்கு வேதத்தின் மந்திரம் ஒன்று வருணிக்கும், ஆத்மஸ்யபுத்ரா என்பதின் பொருள்தான், அமிர்தத்துவாமகிய ஆனந்தத்தினது மக்களே, தெய்வீகயியல்புகளின் உடமையாளர்களே, அழிவற்ற அமரர்களே, கேளுங்கள். பாவிகள் அல்லர்; தெய்வத்தன்மை வாய்ந்தவர்கள். சூரியனைப்போல் சுயமான பிரகாசம் உடையவனும் அவித்தையாகிய இருளுக்கு அப்பாற்பட்டவனுமாகிய அந்த மகாபுருசனை நான் அறிவேன் அறிவொளியை அறிந்து கொள்வதே இலக்காகும். ஆக அவர் கூறிய தத்துவம் இதுதான் மனிதனுக்குள் ஏற்கனவே உறைந்துள்ள தெய்வத்தன்மையை வெளிப்படுத்துவதே சமயம். இப்படி எடுத்துகூறினார் சிந்தனைக்குரிய கருத்துக்களையும் முன்வைத்தார்.

"உதவி செய், சண்டையிடாதே, ஒன்றுபடுத்து, அழித்துவிடாதே, சமரசமும், அமைதியும் வேண்டும், கருத்து வேறுபாடு வேண்டாம்; என்பதை ஒவ்வொரு சமயமும் தனது கொடியின் கீழ் விரைவில் எதிர்ப்பிற்கிடையே எழுதும், என்பதை நான் சுட்டிக்காட்டுவேன்" இப்படியான கருத்துக்களை முன்வைத்தார். அவர் சமயத்தின் மீது மதிப்பும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்த சுவாமிஜி கூறியது என்னவெனில் "ஓ சிங்கங்களே எழுந்திருங்கள்! மதிமயக்கத்தை தொலைத்துவிடுவீர்களாக, நித்தியத்துவமுடைய ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்மாக்கள்,. சடப்பொருள்கள் அல்ல, ஆத்மாவாக உன்னை நினைத்து உயர்வு பெறுவாய்" இப்படி தன்னம்பிக்கையை ஊட்டியவர், அவரது பிறந்தநாளான இன்றைய நாளில் அவர் ஆற்றிய நல்லுரைகளைப் படித்து சுவாமிவிவேகானந்தர் வழி பின்பற்றுவோம்.

நன்றி :
நூல் : நூற்றாண்டு விழாக்காணும் சுவாமி விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள்

பெ.சு.மணி
பூங்கொடி பதிப்பகம்

4தமிழ்மீடியாவிற்காக அருந்தா