சமயம்

ஈழமணித்திருநாட்டின் வடபகுதியில் அமைந்திருக்கும் நல்லூர்ப் பதியிலே கோவில் கொண்டு வீற்றிருக்கும் எம் கந்தப்பெருமானின் திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. கொடியேற்றம் என்று சொல்லப்படும் (துவஜாரோகணம்) இன்று கொடியேற்றி கந்தனுக்கு விழா எடுக்கும் இந்து மக்களுக்கு எல்லாம் கந்தைனையும் அவன் கை வேலையும், கார்த்திகை நட்சத்திரத்தையும், சஸ்டி திதியையும் தெரியாது இருக்க வாய்ப்பில்லை.

கார்த்திகை நட்சத்திரம் மிகவும் விசேசம் என்பர். முருகன் ஞானவேல் அன்னை உமை அம்மையிடம் இருந்து சக்தி வேலாக முருகவேளுக்கு தீயதை அழித்து நன்மையை அளிக்க வழங்கப்பட்டது என்பது.கந்தபுராணம் சொல்லும் தத்துவம். எம் தமிழ் தந்த தமிழ்க்குமரன் கதை கந்தப் புராணத்தில் மிக அழகாக கச்சியப்ப முனிவரால் உரைக்கப்பட்டது.
 
"ப்ர" என்றால் விசேசமான, நவம் என்றால் புதுமையான, இப்படி பொருள் படும் பிரணவப் பொருள் அனுபவிக்க அனுபவிக்க புத்தம் புது விசேச உண்மைகளை உணர்த்துவதாகும். என்றும் வாடாது, காலத்தால் தேயாது எப்போதும் புதுமையாகவே இருக்கும் ஆன்மதத்துவமே பிரணவம். உலகம் எதில் தோன்றியதோ அதிலே ஒடுங்கும். அப்படி தோற்றியதே உயிர்கள், அவையும் தோன்றியதிலேயே ஒடுங்கும். இதற்கு பரப்பிரம்மமே காரணமாகும். உயிர்களும் உலகும் பிரம்பத்தில் தோன்றி அங்கேயே ஒடுங்கிவிடுகின்றன. மூலப்பிரகிருதி எனப்படுவது ஆன்மாக்களும், எண்ணற்ற அண்டங்களும் தோன்றி வெளிப்பட அடிப்படையாக இருப்பது. ஆக மூலமாகிய வேரும் பிரகிருதி எனும் இயற்கையுமே அணுவடிவில் ஆன்மா எனும் உயிர்களை அடக்கியுள்ளன.
 
இப்படி அணுவாய் அடங்கி பிரகிருதியான இம்மண்ணில் வாழுகின்ற ஆன்மாக்களுக்கு விடுதலைதந்து, வடிவு எடுத்துக் கொள்ள உடலும் தந்து சிந்திக்க உள்ளமும் தந்து, வாழ உலகும் தந்து, அறிவிற்கு அழகு தமிழும் தந்து நம்மை ஆட்டுவிக்கும் அருட்பெரும் ஜோதி நமது முருகப்பெருமானே ஆவார். ஆக அவர் தந்த தமிழ் என்றும் வாடாது அழியாது காலத்தால் தேயாது எம்மில் என்றும் ஊறி நிற்கும். வேல் ஊன்றி இருக்கும் இடமெங்கும் எம்மை ஊன்றி நிற்க வைப்பான் அந்த வேலவன்.
தணுகரண புவன போகம் எனும் நான்கு நிலைகளில் தணு எனும் உடலாக, கரணம் எனும் உள்ளுறுப்பாக புவனம் எனும் உலகாக, போகம் எனும் இன்பமாக தனது தனிப்பெரும் கருணையால் கந்தன் ஈந்தளிக்கின்றான். அதுவே பராசக்தியாக பெருங்கருணை வெள்ளமெனப் பாய்ந்து உயிர்களுக்கு உய்வளிக்கிறது. அதைத் தாங்கும் சக்தி நம்மிடம் கிடையாது. அதுவே பிரிந்து பிரிந்து வந்து உயிர்களாகிய எமக்கு உய்வளிக்கிறது. பராசக்தி வெள்ளத்தின் ஆயிரத்தில் ஒருபங்காக ஆதி சக்தி பிரிந்தது. அதன் ஆயிரத்தின் ஒரு பங்காக ஞான சக்தி பிரிந்தது. இதிலிருந்து ஆயிரத்தில் ஒரு பங்காக பிரிந்ததுவே கிரியா சக்தியாகும். இந்த உலகை இயக்கும் இக் கிரியா சக்தியில் இருந்து ஆயிரத்தில் ஒருபங்காக பிரிந்தது இச்சாசக்தி. அருள் வீழ்ச்சி எனப்படும் இச்சாசக்தியானது விந்து என்கின்ற சுத்த மாயையில் விழ, அது சுழன்றது. நீர்வீழ்ச்சியானது சக்கரத்தில் விழுந்தவுடன் அதன் வேகச்சுழற்றலில் மின்சாரம் போன்று பிறந்ததே குடில சக்தி. இக்குடிலையின் வடிவமே ஓம் எனும் பிரணவம் ஆகும்.

குடிலை விந்துவின் சுழற்சியிலிருந்து நேராகப்பிறந்தபோது அதில் இருந்து நாதம் உண்டாயிற்று. இறையருளில் அவன் அருள் வீழ்ச்சியானது சுத்தமாயையில் விழுந்து அது சுழலும் போதில் பிறந்த குடிலையிலிருந்து முத்தொழில் புரியும் மும்மூர்த்திகள் தோன்றி முத்தொழில் புரிகின்றனர். விந்து சுழற்சியானது. நாதம் நேராகத் தோன்றியது. இதுவே சுழியும் கோடும் சேர்த்து "உ" என்று நாம் அந்நாளில் எழுதும் வழக்கமான முதலில் எழுதுகின்ற பிள்ளையார்சுழி ஆகும். முருகன்  ஓங்காரத்துட் பொருளாகவும் அதே சமயத்தில் அதற்கு அப்பாலும் நிலவுகிறான். அவனது கையில் இருக்கும் வேலே ஞானசக்தி ஆகும். மயில் விந்தின் வடிவம். சேவல் கொடியே  நாதம் ஆகும். இந்த வேல் முருகனின் கையில் சாய்ந்தே இருக்க வேண்டும். தலைக்கு மேல் உயர்ந்து நிற்றல் கூடாது. வள்ளி தெய்வசேனா சமேத முருகப்பெருமான், இச்சாகக்தியாக, வள்ளியை வலப்பக்கமும், கிரியா சக்தியாக தெய்வயானையை இடப்பக்கமும் கொண்டு விளங்கி ஆறுசக்தி, ஆறுமுகங்களாக உலகம் உய்தட் பொருட்டு
அருள்தருகிறார்.
 
சண்முகர் எனப்படும் குமரனின் ஆறுமுகங்களிலும் ஆறு தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. அதாவது ஓம் எனும் எழுத்தின் அகரம்,உகரம்,மகரம்,விந்து நாதம்,கலை அடங்கி இருக்கின்றன. இத் தத்துவத்தை பரமனுக்கு குமரன் ஓதியதே ஓம் எனும் பிரணவம். ஒப்பற்ற வேலையுடைய  பரம்பொருளைக்குருவாகக்  கொண்டு அருள் பெற்றாலன்றி மெய்ப்பொருளை அறிய முடியாது. இதைத்தான் "ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே" என்று அருண கிரியார் பாடுகின்றார்.
சிவபெருமானுக்கே உபதேசித்த முருகக் கடவுள்  ஞானபண்டிதன் அல்லவா. உபதேசிக்கும் குருவாய் இருந்த சிவபிரானுக்கு உபதேசம் கேட்கும் சிஸ்யன் ஆகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது. எளிமைக்காகவே ஏங்குபவரல்லவா எம் சிவபெருமான் இரக்கம் மிகுந்தவரும் எளிமையானவராய் புலித்தோலாடையைகட்டிக் கொண்டு பனிமலையில் எப்போதும் மோனத்தவத்தில் வீற்றிருந்து அடியவர்க்கு வேண்டும் வரம் அருளுகின்றவர். அச்சுவாமிக்கே நாதன் ஆனவர் எம் முருகப்பெருமான். அவன் அழகே ஒரு தனி அழகு. அவன் தமிழ் தந்த தமிழன், தமிழ் அழகிலும் அழகு. அருணகிரிபாடிய  திருப்புகழ் முருகனின் புகழ் பாடும். திருப்புகழ் பாடவாய்மணக்கும்.. நெஞ்சத்தில் அருள் சுரக்கும். கார்த்திகை நட்சத்திரத்திலும், சஸ்டிதிதியிலும் கந்தப்பெருமானை வணங்கி நொந்த மனங்களின் சோர்வு நீக்கி அருட்சக்தி அடைவோம். ஓம் சரவணபவ. 

- அருந்தா

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.