கோடம்பாக்கம் Corner

நான் ஈ, மஹாதீரா, பாகுபலி போன்ற தெலுங்கு படங்கள் தமிழ்நாட்டில் மொழிமாற்றத்துடன் வெளியாகி வசூல் அள்ளியிருக்கின்றன. ஆனால் தமிழர்களை வதைக்க நினைக்கும் கர்நாடக மாநிலத்திலிருந்து எந்த கன்னட மொழிப் படம் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவது இல்லை.

இந்நிலையில் முதன் முறையாக ஒரு கன்னட படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றியும் பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எஃப் திரைப்படம்.கே ஜி எஃப் என்றால் கோல்ட் மைன் ஃபீட்ட் என்று பொருள். கோலார் தங்க வயலில் தமிழர்களைக் கொத்தடிமை ஆக்கி அழித்தது வரலாறு. அதைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட டான் திரைப்படமான இதன் முதல் பாகம் தமிழகத்தில் மட்டுமே 35 கோடியை அள்ளியதுடன், கன்னட சினிமாவில் இந்த அளவுக்கு அட்டகாசமான படங்கள் கூட எடுப்பார்களா என்று வியக்க வைத்தது.

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியிருந்தது. ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகம யாஷ், அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்துவிட்டது கே ஜி எஃப். அதுவும் தமிழ்நாட்டில் சிலர் அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கும் அளவுக்கு படம் புகழ்பெற்றுவிட்டது.

முதல் பாகம் கர்நாடகாவிலும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிலும் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக படு மும்முரமாக நடந்து இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறதாம். இம்முறை தமிழ்நாட்டின் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் பல காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார்களாம்.

இத்தனை பரபரப்புகள் போதாது என்று பாலிவுட்டின் மெகா நடிகர்களில் ஒருவரான சஞ்சய் தத், இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது பேசப்பட்டது. பிரசாந்த் நீல் என்பவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர். சமீபத்தில் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு அதன் டீஸரை வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் முடியவில்லை. இதுபற்றி இயக்குநர் தனது சமூக வலைதளத்தில் வருத்தமுடன் குறிப்பிட்டிருக்கிறார் …

“ கே.ஜி.எஃப் படத்துக்கு கர்நாடகம் தாண்டி தென்னிந்திய ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மிகப்பெரியது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம், சொன்னபடி டீசரை வெளியிட முடியாமல் போய்விட்டது. ஜனவரி 6ஆம் தேதி வரை ஷூட்டிங்கை முடித்துவிட்டு, ஜனவரி 7ஆம் தேதி தான் படக்குழுவினர் பெங்களூரு வந்து சேர்ந்தோம்.அதனால் ஒரே நாளில் அவசர அவசரமாக ரெடி செய்யும் டீசரை உங்களுக்குக் கொடுக்க விருப்பமில்லை. அதன் தரம் மாறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால், டீசரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். இதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவர் இத்தனை உருகுவது ஏன்? இப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் நாட்டில் எப்போது வெளியானாலும் அதற்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம் தமிழ் ரசிகர்கள்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.