சமயம்

திருநீறணிந்தார்க்கு இன்னல் செய்திடக் கூடாதென்ற உயர் எண்ணத்தால் தன்னின்னுயிரைஈந்த, எயினனூர் ஈழக்குலச் சான்றோர் ஏனாதிநாத நாயனார் குருபூசை இன்று. இளவரசர்க்கு வாட்போர் பயிற்றி வாழ்ந்த ஏனாதிநாதர், அதன் வழி கிடைக்கும் நிதியம் கொண்டு சிவப்பணி செய்து சிவனடியார் தாள் போற்றும் சைவவாழ்வு வாழ்ந்திட்ட உத்தமர்.

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான் செல் உலகத்து அறம் என்னும் நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் பாடலுக்கு அமையத் தான் செல் உலகத்து அறமாகத் திருநீற்றைப் போற்றுதலை ஏனாதிநாதர் கொண்டு வாழ்ந்தார். இவரை அறிமுகம் செய்கையிலேயே சேக்கிழார் பெருமான் “ வானாளும் தேவர் போற்றும் - மன்றுளார் நீறு போற்றும் - ஏனாதி நாதர் செய்த – திருப்பணி இயம்பல் உற்றேன்” என அழகுதமிழில் இவர்
தம் பெருமை திருநீற்றுக்கு இவர் அளித்த மகிமையே என இயம்பிட்டார்.

வாட்போர் பயிற்றிப் பிழைத்த அதிசூரன் என்னும் மற்றொரு வர்மக்கலை ஆசிரியன் தன் வருமானம் குறைவது கண்டு, வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்ளுதல் மரபு என்று அதாவது வாட்போர்ப்பயிற்சி அளிக்கும் உரிமை வாட்போரில் மற்றெவரையும் வெல்ல
வல்லானுக்கே என்று, ஏனாதிநாதரைத் தன்னோடு போருக்கு வரும்படி தன் மாணவர்கள் சூழ அழைத்தான். விளைவு ஏனாதிநாதர் வாள் முன் நிற்க முடியாத அதிசூரன் மாணவர்கள்
தலைப்பட்டார் எல்லாரும்
தனிவீரர் வாளில்
கொலைப்பட்டார் முட்டாதார்
கொல்களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய்யுணர்வு
நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வம் முதல்
குற்றம் போல் ஆயினர்
மெய்ஞ்ஞானத்தை உணரத் தொடங்கியவர் முன் சித்தமலம் என மாணிக்கவாசக சுவாமிகள் கூறிய ஆசை கோபம் காமம் என்கிற எதிர்த்தன்மையைத் தூண்டுகிற ஆர்வங்கள் மறைய அதன் வழி விளையும் குற்றங்களும் இல்லாது போவது போல் திருநீற்றுடன் இலங்கு
மெய்ஞ்ஞான வடிவினரான ஏனாதிநாதரைக் கண்ட மாத்திரத்தே போரிட்டவர்கள் செத்து மடிந்தார்கள் மற்றவர்கள் புறமுதுகிட்டு ஓடி மறைந்தனர்.

தோல்வி கண்ட அதிசூரன் தந்திரோபாயத்தால் வெல்லும் வழி வகுத்தான். நாட்டாரைக் கொல்லாமல், தனியிடத்தில் தாமிருவரும் போர்செய்து வாட்தாயம் கொள்வோம் எனத் தூது விடுத்தான்.
சேட்டாரும் கங்குல்
புலர்காலை தீயோனும்
“நாட்டாரைக் கொல்லாதே
நாம் இருவேம் வேறிடத்து
வாட் டாயம் கொள்போர்
மலைக்க வருக” எனத்
தோட்டார் பூந்தாரர்க்குச்
சொல்லிச் செலவிட்டான்.
ஏனாதிநாதரும் அதிசூரனின் அறைகூவலை ஏற்றுத் தனியிடத்தே அவனுடன் போர்செய்ய நிலையெடுத்தார். அந்நேரம் அதுவரை தன் முகத்தைக் கேடயத்தால் மறைத்து நின்ற அதிசூரன் முகத்தை மறைத்திருந்த கேடயத்தை விலக்கினான்.
அடல்விடை ஏறு என்ன
அடர்த்த வனைக் கொல்லும்
இடைதெரிந்து தாள் பெயர்க்கும்
ஏனாதிநாதர்
புடைபெயர்ந்த மாற்றான்
பலகை புறம் போக்கக்
கடையவன் தன் நெற்றியின்மேல்
வெண்ணீறு தாம் கண்டார்
பாங்கின் திருநீறு பண்டு பயிலாதான் நெற்றியின் மேல் திருநீறு
கண்டபொழுதே “கெட்டேன்
முன்பு இவர் மேல் காணாத
வெண்திரு நீற்றின் பொலிவு
மேல் கண்டேன் வேறு இனிஎன்
அண்டர்பிரான் சீர் அடியார்
ஆயினர் என்று மனம்
கொண்டு இவர்தம் கொள்கைக்
குறிவழிநிற்பேன்” என்று
திருநீறு அணிந்தமையால் சிவனடியாராக மாறிவிட்டான் அதிசூரன் என்று துணிந்த ஏனாதிநாதர் அவன் விரும்பிய வாட்தாயத்து உரிமையை அவனுக்கே அளித்தல் சிவனடியார் விரும்பியதை அளிக்கும் பெரும்புண்ணியமாகும் என்று “இவர் தம் கொள்கைக் குறி வழி
நிற்பேன்” என்று முடிவு செய்தார். கூடவே சிவனடியாராக நிற்கும் அதிசூரன் தான் நிராயுதபாணியாகினால் நிராயுதபாணியாக நின்றவனைக் கொன்றான் என்ற அவப்பெயரைச் சுமப்பான் அது சிவனடியாராக மாறிவிட்ட அவன் இன்றையத் தன்மைக்கு பாதகம்
விளைக்கும் செயலாகும் என்று தான் ஆயுதத்தைக் கைவிடாது. எதிர்த்து இயங்காத்தன்மையான சிலையாக நின்றார்.

கைவாளுடன் பலகை நீக்கக் கருதி அது செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கென்று இரும்பலகை நெய்வாளுடன் அடர்ந்து நேர்வார் போல் நேர்நின்றார். ஏனாதிநாதர் இந்தத் திருவுள்ளத்தை விளங்கிக் கொள்ள யாராலும் முடியாது. பாதகன் அதிசூரன் தன் கருத்தை நிறைவு செய்தான். ஏனாதிநாதரின் உள்ளக் கருத்தை அறிந்த கடவுள் - அவருக்கு அருளத் தன் மின்செஞ்சடையுடன் தாமே வெளிப்பட்டுக் காட்சி அளித்தார்.

அந்நின்ற தொண்டர் திருவுள்ளம் ஆர் அறிவார் முன்நின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான் இந்நின்ற தன்மை அறிவார் அவர்க்கருள மின்நின்ற செஞ்சடையார் தாமே வெளிநின்றார் உள்ளத்துள் உண்மையொளிர பகைவனின் கைவாளால் பாசத்தை நீக்கிய ஏனாதிநாதர், எக்காலத்திலும் தம்மோடு பிரியா அன்போடு இருக்க அருளிச் செய்த உமைபங்காளன் உடன் பொன்னம்பலம் அடைந்து சச்சித்தானந்தப் பேரின்பம் உற்றார். இதனை விட வேறு எந்தப் பெருமை ஏனாதிநாதருக்கு கிடைக்கலாம் என்று எம்மால் போற்றிக் கூறமுடியும் என்பது சேக்கிழார் பெருமான் எழுப்பும் கேள்வியாகிறது.

மற்றினிநாம் போற்றுவதென் வானோர் பிரான் அருளைப் பற்றலர் கைவாளால் பாசம் அறுத்தருளி உற்றவரை என்றும் உடன்பிரியா அன்பருளிப் பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அடைந்தார்.இறுதியாக கண்ணப்பநாயானாரின் வரலாறு உரைக்கும் கவிக்கூற்றிலும் சேக்கிழார் பெருமான் “ தம் பெருமான் சாத்தும் - திருநீற்றுச் சார்புடைய – எம்பெருமான் ஏனாதிநாதர் கழல் இறைஞ்சி” என வணங்கி இரண்டல்ல ஒன்றுமல்ல என்ற சுத்தாத்துவித நிலையில் தாடலையாக சிவத்துடன் ஏனாதிநாதரும் பொருந்தி இன்புறு தன்மையினைப் போற்றுகின்றார்.

ஏனாதிநாதர் கதையின் படிப்பினையாக நாம் கருத்திற்கொள்ள முடிவது,  திருநீறு அணிகையில் உள்ளத்தில் அது இறைவனுக்கு என்ற எண்ணம் இல்லையேல் அது அணிபவரை அதிசூரன் போல் பாதகன் ஆக்கிவிடும். தன்னலத்திற்காக திருநீறு அணியாது அவன் திருவடி அடைதலுக்காக அணிதல் அவசியம். ஏனாதிநாதர் செய்தமை தற்கொலையாகாதா என்ற கேள்வி எழாமல் இருப்பதற்கே “அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் கொண்டு இவர் தம் கொள்கைக் குறிவழி நிற்பேன்” என்கிற ஏனாதிநாதரின் வாக்கைப் பதிவாக்கினார். இங்கு செயலின் நோக்கம் மரணமல்ல. சிவப்பணி. சிவனடியார் நினைத்ததை அடையச் செய்தல் என்ற உணர்வு. ஆதலால் ஏனாதிநாதர் செயல் சிவச்செயலாகிறது.

- சூ.யோ. பற்றிமாகரன்