கோடம்பாக்கம் Corner

தமிழ் சினிமாவில் உள்ள பல சாபக்கேடுகளில் சமகாலத்தையது டிஜிட்டல் புரமோஷன். கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிஜிட்டல் புரமோஷன் என்ற ஒரு பொய்யான யுக்தி கையாளப்பட்டு வருகிறது.

தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள் டுவிட்டரில் டிரெண்டிங் வந்தால் தான் தங்களுக்கு மதிப்பு என நினைக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்றால் போல் பல பொய்யான பாலோயர்களை உருவாக்கி தங்களையும் முன்னணியில் காட்டிக் கொள்ள சிலர் முயற்சித்தார்கள்.

அப்படிப்பட்டவர்களைத் தேடிப் பிடித்து புரமோஷன் செய்து வைக்க சில தனிப்பட்டவர்களும் தங்களை ஏஜென்சிகள் என சொல்லிக் கொண்டு டிஜிட்டல் புரமோஷன் என்ற அடையாளத்துடன் சில தயாரிப்பாளர்களை ஏமாற்ற ஆரம்பித்தனர். படம் வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே படம் சூப்பர் ஹிட், 5/5 ஸ்டார் என்றெல்லாம் கொடுப்பார்கள். மறுநாள், முதல் நாளிலேயே 50 கோடி வசூல் என பொய்யான வசூல் கணக்குகளை அள்ளி விடுவார்கள். அவர்களை அப்படி போடச் சொல்வதே சில தயாரிப்பாளர்கள் தான் என்பது வேறு கதை.

ரசிகர்களிடத்தில் படம் வெற்றி என பொய்யான ஒரு கருத்தை விதைப்பதற்கான முயற்சி அது. ஏமாறும் ரசிகர்களும் படம் நன்றாக இருக்கும் என நினைத்து தியேட்டர்களுக்குப் போய் படத்தைப் பார்த்து ஏமாந்து போவார்கள்.

இப்படியான பொய் வசூல் கணக்குகளை அள்ளிவிட்டதன் பலனாகத்தான் 'பிகில்' படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும், அந்தப் படத்தில் நடித்த விஜய்யும் வருமான வரித் துறையிடம் சிக்கியுள்ளார்கள் என தயாரிப்பாளர்கள் பலர் உணர்ந்து விட்டதாகச் சொல்கிறார்கள், அவர்களிடம் பணிபுரியும் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் என்று அழைக்கப்படும் நிர்வாக மேலாளர்கள்.

நேற்று கூடிப் பேசிய முக்கிய தயாரிப்பாளர்கள் பலர், இனி, டுவிட்டர் தளத்தில் பொய்யான தகவல்களைப் பதிவிடுபவர்கள், அவர்களுக்கு பொய்யான தகவல்களை அளிக்கும் சில டிஜிட்டல் ஏஜென்சிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என முடிவெடுத்திருக்கிறார்களாம்.

சில லட்சங்கள் செலவு செய்து அப்படி பொய்யாக விளம்பரபடுத்தி இப்போது சிக்கலில் சிக்குவது தேவைதானா என்றும் தங்களுக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என தெரிகிறது. சிலர் இப்படியான பொய்த் தகவல்களை அளித்துதான், தங்களை டிராக்கர்கள் என அழைத்து, பலருக்கு 50,000 முதல் ஒரு லட்சம் வரை கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை சினிமாவில் இருந்தே ஒதுக்க வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் காட்டமாக அந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் எதார்த்தத்தை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொண்டார்களா ? புரிந்து கொண்டார்களா? என்பது வெகு விரைவில் தெரியவரும்.

- 4தமிழ்மீடியா வுக்காக: மாதுமை

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.