சமயம்

இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலாவின் "தாரை தப்பட்டை" திரைப்படத்திற்காக வெளிவந்திருக்கும் "பாருருவாய" பாடல் இப்போது தமிழ் உலகெங்கும் மிகப் பிரபலமான பாடல். ஆனால், இந்தப் பாடலின் வரிகள் தூய தமிழ் இலக்கிய சொற்பதங்களாக இருப்பதால், அதைப் பிரித்து பொருள் தேடுவதென்பது பல பேருக்கு அவ்வளவு இலகுவானதல்ல.  இதே கடினத்துடன், நானும் இப்பாடலின் வரிகளையும், அதன் அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவும் கூகிள் செய்தேன்.

வலைப்பதிவர் ஜிராவின், "மாணிக்க மாதுளை முத்துக்கள்" வலைப்பதிவிலிருந்து எனக்கு என் தேடலுக்கான பதில்கள் கிடைத்தன. சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் திருவாசகப் பதிகங்களில் இடம்பெற்ற இரு பாடல்களின் தொகுப்பே இந்த "பாருருவாய" பாடல்.

ஜிராவின் பதிவிலிருந்து.. 

"மாணிக்கவாசகர் பாடிய இந்தப் பதிகங்களுக்கு எண்ணப் பதிகங்கள்னு பேர். தில்லை எனப்படும் சிதப்பரத்துல இதைப் பாடினார். தன்னோட குறிக்கோள் என்னன்னு சிவபெருமான் கிட்ட சொல்லி அதை நிறைவேத்துன்னு வேண்டுறதுதான் இந்தப் பதிகங்களோட மையக்கருத்து. அவரோட குறிக்கோளெல்லாம் பிறப்பறுக்க வேண்டுங்குறதுதான். பின்னே நம்மள மாதிரி காசு பணம் ஆரோக்கியம் சந்தோஷம்னா கேப்பாரு?

பாருருவாய பிறப்பற வேண்டும்-னு தொடங்குற பதிகத்தையும் பத்திலனேனும் பணிந்திலனேனும்-னு தொடங்குற பதிகத்தையும் புரிஞ்சிக்க லேசா சீர் பிரிச்சுக் கொடுத்திருக்கேன். அதுக்கான விளக்கமும் சொல்லிருக்கேன்.

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே செம் கமல மலர் போல
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே
பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன் உயர்ந்த பைம் கழல் காணப்
பித்து இலன் ஏனும் பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே முறையோ என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் – உலகத்தில் தோன்றுகின்ற உருவங்களைக் கொண்டு வாழும் இந்தப் பிறப்பு விட்டுப் போகவேண்டும்
பத்திமையும் பெற வேண்டும் – (பிறப்பற்றுப் போவதற்காக) உன் மீது நீங்காத அன்பும் நான் பெற வேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே – (உலகத்தின்) சிறப்பான உருவமாகிய சிவபெருமானே
செம் கமல மலர் போல ஆர் உரு ஆய என் ஆர் அமுதே – செந்தாமரை மலர் போன்று அரிய உருவத்தை உருடைய என்னுடைய சிறந்த அமுதே
உன் அடியவர் தொகை நடுவே ஓர் உரு ஆய – உன்னுடைய அடியவர்கள் கூட்டத்தின் நடுவில் என்னையும் ஒருவனாக மாற்ற
நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே – உன்னுடைய திருவருளைக் காட்டி என்னையும் உய்வித்து அருள்க!

பிறப்பு என்பது இந்த உலகத்தின் உயிர்களில் ஏதாவது ஒன்றின் உருவத்தில் வருவது. இந்தப் பிறப்பு முடிந்தால் அடுத்தது. அது முடிந்தால் அதற்கும் அடுத்தது. இப்படிப் பிறந்து வாழ்ந்து துயர் படுவதை விட இந்தப் பிறவி தொலைந்து மீண்டும் பிறவா வரம் வேண்டும். அந்த நிலை உண்டாவதற்கு முதலில் இந்த உலகத்தின் மீதும் உலக இன்பங்கள் மீதும் பற்று அற்றுப்போக வேண்டும். உள்ள அன்பு முழுவதையும் பரம்பொருளாகிய உன் மேல் வைக்க வேண்டும்.

உலகத்தின் தோற்றமாகவே சிறப்பாக நிற்கும் சிவபெருமானே! செந்தாமரை மலர் போன்ற செழுங்கொழுந்தைப் போன்ற அரிய உருவத்தையுடைய சிறந்த அமுதமே! உன்னுடைய அடியவர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதற்கு உன்னுடைய திருவருளைக் காட்டி என்னை உய்விக்க வேண்டும் பரம்பொருளே!
அடியவரோடு அடியவராக இருந்தால் உலக ஆசைகள் மறந்து பக்தி வரும். பக்தி வந்தால் இந்தப் பிறப்பும் இனி வரும் பிறப்பும் போகும். அதற்கு அருள வேண்டியவர் எம்பெருமானே என்பது மாணிக்கவாசகர் கருத்து.

பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும் – நான் பக்தி இல்லாதவன் ஆனாலும் பணிவு இல்லாதவன் ஆனாலும்
உன் உயர்ந்த பைம் கழல் காணப் பித்து இலன் ஏனும் – உன்னுடைய உயர்ந்த பைங்கழகளைக் காண்பதற்கு ஆசை இல்லாதவன் ஆனாலும்
பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே – உன்னுடைய பெயரைச் சொல்லிப் பிதற்றாதவன் ஆனாலும் (என்னுடைய) பிறப்பை அறுப்பாய் எம்பெருமானே!
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே – நல்முத்தைப் போன்றவனே! சுடர்மணியைப் போன்றவனே! முழுமுதல்வனே!
முறையோ என்று – இந்தப் பிறப்பில் நான் உழன்று தவிப்பது முறையோ!
எத்தனையானும் யான் தொடர்ந்து – எப்படியாவது நான் உன்னைத் தொடர்ந்து வந்து திருவடி அடைய வேண்டும்.
உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே – இனியும் உன்னைப் பிரிந்து நான் தவிக்க வேண்டாம் ஐயனே! எம்பெருமானே!

இறைவனை அடைவதற்கு எத்தனையோ வழிகள். அதில் ஒன்று கூட நமக்குத் தெரிவதில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கிறோமே ஒழிய, உண்மையான அன்பை இறைவன் மீது வைத்திருக்கிறோமா? அப்படிப் பட்ட பக்தி இல்லாமல் போனாலும், இறைவனைப் பணிகின்ற பண்பு இல்லாமல் போனாலும், இறைவன் திருவடிகளை அடைய வேண்டுமென்ற தீராத ஆசை இல்லாமல் போனாலும், ஆண்டவனுடைய அரும் பெயரை அன்புருகச் சொல்லாமல் போனாலும், எம்பெருமான் அருள் செய்து இந்தப் பிறப்பு என்னும் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.

நல்முத்தைப் போன்றவன் பரம்பெருமான். ஒளிவீசும் மணிச்சுடரைப் போன்றவன் சிவபெருமான். அவருடைய திருவடிகளைச் சேராமல் இன்னும் இருப்பது முறையாகுமா? எப்படியாவது ஏதாவது ஒரு வழியில் இறைவனை அடைய வேண்டும். முழுமுதல்வனாகிய ஈசனே! இனியும் உன்னைப் பிரிந்து தவிக்கத்தான் வேண்டுமா? கருணை காட்டுவாய் இறைவா!

நாம் என்ன குறையுள்ளவராக இருந்தாலும் இறைவன் நம்மை ஏற்றுக் கொண்டு அருள் செய்ய வேண்டும் என்பது திருவாதவூராரின் கருத்து. பாட்டோட பொருள் தெரிஞ்சிருச்சுல்ல. இப்ப பாட்டை இன்னொரு வாட்டி கேளுங்க.

- ஜிரா

இப்பதிவின் மூலம் : https://gragavanblog.wordpress.com/2015/12/25/

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்