Wednesday, May 22nd

Last update06:36:07 PM

ஆவணிச்சதுர்த்தியில் ஆனைமுகன்

கஜானனம் பூதகணாதி சேவிதம் கபித்த ஜம்பூபலஸார பசிதம்
உமாஸுதம் சோகவினாசகாரணம் நமாமி விக்னேச்வர பாதபங்கயம்.

ஓம் எனும் பிரணவ சொரூபமாக விளங்கும் விநாயகரே மூலபரம்பொருளாக உள்ளவர். எதையும் புதிதாகத் தொடங்கும் முன் விக்னேஸ்வரரை நினைந்து ஒருகாரியத்தை தொடக்க வேண்டும். அப்போது அது தடையில்லாமல் நடைபெற்று முழுமை அடையும். எழுதும் போது கூட எழுதுவதற்கு முன் பெரியவர்கள் உ எனும் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குவர். அப்பொழுது தான் அவர் நினைத்த விடயம் பூரணமாக எழுதி முடிக்கப்படும் எனும் நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந்தனர். இப்படி தொடங்கப்படும் எக்காரியத்திற்கும் கணபதி அருளுக்கு இலக்காகிற செயல்கள்  வெற்றி அடையும்.

ஐந்துகரங்கள் கொண்டு யானை முக வடிவமாகவும், பேழைவயிறை உடையவராகவும், அகன்ற செவியும், குறுகிய கண்களும், ஏகதந்தம் உடையவராகவும் உள்ளார் விநாயகர். அவர் கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், அச்சரமாலை, மோதகம் யாவற்றையும் கொண்டு விளங்குகிறார்.

முக்கண்ணனாக விளங்கும் விக்கினேஸ்வரர் இக பரசுகத்தை அளிப்பவர். ஒருவன் எண்ணவும் எழுதவும் கற்றுக்கொள்கிறானோ அவன் நல்ல மனிதன் ஆகிறான். சிந்தனாசக்தியை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம், இதை உணர்த்தவே ஜபமாலையைத் தரித்துள்ளார். தந்தம் அதைக் கையில் வைத்து இருக்கிறார். வியாசர் மகாபாரத்தைச் சொல்லிக் கொண்டு போகையில் கணபதி எழுத்தாணியால் எழுதிக்கொண்டே போகிறார். இடையில் எழுத்தாணி உடைந்துவிட்டது. எழுதும் வேலை பாதியில் நிற்கக்கூடாதே என மீதி கதையை தனது தந்தங்களில் ஒன்றை ஒடித்து எழுதி முடிக்கிறார். உருவம் ஊனமடைந்தாலும் உள்ளம் ஊனமடையாது ஒரு இதிகாசத்தை எமக்களித்தவர் விநாயகப்பெருமான்.
 
ஆகவே ஒரு நல்ல காரியத்தின் பொருட்டு தன்னிடம் இருக்கும் சிறந்ததைத் தியாகம் பண்ணாதவன் செயற்கரியதைச் செய்து சாதிக்க முடியாதவனாகிறான். தனக்கு உரியதைப் பொதுமக்களுக்கு உரியதாக்கும் வகையில் தியாகம் செய்யாது யாரும் மேலோர் ஆனதும் கிடையாது. ஒரு உயர்ந்த நோக்கத்தின் பொருட்டு தனது அவயவங்களில் ஒன்றை இழந்தாலும் அவ்வரிய தந்தமே கையில் அவருக்கு அலங்காரமாகத் திகழ்கிறது. அப்படி பூரணணாகத் திகழும் கணபதி மூஞ்சுறு அதாவது எலியை வாகனமாகக் கொண்டு அமர்ந்திருக்கிறார். பெரிய உருவம் சிறிய எலிமீது எப்படி இருக்க முடியும். அதற்கும் அர்த்தம் உண்டு.

கல்வி எனும் பெரிய மலையைக்கடப்பதற்கு அதிகம் நாம் எமது மூளைக்குள் அறிவைச் செலுத்த வேண்டும். நுழைய முடியாத கடினமாகக் கூட கல்வி அறிவு இருக்கும். ஞானமாகிய விநாயகர் கல்வியைத் தரவல்லவர். அம்மூஞ்சூறு ஒருசிறிய இடம் கிடைத்தாலும் அதற்குள் நுழைந்து எப்படியும் தன்வேலையைக் கட்டிவிடும். மாணவர்கள் அதிகம் கற்றாலும் அகந்தையுறாமல் எதிலும் சிந்தை கலையாமல் அடங்கி இருக்கவேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் மூஞ்சுறுவின்மேல் வீற்றிருக்கிறார்.
 
இப்படி பல விதமாக மூலாதாரத்தில் விளங்கும் மூசிகவாகனன் விரதத்தை ஆவணி சதுர்த்தி நாளில் மேற்கொண்டு அன்னை பார்வதி தேவி கைலை நாதனை மணம் புரிந்தார். விரதங்களில் மிகுந்த மகத்துவம் உடைய விரதமாக சதுர்த்தி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. ஆதி பரம்பொருள் விநாயகர் அவர்தான் மும்மூர்த்திகளைத்தோற்றுவித்தது. அவருடைய அருளால் எங்கள் காரியங்களை நடத்திச் செல்லும் சக்தி எங்களுக்கு  உண்டாயிருக்கிறது.

"எத்தனையோ காரியங்களின் நிமித்தம் அவர் அவ்வப்போது பற்பல தோற்றங்களில் தோன்றுகிறார். அதில் ஒன்றுதான் எனது குமாரனாக தோன்றியிருப்பதும் ,எப்படியிருந்தாலும் முதற்கடவுளான விநாயகப்பெருமானை நினைந்து அனுட்டிக்கப் படும் சதுர்த்தி விரதத்திற்கு ஈடானது எதுவும் இல்லை"  இப்படி குமரனுக்கு சிவனே எடுத்துக் கூறியுள்ளார். ஆகையால் நல்லறிவை வளர்க்க விரும்புபவர்கள் பேசுவதைக் குறைத்து கேட்பதை அதிகமாக்கிக் கொள்ளவேண்டும். எப்போதும் தும்பிக்கையானை வணங்கி நம்பிக்கை கூட்டி நலமுடன் வாழ்வோம். சரணம் கணேசா சரணம். 

- அருந்தா

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus