கோடம்பாக்கம் Corner
Typography

ஒரு இனத்தின் குணாம்சத்தை தீர்மானிப்பதில் அந்த இனத்தின் கடந்த கால வரலாற்றுக்கு முக்கிய பங்கு உண்டு. மிகப்பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழியைக் கொண்டுள்ள இனம் தன்னை பற்றிய மதிப்பீடுகளை மிக உயர்வாகவே எண்ணுகிறது.

அந்த வகையில் தமிழ்மொழியும், தமிழர்களின் வரலாறும் மிகப்பழமையானது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் பசுமைப்பயண இயக்கம்  தமிழ்மொழி ,

கலாச்சாரத்தை வெளிக்கொண்டுவருவதில் மிக சிறந்த சேவை செய்து வருகிறது. இப்பயணத்திற்கு வருகின்ற உறுப்பினர்களின் வருகை அதிகரித்திருப்பதும், ஈடுபாடும் மகிழ்ச்சிக்குறிய நிகழ்வாகும்.மதுரை - சென்னை தேசியநெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 25 கிமீ தொலைவில் அமைந்திருக்கின்ற கிராமம் மாங்குளம். இங்குள்ள மலையை கழுகுமலை அல்லது ஒவாமலை என்று அழைக்கிறார்கள்.

வானத்திலிருந்து பாறைகளை கொட்டிவைத்து போல மிகப் பெரிய பாறைகள் சிதறிக்கிடக்கின்றன.  இம் மலை 4 சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

சமணப்பள்ளியுடன் அமைந்துள்ள சமணக்குகை, 60பேர் பாடம் கற்கும் அளவிளான பரந்த சமணப்பள்ளி,5 தமிழ்பிராமி கல்வெட்டுக்கள், இக்கல்வெட்டுக்கள் மீனாட்சிபுரம் மாங்குளம்  கல்வெட்டுகள் என அழைக்கப்படுகின்றன. 

கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகப்பழமையானது . இதில் வழுதி என்னும் குடிப்பெயரும்,நிகமம் என்னும் வணிகக்குழு பெயரும் உள்ளது. இக்கல்வெட்டுக்களை மயிலை சீனி.வேங்கடசாமி, சுப்பிரமணியஐயர்,

கிருஷ்ணசாஸ்திரி போன்ற மொழி அறிஞர்கள் படித்திருக்கிறார்கள்.இவர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் மேலே உள்ள படத்தில் இருக்கிற எழுத்துக்களில்...


கணி நந்தி ஆசிரியற்கு ஆங்கே ஏமம் ஈந் நெடுஞ்செழியன்
பணவன் கடலன் வழுதி கொட்டுபித்த பள்ளி.
கணி நந்த ஆசிரியற்கு ஆன் ஏமம் ஈத்த நெடுஞ்செழியன்
சகலன் இளஞ்சடிகன் தந்தை சடிகன் செய்யி பள்ளி
கணிநந்த ஆசிரியற்கு வெள் அறை நிகமத்து காவிதி
கழிதிகன் தந்தை அச்சுதன் பிண ஊ கொடுப்பித்தான்
கணி  நந்தி அறி கொடி ஆதன்
சந்தரிதன் கொடுப்பித்தோன்

வெள் அறை நிகமத்தோர் கொடியோர்
என்று இருக்கிறது.

(இவை தமிழ் வார்த்தைகளாக இருந்தாலும் புரிந்து கொள்ளமுடியவில்லை பார்த்தீர்களா?).

நந்தி என்னும் பெயர் கொண்ட சமணத்துறவி  இங்குள்ள மலைக்குகைகளில் தங்கியிருந்தான். அவனது தலைமாணாக்கன் ஆதவன். வெள்ளறை (வெள்ளரிப்பட்டி என்னும் ஊர் கழுகு மலைக்கு அருகில் இப்போதும் உள்ளது) என்னும் ஊர்வாழ்மக்களின் வழிவந்தவர்கள் துறவு புண்டு நந்தியோடு தங்கியிருந்தனர்.

இவர்கள் பாதுகாப்புடன் வாழ நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய அரசன் உதவி புரிந்தான். தன் செயலாளுநன் கடலன்வழுதி என்பான் வழியாக அறையிறை வாரமும் , பள்ளியும்வெட்டி உதவினான்.தன் சகலை சடிகன்(செழியன்) வழியாகவும் சில படுக்கைகள் அமைத்துக்கொடுத்தான்.தன் ஊர் மக்களில் பலர் அங்குத் துறவு கொண்டிருந்ததால் அச்சுதன் என்னும் வேளாண்பெருமகன் அவர்களுக்கு உணவளித்துக் காப்பாற்றி வந்தான்  என்கின்றன இங்குள்ள கல்வெட்டுக்கள்.

இங்குள்ள சமணப்பள்ளிகளிலும் குகைகளிலும்  அவர்களை பற்றி பசுமைப் பயண வகுப்புகள் நடைபெற்றது மிகச்சிறந்த பதிவு. கலந்து கொண்டவர்கள் தங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஒருவர், ''நான் சமணமதத்தை சேர்ந்தவன் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க வந்துள்ளேன்'' என்று கூறியது பசுமைப் பயணத்தின் நோக்கத்தை நிறைவு செய்வதாக இருந்தது.

4தமிழ்மீடியாவிற்காக அ.தமிழ்ச்செல்வன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்