கோடம்பாக்கம் Corner

கோலிவுட்டில் இன்னொரு கமலாகவும், ரஜினியாகவும் வர தகுதியும், குணமும் கொண்ட அவர் தன்னிடம் உள்ள மன நல சிக்கல்களைக் களைந்து மீண்டு வந்து, சிறந்த திரைப்படங்களைத் தருவார் என்கிற நம்பிக்கை மிகச் சிலருக்கே இருக்கிறது. அவர் எஸ்.டி.ஆர். என்று தன்னை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சிம்பு. 1983 ஆம் ஆண்டு, பிப்ரவரி 3 ஆம் தேதி பிறந்த சிம்பு இன்று தனது 37-வது வயசில் அடியெடுத்து வைக்கிறார்.

தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக வலம் வந்து இப்போது விநியோகஸ்தர் சங்கத்தின் ஒரு குரூப் தலைவராக வலம் வரும் டி.ராஜேந்தர்-உஷா தம்பதியின் மகனான சிலம்பரசன், குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமாகி, 2002 ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலமாக நாயகனாக பதவி உயர்வு பெற்றார். சிம்புவின் அறிமுகப்படத்தை அவரின் தந்தை டி.ராஜேந்தர் இயக்கியிருந்தார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக சார்மி நடித்திருந்தார். இந்தப் படத்தில் காமெடி நடிகர் சந்தானம் ஒருசில காட்சிகளில் வந்து தலையைக் காட்டினார்.

சினிமாதான் எதிர்காலம் என தீர்மானித்து இசை, நடனம், சண்டை, வசன உச்சரிப்பு, நடிப்பு பயிற்சி என சிறுவயதிலிருந்தே செதுக்கி செதுக்கியெடுத்து, குழந்தை நட்சத்திரமாக தன் படங்களில் நடிக்க வைத்ததோடு, ஹீரோவாகவும் அறிமுகப்படுத்திய தந்தையின் தயவையே எதிர்பார்க்காமல் தனது சொந்தக் காலில் நிற்க நினைத்து, ‘அலை’, ‘குத்து’, ‘கோவில்’ என வெளி இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றமான நிலையிலேயே இருந்த சிம்புவுக்கு, ‘மன்மதன்’ சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதில், ‘அப்பாவி’மதன், ‘அடப்பாவி’ என சொல்லும்படியான வில்லன் என இரண்டு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருந்தார். ஹீரோ வேடத்துடன் சேர்ந்து, இந்தப் படத்துக்கான திரைக்கதை மற்றும் இயக்கம் மேற்பார்வை போன்ற பணிகளையும் செய்திருந்தார் சிம்பு. ‘காதல் அழிவதில்லை’ யில் சிறு வேடத்தில் வந்து போன சந்தானத்துக்கு, இந்தப் படத்தில் பெரிய ரோல் கொடுத்து அவருக்கு சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தார் சிம்பு.

‘மன்மதன்' பட நாயகன் சிம்பு, நிஜ வாழ்க்கையிலும் மன்மதனாகவே வலம் வந்தார். ‘வல்லவன்’படத்தில் நடித்த போதுதான் நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது. இதில் நிஜக் காதலர்களைப் போல நெருக்கமாக நடித்த சிம்புவும், நயன்தாராவும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென இருவரும் பிரிந்தனர். இதனால்,சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்த நிலையில், பிரேக் அப் ஆன காதலர்கள் மீண்டும் சேர்ந்து வாழும் கதையோடு வந்த இயக்குநர் பாண்டிராஜ்காக, ‘இது நம்ம ஆளு’ படத்தில் மீண்டும் சிம்பு-நயன்தாரா ஜோடி சேர்ந்தனர்.

நயன்தாராவுடன் 'பிரேக் அப்' ஏற்பட்ட பிறகு, நடிகை ஹன்சிகாவை 'பிக் அப்' செய்தார் சிம்பு. ‘வேட்டை மன்னன்’ படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், இந்தக் காதலும் நீண்ட நாள் நீடிக்கவில்லை! சீக்கிரமே 'பிரேக் அப்' ஆனது.

இரண்டு காதலும் கை கூடாத நிலையில், ஆன்மிகத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த சிம்பு, இல்லற வாழ்க்கை வேண்டாம், துறவு வாழ்க்கை போதுமென நினைத்து ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட்டு, தத்துவ முத்துக்களையும் கொட்டினார். இதனால் பதறிப் போன பெற்றோர், அவருக்கு அறிவுரைகள் கூறி, உடனே திருமண ஏற்பாடுகளை செய்ய நினைத்து ஜாதகம் பார்த்த போது, திருமண தோஷம் இருப்பதால் கல்யாணம் கை கூடி வராமல் தள்ளிப்போகிறது என ஜோதிடர் சொல்லவே, திருமணத் தடையை நீக்க, திருப்பதி அருகே உள்ள காளகஸ்திக்குப் போய், மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தார் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர்.

விரல் வித்தை நாயகன்’ என விமர்சனம் செய்யப்பட்ட சிம்புவை, வேறொரு கோணத்தில் காட்டிய படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. முன்பு ‘அலை’ படத்தில் ஜோடி சேர்ந்த சிம்பு-த்ரிஷா, மீண்டும் ஜோடி போட்ட இந்தப் படம் நகரத்து இளவட்டங்கள் நடுவே சிம்புவுக்கு மயக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தப் படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். பிறகு, சிம்புவும், கெளதம் வாசுதேவ் மேனனும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்காக மீண்டும் இணைந்தனர்.

படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார், கால்ஷீட் தராமல் இழுத்தடித்து தயாரிப்பாளரை தவிக்கவிடுவார் என்பதுபோன்ற பல குற்றசாட்டுகள் சிம்பு மீது உள்ளன. இதனால், சிம்பு ஒரு வம்புக்கார இளைஞராகவே எல்லோருக்கும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளார். ஆனால், உள்ளபடியே சிம்பு, ‘கெட்டவன்னு பெயரெடுத்த நல்லவன்’ என்று சர்பிகேட் கொடுப்போரும் உண்டு. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கப்போகும் ‘மாநாடு’ படமாவது அவரைக் கைதூக்கி விட்டு கரை சேர்க்குமா என்று பார்க்க வேண்டும். அதற்கு அவர் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.