ஒருநிமிடம்
Typography

பிரபஞ்சம்; அளவிட முடியாத அதியற்புதமானது. அதிலே குடிலமைத்து வாழ்பவனைப் போல் எண்ணற்ற விடயங்களை பேசுகின்றார்

வலைப்பதிவர் ரமீஸ் பிலாலி. விரிவுரையாளராகப் பணிபுரிவதாக் சுயகுறிப்பில் தெரிவித்திருக்கும் அவரின் எழுத்துக்களில் அதற்கான நேர்த்தி அரியாசனமிட்டு அமர்ந்திருக்கிறது.

தன்னிலைபற்றிக்  குறிப்பிடுகையில்,  ஒரு குளிர்காலத்தில்  சூடான பச்சை தேனீர் பருகையிலான சுவையான அனுபவம்  போல் தெரிகிற  வழியில் வாழ்க்கை என்பதைத் தவிரச் சிறப்பாகச் சொல்ல ஏதுமில்லை எனத் தன்னடக்கமாகக் குறிப்பிடுகின்றார். அவரது பிரபஞ்சக் குடில் எனும் வலைப்பதிவுக்குள் சென்று வாசிக்கையில், பச்சைத் தேநீரின் பரிபக்குவம் தெரிந்து போகின்றது.

டி.வி சீரியல்களை நக்கலும் நையாண்டியும் செய்வது ஒருபக்கம் இருக்கட்டும்.  இதையெல்லாம் பார்க்கச் சகிக்காமல் தத்துவம் ஆன்மிகம் உன்னதக் கலைகள் என்று சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நான் ஒருபக்கம்.
இந்த சீரியல்கள்தான் தான் அறியும் ரசிக்கும் இலக்கியம் என்பதாக என் மனைவி ஒருபக்கம்.  ஆனால், யார் மனதில் காருண்யம் பெருகுகிறது? குழந்தைகள் மீது அவள் பொழியும் அன்பை  என்னால் பொழிய முடிகிறதா? பிள்ளைகளிடமும், என்னிடமும் அவளின் உள்ளத்தில் பிரவகிக்கும் தாய்மையின் அரவணைப்பு என்னால் ஆகக்கூடியதா?

எத்தனையோ தருணங்களில் என் மனம் கல் என்றும் அவள் மனம் கனி என்றும் உணர்ந்தாகி விட்டது. டி.வி.மெகா சீரியல்களை நிறுத்திவிட்டு அவள் இப்னு அரபி, கஸ்ஸாலி, ரூமி, ஓஷோ, ஜே.கே, போர்ஹே, ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கிங் என்றெல்லாம் படிக்கத்தான் வேண்டுமா? இப்படியும் யோசிக்கத்தான் செய்கிறேன். அபத்தம் என்று நான் சொல்பவற்றின் ரசிகையிடம் பல உன்னத நிலைகள் உள்ள போது, என் வாசிப்புகள் அவற்றை என்னில் இன்னும் உண்டாக்கித் தரவில்லை என்பதையும் நான் பார்க்கத்தான் செய்கிறேன். வாழ்க்கை மிகவும் புதிரானது தான்...  எனும் அவரது வார்த்தைகள்  ஒரு வாழ்வியல் அனுபவம்.

இப்படிச் சராசரியென எண்ணத் தோன்றும் விடயங்களில் தொடங்கி, சரித்திரம் வரையிலான  எல்லா விடயங்களைப் பற்றியும்,  போகிற போக்கில் நல்வாசிப்புக்கான வார்த்தை வரிகளாக, நிரல் விதையிட்டுச் செல்கின்றார். ஒன்றிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து பிறிதொன்று என, அழகாகக் தொடுத்துச் செல்வதை வாசிக்கும் போது, பிரபஞ்சத்தின் பிரமாண்டம் கண்டு பிரமிப்பது போன்றே, பிரபஞ்சக் குடில் வலைப்பதிவும் புதிய அனுபவங்களை, கேள்விகளை, தேடல்களைத் தொடக்கி வைக்கின்றது.

'போதிதர்மா – ஏழாம் அறிவு' என்ற தலைப்பில், இந்த வலைப்பதிவில் வந்த  இடுகைக்கான இணைப்பினை 4தமிழ்மீடியாவின் மலேசிய வாசகர் வேணு   மின் அஞ்சலில், எமது வாசிப்புக்காக மின்னஞ்சலில்  அனுப்பி வைத்திருந்தார். அந்த இணைப்பின் தொடர்பில் சென்ற போதே பிரபஞ்சக் குடிலின் சாரம் தெரிந்தது. இந்த நேரத்தில் அந்த நண்பருக்கான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆழமான வாசிப்பு ஆர்வம் உள்ளவர் நீங்கள் என்றால், உங்கள் வாசிப்புக்கும் தேடலுக்கும் வாய்ப்பான ஒரு வலைப்பதிவு, இந்தப் பிரபஞ்சக் குடில் என்பதில் சந்தேகமில்லை. அங்கு செல்ல இங்கு அழுத்துங்கள் !

BLOG COMMENTS POWERED BY DISQUS