கோடம்பாக்கம் Corner

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறை நடத்திய முப்பத்தைந்து மணி நேர அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அவருக்கு பெரும் தொல்லையாக இருக்கக் கூடும் சில தகவல்கள் வெளிவந்தன.

இதேவேளை ஆர்கே செல்வமணி கொடுத்த பேட்டி, விஜய்க்கு நெய்வேலியில் திரண்ட கூட்டம் ஆகியவற்றைப் பார்த்த மத்திய அரசு, தமிழக பாஜகவினர் இடம் கருத்து கேட்டதாகத் தெரிய வருகிறது. விஜய்க்கு தொந்தரவு கொடுப்பது தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சியை பாதிக்கும் என்று அக் கட்சியின் கீழ்மட்ட தலைவர்கள் டெல்லிக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்கள்.

இதகனால் விஜய்யிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அவரிடம் எவ்வித விசாரணையுமின்றி திரும்பக் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறார்களாம். அதேநேரம் ஊடகங்களுக்கும் மற்றவர்களுக்கும் தீனி போடும் விதமாக விஜய்யை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்து விட்டால் யாரும் அதன்பின் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். இதற்காக சட்டரீதியாக எல்லாம் நடப்பது போல் விஜய்க்கு வருமானவரி அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம்.

இந்த அரசியல் கூத்துக்கள் ஒருபக்கம் இருக்க, அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத விஜய், தற்போது நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜயுடன் மோதும் சண்டைக்காட்சி தான் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சண்டை காட்சிக்கு இடையில் அங்கே திரண்ட ஆயிரக்கணக்கான தனது ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக தயாரிப்பு குழுவின் வேன் ஒன்றின் மீது ஏறி எல்லா ரசிகர்களுக்கும் கையசைத்துக் காட்டியதுடன் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது போல கெத்து காட்டினார் விஜய். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பாகியுள்ளது.